சாதியும் குணங்களும் : ஒரு சமூகப் புரட்டை உருவாக்குதல்

யதார்த்தன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சூழலில் சிறு களப்பயணம் ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். களப்பயண முடிவில் நடந்த உரையாடலில் பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்தின் இருபக்கமும் வசித்துவரும் மக்களைப் பற்றிய சில கதைகளைச் சேகரித்திருந்தார்கள். அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் அங்கிருக்கும் மக்கள் அவ்விடத்தில் ‘அடாத்தாக’ அரசாங்க காணிகளில் குடியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். குறிப்பாக அந்த மக்களின் நடத்தைகள் தொடர்பிலும் சில கதைகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒருமுறை அங்கிருக்கும் சிறுவன் ஒருவன் இரண்டு ரூபா நாணயக்குற்றிகள் இரண்டைக் கொடுத்து இனிப்புப் பண்டமொன்றைக் கேட்டிருக்கிறான். பணம் பற்றாவிட்டாலும் அவனில் இரக்கப்பட்டுச் சிறு தொகைதானே என்று பண்டத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். பிறிதொரு நாளில் அந்தச் சிறுவன் இன்னும் கொஞ்சம் நாணயக்குற்றிகளைக் கொடுத்து சொக்லேட் கேட்டிருக்கிறான். அது விலை கூடியது,

தவிர ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்ய முடியாது என்பதால், இவர் மறுத்திருக்கிறார். அவன் உடனே கோவமாக, ‘அப்போது தந்தீர்கள் இப்போது ஏன் தரமாட்டேன் என்கிறீர்கள்’ என்று கடுமையாகக் கதைக்க ஆரம்பித்து, இவருடன் முரண்பட ஆரம்பித்திருக்கிறான். இதைச் சொல்லி அந்தக் கடைக்காரர், ‘அவர்களின் ‘நடத்தை’ இவ்வாறுதான் இருக்கும். அவர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். குருநகர் என்ற கரையோரக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நிறையக் காலமாக அடாத்தாக இங்கே குடியிருக்கிறார்கள். சாராயம் காய்ச்சுவது, வாள் வெட்டுப் போன்ற குற்றத்தொழில்களைச் செய்யக் கூடியவர்கள். ஆண்கள் பெண்கள் இருவருமே முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடியவர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். மாணவர்கள் குறித்த கதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த இடம், அவர்களின் நடத்தை, அங்குள்ள முரண்பாடு, அவர்களின் மத நம்பிக்கைகள் என்று ஒவ்வொன்றாக விபரித்துக்கொண்டிருந்தனர். அதாவது, அம்மக்களின் நடத்தை மற்றும் அதன் விளைவுகள் பற்றியே அவர்கள் பேச விரும்பினார்கள். யாருடைய வாயிலிருந்தும் அதற்கான காரணங்கள் வந்தபாடில்லை. பொதுவாக, சமகாலக் கல்வி முறையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. விளைவுகள், அவதானங்களைப் பட்டியல்படுத்தத் தெரியும், அவற்றைச் சேகரிக்கத் தெரியும், ஒழுங்குபடுத்தத் தெரியும், எது புலனாகிறதோ அதை எழுதத் தெரியும். ஆனால், அதன் காரணங்களைச் சிந்திக்க மாணவர்களைப் பழக்குவதில்லை. அந்த முழு உரையாடலிலும், அந்த மக்களின் ‘நடத்தை’ பற்றிய விடயங்கள் ஒவ்வொரு மாணவராலும் அலசப்பட்டன, விபரிக்கப்பட்டன. ஆனால், அவர்களின் மொத்த விபரணைகளுக்குமான மூலக்கூறான ‘சாதி’ பற்றி யாரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசினார்களில்லை. அம்மக்கள் பற்றி கடைக்காரர்கள் இவர்களிடம் ஏற்படுத்த நினைத்த சித்திரத்தை இவர்களும் புரிந்துகொண்டார்கள். ஆனால், அவர்களால் ‘சாதி’ என்ற சொல்லை உச்சரிக்க முடியவில்லை. கடைக்காரர் இவர்களுக்குச் சொல்ல வந்தது அம்மக்களின் ‘சாதிக் குணம்’ பற்றியே.

அங்குள்ள மக்கள் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள், சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதாரத்தினால் விளிம்புநிலையில் வைத்திருக்கப்படுபவர்கள். அவர்களுக்கு வாழிடமில்லை. அவர்கள் தங்களுடைய வாழிடத்தை அடாத்தாகத்தான் பிடித்தாக வேண்டும். அதைப் பாதுகாக்க அவர்கள் இயல்பிலேயே முரட்டுத்தனத்தை அல்லது கடுமையை வளர்த்துக்கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் எப்படியும் எதோவொரு காரணத்தைச் சொல்லி அவர்களை அங்கிருந்து விரட்டவே பார்ப்பார்கள். சுற்றியுள்ள செல்வம் படைத்த, சமூக அதிகாரம் கொண்ட ஆதிக்கச் சாதியினருக்கு அவர்கள் ஒரு நெருடலாகவே இருப்பார்கள். போன நூற்றாண்டைப் போல அவர்களால் இவர்களை அடித்து விரட்ட முடியாது. ஆனால், அங்கே கோயில் கட்டப் போகிறோம் என்றோ, அரசுக்கு மொட்டைக்கடுதாசிகளை எழுதியோ அவர்களை விரட்ட முயற்சிப்பார்கள். இவற்றிலிருந்து தப்பி தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டுசெல்ல அந்த மக்கள் இயல்பிலேயே முரட்டுத்தனத்தையும் போராடும் குணத்தையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இது, குறிப்பிட்ட சிலர் அச்சமூகங்களில் (அதுவும் சாதியால் விதிக்கப்பட்டதுதான்) செய்யும் குற்றத்தொழில்களுடன் சேர்க்கப்பட்ட சாதி இயல்பாக இழித்துக் கட்டமைக்கப்படுகின்றது.

இங்கே முரட்டுத்தனம், அடாத்து, வன்முறை போன்றவற்றை நியாயப்படுத்துவது நோக்கமல்ல. மாறாக, அப்படியானதொரு இயல்பையும் நடத்தையையும் அம்மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை, அவை யாவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டவையே. அத்தோடு அவர்களின் முழுமையான இயல்போ வாழ்க்கையோ இதுதான் என்று யாரும் வரையறுக்கவும் முடியாது. அம்மக்களின் அசலான வாழ்க்கை பற்றிய காட்சியலசல் இது. ஆதிக்க நலனுக்காக வெட்டியெடுக்கப்பட்டுப் பூதமாக்கிக் காட்டப்படும் ஒன்று.

ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை முறை, அவர்களின் கொண்டாட்டம், உறவுச் சிக்கல்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் என அவர்களுடைய அசலான வாழ்க்கை முதன்மைப்படுத்தப்படுவதில்லை. எப்படி ஒடுக்கிச் சுரண்டப்பட்டு அவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுகின்றனவோ அவற்றின் ஒரு பகுதியாகவே அவர்கள் மீதான புற ஒடுக்குதல்களும் இருக்கின்றன. தமிழ்ச் சூழலில் ஆதிக்கச் சாதியினரை விடவும் கொண்டாட்டமும் பகிர்வும் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தாம்.

சாதிய நடைமுறைகளை நியாயப்படுத்த சுத்தம், தீட்டு, நடத்தை போன்றவற்றை இணைத்துக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் நடத்தை அல்லது இயல்புகள், தொழில் என்பவற்றைச் ‘சாதிய ஒழுங்’கிற்குள் வைப்பதற்கும் அவர்களைத் தொடர்ந்து ‘குலத்தொழி’லில் வைத்துச் சுரண்டுவதற்கும், அவர்களைச் சமூக அந்தஸ்து அற்ற சுயமரியாதையற்ற மக்களாக வைப்பதற்கும் ஆதிக்கச் சாதியினர் கட்டமைத்த ஏற்பாடுகள் இவை.

சாதிக்கென்று குணங்கள் இருக்குமா? ஆம் இருக்கும். சாதிக் குழுக்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு சமுதாயக் குழுக்களுக்கும் அவர்களின் பண்பாடு சார்ந்தும் வாழும் வாழ்க்கை முறை சார்ந்தும், ஏன் காலநிலை, பிற சமூகத்துடனான தொடர்பு, அதன் மேலாதிக்கம் என்று அனைத்து வழிகளாலும் பொதுக் குணங்கள் திரளும் என்பது உண்மைதான். இங்கே அந்நடத்தைகளில் உள்ள பிறழ்வான பக்கங்களை அழுத்திச் சொல்வதன் மூலம் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் தாங்கள் ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற, அதிகாரமற்றக் குழுக்களை அடையாளப்படுத்தி, தொடர்ந்து அவர்களைக் ‘கீழோர்’ என்ற அடைப்புக்குள் வைத்திருக்க முனைகின்றன. இது சாதாரணமாக உருவாகியதல்ல. ‘இந்து மதம்’ என்கிற தென்னாசியாவின் மிகப்பெரிய அமைப்பினால் கட்டமைக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் தூய்மை, தீட்டு என்பவற்றின் துணையோடு இந்து மதம் சாதியை உருவாக்கியதோடு அந்தந்தச் சாதிக்குரிய குணங்குறிகளையும் கற்பிதம் செய்துகொண்டது. அதைச் சமூகக் கருத்தாகவும் மாற்றியது.

தீட்டு, தூய்மை ஆகியவை ஒன்றுக்கொன்று பண்பாட்டு அடிப்படையில் அணுக்கமானவை. தீட்டு என்பது பிறப்பு மற்றும் சுத்த அடிப்படையில் மூட நம்பிக்கைகளையும் ஒடுக்குமுறைகளையும் உண்டாக்கப் பயன்படுகிறது. குறிப்பாக, பெண்ணை ஒடுக்கும் மத நம்பிக்கைகளால் வழிநடத்தக்கூடிய இந்தச் சமூக அமைப்பு அவளுடைய ‘மாதவிடாய்’ உதிரத்தை அழுக்கானதாக, தீட்டுக்குரியதாகக் கட்டமைத்துள்ளது. பெண்ணுக்கு உண்டான தீட்டு நடைமுறைகள் அவள் மீதான ஒடுக்குமுறைகளில் முக்கியமானதாக இருக்கின்றது. மாதத்தில் சில நாட்கள் அவள் உடலினுடைய இயல்பான நடைமுறை தீட்டாக மாற்றப்படுகின்றது. அவளது முதல் மாதவிடாயைச் சடங்காக்குவதன் மூலம் அவள் மீதான தீட்டை உறுதிப்படுத்துகிறது. இதே போன்ற தூய்மை அடிப்படையிலான தீட்டு முறையையே சாதிக்கும் கொண்டுவந்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத் தமிழில் தீட்டுக்கு நிகரான சொல்லாகத் ‘துடக்கு’ என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. தொடக்கூடாது என்பதன் பின்னைய வடிவம் என்று இதை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ‘சாதியும் துடக்கும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘செயற்கை நிலையிலேயே தமிழர் வாழ்விலே துடக்கு தற்பொழுது தொழிற்பட்டு வருவதைக் காணலாம். தனிமனித நிலையிலும், குடும்ப இயற்கை நிலையிலும் மாத்திரம் தொழிற்பட்ட துடக்கு சமூக நிலையில் செயற்கையாக மாறியுள்ளது. சாதி என்ற பாகுபாடு சமூக நிலையில் அழுத்தம் பெற்றபோது துடக்கும் அதனுடன் இணைக்கப்பட்டது.’ (மனோன்மணி சண்முகதாஸ் : 1991) இதனை விரிவாகப் பார்ப்போம்.

சாதியின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் ‘சமயக் கோட்பாடு’ (religious theory) முக்கியமானது. எவ்வாறு இந்து மதம் சாதியை உருவாக்கியது என்பதை விளக்கக்கூடிய கோட்பாடுகளில் ஒன்றாக மானிடவியல் இக்கோட்பாட்டை வரையறுக்கிறது. இந்து மதம் எவ்வாறு தீட்டு – தூய்மை நடைமுறைகள் மூலம் சாதி முறையை உருவாக்கிக் கட்டமைத்தது என்பதை இது விளக்குகிறது.

‘இந்து சமயத்தின் சமூக வடிவமே சாதியமாகும். இந்தச் சமூகத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் சாதியமானது ‘சதுர்வர்ணத்தால்’ ஆனது. சாதிகளின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இந்து சமயம் பெரும் உந்து சக்தியாக இருந்துவந்தது. இதில் சமயம், சமூகம் இரண்டும் பரிவர்த்தனை வடிவங்களாகும். இவை சமுதாயத்தில் சட்டமாகவும் வாழ்க்கை நடைமுறையாகவும் (தூய்மை – தீட்டு ஆகிய கருத்தாக்கங்களைக் கொண்டவை) இருந்துவருகின்றது. (பக்தவத்சல பாரதி : 2012)

வர்ணம் என்பது நிறங்களைக் குறிப்பதாகும். அதாவது அடிப்படையில் வேறுபடுத்தும் செயற்பாடாக இதனை விளங்கிக்கொள்ளலாம். இந்து மதத்தின் புராண நம்பிக்கைகளின்படி படைத்தல் தொழிலின் கடவுளான பிரம்மா தன்னுடைய தெய்வாம்சம் பொருந்திய உடலிலிருந்து மனிதர்களைச் சாதி அடிப்படையில் தோற்றுவிக்கிறார். அவருடைய எந்தெந்த உடற்பாகங்களிலிருந்து யார் தோன்றினார்கள் என்ற அடிப்படையில் சாதிகளும் அதற்குரிய தொழில்களும் உருப்பெறுகின்றன. அது முறையே ஓர் உடல் சார் அதிகாரத்தை, தகுதியைக் கட்டமைக்கிறது. தலைமுதல் கால்வரை என்ற ஒழுங்கில் தூய்மை – தீட்டு நடைமுறைகளை நோக்கித் தன்னுடைய வர்ண நிலையை ஒழுங்கமைக்கிறது.

பிரம்மனின் நாக்கிலிருந்து ‘பிராமணர்கள்’ பிறக்கின்றார்கள். மந்திரங்களைச் சொல்லவல்ல, கடவுளை அர்ச்சிக்கவல்ல, திருச்சொரூபங்களைத் தொட்டுப் பூஜை செய்யும் தொழிலையும், ‘உயர் குலத்தோர்’க்குக் கல்வி பயிற்றுவிக்கும் தொழிலையும் செய்யக்கூடிய ‘உரிமையும் தகுதியும்’ உள்ளவர்களாகப் பிராமணர்கள் படைக்கப்படுகிறார்கள். எண்சாண் உடலுக்குச் சிரசே பிரதானம் என்பது வழக்கு. சிரசினால் தோன்றியவர்கள் என்ற அடிப்படையில் அதிக ‘புனித’ தன்மையைப் பிராமணர்களுக்கு வழங்குகின்றது.

அடுத்து, ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு காவல், போர் ஆகியவற்றைச் செய்யக்கூடியவர்களான ‘சத்திரியர்கள்’ பிரம்மனின் மார்பிலிருந்து தோன்றுகின்றார்கள். வலிமை மற்றும் சிரசை நேரடியாகத் தாங்கும் உடலின் பாகம் என்ற குறியீட்டுத் தன்மையுடன் சத்திரியர்கள் பிரம்மனின் மார்பிலிருந்து படைக்கப்படுகின்றார்கள். ஆட்சி செய்வது, போரிடுவது, மக்களை, முக்கியமாகப் பிராமணர்களைக் காப்பதும் அவர்களைக் கனம் பண்ணுவதும் சத்திரிய ‘தர்மம்’ என்கின்றன இந்துப் புராணங்களும் இதிகாசங்களும்.

 

Illustration by Oshea Drake

அடுத்த படிநிலையில் உள்ளவர்கள் வைசியர். பிரம்மாவின் தொடைப் பகுதியிலிருந்து தோன்றியவர்கள். வணிகர்கள், விவசாயம் செய்வோர் போன்றோரை இங்கே வகைப்படுத்தலாம். அடுத்து சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் பிரம்மாவின் பாதங்களிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்பட்டது. பாதம் என்பது கீழானது, கால் சிரசைவிட கீழ்பட்டது என்ற நம்பிக்கைக்குக் குறியீட்டுத் தன்மையாகக் கருத இயலும். அதாவது கீழானவர்கள், கீழ்மையான ‘அசுத்தத்துடன்’ கூடிய அல்லது அவ்வாறு கற்பிக்கப்பட்ட தொழில்களைச் செய்ய பணிக்கப்பட்டவர்கள். இதன் மூலம் வர்ண நிலை

கட்டமைக்கப்படுகிறது. குறிப்பாக ‘கர்ம வினை’ பற்றிக் குறிப்பிடும் வர்ண கோட்பாடு, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே வர்ண அடிப்படையிலான நம் பிறப்பு தீர்மானிக்கப்படுவதாக வலியுறுத்திச் சொல்கின்றது. மேலும், இப்பிறப்பிற்குக் குணம் குறிகளையும் வழங்குகின்றது. அதாவது சாதிய அடிப்படையிலான ‘இயல்புகளையும்’ கட்டமைக்கின்றது. தீட்டின் நடைமுறைகளிலிருந்தே சாதியக் கொடுமைகளின் உச்சமான பார்க்கக்கூடாத சாதிகள், தீண்டாமைச் சாதிகள் என்பனவும் உருவாக்கப்பட்டன. அதாவது அவர்களைத் தொடுவதோ பார்ப்பதோ தீட்டு. அவர்கள் தொடுபவையும் புழங்குபவையும் தீட்டு. கோயில், குளம், கிணறு, வீடு, உணவு அனைத்திலும் அவர்கள் தீட்டானவர்கள் என்பதை இவற்றைக் கொண்டே ஆதிக்கச் சாதிகள் ஒழுங்கமைத்தன என்பதையும் இவ்விடத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அந்தந்தச் சாதிகளிற்குரிய தொழில்களும் அவற்றிற்குக் கற்பிக்கப்பட்ட குணங்களும், அவை பற்றிய நம்பிக்கைகளும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகிவந்தன. மனுஸ்மிருதி தொடக்கம் இந்து சமயத்தின் மூல நூல்கள் இக்கோட்பாட்டை அழுத்தி வலியுறுத்துகின்றன. பிராமணர்களால் எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட இந்நூல்கள் அவர்களின் அதிகாரத்தையும் நலனையும் கடவுளைக் கொண்டு கட்டமைத்துக்கொள்ள உதவின. சமூக ஒழுங்கைத் தூய்மை, தீட்டு ஊடாகத் தொழிற்சார் ஒழுங்காகக் கட்டமைக்கிறது இந்து மதம். சாதியின் தோற்றக் கோட்பாடுகளில் ஒன்றான தொழில் கொள்கை (occupational theory) இதனை விரிவாக விளக்குகிறது.

“சாதிகள், மக்கள் அவரவர் செய்யும் தொழில்களின் வேறுபாட்டினால் ஏற்படுத்தப்பட்டன. அத்தொழில் வேறுபாடுகளின் தன்மை, தூய்மை (Purity), தீட்டு (pollution) ஆகிய கருத்தாக்கங்களினால் மதிப்பிடப்பட்டன. நான்கு வர்ணப் பிரிவினரும் ஏற்றுக்கொண்ட தொழில் வேறுபாடுகள் அவர்களின் தகுதியை அல்லது சமுதாயத்தில் அவர்களின் நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன.’’ (பக்தவத்சல பாரதி 2012)

மேலும் இத்தொழில் செய்வோர் இத்தகைய குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்றும் வருணாசிரமம் குறிப்பிடுகின்றது.

வேதகாலத்தில் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு முக்குணங்களை வகுத்துக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம் – அமைதி; இராட்சத குணம் – மூர்க்கம், ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம்; தாமச குணம் – சிரத்தையற்ற, குறைகுணமுள்ளவர்கள், மந்தகுணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக்கொண்டனர்.

பிராமணர் – மிகுசத்துவ குணம்; சத்திரியர் – குறை சாத்வீகம், அதிக இராட்சத குணம், குறை தாமசீகம்; வைசியர் – சாத்வீகக் குணமற்றவர், குறைவான இராட்சத குணம், அதிகமான தாமச குணம்; சூத்திரர் – தாமசீக குணம் மட்டும்.

தமிழில் ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்றொரு வழக்கு இருக்கின்றது. இது நேரடியாகச் சாதிய குணங்களைச் சுட்டிக்காட்டத்தக்கதான பயன்பாட்டில் உள்ளது. ‘சாதிப்புத்தி’, ’சாதிக்குணம்’ போன்றன மொழியில் இன்னும் நன்றாகவே புழங்குகின்றன. இச்சாதியில் பிறந்தால் இன்ன குணம்தான் இருக்கும் என்பதன் மொழி வடிவங்கள் இவை. இவ் வழக்கினுடைய தோற்றுவாய் வர்ண நம்பிக்கைகளிலிருந்தே ஆரம்பமாகியிருக்க வேண்டும். நவீன உளவியலானது ஒரு மக்கள் கூட்டத்தின் குண இயல்புகளும் நடத்தையும் அவரவர் சமூக, பண்பாட்டுக் கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றது என்கிறது. இங்கே மக்கள் சமூகமொன்றின் குணம், குறிகள் அவர்களுக்கு ‘விதிக்கப்பட்ட’ வாழ்க்கையினால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது அவர்களுடைய சூழலில் இருக்கக்கூடிய பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் அவர்களின் இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. முக்கியமாகச் சமய நம்பிக்கை, தொழில், காலநிலை, வர்க்கக் கூறுகள், மொழி, சமூக அந்தஸ்து ஒழுங்குகள் முதலானவை அவர்களின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. அது உடலளவிலும் உளவியல் அளவிலும் அவர்களின் ஆளுமையையும் கூட்டான இயல்பையும் தீர்மானிக்கின்றன.

இங்கே குறிப்பிட்ட சமூகக் குழுவொன்று கொண்டிருக்கக் கூடிய இயல்புகளும் நடத்தைகளும் ‘சாதியினால்’ கட்டமைக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை சாதியை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு உருவாக்கியதே. அவர்கள் தங்களுடைய அடிப்படை உரிமையையும் வாழ்வையும் எப்படித் தாமாகவே சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் அனுபவிக்கப் பிறப்பினாலேயே தடை செய்யப்பட்டவர்கள் என்பது இந்து மதத்திலிருந்து தோன்றி ஆழ வேரூன்றியது. பின்னாளில் அது இக்குணத்தினாலேயே, இப்பாவங்களினாலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் ‘தூய்மையற்றத் தொழில்களைச் செய்வதற்கும், தீண்டத்தகாதோராக இருப்பதற்கும்’ ஆளானார்கள் என்கிறது. இந்து மதமும் பண்பாடும் ‘பாவத்தினாலும் தீட்டினாலும்’ சாதியை உருவாக்கிக்கொண்டது. இங்கே அச்சாதிகளுக்குக் கற்பிக்கப்பட்ட குணங்களும், வழங்கப்பட்ட இயல்புகளும் தன்னிச்சையானவை அல்ல. அவை அவர்களுக்கு ‘அனுமதிக்கப்பட்ட’ வாழ்க்கையில் இருந்தும், விதிக்கப்பட்ட நடைமுறைசார் பண்பாட்டில் இருந்தும் பிறந்தவையே.

சுயமாகத் தொழிலையோ வாழ்க்கையையோ தெரிவு செய்ய அனுமதிக்கப்படாமல் சாதி அடிப்படையிலான குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டவர்கள் வாழ்வதற்குக் குற்றத்தொழில்களையும் தேர்ந்தெடுத்தார்கள். கல்வியும் பொருளாதாரமும் சுயமரியாதையும் மேம்படும்போது, ஆதிக்கச் சாதிகளால் கடுமையாக ஒடுக்கப்படும்போது அவர்களுக்குப் ‘போராடும் குணம்’ தேவைப்படுகிறது. அப்படி அவர்கள் தங்கள் மீதான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவித்துக்கொள்ளும்போது சமூகத்தில் அவர்களை எப்படியாவது கீழ்ப்படுத்த அவர்களின் குண இயல்புகள், தொழிலின் தூய்மை, பிறப்பின் தூய்மை பற்றி அழுத்தம் கொடுத்து, ஆதிக்கச் சாதி சில கற்பிதங்களை உருவாக்குகின்றது. அவர்களைக் ‘குற்றத்தொழில்கள் செய்பவர்களாக’, ‘முரடர்களாக’ காட்டுகின்றது. அறவுணர்வு என்பது அனைவருக்குமானது. அது ஆதிக்கச் சாதியினாலோ, மதங்களினாலோ, வர்க்கங்களினாலோ தீர்மானிக்கப்படுவது அல்ல. சமூக அறம் என்பது சனநாயகத்தன்மையுடன் மேலெழுகிறது.

சமகாலத்தில் குற்றத்தொழில்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியைக் கேட்போம். உதாரணத்திற்கு, இலங்கை தமிழ்ச் சூழலை எடுத்துக்கொள்வோம். இந்தக் கேள்வியை விளக்குவதற்கு இன்னும் இரண்டு கேள்விகளைக் கேட்கலாம். சமூகம் சாதிய அடிப்படையில் வரையறுக்கும் குற்றத்தொழில்களைச் செய்பவர்களில் பெரும்பாலும் அத்தொழில்களைத் தெரிவுசெய்ததன் பின்னணிகள்; அதில் சாதியின் பங்கு எத்தகையது? ஏழைகள் அல்லது வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனரா, ஆதிக்கச் சாதியினர் அதிகம் உள்ளனரா? மிகவும் இலகுவாக அவதானித்துப் பதில் சொல்லக்கூடிய கேள்விகள் இவை. ஒன்றுக்கொன்று தொடர்புடையவையும் கூட. ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் அதிகமாகக் குற்றத் தொழில்களின், நடத்தைகளின் விகிதாசாரத்தினுள் வந்து சேர்கிறார்கள் என்பதற்கு அவர்கள் அறத்தோடும், சமூக அந்தஸ்தோடும், சுயமரியாதையோடும் இருக்க விருப்பமில்லாமல் அதனைச் செய்கிறார்கள் என்றோ, அவர்கள் சோம்பேறிகள், அதனால்தான் இவற்றைச் செய்கிறார்கள் என்றோ குறிப்பிட முடியுமா?

தோற்றம், நிறம் போன்ற உடல் பொலிவுகளைக் கொண்டும் சாதியம் நியாயப்படுத்தப்படுவதுண்டு. உதாரணமாக, பிராமணர்கள் ஆரிய இனங்களை அடியாகக் கொண்டவர்கள். வெள்ளைத்தோலைக் கொண்டவர்கள். புனிதத் தன்மை கற்பிக்கப்பட்ட தூய்மையின் வடிவங்களாக இருப்பவர்கள். அவர்களே இந்து மதத்தையும் சாதியையும் உருவாக்கியவர்கள். திராவிடர்கள் தாம் உருவான நிலத்தின் வெம்மையின் அடிப்படையில் கருமையானவர்கள், ஆதியில் இயற்கை வழிபாட்டின் இயல்புகளுடன் இருப்பவர்கள். முக்கியமாகச் சாதியற்றவர்கள். திராவிடர் மீதான தொல்லியல், மானிடவியல் ஆய்வுகள் திராவிட மக்கள் ஆதியில் சாதியற்றவர்கள் என்றே குறிப்பிடுகின்றன. சாதியை ஆரியர்களே ‘மதத்தின்’ மூலம் ஒரு டிரோஜன் குதிரையைப் போல எடுத்துவந்தனர். இந்த அடிப்படையில் உடலுழைப்புச் சார்ந்த தொழில்களைச் செய்ய பணிக்கப்பட்ட மக்கள் அத்தொழில்கள் மூலம் பெறும் கடுமையான உடலமைப்பை அது அவர்களின் கர்ம வினையால் விளைந்த சாதிக்குரிய உருவமாகச் சித்திரித்தனர்.

சாதிய ஒடுக்குமுறைக்குள் இருக்கும் பெரும்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து ஒடுக்கவும் சுரண்டவும் ஆதிக்கச் சாதியினர் இந்த ‘நடத்தை’ பற்றிய வேதகால பூதத்தை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

மனித சமூகம் நாகரிகமடைந்து வரும்போது சாதிய இயல்புகளும் நடைமுறைகளும் மாறின. சனநாயகத்தின் வளர்ச்சி, அடிமை முறை, சாதி முறை என்பவற்றை அரசியல் ரீதியாக, சட்ட ரீதியாகத் தடை செய்யும்போது அவற்றை வேறு விதமாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஆதிக்கச் சாதிகளுக்கு இருந்தது. சாதித் தொழில்களின் அழிவும் கல்வியும் அவர்களை அச்சுறுத்தின. அதனால் சாதிக்குண்டான குணங்குறிகளை அவர்களின் பிறப்பை இயல்பாகச் சுட்டிக்காட்டத் தொடங்கினர். சமகாலத்தில் கூட்டான சமூகங்களின் இயல்புகள் சிதறிப்போகத் தொடங்கின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கல்வியும் விழிப்புணர்வும் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றின. பொருளாதாரத்தினாலும் பண்பாட்டினாலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மக்கள் தொடர்ந்தும் சில குற்றத்தொழில்களைச் செய்ய விதிக்கப்பட்டனர். காலனிய, முதலாளித்துவத்தினால் ஆளப்படும் சமூகங்களின் மனித இயல்புகள் சமகாலத்தில் அவற்றின் இயல்புகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனினும் இந்து மதத்தின் மேலாதிக்கம், சாதிய மனநிலைகளின் நடைமுறைகளின் நவீன வடிவங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் இயல்புகள் என்று தொடர்ந்தும் நுட்பமாகச் சில கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ‘குற்றத்தொழில்களைப் புரிபவர்கள்’, ‘அழுக்கானவர்கள்’ என்பதான கற்பிதங்கள். தொழில், நிலம், பொருளாதாரம் என்பன இன்னும் ஆதிக்கச் சாதி முதலாளிகளிடமும் குட்டி முதலாளிகளிடமும் (பூர்ஷ்வாக்கள்) இருந்துவரும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருசிலர் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள், இந்து சமயம் உருவாக்கிய ‘குண இயல்பு’ கற்பிதத்தை அச்சமூகம் மொத்தத்திற்கும் கற்பிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு வெள்ளாள ஆதிக்க மனநிலை கொண்ட யாழ்ப்பாணத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களும் போதைப்பொருள் பாவிக்கின்றனர், வாள்வெட்டுக் குழுக்களில் இயங்குகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் செய்வது ‘ஒடுக்கப்பட்ட’ சாதியைச் சேர்ந்த இளைஞர்களே என்ற பொது நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் வடசென்னை இளைஞர்கள் என்றால் ரெளடிகள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்ற பிம்பம் உருவாக்கப்படுவது போல்தான் இதுவும். இங்கே ஒவ்வொரு தனிமனிதரின் இயல்பும் உருவாக்கப்படுவதில் அவருடைய சமூகம் எத்தகைய நிலைப்பட்ட பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது என்பதும் முக்கியமாகும். ஒரு சமூகத்திற்குக் கல்வியையோ உரிமையையோ வழங்கமாட்டோம் என்று மதங்களை, கோட்பாடுகளை உருவாக்கி, கடவுளின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களையே தாங்கள் உரிமையற்றவர்கள், சுயமரியாதையற்றவர்கள், பிறப்பினாலேயே இழிவானவர்கள், தீட்டுள்ளவர்கள் என்று நம்பவைத்து ஒடுக்கும் ‘தந்திர குணம்’ அறிவாகவும் உயர்வாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றது. விழிப்புணர்வடைந்து, அரசியல்மயப்பட்டுப் போராடத் தலைப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் முரடர்களாகவும் பிறழ்வானவர்களாகவும் கருதப்படுவது எவ்வளவு பெரிய முரண்!

நம்முடைய சமூகத்தின் கூட்டான நடத்தை என்பது மதங்களினாலும் சாதியினாலும் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் மதத்தைவிடவும் வலுவான அமைப்பாகச் சாதியம் மாறிக்கொண்டது. அது தன் வேரினை இந்து மத்தின் மேல் நிறுத்தினாலும் பலமான விழுதுகளையும் தோற்றுவித்தது. சமூக மனநிலையை உருவாக்குவதில், அதன் நடத்தையை உருவாக்குவதில் வலிமையாக இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் பௌத்த நெறியைத் தழுவிய பின்னரும் சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகப் பின்பற்றுகின்றனர். கிறிஸ்தவத்தில் சாதி நம்பிக்கைகள் இல்லை. ஆனால், தமிழ்க் கிறிஸ்தவர்கள் சாதியத்தைப் பின்பற்றுகின்றனர்.

அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதியக் குழுக்களாக ஒடுக்கப்பட்டுவந்த மக்கள் காலனிய காலத்தின் பின்னர் ஏற்பட்ட சனநாயகம், உலகமயமாதல், ஐரோப்பிய மனநிலை கொண்ட முதலாளித்துவத்தின் பரவுகை, மார்க்சியம் முதலான சமூகக் கோட்பாடுகளின் வளர்ச்சி போன்ற பின்னணிகளில் தங்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொண்டனர். சாதியின் வீரியம் குறையக் குறையச் சாதிய நிலப்படம் கலையத் தொடங்கியது. பல்தன்மை வாய்ந்த நிலங்களும் நகரங்களும் உருவாகின. அதனால் சாதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகளும் மறைந்தன. குறிப்பாகச் சாதிகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதார, பண்பாட்டு உறவுகள் குலைந்தன. இதனால் சாதி குணங்கள், நடத்தைகள் என்பனவும் மாற்றம் கண்டன. ஆயினும் சாதியம் நிலவக்கூடிய இடங்களில் அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பின்னணியில் கருத்தியல் மேலாண்மை (ideological hegemony) ஆதிக்கச் சாதிகளிடமே உள்ளது. குறிப்பாகப் பண்பாட்டில் மதங்களின் ஊடாக அது வலுவாக உள்ளது. அதனால் இந்நடத்தைப் பற்றிய ஆதிக்க மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மை கருத்தியல் சரியானது என்பது ஏற்புடையதல்ல என்கிறார் உளவியலாளர் எரிக் ப்ராம்.

‘ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடைய மனநிலை பற்றி ஏமாற்றம் அளிக்கக் கூடியது, கருத்தாக்கங்கள் பற்றிய அவர்களது ஒருமித்த ஏற்பு (consensual validation) ஆகும். பெரும்பான்மை மக்கள் சில கருத்துகளையோ உணர்வுகளையோ பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதால், அவை ஏற்புடையவை என்று யோசனையின்றி அனுமானம் செய்கிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. தன்னளவில் ஒருமித்த ஏற்பு என்பது பகுத்தறிவானதோ, மனநலம் உடையதோ அல்ல. இரண்டு பேர் பகிர்ந்துகொள்கிற முட்டாள்தனம் என்று ஒன்று இருப்பது போல், இலட்சம் மக்கள் பகிர்ந்துகொள்கிற முட்டாள்தனங்களும் உண்டு.’ (எரிக் பிராம் : 2014)

சாதியக் குணங்கள் என்பவை குழுக்களாகத் திரண்ட மக்களின் பண்பாட்டுப் பின்னணியில் எழுந்ததையும், அதற்குச் சாதியம் முக்கியமான காரணமாக இருந்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சாதியம் கடுமையான சமூக அமைப்பாக இருந்தபோது, அதற்குச் சாதிக் குழுக்களுக்கு உண்டான பண்புகளும் பழக்கங்களும் இருந்தன. இங்கே தீயவை என்று வரும்போது ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருக்கக்கூடிய தீயவை பற்றியே ஆதிக்க மனநிலை அழுத்தம் கொடுத்து அவற்றைக் ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்ற சமூகக் கருத்தாக மாற்றியது. அது சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆதிக்கச் சாதிகளுக்குப் பெற்றுத்தந்த நலன்களுக்காகச் செய்யப்பட்ட ஒரு சமூகப் புரட்டாகும். மிகவும் திட்டமிட்டு இந்து மதம் உருவாக்கி, ஆதிக்கச் சாதி குழுக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட புரட்டாகும். அதற்கென பிறப்பு, கர்மவினை, தூய்மை, தீட்டு போன்றவற்றை நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளனர். நடைமுறையில் தீமை என்பதும் பிறழ்வு என்பதும் அனைத்துச் சமூகங்களுக்குள்ளும் இருப்பதுதான். பிறரைச் சமமாக மதிக்காது ‘ஒடுக்குவது’ என்பதே பெரிய சமூக அநீதி! அதை யாரும் ‘தீயது’, ’அசுத்தமானது’ என்று சமூகக் கருத்தாக்கமாக மாற்றவில்லை. ஏனெனில் இங்கே சமூகக் கருத்து என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களால் தீர்மானிக்கப்படுகின்றதே ஒழிய, பகுத்தறிவினாலும் அறத்தினாலும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இன்றைக்கு மதச்சார்பின்மையின் வளர்ச்சி, பகுத்தறிவுள்ள கல்வி, சமத்துவச் சிந்தனைகளின் மேலாண்மை போன்றவற்றினால் ஆதிக்கச் சாதியம் உருவாக்கி வைத்திருக்கக் கூடிய மேலாத்திக்கக் கருத்து நிலைகள் உருக்குலையத் தொடங்கியிருக்கின்றன.

உசாத்துணைகள்

  1. மனோன்மணி சண்முகதாஸ் (1991), ‘சாதியும் துடக்கும்’, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ப்ரைவேட் லிமிட்டெட்.
  2. பக்தவத்சல பாரதி (2005), ‘மானிடவியல் கோட்பாடுகள்’, அடையாளம் பதிப்பகம்.
  3. எரிக் ப்ராம் (2014), ‘மனவளமான சமுதாயம்’, காலச்சுவடு பதிப்பகம்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!