எருமை மறம் – மௌனன் யாத்ரிகா

ஓவியம் : ஶ்ரீதர்

நத்தைக் கறிக்கு
மிளகு அரைக்கும் பெண்டுகள்
ஊரையே மணக்கவிடுகிறார்கள்;
தொண்டையில் இறங்கும்
உமிழ்நீரின் பெருக்கை
யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்;
அதோ…
வாசலில் படுத்திருக்கும்
நாய்களின் நாக்குகள்
தரையில் குழிகளைப் போடுவதைக் காண்;
அண்ணங்களின் நடுவே மலர்ந்துள்ள
என் உள்நாக்குக் கூட
ஒரு மீன்குஞ்சைப்போல் நீந்துகிறது.

“வேனிற்கால மாலைக்காற்று
எங்கிருந்து அள்ளி வருகிறது
இவ்வளவு மணத்தை!” என்று
கேப்பைக் கலிக்கு
உப்புக்கண்டத்தைச் சுட்டுக்
கடித்துக்கொண்டிருக்கும் சம்சாரிகள்
இந்நேரம் உரையாடி வியப்பார்கள்;

எலே பங்காளி…
தீது செய்யும் அரசமைந்து
நாமெல்லாம்
கூழுக்குத் தாளம் போடும்
நிலையே வந்தாலும்
இந்தக் காட்டு வளம்
மிஞ்சியிருந்தாலே போதும்
உண்டு களித்து உயிர்த்திருக்கலாம்.

நற்சொல் கூறிடும் வேட்டுவா…
அங்கே காண் !
நம் குழுவின் முதுகணியன்
காற்றில் மிதக்க விடுகிறான் தேமதுரப் பாடலை;
‘தொலைதூர மலையிலிருந்து
ஈரக்காற்று இறங்கியிருக்கிறது’ என்று தொடங்கும்
அந்தப் பாடலின் வரிகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஓலையில் விதைக்கப்பட்ட மொழியின் விளைச்சல்;
ஒவ்வொரு தலைமுறைக்கும்
கைமாற்றிக் கொண்டுவரப்படுகிற
விதைப்பாடல்களைத்தான்
இப்போது
கதைப்பாடல்கள் என்கிறோம்.

சகோதரா !
பாணர் மரபின் குருதியுறவுகள்
காது கொடுக்கும் அழகைக் காண்;
அந்தப் பாடலின் மகசூலை
தம் உயிரில் சேமிக்கும் காதலைக் காண்;
இளையோர்களின் மனவுலகம்
கதைகளால் தூண்டப்பட வேண்டும் என்ற
அறிவுச் சமூகத்தின் விருப்பம்
நிறைவேறுவதைக் காண்;

வா…! நாமும் அமர்வோம்;
கறி நாறும் பொழுதில்
கதை கேட்பது ஆனந்தம்;
வடிக்கும் பதத்துக்குச் சோறும் வரும் வரை
செவிக்கு உணவெடுப்போம்;
கறி வேகும் அடுப்பின் வெப்பம்
குளிரைப் போக்குவதைப்போல்
கணியனின் பாட்டு
நமது சோர்வைப் போக்கும்;
நிலவின் வெண்ணிற ஒளியில்
கிழவனின் முகச்சுருக்கம்
ஆற்று மணல் திட்டுக்களைப்போல் ஒளிர்வதை நோக்கு;
அவன் கண்கள்
வானின் கருமை கொண்டு
மின்னுவதைக் காண்;
நம் தொல்குடித் தந்தையின் ஆவி
அவன் மேல் இறங்கிவிட்டது;
சன்னதம் கொண்ட உடம்பு ஆடுகிறது;
கூர்ந்து கேள்…
அக்கக்கா குருவிகள்
தம் தொண்டையிலிருந்து கத்தும் ஒலி கேட்கிறதல்லவா?
அந்த ஒலியை எழுப்பும் குருவிகள்
நம் மூத்த பெண் மக்கள்;
நட்சத்திரங்களாக வானில் இருந்தவர்கள்
பாணனின் அழைப்புக்கு
இறங்கி வந்திருக்கிறார்கள்;

வளமைச் சடங்குக்குப்
பாடல்கள் புனையும் பேரிளம் பெண்கள்
வளரிளம் பருவத்தினருடன் கூடி
கும்மி பழகத் தொடங்கிவிட்டனர் காண்;
தன்னானே என்னும் மெட்டுக்கு
மொழி கோக்கும் பின்பாட்டுக்காரிகள்
தம் உள்ளங்கைகளால் தாளமிட்டுக்கொண்டே
குனிந்தும் நிமிர்ந்தும்
கால்களைப் பின்னி நடக்கும்
ஒவ்வொரு சுற்றிலும்
முளைப்பாரிக்குத் தேவையான
தானியங்களின் முளைப்புத் திறன்
அதிகரிக்கும் என்பதை அறிவாயா ?

பங்குக் கறிக்குப் பாத்தியதை உள்ளவனே!
உனக்கொன்று தெரியுமா?
கரிசல் நிலத்துக்குத் தோதான பாடல்
இளவேனிற் காலத்தில்
இயற்றப்படும்போது
மொழியின் வெப்பம் சமநிலையாக இருக்கும்;
குலக்குறியை வணங்கிவிட்டு
விளைச்சலைக் களம் சேர்க்கும்போது
அதன் பயனை அனுபவிக்கலாம்;

என்னுயிர்ப் பாணனே…
முதுமக்கள் தாழி செய்யும் வரை
ஆயுள் கொண்ட முதுபெண்டிர்
வாழும் நம் குமுகத்தில்
செழித்த இசையுள்ளது;
நத்தை ஓட்டுக்குள்ளும் – அந்த
வித்தையை நாம் செய்வோம்;
எலே பங்காளி
பாடல் புழங்கும் ஊரில்
மூங்கில்கள் இளம் வயதில்
கொலை செய்யப்படுவதில்லை;
முற்றிய பொன் மஞ்சள் காலம் வரை
அவை பூத்தாடும்;

அன்பனே…
அதோ நம் தலைமை வேட்டுவன்
கள்வெறியில் பாடிக்கொண்டிருக்கிறான்;
ஒற்றைப் பனையின்
அத்தனை கலயங்களையும்
தழுவித் தழுவி அருந்தியவன்
பின்னிரவுக்குப் பிறகும் கூட
பாடுவதைத் தொடர்வான்;
காதலும் வீரமும்
அவன் பாடலில் ததும்பும்;
அகமும் புறமும்
அவன் மொழிக்குள் பிதுங்கும்;

இப்போது கேட்பது
தொடை தட்டி முன்னேறிய
வீரத்தை நினைவுகூரும் பாடல்;
அந்த வரிகளைக் கேள்;
“தீதுக்கு அடிகோளும் பகைவர்
வரலாறு நெடுக உண்டு;
அவர்களைக்
குதிகால் பலமுள்ள கூட்டம்
வென்று வாகை சூடும்”

(தொடரும்….)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger