16
சுந்தரரின் பாடலொன்றில் வரும் ‘செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்’ என்ற அடியையே நந்தனார் கதைக்கான மூலமாக எல்லோரும் கொள்கின்றனர். ஆனால், நந்த / நந்தன் என்ற பெயர் சங்கப் பாடலிலேயே இருக்கிறது. சைவ நூல்களில் சம்பந்தர் பாடலொன்றில் இடம்பெற்றிருந்ததையும் முந்தைய அத்தியாயத்தில் கண்டோம். எனவே, எல்லோரும் கருதுவதைப் போல சுந்தரரின் பாடலடியை நந்தனார் பற்றிய முதல் குறிப்பாகக் கொள்ள முடியாது. மாறாக, இன்றைக்கு அறியப்படும் பண்ணையடிமை நந்தனாருக்கான முதல் குறிப்பாகக் கொள்ளலாம். ஆனால், இந்த ஒற்றைப் பாடலடியால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் எந்தக் கதையும் இல்லை. நாளைப் போவார் என்ற பெயரிலிருந்து ஒரு கதையை விரித்தெடுத்திருக்கிறார்கள் என்று கருத முடிகிறது. அதில் நந்தனார் என்ற பெயர் கூட இல்லையென்பது மட்டுமல்ல, அவருடைய சாதி பற்றிய குறிப்பும் இல்லை.
நம்பியாண்டார் நம்பி தன்னுடைய திருத்தொண்டத் தொகையில் நாளைப் போவார் பற்றி ஒரு பாடல் அளவில் எழுதியிருக்கிறார். நாளைப் போவார் கதை படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டது என்பதைக் காட்டுவதற்காக சுந்தரரின் ஒரு வரிக்கு அடுத்து நம்பியின் இந்த ஒரு பாடல் அளவிலான குறிப்பை நந்தனார் பற்றிய இரண்டாவது குறிப்பாகக் காட்டுவர். இந்தப் பாடலிலும் நந்தனார் என்ற பெயர் இல்லை. ஆனால், ‘புறத்திரு தொண்டன்தன் புன்புலை போய்’ என்ற வரி இடம்பெறுகிறது. இதனைச் சாதி பற்றிய குறிப்பாக எடுத்துக்கொண்டு இப்பாடல் அவரைத் தாழ்ந்த குலத்தினர் என்று கூறுவதாகக் கருதுகின்றனர். புறத்திரு கொண்டன், புன்புலை என்ற இரண்டு சொற்களே அவ்வாறு கருதக் காரணம். புறத்திரு கொண்டன் என்பதிலிருந்து கோயிலுக்குள் நுழைய முடியாமல் புறத்தே இருந்த தொண்டன் என்று விளக்கம் எழுதுவோர், புன்புலை என்பதற்கு நந்தனார் புலையர் வகுப்பினர் என்பதைக் கூறுவதாகக் கருதுகின்றனர். இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, புன்புலை என்பதைப் புலையர் என்ற சொல்லாகக் கருதுகின்றனர். இரண்டு, புலையர் என்றால் தாழ்ந்த வகுப்பினன் என்று கருதுவது. இவ்விரண்டும் விவாதத்திற்குரியவை. இரண்டின் மீதான அர்த்தங்களும் பின்னாட்களில் உருவான பிரதிகளையொட்டி ஏற்றப்பட்டவையாகும். இந்த இடத்தில் பெரியபுராணத்திலுள்ள திருநாளைப் போவார் புராணத்தைக் காணலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then