வீட்டுப் பாடங்கள்
புதிய பாடத்தின் வீட்டுப் பாடங்களால் நிரப்பப்பட்டுவிட்டது அவனது பை. இனி அவன் மனித உணர்வுகளை மறந்தாக வேண்டும் அல்லது அவற்றைக் கைவிட வேண்டும்… அரையாண்டுத் தேர்விற்குப் பிறகு அவன் தன்னுடைய ஆறு சகோதரர்களின் ஒரு துண்டு ரொட்டிக்காக மீண்டும் தன் உணர்வுகளை இழந்துவிட்டான். குழந்தைப் பருவத்தை அடியோடு தொலைத்துவிட்டான்.
❍
விளக்குகள்
தெரு விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கப்பல்கள் வந்து செல்ல துறைமுகங்கள் தயார் நிலையில் உள்ளன என்று நினைத்துவிடக் கூடாது. பல தருணங்களில் விளக்குக் கம்பங்கள் குளிரால் பாதிக்கப்படும்போது விளக்குகள் நிர்வாணமாகிவிடுகின்றன. சில விளக்குகள் வெள்ளைத் தூண்களில் ஜொலிக்கும் மாளிகையின் வீதியில் இரவு முழுவதும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. விளக்குகளுக்கிடையேயான வேறுபாடென்பது செல்வாக்கையும் தியாகத்தையும் பொறுத்தது.
❍
கனவு
அவனது கண்கள் கட்டிகளால் மூடப்பட்டிருந்தன. இரத்தம் வலியால் முனகிக்கொண்டிருந்தது. உலகம் அவனது காதுகளையும் அடைத்துவிட்டிருந்தது. சுவர்கள் இரத்தத்தில் நனைந்திருந்தன. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவன் அவளைப் பார்த்தான். அப்போது தனது பிளாஸ்டிக் கால்கள் விட்டுச் சென்ற குழிகளை அவன் கவனிக்கவில்லை. தன்னை இறுக அணைத்துக்கொள்ளும்படி அவளது மடியிடம்
கெஞ்சினான். அவனது கண்கள் மூடப்பட்டிருந்த வேளையில் தனது விரல்களுடன் காற்றில் நடனமாடிக்கொண்டிருந்த அவளது பொம்மையைத் தழுவிக்கொள்ளும் ஒரு கையைக் கனவில் கண்டான். அவ்வேளையில் அவள் தன்னை மீட்டெடுத்தாள். அவர்களிருவரும் துண்டிக்கப்பட்ட நிழல்களாய், துடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளாய் மாறினர்.
❍
Illustration : shalini-karn
குழந்தையும் கல்லறையும்
அவளது கற்பனை மறைவதற்குள் ஒருமுறை அதைக் கூர்ந்து கவனித்தாள். அது அவளை ஆரத் தழுவத் தயாராக இருந்தது. மகளின் கல்லறைக்கு விடைகொடுத்த அவளது தோற்றம் கனிந்திருந்தது. நெருப்பு அவளது நெற்றியை விழுங்கியபோது அவளைச் சுற்றிலும் குடும்பத்தார் நின்றுகொண்டிருந்தார்கள். இப்போது அந்த ஐந்து வயது குழந்தையின் உருவம் மட்டும் மிச்சம். ஒவ்வொரு சூரிய உதயத்தின்போதும் புல்வெளிகளில் தங்கயிழைகளால் கல்லறை ஜொலிக்க தாயின் கண்களின் வழியாக அக்குழந்தை தாயிடம் வந்துசெல்கிறது.
❍
குறும்புக்கார ரொட்டி
அவர்களது அலறல் சப்தம் வெகு சீக்கிரம் மௌனமாகிவிடும். புயல் பயந்து நடுங்கும். இப்போது இடிக்கு முன்பும் பின்பும் மின்னல் மின்னுகிறது. நகரங்களை மேகம் சூழ்ந்துள்ளது. பாம்புகள் பேரீத்த மரத்தை வலம்வருகின்றன. இனி நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். நாம் அந்நியர்களாகிவிடுவோம்.
போதையில் தள்ளாடும் மின்னலைப்போல இந்தக் குறும்புக்கார ரொட்டி எவ்வளவு உயர்வானது தெரியுமா? வேகவேகமாக நம்மை வரவேற்று, வேகவேகமாக நம்மிடமிருந்து பிரிந்துசென்றுவிடுகிறது.
❍
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
உளவாளிகளுக்குப் பதிலாகப் புதிய காவல்படை. பழைய சர்வாதிகாரிகளுக்குப் பதிலாகப் புதிய சர்வாதிகாரிகள். பால்கனியில் விழுந்த கீறல், கதவில் விழுந்த கீறல் இரண்டுமே ஒன்றுதான். அவ்விரண்டுமே இருளுக்குத் தேவையில்லை. ஏனெனில் இருள் காற்றில் ஊடுருவக் கூடியது. மக்களுக்கு மனைவிகளும் இல்லை, குழந்தைகளும் இல்லை. அவர்களது கைகளும் அவர்களுடன் இல்லை. அவர்களது கைகளுக்கு அவர்கள்மேல் சந்தேகம். இறுதியாக அவர்களது கைகள் வரைந்த தீப்பொறி அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பொசுக்கியது. இவர்கள்தான் உயர்வான அரியணையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்.
⬤
வஃபா அப்துல் ரஸ்ஸாக்
ஈராக்கில் பஸரா நகரில் 1952இல் பிறந்த வஃபா அப்துல் ரஸ்ஸாக் தற்போது லண்டனில் வசித்துவருகிறார். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் வஃபா இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், ஸ்பானிஷ், பாரசீகம், பிரெஞ்சு, ஜெர்மன், செர்பியன், துருக்கி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது படைப்பு முதன்முதலாகத் தற்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.