புதுச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் அந்தோணி குரூஸ் தன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் முடித்தவர். “நான் என் குழந்தைப் பருவத்தையும் என் சுதந்திர வெளிப்பாட்டையும் மீட்டெடுத்த தளம், நான் ஓவியம் கற்ற சென்னை அரசு ஓவியக் கல்லூரிச் சூழல்தான். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்களின் வழியாக இப்போது பலவிதமான படைப்பு வெளிகளில் பயணிக்கிறேன்” என்று தன் அனுபவத்தை நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ஓவியர் அந்தோணி குரூஸ். ஆசிரியர், கோட்டோவியர், வரைகலை வடிவமைப்பாளர், சுவர் ஓவியர், உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர், உதவிப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் செயல்பட்டுவரும் இளம் ஓவியர்களில் குறிப்பிடத்தகுந்தவர். விளம்பர வடிவமைப்பாளர் பணியின் வழியாகப் பார்வையாளர்கள் எனும் நுகர்வோரைச் சென்றடைவது குறித்த அனுபவம் பெற்றதால், “பார்வையாளர்களை இணைக்கும் சரடுகளை வைப்பது என்ற பழக்கத்திலிருந்தே என் படைப்புகள் தொடங்கின” என்கிறார். குறிப்பாக, 2018 – 2020 காலகட்டத்தில் தமிழ்நாடு ஜெ.ஜெ, இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தில் செய்த இளமுனைவர் பட்ட ஆய்வு காலத்தில்தான் தனக்கான படைப்பு முறைகளை நோக்கிச் சென்றிருக்கிறார்.
அதில் குறிப்பிடும்படியான முயற்சி என்றால், ‘நடையின் வழியில் கோட்டோவியங்கள்’ எனும் பயண முயற்சியும் அதில் உருவான கண்காட்சியும் ஆகும். அதில் உள்ள சிறப்பு என்னவெனில் அப்படைப்புகளையே தன் இளமுனைவர் பட்டத்திற்கான ஆய்வேடாகவும் சமர்ப்பித்துள்ளார். அதற்காக அவர் நடைபயணமாகச் சென்றது சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வரை. அந்தப் பயணத்தில் பலநூறு ஒற்றை நிற (கருப்பு) ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
“பயண ஓவியம் என்பது காண்பனவற்றை எல்லாம் அப்படியே புறத் தோற்றமாக நகலெடுப்பது கிடையாது. புதிய இடங்களை, மனிதர்களை, பூக்கள் மலர்தலை, பழங்களின் வாசனையை, மனிதர்களின் அணுகுமுறையை, இருளை, ஒளி – ஒலியின் அளவுகளை அகவயப்பட்டு வரைவதற்கான கலை.” இவ்வகையான முயற்சிகளைச் செய்த மாபெரும் ஓவியர்களை வரலாற்றில் நாம் காணலாம். ஆனால், தமிழ் ஓவியப் பரப்பில் ஓவியர் அந்தோணி குரூஸின் இந்த ஆய்வியல் ரீதியிலான பயணப் படைப்புகள் தனித்துவம் மிக்கது. எப்படியெனில், இவர் பயணிக்கும் போது கடந்த அனுபவங்களையெல்லாம் வரையாமல் உத்வேகம் தரும் அமைப்புகளை இனங்கண்டு வரைந்திருக்கிறார். உதாரணமாக, அவ்வரிசையில் பயணத்தில் தான் உண்ட நாவல் பழத்தின் ருசியினை; இரவின் சத்தங்களை; மனிதர்களின் மேல் கட்டமைக்கப்படும் கதைகளை வரைந்திருக்கிறார். கால நிலைகளின் மேல் தனக்கிருந்த பயங்களையும் மகிழ்ச்சியான உணர்வுகளையும் வரைந்திருக்கிறார்.
அதுபோலவே, அவர் வழியில் கண்டடைந்த (அ) சென்றடைந்த இருப்பிடங்களையும் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். அவைகள் நமக்குப் பழக்கமான விவரணைகளாக இல்லாமல், அதனைக் காணும் உணர்வின் வழி நாம் நமது சொந்த அனுபவத்தைப் பெறுவது நிகழ்கிறது. அந்நிகழ்வில், நம் அனுபவத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நமக்குள் எழும் புதியக் கதைகளைக் கண்டடைவது என்பது இவ்வோவிய வரிசையின் சிறப்பம்சம்.
கலக ஓவியர், ழான் மிழைல் பாஸ்கியா சொன்னதை இங்கு நினைவுபடுத்தல் பொருந்தும், “நான் என்னுடைய எண்ணவோட்டங்களை என் படைப்புகள் வழி தெரிவிக்க முயன்றேன்; நான் தினந்தோறும் பயணிக்கும் நகர்ப்புற நிலப்பரப்புகளையே வரைவதற்கு முயற்சித்தேன். நான் பார்த்த பெரும்பான்மையான ஓவியங்களிலிருந்து மாறுபட்ட ஓவியங்களையே உருவாக்க முயன்றேன், மேலும் அவை ஓவியப் பார்வையாளர்களுக்கு அந்நியமானவை, அதேசமயம் பார்வையாளர்களின் உணர்ச்சிகளை உற்று நோக்கி அதன்பின் ஓவியங்களை உருவாக்கத் தொடங்கினேன். அதனால் அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தேன்” என்பதைப் போல ஓவியர் அந்தோணி குரூஸின் ‘நடையின் வழியில் கோட்டோவியங்கள்’ தமிழ்நாட்டு ஓவியப் பார்வையாளர்களிடையே புதிய போக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், அவர் பயின்ற பல்கலைக்கழகம் உட்பட பல கல்லூரிகளில் அந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்தியதன் மூலம் காண்பியல் படைப்புகள் குறித்த மாற்று உரையாடல்களையும் புதிய பார்வையாளர்களிடத்தே தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் பயணம் என்பது சமூக அசைவின் முக்கிய அங்கம் என்பதைப் பல உரையாடல்களில் அவர் முன்வைத்திருக்கிறார். அதுபோல், ‘நடையின் வழியில் கோட்டோவியங்கள்’ பயணத்தில், பெரும்பான்மையோர் சந்தேகக் கண் கொண்டு பார்த்ததே அதிகம், அதனால் நாளின் முடிவிலோ இடையிலோ நான் ஓய்வு எடுத்ததும் வரைந்ததும் பெரும்பான்மையாகக் கல்லறைத் தோட்டங்களிலும் சுடுகாடுகளிலுமே என்று புன்னகைத்தபடியே சொல்கிறார். இதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில், மனிதர்களின் பொது மனநிலையில் இருக்கும் பாதுகாப்பின்மை மற்றும் சக மனிதர்களைக் கண்டு அஞ்சுதல் போன்றவை மனிதர்களிடத்தே மேலோங்கியுள்ள தன்னலத்தின் பார்வையை அது உணர்த்துகின்றன.
‘நடையின் வழியில் கோட்டோவியங்கள்’ வரிசையைத் தொடர்ந்ததாகப் பழங்குடி பூர்வீகக் குடும்பங்களை மையமிட்ட வரிசையாக, வண்ண ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். செம்மண் வண்ணத்தின் ஆதிக்கம் அப்படைப்புகளில் மேலோங்கியிருப்பதன் வழி இயற்கையுடனான, நிலம் சார்ந்த வாழ்வியல் முறைகளின் மகத்துவத்தை எடுத்தியம்புவதாகவும் இருப்பதைக் காண முடிகிறது. சில படைப்புகளில் அவர்களை நாம் கைவிட்டிருப்பதையும் புறக்கணித்திருப்பதையும் எடுத்துச் சொல்வதாகவும் உள்ளது. முன்னர் இருந்த பயண ஓவியங்களுக்கும் இந்த வரிசைக்கும் மிகப்பெரிய அணுகுமுறை வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கான காரணமாக நாம் உணர்வது, அந்தோணி குரூஸ் தன்னுடைய புதிய படைப்புகளைப் படைப்பதற்கான அடிப்படை வடிவங்களை நோக்கிய பயணத்திற்குப் பெரும் நேரம் எடுத்துக்கொள்கிறார். அதாவது, மரப்பலகைகளில் வரைவதாக இருந்தால், அதை எடுத்துக்கொண்டு அதில் வண்ணங்கள் வைத்துப் பார்ப்பது, அதில் பல்வேறு புறப்பரப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களைக் கண்டுகொண்ட பிறகுதான் அவர் படைப்புச் செயல்பாட்டுக்குச் செல்கிறார். ஏனெனில், புரிதலின் பலம் படைப்பில் ஈடுபடும்போது எவ்விதத் தொய்வும் ஏற்படுத்தாது என்று சொல்கிறார்.
தொல்குடிகள் படைப்பு வரிசையில், அந்தோணி குரூஸின் பயன்பாட்டு நிறம் மற்றும் அவர் அதில் செய்திருக்கும் தொழிற்நுட்ப அணுகுமுறைகள் எல்லாம் அவர் பார்வையாளர்களிடத்தே கட்டமைக்க விரும்பும் உரையாடல்களுக்குப் பொருத்தமானது. ஒரு வலுவான இணைப்புப் புள்ளியை ஏற்படுத்திக்கொண்டு முன்செல்லும் அணுகுமுறை அவரது அடிப்படை அணுகுமுறையாக இருக்கிறது. தனது படைப்பின் ரிதத்தை மாறுபட்ட அளவில் பயன்படுத்துவதிலும், இந்த ஓவிய வரிசையிலிருந்து மிகவும் தெளிவுபெற்றவராகவும் மாறியிருக்கிறார்.
கொரோனா காலத்திற்குப் பிறகான இவருடைய சமீபகால ஓவியங்களில் இருந்து பார்க்கத் தொடங்கினோமெனில் பொதுவான ஓவிய இயக்கத்தின் போக்கிலிருந்து மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது. அதற்குச் சான்றாக, அவருடைய தற்காலப் படைப்புகள் எல்லாம் கண்காட்சிக்கு மட்டுமின்றிப் பயன்பாட்டுப் படைப்புகளாகவும் மாறி வெளிப்படுவதைக் காண முடிகிறது. கடந்த இரண்டு கண்காட்சிகளில் இடம்பெற்ற பெரும்பான்மையான படைப்புகள், பயன்படுத்திய பிளைவுட் போர்டுகளைக் கொண்டு கறுப்பு மை பூசி, அதில் கீறல் ஓவியம் செய்திருப்பது மற்றும் எளிமையாகக் கிடைக்கக் கூடிய பேப்பர் அட்டைகளில் வண்ண ஓவியங்கள் தீட்டியிருப்பது போன்றவற்றை உதாரணமாகச் சுட்டலாம்.
அந்தோணி குரூஸின் படைப்பில், சமூகப் பார்வை தனித்த கதையாகவும் அழகியல் அணுகுமுறைகள் வேறொரு கதையாகவும் இருப்பது இவரின் வெளிப்பாட்டில் தனித்த அடையாளமாகவும் மாறுகிறது. மேம்பாடு என்ற பெயரில், உழைத்த மனிதர்கள் வேலை முடிந்ததும் ஓரங்கட்டப்படுதல், அதிகாரத்தில் இருப்பவர்களால் பாதிக்கப்படக்கூடிய எளிய மக்கள் போன்ற அரசியல் உரையாடலையே அந்தோணி குரூஸ் தன் படைப்பின் அடிநாதமாகக் கொண்டிருந்தாலும் அவர் தனது படைப்பியல் வண்ணத் தேர்வு, பயன்பாட்டு முறைகள், ஊடகத் தேர்வு என்பனவற்றின் வழியாக, ஒவ்வொரு படைப்பிலும் இக்காலச் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் குறியீட்டாக்குகிறார். அவரது கடைசித் தொடரான மரப்பலகைக் கீறல் ஓவியங்கள் இயற்கையின் பிண்ணனியில் உழலும் மனிதர்களைப் பேசும் ஓவியங்கள்.
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு, போன்றவற்றுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் கரிய மனிதர்களே இவ்வரிசையின் தனித்துவம். எல்லோராலும் சாதியின் பெயரால் கைவிடப்பட்டுத் தனிமையில் அலைவுறுவதைப் பேசுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ‘மேரியின் உடல்’ எனும் ஓவியத்தைச் சொல்லலாம். வளர்ந்த நகரத்தின் கட்டடங்களால் கட்டமைக்கப்பட்ட உள்கூடே மேரி மாதாவின் தோற்றமாக இருக்கும். பருந்துப் பார்வையில் ஒரு நகரத்தின் கட்டட அழகைப் பார்ப்பதற்கேற்ப ஓவியர் நமக்குத் தந்திருக்கிறார் என்று எண்ணும்போதே அந்த நகரத்தில் இருந்த குடிசைகள் இப்போது எங்கு போனது என்ற கேள்வி நம்மைத் திகைக்க வைக்கிறது. இப்படி, காட்சி ரீதியாக அன்றாட வாழ்வின் ஆழங்களை மிக எளிய முறையில் வழங்கும் படைப்பாற்றல்தான் அந்தோணி குரூஸின் பலம். அந்த எளிமையின் வழி அவர், நம்மிடையே பேச விழைவதெல்லாம் ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தச் சமூக முரண்களைக் கலைத்துப்போட்டு, நாம் வாழும் வாழ்வு எத்தனை உன்னதமானது என்ற மனித மாண்பின் நோக்கத்தையே பிரதிபலிக்கிறது.
இத்தகைய எளிமையான வழங்குமுறைக்குக் குறிப்பிட்டக் காரணம் என்று எதாவது இருக்கிறதா என்று அவரிடம் கேட்டால், “நிறைய நேரம் நான் குழந்தைகளுடன் பயிற்சி மற்றும் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன். அதனால் கூட அப்படியான கண நேர மகிழ்ச்சியில் நான் திளைப்பவனாக மாறியிருக்கலாம். அந்த கண நேரமே எளிமைக்கு வழி செய்கிறது” என்கிறார்.
ஆம், தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சிகளிலும் சுவர் ஓவிய முகாம்களிலும் தன்னை ஈடுபடுத்திவருகிறார். அதில் குறிப்பிடும்படியான தளமாக நாடோடிக் குழந்தைகளுக்காகச் செயல்படும் நாகப்பட்டிணம் ‘வானவில்’ பள்ளியைச் சொல்லலாம். “அப்படிக் குழந்தைகளுடன் செலவுசெய்யும் பொழுதுகளைக் காண்பது சமநிலையின் பால் நின்று கனவு காண்பது போல்” என்கிறார். மேலும் கணிப்பொறிக் கலை ஓவிய முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அந்தோணி குரூஸ், “நான் பயணிக்கும் எல்லாத் தளங்களிலும் ஓர் இனிமையான, அமைதியான படைப்பூக்கத்தின் செல்வாக்குக்குப் பழக்கப்பட்டவனாக மாறுகிறேன். அதனால் என் படைப்புத் தளங்களை எல்லாத் திசையினையும் காண்பிக்கும் சுழல் நாற்காலி போன்றதாய் உணர்கிறேன்” என்கிறார்.
அதுபோல், குழந்தைகளுக்கான புத்தகங்களிலும் இவருடைய ஓவியங்கள் பங்களிக்கத் தொடங்கிவிட்டன. அதில் குறிப்பிடும்படியான புத்தகம், கலைஞர் பிரேமா ரேவதியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் ‘Boom Boom’ ஆங்கிலப் புத்தகமாகும். தற்போது, அம்பேத்கரின் ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ புத்தகத்தினை காமிக்ஸ் பாணியில் வரைந்துகொண்டிருக்கிறார். அதுபோல் இந்த ஆண்டிற்கான ‘வானம்’ குழு ஓவியக் கண்காட்சிக்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
கண்காட்சி ஓவியங்கள் செய்வது மட்டும் இவருடைய விருப்பத் தேர்வில் இல்லை என்பது அவரை நேரில் சந்தித்து உரையாடியபோது தெரிந்தது. ஆம், தற்போது இயற்கை வண்ணங்களைக் கொண்டு துணிகளில் வரையும் பரிசோதனை முயற்சியில் இருக்கிறார். இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என் ஓவியங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இருந்துவிடாமல், பயன்பாட்டுப் பொருளாகவும் இருக்க வேண்டும் என்பதனை நோக்கிப் பயணிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியே இந்த நகர்வு” என்கிறார். ஓவியக் கலையில் இத்தகைய பார்வை மிக முக்கிய நகர்வு. இது நிச்சயம் தமிழ் ஓவியப் பரப்பில், புதிய பல கதவுகளைத் திறந்துவிடலாம்.