ஒற்றைச் சொல்லில் தேசிய கீதம் – திருக்குமரன் கணேசன்

அண்ணல் அம்பேத்கரை இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் ‘பாபாசாகேப் அம்பேத்கர்’ என்றுதான் அழைக்கிறார்கள்! அப்படி அழைப்பதென்பது வெகுமக்கள் தங்கள்  தலைவர்களை மகாத்மா, பரமாத்மா என்றழைப்பது போன்ற உணர்ச்சிப் பெருக்கிலான உயர்வு நவிற்சியல்ல. உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வெளிப்படும் நன்றிப் பெருக்கு. மானுடச் சமத்துவத்திற்காக மட்டுமன்றி நாட்டின் பல்துறை வளர்ச்சிக்காகவும் சிந்தித்த, சுதந்திர இந்தியாவின் உயிர் மூச்சிற்கு இன்னொரு பெயர்தான் பாபாசாகேப் அம்பேத்கர். அவர் இந்திய அறிவாற்றலின் அடையாளம். உலகம் முழுவதும் எத்தனையோ புரட்சிகரத் தலைவர்களும் அறிவாளுமைகளும் தோன்றியிருந்தாலும் அறிவர் அம்பேத்கர் அளவிற்கு  மானுட விடுதலையைப் பேசி அறிவார்ந்து களமாடிய தலைவர்கள் எவருமில்லை. தீண்டாமை இழிவுகளிலிருந்து விடுதலைபெற, தம் மக்கள் பத்துலட்சம் பேரோடு நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமியில் பௌத்தம் ஏற்ற பண்பாட்டு நிகழ்வு செயற்கரிய செயல். இன்றுவரை  உலகம் சந்தித்திராத, சமன்செய்ய முடியாத வரலாற்றுச் சாதனை.  ஆதலால்தான் அவர் ஆதி முதல்வன் புத்தருக்கு இணையானவர். பேரறிஞர் அம்பேத்கரை ஈன்றெடுத்த மராட்டிய மண், புண்ணிய பூமி மட்டுமல்ல, அவரது அரசியல் செயல்பாடுகளுக்குக் களம் அமைத்த புரட்சிகர மண். அந்த மண்ணில், சுவாசித்து உண்ணுவதும் உறங்குவதும் உலாவி மகிழ்வதும் பெரும்பேறான பேரின்பம். மூடத்தனம் நிறைந்த இந்து மதத்தை மறுதலிப்பவர்கள், மானுட விடுதலைக்கு ஏங்கி நிற்பவர்கள், அன்பை அடிநாதமாகக் கொண்டவர்கள், அம்பேத்கரியத்தை உள்வாங்கி பௌத்தம் ஏற்றவர்கள் ஏன் குழப்பநிலையிலிருக்கும் அம்பேத்கரியவாதிகள் என யாவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் நாக்பூர் மண்ணைத் தொட்டுவிட வேண்டும், மானுட அறம் தழைக்க பௌத்த பேரொளியில் நனைந்திட வேண்டும். 2019 செப்டம்பர் 2 பௌத்தம் ஏற்ற நாளிலிருந்து அப்படியொரு கனவு எனக்கும் துளிர்த்திருந்தது. மூன்றாண்டுகளில் அந்தக் கனவு நனவானது!

2022 அக்டோர் 3, மதியம் 2.45 மணிக்கு மயிலாடுதுறை இரயில்நிலையச் சந்திப்பிலிருந்து புறப்பட்டது நாக்பூர் செல்லும் ‘பகத் கி கோதி’ அதிகவேக இரயில். இணையர் சீத்தா, குழந்தைகள் மௌரியன், நறுமுகையுடன் வழித்துணையாக வந்த அன்பு இளவல் ‘நீலம்’ அய்யப்பனுடன் குதூகலமாகத்  தொடர்ந்தது நாக்பூர் பயணம். இரண்டரை வயது மகன் மௌரியனுக்கும் 8 மாதக் கைக்குழந்தையான மகள் நறுமுகைக்கும் இதுவே முதல் இரயில் பயணம். அதுவும் தீக்ஷா பூமியை நோக்கிய நாக்பூர் பயணம்! தடதடத்தப்படி நண்பகல் வெய்யிலின் வெப்பக் காற்றைக் கிழித்துக் கொண்டு இரயில் புறப்பட்டதுமே மகன் மௌரியன் தன் மழலை மொழியில் அவன் அம்மாவிடம், “அம்மா… ஜாலியாருக்கு…” என்றான், மௌரியனை உச்சிமுகர்ந்து முத்தமிட ஆனந்தமானது பயணம்!

அந்திவானம் சிவந்து இருள் கவ்வத் தொடங்கிய வேளை சென்னை மாநகரம் எங்கள் ’பகத் கி கோதி’ இரயிலை விழுங்கத் தொடங்கியிருந்தது. முன்னிரவு 7.30 மணிக்கு  எழும்பூர் இரயில் நிலையச் சந்திப்பில் ’நிலா தம்மா’, ‘நீலம் பண்பாட்டு மையம்’ குழுவினருடன் இணைந்துகொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மொத்தம் 92 பேருடன் ஒரு தனிப்பெட்டியே எங்கள் வசமானது. வல்லொலி எழுப்பும் இரண்டு தமுறுகளும் ஐந்து தோல் பறைகளுடன் ஒரு பியானோ சகிதமாக நிலா தம்மா குழுவினர் பார்ப்பதற்கு ஓர் இசைக்குழுவினரைப் போலவே காட்சியளித்தனர். பறை முழங்கப் பாட்டும் கூத்துமாய் சக பயணிகளுக்கும் பரவசம் தொற்றிக்கொண்டது. மகன் மௌரியன் அழுது அடம்பிடித்துப் பறையொன்றைத் தன்வசமாக்கிக் கொண்டான்.  அடர் இருளைக் கிழித்தபடி சென்னை மாநகரின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியது இரயில். தோழமை உறவுகள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவந்த மாட்டிறைச்சியும் சப்பாத்தியும் சுவைமிகுந்த உணவானது. அவரவர் எடுத்து வந்திருந்த இன்னும் பலவித உணவுகளை அனைவரும் அன்போடு பகிர்ந்துண்ண இரவு உணவு வேளை இதமாகியது. குண்டூர், நெல்லூர் வழியாக  நள்ளிரவு தெனாலி இரயில்நிலையச் சந்திப்பை  அடைந்தது தொடர்வண்டி. இரவு முழுதும் இரயில் என்னோடுதான் என்பதுபோல ஆந்திரா மாநில எல்லை விரிந்து கிடந்தது. 2.30 மணிக்கு விஜயவாடா இரயில் நிலையச் சந்திப்பு. விழித்திருந்த சில தோழர்களும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!