சிறிய கையூட்டுக்குத் தேறாத ஒருவனை
அடித்துக் கொல்ல உரிமையுடைய ஒருவனிடம்
ஒருநாள் வசமாகச் சிக்கிக்கொண்டார் கடவுள்.
தன் மலவாய்க்குள்
பழுத்த பிரம்பு நுழைவது குறித்து
அன்று காலையில் அவருக்கு எந்த யோசனையுமில்லை.
குழந்தையின் மூத்திர வாசத்தின்மேல்,
அவசர அவசரமாகச்
சட்டையைப் போர்த்திச் சென்ற அவரை
பிறகு கண்டது,
அரசாங்க மருத்துவமனைச் சவக்கிடங்கில்.
பேறு கால பிள்ளைத்தாச்சி ஒருத்தியும்
அய்யோவெனக் கிடந்தாள்.
அவளும் கடவுள்தான்.
இருவருக்கும்
மர்ம மரணம் என அறிக்கை தந்தார் மற்றொரு கடவுள்.
பின்பு அமரர் ஊர்தி ஓட்டிக்குக்
கையூட்டு அருளினார் சாட்சாத் கடவுள்.
நடக்கக்கூடாதது நடந்துவிட்டது,
பெரிதாக்க வேண்டாம்,
என அணைத்த கைகளில் கடவுள் இருந்தார்.
அடித்துக் கொன்றவனை,
ஆயுதப்படைக்கு மாற்றியதும் கடவுள்தான்.
எல்லா இடங்களிலும் இருந்த
கடவுளிடம் கேட்க எனக்கொரு சந்தேகம்
கடவுளால் பார்க்க முடிந்ததா,
குதத்தில் உலோகம் செருகியவன் கண்களை!
மரித்த கடவுளின் கண்கள் – நீரை மகேந்திரன்
Image Courtesy: Francisco Toledo