பலவீனத்திலிருந்து பலத்திற்கு…

வேங்கைவயல் சம்பவம் மெல்ல மெல்ல ‘பொது’ மக்கள் மனதிலிருந்து மறைந்துவருகிறது. அதுபற்றி விவாதித்த ஒருசிலரும் தற்போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அப்பிரச்சனைக்கான தீர்வு கண்டறியப்படுமா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா, இனி இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான தொலைநோக்குச் சட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தப்படுமா என்பவைக் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன; பல ஆண்டுகளாகவே கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றன. எனில், இதற்கான தீர்வோ மாற்று ஏற்பாடோ என்ன?

கல்வியின் மூலம் சமூக விடுதலை சாத்தியப்படும் என்று சொல்லப்பட்டது; பின் பொருளாதாரம் முன்வைக்கப்பட்டது; அரசியல் அதிகாரம் பேசப்பட்டது. ஆனால், நம்மை ஒடுக்கியவர்களே இதனால் பலனடைந்தார்கள். இம்மூன்றும் இன்று அவர்கள் கையில். வர்க்க எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு எதுவும் நம்மை மீட்டெடுக்கவில்லை. ஆங்காங்கே சில நன்மைகள் நடந்தாலும் அவை மொத்தச் சமூகத்திற்கும் கைகொடுப்பனவாக அமையவில்லை.

இத்தகைய பிரச்சனைகளைப் பல கோணங்களில் ஆய்வுசெய்து அதற்கு மதமாற்றமே தீர்வு என பாபாசாகேப் அம்பேத்கர் கருதினார். அதன் தொடர்ச்சியாகவே பத்து இலட்சம் மக்களோடு பௌத்தத்தைத் தழுவினார். அதனால் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் யதார்த்த முரண். அதில் ஆச்சரியமுமில்லை. ஏனென்றால், அன்றைய மக்கள் தொகையின்படி பட்டியலின மக்களின் எண்ணிக்கை சுமார் 6.5 கோடி. வெறும் பத்து இலட்சம் மக்களே அவரோடு மதம் மாறினர். சமகாலத்திலும் இதே நிலைதான். மொத்த மக்கள் தொகையில் பௌத்தர்களின் எண்ணிக்கை சொற்பமே. பௌத்தம் பரவ தம் மக்கள் எத்தகைய தியாகமும் செய்வார்கள் என்று பாபாசாகேப் நம்பினார். அவருக்குப் பின் வந்த தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் யாரும் அவரது மதமாற்ற திட்டத்தை முன்னெடுக்கவில்லை. கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களிலும் இதே பிரச்சினைதான். இன்றும் பட்டியலின மக்கள் இவ்விரு மதங்களிலும் இணைவது தொடர்ந்தாலும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட தீர்வுதான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலமே பரவாயில்லை என்ற வகையிலேயே சமகால ஆட்சிமுறை இருக்கிறது. நம்மால் குடியரசுத் தலைவராக வலம்வர முடியும். ஆனால் பஞ்சாயத்துத் தலைவராவதற்குப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதே சான்று.

அப்படியானால் இதற்கான தீர்வாக நம் முன்னத்தி ஏர்கள் சொன்னவை, செயல்படுத்தியவை யாவும் பயனற்றவையா என்று இன்றைய இளைஞர்கள் தடுமாறக் கூடும். விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் உடனடித் தீர்வு, நீண்டகாலத் தீர்வு என இரண்டு உண்டு. வேங்கைவயல் சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு உடனடித் தீர்வானது, குற்றவாளியைக் கைது செய்வது, தனி நீர்த்தொட்டியை இடித்துவிட்டுப் பொது நீர்த்தொட்டியை அமைப்பது (இரண்டுமே நடக்கவில்லை). நீண்டகால தீர்வானது, இனி அத்தகைய குற்றங்கள் நடைபெறா வண்ணம் சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் இயங்குவது. இரு சமூகங்களுக்குமான இணக்கத்தை ஏற்படுத்த முனைவது, பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவது, சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பது போன்றவை பயனளிக்கும்.
மேலும், எப்போது சாதிய வன்கொடுமைகள் நடந்தாலும் தலித் மக்களிடம் மட்டுமே சாதி ஒழிப்புப் பேசும் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எழுச்சியூட்டுவதை விட்டுவிட்டுப் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்திடம் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சியையாவது உண்டாக்க வேண்டும். காந்தியச் சிந்தனை என்று இதைக் கேலி செய்ததால்தான், அம்பேத்கர் இழுத்து வந்த தேர் அங்கேயே நிற்கிறது. அடிமையிடம் அவன் அடிமை என்று உணர்த்த வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, குற்றமிழைத்தவனிடம் நீ செய்தது குற்றம் என்பதையும் உணர்த்த வேண்டும். சாதி என்பது புறப்பொருளல்ல, அது ஒரு மனநிலை.

உலகில் ஒடுக்கப்படும் இனம் எதுவாயினும் அது தனக்கான முன்னோடியாக ஓரினத்தைக் கொள்ள வேண்டுமென்றால் அது கறுப்பரினம்தான். அவர்களிடம் நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். எப்படிப் போராட வேண்டும்; எப்படிக் களப்பணியாற்ற வேண்டும்; சமூகமாக இணைந்து எப்படி இயங்க வேண்டும்; தம் அரசியலை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கடத்த வேண்டும்; எப்படி அரசியல் செய்ய வேண்டும்; எப்படிப் பாட, எழுத வேண்டும் என்பது கூட அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் சமூகமாக ஒன்றிணைய வேண்டும். எளிய உதாரணம், நம் அருகில் உள்ள நாடார் சமூகத்தினர். அவர்களின் வளர்ச்சி முன்னுதாரணமானது. சாதியாக ஒன்றிணைவது, அதன்வழியாக நம் பலத்தைப் பெருக்கிக்கொள்வது தவறு கிடையாது. அதைத்தான் எதிர்த் தரப்பினர் காலங்காலமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அறிவுத்தளத்தில், பொருளாதாரத் தளத்தில், சமூகத் தளத்தில் நம் பலத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ‘ஆதிதிராவிடர்கள் என்ற பெயரில் ஒன்றிணைய வேண்டும்’, ‘தலித் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ போன்று சமகாலத்தில் எழுந்த கோரிக்கைகள் இத்தகைய தன்மையைக் கொண்டதே. சமூக ரீதியிலான நமது ஒன்றிணைவு என்பது எதிர்த் தரப்பினருக்கு அச்சுறுத்தல்தான். அது நடக்காமல் பார்த்துக்கொண்டதுதான் அவர்களது இத்தனை ஆண்டுகால அரசியலின் வெற்றி. அண்ணல் அம்பேத்கர் இன்றும் அவர்களுக்கு அச்சுறுத்தலாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய அறிவு பலம் / அரசியல் பலம்தான். அதைத்தான் நாமும் பற்றிக்கொண்டு முன்னேற வேண்டும். அவர்களால் புறக்கணிக்க முடியாத இடத்திற்குச் செல்வதே நமக்கான வெற்றி.

Active Politics – Reactive Politics என்று சொல்வார்கள். நாம் இதுவரை எதிர்வினை (Reactive) அரசியலைத்தான் செய்துகொண்டிருந்தோம். நம் கோபத்தை, சோகத்தை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருந்தோம். இனி நாம் வினை அரசியலையும் செய்ய வேண்டும். ஒருபக்கம், சாதி ஒழிப்புப் போராட்டங்கள், மதமாற்றம் என எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் சமூக ஒன்றிணைவு, நம் அறிவு / பொருளாதார / சமூக பலத்தை அதிகரித்துக்கொள்வது போன்ற வினை அரசியலையும் செய்ய வேண்டும். இதுவும் நம்மை நிலைநிறுத்திக்கொள்ளத்தானே ஒழிய, நம் முன்னேற்றத்தின் மூலம் அவர்களை ஒடுக்க அல்ல என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இறுதியாக, அண்ணல் அம்பேத்கர் எழுதிய பல நூல்களில், ‘சாதியை அழித்தொழித்தல்’ மட்டுமே பரவலாகப் பதிப்பிக்கப்படுகிறது. இதிலுள்ள அரசியல் நுட்பமானது. சாதியை ஒழித்தல் என்பது எதிர்வினை. ‘உன் மதத்தை நீயே வைத்துக்கொள், நான் எனக்கான மதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்’ என்பது வினை அரசியல். அந்த வகையில் அவர் எழுதிய ‘முழு விடுதலைக்கான வழி’யே இப்போது நாம் கைக்கொள்ள வேண்டியது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!