மதுரை சித்திரைப் பெருவிழா: மரபுகள் மற்றும் தொன்மங்களின் ஊடே ஒரு புதிர்வழிப் பயணமும் சில புதிய திறப்புகளும்

அன்பு வேந்தன்

தென்னிந்தியாவில் பேரளவிலான மக்கள்திரள் சங்கமிக்க ஆண்டுதோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா மதுரை சித்திரைப் பெருவிழாவாகும். மேலும் இது சமூக, பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவுமாகும். மதுரையின் மக்களால் இவ்விழா “ஆற்றில் அழகர் இறங்கும் விழா” என்று வழங்கப்பெறுகிறது. இவ்விழாவினைக் காண மதுரையின் சுற்றுவட்டார ஊர்களிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடனும் பக்தியுடனும் வந்து கலந்து கொள்கின்றனர்.

இது ஆண்டுதோறும் சித்திரைமாதம் வளர்பிறை பதினொன்றாம் நாளில் (சுக்கிலபட்சம் ஏகாதசியில்) தொடங்கி ஒன்பது நாள் நடைபெறும் திருவிழாவாகும். முதல் மூன்று நாட்கள் கோயிலிலும், நான்காம் நாள் மதுரை நோக்கிய பயணத்திலும் கழிந்துவிடுகிறது. ஐந்தாம் நாள் சித்திரை முழுநிலவு நாளாகும். அன்றுதான் அழகர் கள்ளர் கோலத்துடன் வைகை ஆற்றுக்குள் தங்கக்குதிரையில் அமர்ந்தவாறு இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அழகர் போல வேடமணிந்த பக்தர்கள் அழகர்மீது தண்ணீர்ப் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆறாம் நாள் பகலில் வண்டியூர் என்னும் பகுதியில் வைகை ஆற்றின் நடுவே உள்ள தேனூர் மண்டபத்தின் முன் அமைக்கப்பெற்ற குளத்தில் ‘மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம்’ அளிக்கும் சடங்கு நடைபெறுகிறது. பிறகு தசாவதாரச் சடங்குகள், பூப்பல்லக்கு, எனத் திருவிழா நிறைவடைந்ததும் அழகர் கோவிலுக்குத் திரும்பிச் செல்கிறார். இதுவே ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்ற மதுரை சித்திரைப் பெருவிழாவின் ஒரு பகுதியான அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் சுருக்க விவரமாகும்.

மதுரை சித்திரைப் பெருவிழாவானது, மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் ஆற்றில் அழகர் இறங்குதல் என்பதாக முறையே, சைவ மற்றும் வைணவ மரபுகள் இணைக்கப்பெற்றத் திருவிழாகக் கொண்டாடப்பெறுவதாக அறியப்படுகிறது. இவ்விழாக்களின் தொடர்பு பற்றி மக்களிடையே வழங்கி வரும் தொன்மக் கதையொன்று அழகரையும் மீனாட்சியையும் அண்ணன்-தங்கை எனச் சித்தரிக்கின்றது. தன் தங்கையான மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் மதுரையில் நடைபெறும் திருமணத்திற்கு அண்ணன் அழகர் சீர்வரிசையுடன் மதுரை நோக்கி வருகிறார். குறித்த நேரத்திற்குள் அவரால் வர இயலாது போகிறது. அதற்குள் திருமணமும் நடந்து விடுகிறது. மனவருத்தமுற்ற அழகர் பாதி ஆற்றில் இறங்கிய நிலையிலேயே மீண்டும் தன் கோயிலுக்குத் திரும்பி விடுகிறார் என்பதே அக்கதை சொல்லும் தொடர்பாகும். மேலும் அழகர் வைகை ஆற்றுக்கு வருவதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தல் என்னும் தொன்மக்கதையாகும். சுதபஸ் என்னும் முனிவர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு துர்வாசர் என்னும் முனிவர் வருகிறார். பெரியவரான துர்வாசர் அங்குவந்ததைக் கவனியாது தன் பூசைகளில் கருத்தாயிருந்த சுதபஸ் மீது துர்வாசருக்குக் கோபம் மேலெழ, சுதபஸ் முனிவரை நோக்கி “தவளையாகக்(மண்டூகம்) கடவாய்” என்று சபித்துவிடவே, அவரும் தவளையாகிவிடுகிறார். தவளையான சுதபஸ், துர்வாசரிடம் மன்னிப்புக்கோரி விமோசனம் வேண்டவே, சுந்தரராஜப் பெருமானை நோக்கித் தவம்புரிந்து அவர் காட்சியருளினால் சாபம் விமோசனமாகும் என்கிறார். எனவே மண்டூகமாய்த் தன்னை நோக்கித் தவமிருக்கும் சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே சுந்தரராஜப் பெருமானான அழகர் வைகைக்கு வருகிறார் என்பதாக அத்தொன்மக்கதை சொல்கிறது. இச்சடங்கு நிகழ்வினை மக்கள் “நாரைக்கு முத்தி கொடுத்தல்” என்றும் “கொக்கு சுடுதல்” என்றும் வழங்குகிறார்கள்.

இவ்வாறான இத்திருவிழாவின் சில முக்கியமான அம்சங்களான அழகர் ஆற்றில் இறங்க வேண்டி தன் கோயிலிலிருந்து வைகைக்கு வருதல், பக்தர்கள் அழகர் அணியும் வேடம்போல் அணிந்து தண்ணீர் பீய்ச்சுதல், மண்டூகத்துக்கு விமோசனம் அளித்தல் போன்ற முக்கியமான நிகழ்வுகள் அல்லது சடங்குகளைப் பற்றியும் மேலும் இத்திருவிழாவின் வரலாற்று ரீதியிலான மாற்றங்கள் பற்றியும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். அதன்மூலம் இத்திருவிழாவின் அடிப்படையான காரணங்க-ளென இதுவரை நிறுவப்படாத புதிய அடித்தளங்கள் வேறேதேனும் இருக்கின்றதா என்பதை ஆய்வதும் நோக்கமாகும்.

அழகர் கோயில் :

‘அழகர்மலை’ மதுரைக்கு வடக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அவ்வழகர் மலையானது கிழக்கு மேற்காக சுமார் 18 கிலோமீட்டர் தூரம் நீளமும், சுமார் 320 மீட்டர் உயரமும் உடையதாகும். இம்மலையின் தென்புற அடிவாரத்தில்தான் அழகர்கோயில் அமைந்துள்ளது. இம்மலை-யானது இருங்குன்றம், ஓங்கிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமாலிருஞ்சோலைமலை, திருமால்குன்றம், இருஞ்சோலைமலை, சிம்மாத்திரி, கேசவாத்திரி, வாசவுத்யானமலை, விருஷபாத்ரி, இடபமலை, விடைமலை எனப் பல்வேறு பெயர்களால் இலக்கியங்களில் வழங்கப்பெறுகிறது. இங்கு கோயில் கொண்ட இறைவன் பரமஸ்வாமி, அழகர், சுந்தரத்தோளுடையான், சுந்தரராஜன், கள்ளழகர், அலங்காரர், எனப்பலவாறாக அழைக்கபெற்றாலும் வெகுமக்களால் ‘அழகுமலையான்’ என்றும் ‘அழகர்’ என்றுமே அழைக்கப்பெறுகிறார். மேலும் இத்தலம் 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றாகும். இங்கு அழகர் தவிர படினெட்டாம்படிக் கருப்பசாமி மற்றும் மலைமேல் உள்ள இராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்களும் பிரதானமாக வழிபடப் பெறுகின்றனர். இதுதவிரவும் முருகன் என்னும் தெய்வத்தின் ஆற்றுப்படைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையும் இம்மலைமீதே உள்ளது. இவ்வாறாக அவைதீக மற்றும் வைதீக தெய்வங்களின் உறைவிடமாக இம்மலை வெகுமக்களால் நம்பப்பெறுகிறது.

வரலாற்றில் அழகர்கோயில் :

பேராசிரியர்.தொ.பரமசிவன் அவர்களின் ‘அழகர் கோயில்’ என்னும் ஆய்வு நூலானது இக்கோயிலின் வரலாறு பற்றி அறிய மிகவும் அடிப்படையானதும் இன்றியமையாததுமான நூல் ஆகும். இந்நூலானது அவர் 1976-1979 ஆண்டுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துறைவளர்ச்சித் திட்டத்தின்கீழ் செய்த ஆய்வின் பயனாகும். அவரே சொல்லியது போல், “பொதுவாகச் சமூகத்தோடும், குறிப்பாகச் சிறுதெய்வநெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப்பெருந்தெய்வக்கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையினையும் விளக்க முற்படுவதே” அவரின் ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். அவ்வரிசையில் முனைவர்.பி.ஆறுமுகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வான “தேனூரும் அழகர்விழாக் கட்டமைப்பும்” என்ற நூலும் மிகவும் அடிப்படையான நூலாகும். மேலும் பேராசிரியர்.இ.முத்தையா அவர்களின் “கள்ளழகர் வையை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் தொடர்பான தொன்மக்கதையும்” என்ற கட்டுரையும், ‘மதுரை கள்ளழகரின் குறியீட்டுப் பயணம்’ என்ற கட்டுரையும் முக்கியமானவையாகும்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இத்தலம் பற்றித் தனது ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூலில் அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் ஆய்ந்தளித்த முடிவுகள் மிகமிக அடிப்படையானவையாகும். அவர்தான் முதன்முதலில் வைணவக்-கோயிலான இத்தலமானது பண்டைக்காலத்தில் பௌத்தக்கோயிலாக இருந்தது என்ற கருத்தினை முன்வைத்தவராவார்.

“அழகர்மலை என்று வேறுபெயருள்ள இந்த இடம் (திருமாலிருஞ்சோலை) இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகையில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காராமம். அதாவது பௌத்தப் பிட்சுக்கள் வசிக்கும் இடம். அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இக்கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தக்-கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகிறது.” (பௌத்தமும் தமிழும்)

இக்கருத்தினை தொ. பரமசிவன் அவர்கள் தனது ஆய்வுநூலின் ‘அழகர்கோயிலின் தோற்றம்’ என்னும் இரண்டாவது இயலில் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். கோயிலின் பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளம் ‘ஆராமத்துக்குளம்’ என்றழைக்கப்-படுதல், தலவிருட்சமாக அரச மரம் இருந்துள்ளமை, பௌத்த ஆலயங்களைக் கைப்பற்றி உருமாற்றுகையில் நரசிம்ம மூர்த்தியை நிறுவும் வைணவமரபு, இக்கோயிலின் ‘நங்கள் குன்றம்’ எனப்படும் வட்டவடிவக் கருவறை அமைப்பானது பௌத்த துறவிகள் கூடிவாழும் விகாரைகளையொட்டி அமையப்பெற்றிருக்கும் சைத்தியங்களைச் சுற்றி அமையப் பெற்றிருக்கும் வட்டவடிவத் திருச்சுற்றை ஒத்துள்ளமை, கோயிலின் அடியவர்கள் தலைமழிக்கும் வழக்கம் போன்ற ஆதரங்களுடன் தொ. பரமசிவன் அவர்கள் இக்கோயிலானது பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயிலாக இருந்துள்ளதை நிறுவ, ஆய்வுலகம் ஏற்றுக்கொண்டது.

சித்திரைத் திருவிழா:

தற்காலத்தில் நடைபெற்றுவரும் திருவிழாவானது பிரிட்டிஷாருக்கு முன் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலையின் காலத்திற்கு முன்னர் வேறு விதமாக நடந்து வந்தது. அதாவது மீனாட்சி திருக்கல்யாணம் தனியாக மாசி மாதத்திலும், அழகர் ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதமுமாக நடைபெற்று வந்தது. மேலும் தற்சமயம் மதுரையின் வைகை ஆற்றங்கரையில் அழகர் இறங்கி, வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தின் முன் நடைபெறுகிற மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் முன்னர் மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்கு அருகில் உள்ள தேனூர் என்னும் ஊரில்தான் சித்திரை முழுநிலவு தினத்தன்று நடைபெற்று வந்துள்ளது. மன்னர் திருமலைதான் இவ்விரு விழாக்களையும் இணைத்ததோடு, மாசி மாதம் நடைபெற்று வந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கும், தேனூரில் நடைபெற்று வந்த அழகர் விழாவினை மதுரைக்குமாக மாற்றிய-மைத்தார் என்பதை ஆய்வறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

மாசி மாதம் அறுவடைக்காலமாதலால் அம்மாதம் நடைபெறும் திருவிழாவின் தேரோட்டத்தில் தேரிழுக்க ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, மன்னர் திருமலை அத்திருவிழாவினை சித்திரைக்கு மாற்றியமைத்து, தேரிழுக்க ஆட்கள் வேண்டி, தேனூரில் அதுவரை நடைபெற்று வந்த விழாவினை மதுரைக்குமாக மாற்றியமைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதுதொடர்பாக இன்னொரு செய்தியும் கிடைக்கின்றது. அதாவது மன்னர் திருமலை வைணவ சமயப்பிரிவைச் சார்ந்தவர். மதுரையின் முக்கியமான கோயிலான மீனாட்சி அம்மன் கோயில் சைவக்கோயிலாகும். நகரின் முக்கியக் கோயிலான மீனாட்சி கோயிலின் முக்கியமான திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு பெரும் சைவத் திருவிழாகவே நடைபெற்று வந்தது. தாம் ஆளும் நகரின் பிரதான விழாவாகத் தான் சார்ந்திருக்கும் வைணவ சமயத்தின் விழா இல்லாதது மன்னருக்கு மனவேதனை அளித்தது. தனது மனவருத்தத்தினைத் தனது அமைச்சர்களில் தனக்கு அணுக்கமான ஒரு வைணவ அமைச்சரிடம் சொல்லவே அவர் ஓர் உபாயம் சொல்கிறார். அதாவது, மதுரைக்கு மேற்கே தேனூரில் நடைபெறும் அழகர் திருவிழாவில் மதுரையை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்கின்றனர். அது மதுரைக்கு அருகே நடைபெறும் மிகப்பெரிய வைணவத் திருவிழாவாகும். அதை மதுரைக்கு மாற்ற ஆலோசனை சொல்கிறார். மேலும் நகரில் வைணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆயிரம் யாதவர் குடும்பங்களை மதுரைக்கு குடிபெயர்க்-கவும், வடக்கிலிருந்து வைணவர்களான சௌராஸ்டிர சமூக மக்களை மதுரைக்கு அழைத்து வந்து குடியமர்த்தவும் ஆலோசனை சொல்கிறார். மேலும் மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரைக்கு மாற்றி, இரு விழாக்களையும் இணைப்பதன் மூலம் மதுரையின் ஒருங்கிணைந்த விழாவானது ஒரே சமயத்தில் சைவ-வைணவ நல்லிணக்க விழாவாகவும், வைணவப் பெரும்பான்மையினரின் பெருவிழாவாகவும் விளங்கும் என்றும் ஆலோசனை சொல்லவே மனம் குளிர்ந்தார் மன்னர் திருமலை. பிறகு அதன்படியே மன்னர் செய்தார் என்னும் செய்திதான் அது. இது இன்னும் மேலதிக ஆய்வுக்குரியதாகும்.

அழகர் மதுரைக்கு வருவதன் காரணங்களாகச் சொல்லப்படுபவற்றில் முதலாவதான தங்கையின் திருமணத்திற்கு வருகை என்பது, பிற்காலத்தில் மன்னர் திருமலை இவ்விழாவினை மாற்றியமைத்த பின்னரே உருவாகிப் பரவியிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் முடிவு. இரண்டாவது காரணமான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தல் என்பது அழகர் கோயில் தவிரவும் நிறைய வைணவக் கோயில்களின் சடங்கு, தொன்மங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. இந்த இரண்டாவது காரணம் பற்றியும், இதன் தொன்மத்தை விளக்கும் முகமாகவும் பேராசிரியர். இ.முத்தையா மற்றும் முனைவர். பி. ஆறுமுகம் ஆகியோர் தமது ஆய்வுக்கட்டுரைகளில் விளக்கியுள்ளனர்.

அதாவது அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது, மன்னர் திருமலை காலத்துக்கு முன்னர்வரை மீனாட்சி திருக்கல்யாணத்துடன் தொடர்பற்றுத் தனித்த விழாவாகவே இருந்து வந்தது. அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது அடிப்படையில் ‘மழை வேண்டல்’ விழாவாகும்.

‘போலச் செய்தல்’ (ஐஅவையவiஎந சவைரயட) வடிவில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்கு முறையானது மிகவும் தொன்மையான சடங்குமுறை என்பது மானுடவியலாளர் கூற்று. இங்கே மதுரை வைகை ஆற்றில் குதிரை வாகனத்துடன் அழகர் இறங்கியபின்னர், அழகர் மீது அவர் போலவே வேடமணிந்த அடியவர்கள் தமது தோளில் தொங்கவிட்டிருக்கும் நீர் நிரம்பிய தோல்பையிலிருந்து துருத்தி மூலம் நீர்ப் பீய்ச்சுகின்றனர். மேலும் விழாவினைக் காணவந்திருக்கும் மக்கள் மீதும் துருத்தி நீர்ப் பீய்ச்சுகின்றனர். இதன் நோக்கம் என்னவெனில், தமக்கு மேலுள்ள அதீத ஆற்றல்களிடம் தமக்குத் தேவையானதை வேண்டும்போது அதனைப் போலச்செய்தோ, அல்லது குறியீட்டுத் தன்மையில் அதனைப் படையலாக்கியோ வேண்டுதல் செய்வது மனித குலத்தின் தொன்மையான வேண்டல் முறைகளில் ஒன்றாகும். எனவே இங்கு மக்கள் நாடுவளம் பெற மழை பொழிய தம் தெய்வத்திடம் மழையினைப் போலச் செய்யும் முகமாகத் துருத்திநீர் பீய்ச்சி வேண்டுகின்றனர். மக்கள் மீதும் பீய்ச்சி அடிக்கையில் மழையில் நனைந்தால் களிப்பது போல களித்து மகிழ்ந்து வழிபடுகின்றனர். இங்கு தோலினாலன பையானது நீர் கொள்கலனாக பயன்படுத்தப்படுவதானதும் கவனத்துக்குரியது. தோலினாலன பைகள் நீர்கொள்கலனாகப் பயன்படுத்தப்பட்ட காலத்தின் தொன்மையுடன் இச்சடங்கின் தொன்மையினைப் பார்க்கலாம். இதனைப் போன்ற இதர மழைவேண்டல் போலச் செய்தல் சடங்குகளுள் இதனைவிடத் தொன்மையான வடிவங்களும் உண்டு.

அடுத்ததாக, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் சடங்கும் மழை வேண்டலோடு தொடர்புடைய சடங்கேயாகும். இதில் தொன்மக்கதையினை இ.முத்தையா தொன்மம்-சடங்கு கோட்பாட்டு ரீதியில் விளக்கியுள்ளார். இன்று இச்சடங்கு மதுரை வண்டியூரில் வைகை ஆற்றின் நடுவே அமைந்த தேனூர் மண்டபத்தின் முன்பாக நடைபெறுகிறது. மண்டபத்தின் முன் ஆற்றில் குளம் போல உருவாக்கி அதில் தவளை, நண்டு, கொக்கு போன்ற உயிரினங்கள் விடப்படுகின்றன. இவ்வுயிரினங்களை தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்மடையர் பிடித்து வருகிறார். முன்பு கொக்கு, தவளை, நண்டு ஆகிய உயினங்களைப் பிடித்து, அவற்றின் கண்களைத் தைத்து இக்குளத்தில் விட்டிருக்கினறனர். இப்போது இவை வதை செய்யப்படுவதில்லை. வெறுமனே கொக்கின் கால்கள் கட்டப்பட்டிருக்கும். இச்சடங்கின் போது பட்டர் மண்டூக புராணம் வாசிப்பார். பின் கொக்கின் கால்கள் அவிழ்த்து விடப்படும். கொக்கு எத்திசையில் பறக்கிறதோ அத்திசையில் மழைவளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. முற்காலத்திலோ விமோசன நிகழ்வில் வதைக்கப்பட்ட உயிரினங்களின் தைக்கப்பட்ட கண்களிலிருந்து தையல் பிரிக்கப்பட்டு அவை சுதந்திரமாக விடப்பட்டிருக்கின்றன. மழையுடன் தொடர்புடைய பொருட்களும் உயிர்களும் மழையினைக் கொண்டுவரும் என்னும் தொல்மனிதனின் நம்பிக்கையுடன் இணைந்த சடங்குமுறையாக இதனை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். ஆந்திராவின் ஒரு பகுதியில் இன்றும் மழைபெய்ய வேண்டித் தவளைகளைப் பிடித்து ஒரு கூடைக்குள் வதைத்து, பட்டினியால் அவை கத்தும்போது வீடுகளில் அரிசி சேகரித்து பின் தவளைகளை நீரில் மீண்டும் விடும் சடங்கு இன்றளவும் நடைபெறுவதாகச் சொல்லும் ஆய்வாளர்கள், முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் தவளை கத்தினால் மழை வரும் என்ற செய்தியுடன் இவை ஒப்பு நோக்கத்தக்கவை என்றும் கூறுகின்றனர். ஆக இவற்றின் மூலமாக அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது ‘மழை வேண்டலோடு’ தொடர்புடைய விழா என்பது உறுதிப்படுகிறது. மேலும் அழகர் ஒவ்வொரு ஆண்டும் உடுத்தும் பட்டின் அடிப்படையிலே ஊரின் மழை வளமும், விவசாய வளமும் அமையும் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

மேலும் இது வேளாண்மையுடன் தொடர்புடைய விழாவுமாகும். ஏனெனில் சாபவிமோசனச் சடங்கு நடைபெறும் தேனுர் மண்டபத்திற்கு ‘கதிர்கால் மண்டபம்’ என்னும் பெயருமுண்டு. திருவிழாவுக்கு கொடியேற்றிய பின்னர், வயலிலிருந்து நெற்கதிர்கள் அறுத்தெடுக்கப்படுகின்றன. அந்நெற்-கதிர்களைக் கொண்டு தேனூரின் பள்ளர் சாதியைச்சேர்ந்த மக்கள் அழகிய தோரணங்கள் அமைக்கின்றனர். சடங்கு நிகழும் நாளில் தேனூர் மண்டபமானது நெற்கதிர் தோரணங்கள் கொண்டு இம்மக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அழகர் இம்மண்டபத்தில் தங்கிவிட்டு, மும்முறை வலம்வந்து செல்கையில், நெற்கதிர் தோரணங்களை அறுத்துவிட்டுச் செல்வார். அக்கதிர்மணிகளை மக்களும் சேகரித்துச் செல்வர். இதன்மூலம் விவசாயம் செழிக்கும் என்பது வேளாண்குடிகளின் நம்பிக்கை.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கியமான நிகழ்வாக, அழகர் ஆற்றில் இறங்கியதும் அடியவர்கள் ஆற்றங்கரையில் தலைமழித்து, ஆற்றில் நீராடுகின்றனர். இவ்வழக்கம் பௌத்தத்துடன் தொடர்புடைய ஒரு வழக்கமாகும்.

தேனூர் :

மன்னர் திருமலைக்கு முன்னர் அழகர் விழா தேனூரில்தான் நிகழ்ந்து வந்தது என்பதைக் கண்டோம். இந்தத் தேனூரானது ‘சுந்தரராசன் பூமி’ எனவும் மக்களால் வழங்கப்பெறுகிறது. இது சங்க இலகியங்களில் குறிப்பிடப்பெறும் தொன்மை வாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். வைகை ஆற்றங்கரையோரம் அமையப்பெற்ற மிகவும் வளமான விவசாய வளம் நிறைந்த பகுதியாகும். முன்பு அழகர் தம் மலையிலிருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாகப் பயணித்துத் தேனூருக்கு வந்துள்ளார். சித்திரை முழுநிலவு நாளில் தேனூரிலேயே அழகர் ஆற்றில் இறங்கியுள்ளார். துருத்திநீர்ப் பீய்ச்சுதலும், மண்டூக முனிவர் சாபவிமோசனமும் தேனூரிலேயே நடந்துள்ளது. தேனூரின் வைகை ஆற்றங்கரையினிலே பக்தர்கள் தலைமழித்துள்ளனர். திருமலை விழாவினை மதுரைக்கு மாற்றியமைத்த பின்னும், நிறைய மக்கள் இன்றும் தேனூரின் வைகை ஆற்றுக்குள்தான் முழுநிலவு நாளன்று தலைமழித்து வழிபடுகின்றனர். தற்காலத்தில் மலையிலிருந்து கிளம்பி மதுரைக்கு வரும் அழகர் வழியில் எண்ணற்ற மண்டகப்படிகளில் தங்கி வருவார். அழகர் வருகை தரவேண்டி மண்டகப்படிக்காரர்கள் அழகருக்குக் காணிக்கை செலுத்த வேண்டும். ஆனால் சாபவிமோசனம் நடக்கும் தேனூர் கிராமத்தார்க்குரிய மண்டகப்படியில் நுழைவதற்கு அழகரே பணம் செலுத்த வேண்டியிருக்கும். விழாவினை மாற்றியமைத் ததற்கானப் பரிகாரமாகும். மன்னர் திருமலை காலத்திலிருந்து இன்றுவரை இவ்வழக்கம் தொடர்கிறது. மேலும் தேனூர் கிராமத்தாருக்கு உரிய மரியாதையும் விழாவின்போது செய்யப்படுகிறது.

தேனூரானது ‘சுந்தரராசன் பூமி’ என்று அழைக்கப்படுவது போலவே ‘மடையன் பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆய்வாளர் பி.ஆறுமுகம் தமது நூலில் தேனூர் பற்றிய நாட்டுப்புறக் கதை ஒன்றினைக் குறிப்பிடுகிறார்.

“தேனூர் ஒரு காலத்தில் மடையன் வசம் இருந்தது. அம்மடையன் நடுக்கோட்டை என்ற தெருவில் வசித்து வந்தார். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் தேனூர் இருந்து வந்தது. பிறகு வேளாளர்கள் தேனூருக்குப் பிழைப்பதற்காகக் குறிப்பாக மடையன் நிலங்களை உழுது பயிரிடுவதற்காகத் தேனூர் வந்தனர். பின்பு அதிகமான வேளாளர்கள் வந்ததால் மடையனின் செல்வாக்கைப் பொறுக்காத வேளாளர் இன மக்கள் அம்மடையனை அன்பால் அழைத்துப் பேசுவதுபோல் ஒரு நாள் கம்புக்குழியில் (பூமிக்குள் அமைக்கப்பட்ட தானியக்கிடங்கு) இறங்கிக் கம்பு எடுத்துத் தர வேண்டினர். இவ்வேளாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அம்மடையன் கம்புக்குழியுள் இறங்கிக் கம்பு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது மேலே பலகையை வைத்து மூடிவிடுகின்றனர். மூச்சுத் திணறி அம்மடையன் இறந்து விடுகிறார். பிறகு வேளாளர்கள் கைவசமானது தேனூர். அதிலிருந்து தேனூரில் முதல் மரியாதை வேளாளர்களுக்கே உரியதாகிவிட்டது. ஆனாலும் தேனூர் ‘மடையன் பூமி’ என்ற சொல்லால் இன்றும் தேனூர் மக்களால் அழைக்கப்பெற்று வருகிறது.”

இக்கதையின் மூலம் தேனூர் பண்டைக்காலத்தில் வேளாண்குடிகளான பள்ளர்களின் வசமிருந்ததும் பின்பு வஞ்சகமான முறையில் மற்ற இனத்தவரால் பறிக்கப்பட்டதும், அவர்தம் முதல்மரியாதை பறிக்கப்பட்டதும் வெளிப்படுகிறது.

இந்திரவிழா:

வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதத்திணைக்குரிய தெய்வம் இந்திரன் ஆவான். பழந்தமிழ் இலக்கியங்களின் வழியேயும், மக்களின் வழிபாட்டுச் சடங்குகளின் வழியேயும் இந்திரனே மழைக்கான தெய்வமாக வழிபடப்பட்டு வந்துள்ளமை ஆய்வாளர்களால் நிறுவப்-பெற்றிருக்கிறது. சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றுப்பாடலிலும், பின்னர் பதிற்றுப்பத்திலும் இந்திர விழா பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன. மருதநிலத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டதும், பலவித பூக்களால் ஆன விழாவாகக் கொண்டாடப்பட்டதாகவும் தெரிகிறது. பிறகு இரட்டைக் காப்பியங்களெனச் சிறப்பித்துக் கூறப்பெறும் மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்திலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவினைப் பற்றி நிறைய விவரணைகள் இடம்பெறுகின்றன. இந்திரகோடணை, இந்திரகோடணை விழா, தீவக சாந்தி, ஆயிரங்கண்ணோன் விழா, இந்திரவிழா, வானவன் விழா என பலவிதப் பெயர்களால் சுட்டப்பட்டுள்ளது. இந்திர விழாவானது ‘சித்திரை மாதத்துச் சித்திரை நாளில்’ தொடங்கியமையை சிலப்பதிகாரம் காட்டுகிறது. இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றுள்ளது. விழாவின் வேண்டுதல்களாக சிலப்பதிகாரத்தில், “மன்னனின் ஆட்சிக்குட்பட்ட நாட்டில் பசி, பிணி, பகை நீங்கி மழையும் வளமும் பெருகுக” என்றும், மணிமேகலையில், “வானம் மாதம் மும்மாரி பொழியவும் மன்னனின் செங்கோன்மை திரியாதிருக்கவும்” ஆக வேண்டப்-பெற்றிருக்கின்றன. இவ்வாறாகத் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பெற்ற இந்திர வழிபாடானது கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு அறவே மறைந்துவிட்டதாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஆனாலும் அவ்வறிஞர்கள் கருதுவது போல இந்திரவிழாவானது இங்கு அறவே மறைந்துவிடவில்லை திரிபடைந்திருக்கிறது எனலாம். அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்கும் இந்திரவிழாவுக்கும் நிறைய ஒப்புமைகளை நாம் காண முடியும். தொ.பரமசிவன் அவர்கள் கூறியது போல அழகர் விழாவினை இந்திரவிழா அல்ல என்றும், உழவர்மக்களை வசப்படுத்திய பலராம வழிபாட்டுடன் இணைந்த வைணவப் பெருந்திருவிழாவே என்றும் நாமும் கூறிவிட இயலாதவாறு, அல்லது அவர்தம் கூற்றை ஏற்க இயலாத வகையில், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது இந்திர விழாவுடன் மிக நெருங்கிய ஒப்புமை கொண்டுள்ளது. விழாவின் முக்கிய சடங்குகளையும் தொன்மங்களையும் நுணுகிப்பார்க்கத் தவறியதாலோ, அல்லது அவர்தம் ஆய்வின் நோக்கம் அதுவல்ல என்பதாலோ அவர் இத்தகைய முடிவுக்கு வந்திருக்ககூடும். ஆனால் இ.முத்தையா, பி.ஆறுமுகம் ஆகியோரின் அணுகுமுறைகள் இவற்றை பிரதானமாகக் கருதி ஆராய்ந்திருப்பது நமக்கு வழிகாட்டும் விதமாய் அமைந்திருக்கின்றது. இப்பொழுது வைணவப் பெருந்திருவிழாவாகக் காட்சியளிக்கும் அழகர் திருவிழாவின் புறமெய்யை மட்டும் காணும்போது, நாம் தொ.பரமசிவன் அவர்களின் நிறுவுதலை அப்படியே ஏற்கலாம். ஆனால் நாம் உள்மெய்யைக் காணும்போதோ விழாவினைப் பற்றிய அவர்தம் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபடவேண்டியிருக்கின்றது. அழகர் கோயில் பண்டைகாலத்தில் பௌத்தக்கோயிலாக இருந்தது என்பதை நிறுவிய அவர்தம் ஆய்வு, பௌத்தக் கோயிலே பின்னாட்களில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை நிறுவிய அவர்தம் ஆய்வு, அழகர் விழாவினை பண்டைய நாட்களில் பௌத்தவிழாவாக இருந்து பின்னர் வைணவ விழாவாக திரிபடைந்திருக்கலாமோ என ஏனோ கருதக்கூட முடியவில்லை. ஆனால் நாமோ அவர் செல்லாது விலகிய திசைகளின் வழி பயணிக்கையில் நமக்கு விழாவின் உள்மெய் புலப்படுகிறது.

அழகர் ஆற்றில் இறங்குதலும் இந்திரவிழாவும்

சித்திரை மாதம் சித்திரை நாளில்தான் இந்திரவிழா தொடங்கியிருக்கிறது. அழகர் ஆற்றிலிறங்கும் முக்கிய விழாவும் சித்திரை முழுநிலவு நாளில்தான் நடைபெறுகின்றது. இந்திரவிழா இருபத்தியெட்டு நாட்கள் நடைபெற்றிருக்கின்றது. அழகர் விழாவோ தற்காலத்தில் ஒன்பது நாட்களே நடைபெறுகின்றது. ஆனால் இதில் ஓரு முக்கிய வரலாற்று இடைவெளி இருக்கின்றது. அதாவது தற்காலத்தில் சித்திரையில் கோயிலை விட்டுக் கிளம்பும் அழகர் வைகைக்கு வந்து திரும்பிய பின், ஆடி பதினெட்டில் தீர்த்தமாடிய பின்னரே கோயிலுக்குள் செல்கிறார். அதுவரையிலும் கோயிலுக்கு வெளியே உள்ள மண்டபத்தில்தான் தங்க வைக்கப் பட்டிருக்கிறார். பண்டைக்காலத்தில் அழகர் மலையிலிருந்து பயணப்பட்டு தேனூர் வந்திறங்கும் அழகர் பல்வேறு வழிகளிலும் பயணித்து பல்வேறு ஊர்களுக்கும் சென்றிருக்கிறார். திருவிழா நாட்களும் அதிகமாகவே இருந்திருக்கின்றன. அவரின் ஒட்டுமொத்த விழா மற்றும் பயணக் காலமும் சேர்த்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை ஆகியிருக்கின்றன. மன்னர் திருமலைக்குப் பின்னர் இப்பயணம் சுருங்கிடவே, ஆடி பதினெட்டில் அழகர் கோயிலுக்குள் செல்வது ஐதீகமாயிற்று என்று களஆய்வில் நமக்கு சில பழமரபுச் செய்திகள் கிடைக்கின்றன.

ஐங்குறுநூற்றுப் பாடலிலும், பதிற்றுப்பத்து பாடலிலும் இந்திரவிழாவினை பல்பூக்களின் விழா என்று குறிப்பிட்டதைப் போன்றே அழகர் விழாவிலும் பூக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பிடம் வகிக்கின்றது. அழகருக்கு ‘அலங்காரன்’ என்றும் ‘அலங்காரப்பிரியன்’ என்றும் பெயர்கள் உள்ளன. பண்டைய காலத்தில் தேனூருக்கு வரும் அழகருக்கு சிறுமலையிலிருந்து கொண்டுவரப்படும் குறிஞ்சிப்பூக்கள் சாத்தப்பெற்றிருக்கின்றன. இது ஐதீகம். பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். இந்நாட்களிலும் அழகர் பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்படுகிறார். ஆனால் குறிஞ்சி மலர் சாத்தப்படுவதில்லை. மேலும் இப்பூவலங்கார நிகழ்வுகளே இன்று பூப்பல்லக்கு நிகழ்வாக நடைபெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேற்க்குறிப்பிட்ட பழம்பாடல்களில் இந்திரவிழா மருத நில மக்களால் கொண்டாடப்பட்டதைப் போன்றே அழகர் விழாவும் மருத நிலத்து உழுகுடி மக்களாலே கொண்டாடப்பட்டிருக்கின்றது. இன்றும் விழாவின் சடங்குகளில் மருத நில மக்களின் பங்கே பிரதானமாயிருக்கிறது.

இந்திரனே மழைத்தெய்வமாக வணங்கப்பட்டுள்ளதை நாம் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியும், மழைவளம் வேண்டியே இந்திர விழா எடுக்கப்பட்டுள்ளது என்பதை மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் வழியாகவும் அறிகிறோம். அதுபோன்றே, மதுரையின் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவின் நோக்கமும் சடங்குகளின் நோக்கமும் மழை வேண்டலேயாகும். மேலும் இவ்விழாவில் வேளாண்மை தொடர்பான நம்பிக்கையும் வழிபாடும் கலந்திருக்கின்றது.

அழகர்மலையில் கோயில்கொண்ட அழகரை இந்திரனாக உருவகிக்கிறது அழகர் கிள்ளைவிடு தூது என்னும் இலக்கியம்.

இவற்றின் மூலமாகப் பண்டைக்காலத்திய இந்திரவிழாவே தற்காலத்திய வைணவ விழாவான அழகர் விழாவாக மாறியிருக்கக்கூடும் என்று நாம் கருதலாம். எனவே இன்னும் தமிழகம் முழுக்கவும் மருத நிலப்பகுதிகளில் நடைபெறும் மழைவேண்டல் விழாக்களையும் சடங்குகளையும் ஆராய்ந்து பார்த்தால் இந்திரவிழாவின் பல்வேறு திரிபுகளை நாம் காணலாம். அறிஞர்கள் கருதியது போல் இந்திரவிழா அதன் மண்ணிலிருந்து முற்றிலும் அழிந்துபடவில்லை. திரிபடைந்திருக்கின்றது என்பதே உள்மெய்யாம்.

அழகர்கோயிலுக்கு இதர வழிபாட்டு மரபுகளுடன் உள்ள ஒப்புமையும் தொடர்பும் :

அழகர் கோயிலானது பலவகைகளிலும் சபரிமலை தர்மசாஸ்தா கோயிலோடு நெருக்கமான ஒப்புமைகளைக் கொண்டிருக்-கின்றது. சபரிமலையில் கோயிலுக்குள் நுழைய பதினெட்டுப்படிகளை ஏறவேண்டும். ஆழகர் கோயிலிலோ பிரதான வாசல் சாத்தப்பட்டிருக்க அது பதினெட்டாம்படியான் என்று வணங்கப்பெறுகிறது. பதினெட்டுப்படி வணக்கம் இருகோயில்களுக்கும் பொதுவான அம்சமாக உள்ளது. சபரிமலை மேல் மகிஷி எனப்படும் கொற்றவை உள்ளாள். அழகர்மலை மேலும் இராக்காயி என்னும் கொற்றவை கோயில் உள்ளது. சபரிமலை சாஸ்தாவுக்கு மாலையணிந்து எல்லோரும் ஐயப்பனாவது போல, இங்கு அழகருக்கு மாலையணிந்து விரதமிருக்கும் அடியவர்கள் அழகர் போல் வேடமணிந்து அழகராக ஆகின்றனர். மேலும் சபரிமலை தர்மசாஸ்தா என்னும் ஐயப்பன் கோயிலும் அழகர்கோயிலைப் போன்றே பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்துள்ளதை வரலாற்றாய்வாளர்கள் நிறுவியுள்ளனர். சபரிமலை சாஸ்தா ஐயப்பன் வழிபாடு தமிழகத்தின் ஐயனார் வழிபாடே ஆகும். அழகர்கோயில் தெய்வம் ஐயனராகவும் கருதப்பட நிறைய வாய்ப்பிருக்கின்றது. ஏனெனில் தமிழகத்தின் பெரும்பாலான ஐயனார் கோயில்களில் குயவர் சாதியினரே பூசாரிகளாக உள்ளனர். அழகர்கோயிலில் இதர பிரதான தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருப்பசாமிக்கும், மலைமேலுள்ள இராக்காயிக்கும் குயவர்களே இன்னும் பூசாரியாகவிருக்க, அழகருக்கு மட்டும் பிராமணப் பூசாரிகள் இருப்பதும், பிரதான வாசல் அடைக்கப்பட்டிருக்க, அதன் திறவாத கதவுகளுக்குப் பூசை செய்து வழிபடும் குயவர்களின் வழிபாட்டுக்குப் பின்னால் உரிமைப்போராட்டம் ஏதேனும் இருந்திருக்க-கூடும் என்னும் ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது. மேலும் அழகர் மதுரைக்குப் புரவியிலே (குதிரை) வருவதானது, ஐயனாருக்கு நடத்தப்படும் புரவியெடுப்புத் திருவிழாவினை நினைவு படுத்துகிறது. மேலும் தமிழகத்தில் ‘அழகர் கோயில’ என்னும் பெயரில் பல ஐயனார் கோயில்கள் உள்ளன. சில ஐயனார்களுக்கு, ‘கரைமேல் அழகர் அய்யனார்’, ‘சேரி அழகர் ஐயனார்’ என்னும் அடைமொழிகளும் உள்ளதும் இங்கு கருதத்தக்கது. கள்ளர் கோலம் தவிர புரவிமேல் ஐயனாருக்கும் அழகருக்கும் தோற்ற வேற்றுமை இல்லை. ஐயனார் நீர்நிலைகள் மற்றும் வயல்களின் காப்புத் தெய்வமாவார். அழகரும் மழைவேண்டல் விழாவின் பிரதான தெய்வமும் மேலும் விவசாயச் செழிப்பிற்கான தெய்வமுமாவார். ஐயனார் வழிபாடு பௌத்தம் தொடர்புடையது என்பதனைப் பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு திருப்பதியிலிருந்து தீர்த்தம் எடுத்துவர வேண்டுமென்பது பண்டைய காலத்தில் ஐதீகமாக இருந்திருக்கிறது. கோயில் அர்ச்சகர்கள் வருடம் ஒருமுறை போய் தீர்த்தம் எடுத்து வந்துள்ளனர். இது மிகவும் சிரமாமக உள்ளதாக அர்ச்சகர்கள் மன்னர் திருமலையிடம் முறையிட, அன்றிரவே மன்னரின் கனவில் திருப்பதி ஏழுமலையான் தோன்றி, தான் இனி தல்லாகுளம் பக்தியில் பிரசன்னமாகிறேன் எனக்கூற, மன்னர் திருமலை தல்லாகுளத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் உருவாக்கினார். அதிலிருந்து இக்கோயிலிலிருந்தே தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. இந்த ஐதீகத்தின் வழியே திருப்பதிக்கும் அழகர்மலைக்கும் பண்டைக் காலத்தில் இருந்த தொடர்பு நன்கு புலப்படுகிறது. திருப்பதி கோயிலும் பண்டைய பௌத்த கோயிலாக இருந்ததை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். இரண்டு கோயில்களுக்கும் அவை பண்டைய காலத்தில் பௌத்தத் தலமாக இருந்த காலம்தொட்டே உறவு இருந்திருக்கவேண்டும். இரண்டுமே இன்று வைணவப் பெருந்தெய்வக் கோயிலாக மாற்றப் பெற்றிருக்கின்றது.மேலும் இவ்விரு வைணவக் கோயில்களிலும் அடியவர்கள் இன்றளவும் பௌத்தர்களின் தலைமழிக்கும் வழக்கத் தினைக் கொண்டிருப்பதும் கண்கூடு.

கள்ளழகர்:

‘அழகர்’, ‘அலங்காரன்’, ‘சுந்தரராசன்’, ‘சுந்தரத் தோளுடையான்’, ‘அலங்காரப்பிரியன்’, ‘பரமஸ்வாமி’ என்று இத்தலத்து இறைவன் அழைக்கப்பெற்றாலும், இன்று கோவில் நிர்வாகத்தாரேலேயே ‘கள்ளழகர்’ என்றழைக்கப்படுகிறார். இதனைப்பற்றி தொ.பரமசிவன் அவர்கள் சில விளக்கங்கள் தருகிறார்.” ‘திருமலைநம்பிகள்’ என்னும் பணிப்பிரிவினரின் வசமுள்ள கி.பி.1863ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓர் ஆலயத்தின் மூலம் கி.பி.1815-இல் இக்கோயில் ‘கள்ளழகர்’ கோயில் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது. இப்பெயர் வழக்குக் குறித்த முதல் ஆவணச்சான்று இதுவேயாகும். இத்தலம் குறித்தெழுந்த பாசுரங்களிலும், பாசுர உரைகளிலும் பிற்காலத்தெழுந்த சிற்றிலக்கி-யங்களிலும் இப்பெயர் காணப்படவில்லை. நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் வர்ணிப்புப் பாடல்களில் சில இடங்களில் மட்டும் இப்பெயர் இடம்பெறுகிறது. கோயிலின் சித்திரைத் திருவிழா அழைப்பிதழில் ஸ்ரீசுந்தரராஜன் ‘கள்ளழகர்’ கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருளுகிறார் எனவே குறிப்பிடப்படுகிறது. ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் வளரித்தடியும் சாட்டைக்கம்பும், ஆண்கள் இடுகின்ற ஒருவகையான கொண்டை, தலையில் உருமால், காதுகளில் அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டிய வளையம் போன்ற கடுக்கன், காங்கு எனப்படும் ஒரு கறுப்புப் புடவை கணுக்கால் தொடங்கி இடுப்புவரை அரையாடையாகவும், இடுப்புக்குமேல் மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும். இதுவே கள்ளர் திருக்கோலத்தின் தோற்றமாகும்.”

நாயக்கராட்சிக் காலத்தில் சமயம் பரப்ப வந்த கிறித்துவப் பாதிரியான மார்ட்டின் அடிகளார் எழுதிய கடிதங்களிலிருந்தும், மதுரைவீரன் கதைப்பாடல்களிலிருந்தும் தொ.பரமசிவன் ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, “மதுரைப்பட்டணத்தில் உள்நுழைந்து தாக்குமளவும், அழகர்கோயிற் பகுதியில் உழவுத் தொழில் நடக்கமுடியாதபடி தொல்லை தருமளவும் கள்ளர்கள் விசயரெங்க சொக்கநாதன் காலத்தில் (கி.பி.1706-1732) வலிமை பெற்றிருந்தனர். எனவே இவனது ஆட்சிக்காலத்தில்தான் அழகர் ஊர்வலத்தைக் கள்ளர் மறித்த நிகழ்ச்சியும், அவர்கட்கு ‘இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை தருவதற்குக் கோயில் நிர்வாகம் உடன்பட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றிருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.” என்கிறார். ஆகவே, அக்காலத்திற்குப்பிறகே அழகருக்கு ‘கள்ளழகர்’ என்னும் பெயர் தரப்பட்டிருக்க முடியும்.

ஆனால் மதுரையின் பெரும்பாலான மக்கள் இன்றளவும் இத்தலத்து இறைவனை ‘அழகர்’ என்றும் ‘அழகுமலையான்’ என்றுமே அழைத்துவருகின்றனர். அழகர் என்னும் பெயர் பற்றி பண்டிதர் அயோத்திதாசர் கூறுவதும் இங்கு கருதத்தக்கது. “பௌத்த தருமக் கேழ்வியிலிருந்த குடிகள் புத்தர் என்றும் அழகர் என்றும் அரங்கர் என்றும் தருமர் என்றும் வழங்கி பகவனைப் பற்றி விசாரிக்கும் காரணம் கொண்டு புத்தரே விஷ்ணு என்றும் விஷ்ணுவே புத்த அவதாரமென்றும் புராணமேற்படுத்தி புத்த பாதமே விஷ்ணு பாதம் விஷ்ணு பாதமே புத்த பாதமென்றும் கூறி பொய்யிற்கு பொய்யை முட்டுக் கொடுத்து பொய்யையும் விருத்தி செய்துகொண்டு வருகின்றனர்.” அழகர் என்னும் பெயர் புத்தருக்குரியது என்ற அயோத்திதாசர் கூற்றும் இங்கு ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதற்கு அழகர் கோயில் பற்றிய ஆய்வும் முக்கியமாக அமைகின்றது. மேலும் அயோத்திதாசர் சிந்தனையின்படி, இந்திரன் புத்தரே ஆவார். ஐந்திரங்களையும் அடக்கியாண்டதால் ஐந்திரன் என்றவாறு, இந்திரன் என்றானது என்பார். பௌத்தக் காப்பியமான மணிமேகலையில் இந்திரவிழா என்பது மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்ட பௌத்தவிழாவே ஆகும்.

ஆகவே இன்றைய நாட்களில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளான விஷ்ணு, கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை வந்து, தங்கக்குதிரை வாகனத்துடன் வைகையில் இறங்கும் விழாவானது, பண்டைய நாட்களில் அழகர் கோயில் பௌத்தக் கோயிலாக இருந்த காலத்தில மருதநில மக்களால் மழைவேண்டிக் கொண்டாடப்பட்ட ‘இந்திரவிழா’ என்னும் ‘பௌத்த விழா’வாகவே இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளுரர் மரபுகளின் அடிப்படையில் மட்டும் இதுவரையில் கண்டோம். இனி அதன் ஆசிய அளவிலான மரபுகளுக்கிடையிலான தொடர்பு பற்றிக் காணலாம்.

சொங்க்ரான் (Songkran) திருவிழா :

சமஸ்கிருதத்தில் ‘மேஷ சங்கிராந்தி’ என்று அழைக்கப்படுகின்ற விழாவே, ‘சொங்க்ரான்’ என்னும் திருவிழாவாக தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர், வியட்னாம், இலங்கை, சீனா போன்ற நாடுகளிலும், வடகிழக்கு இந்தியப் பகுதிகளிலும் கொண்டாடப் படுகின்றது. சு+ரியன் மீனத்திலிருந்து மேஷத்திற்கு நகரும் நாளே மேஷ சங்கிராந்தி என்னும் நாளாகும். இதுவே சொங்க்ரான் என்னும் புத்தாண்டு நாளாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் இதே நாளே சித்திரை முதல் நாளாக புத்தாண்டாகக் கொண்டாடப்படுகின்றது. இது சு+ரிய நாட்காட்டி அடிப்படையிலான புத்தாண்டாகும்.

தாய்லாந்தில் கொண்டாடப்பெறும் சொங்க்ரான் விழாவினைப்பற்றி அறிய முனைகையில், அவ்விழாவானது பெருமளவிற்கு மதுரையின் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவினை ஒத்திருப்பதை அறிய முடிகிறது. தாய்லாந்தில் சித்திரை முதல் நாளிலும், மதுரையில் சித்திரை முழுநிலவு நாளிலும் கொண்டாடப்பெறும் இவ்விரு விழாக்களின் பொதுவான சில அம்சங்களைக் காணலாம்.

பண்டைய நாட்களில் தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கியபொழுது, அதனைச் சுற்றிலுமுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெருமாள்களும்(கோயில் உற்சவ மூர்த்திகள்) ஆற்றில் இறங்கியுள்ளனர். மேலும் சித்திரை முழுநிலவு நாளில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை எனப் பல்வேறு ஊர்களிலும் ஆற்றில் அழகர் இறங்கும் விழா நடைபெறுகிறது. ஆனாலும் பண்டைய நாட்களில் தேனூர் விழாவே மிகப்பெரிய திருவிழாவாக இருந்துள்ளது. அழகர் தன் கோயிலிலிருந்து வழிநெடுகப் பயணித்து ஆற்றுக்கு வருகை புரிந்து, விழா முடிவுற்றதும் திரும்பவும் தன் கோயிலுக்குச் செல்வதைபோன்றே, தாய்லாந்தில்லும் சொங்க்ரான் விழாவின் போது புத்தரின் சிலைகள் பல்வேறு மடாலயங்களிலிருந்தும் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. அப்படி ஊர்வலமாக வரும் புத்தரின் சிலைகளின் மீது, இங்கே அழகரின் மீது துருத்திநீர்ப் பீய்ச்சுவது போலவே, அங்கு புத்தர் மீதும் நீர்த்துப்பாக்கிகள் மூலமாக நீர்பீய்ச்சுகிறார்கள். சில இடங்களில் பாத்திரங்களால் நீரள்ளி ஊற்றுகிறார்கள். அழகர் மீது மட்டுமல்லாது மக்களின் மீதும் நீர் பீய்ச்சுவது போலவே, தாய்லாந்திலும் ஒருவருக்கொருவர் நீர்ப்பீய்ச்சிக் களிக்கின்றனர்.

திருவிழாவின் போது அழகருக்கு நிறைய காணிக்கைகளும், அடியவர்களுக்கு அன்னதானங்களும் கொடுக்கப்படுவது போலவே, தாய்லாந்திலும் பௌத்த துறவியருக்கும், மடாலயங்களுக்கும் தானங்கள் வழங்கப்படுகின்றன. அழகர் விழாவில் கொக்கு, நண்டு, தவளை போன்ற பிராணிகள் விடுவிக்கப் படுவதைப்போலவே, தாய்லாந்திலும் சொங்க்ரான் விழாவன்று பறவைகளும், விலங்குகளும் விடுவிக்கப்-படுகின்றன.

சொங்க்ரான் இன்றளவும் பௌத்த விழாவாகவே நீடித்து வரும் நிலையில், அழகர் விழாவானது எவ்வாறு பண்டைக் காலத்தில் பௌத்த விழாவாக இருந்திருக்க வாய்ப்புகளிருந்தன என்பதுபற்றி நாம் மேலே கண்டோம்.

தற்காலிகமான நிறைவாக,

பௌத்தம் தோன்றும் முன்பிருந்த பண்டைய மக்களின் வாழ்வியல் முறைமைகளோடு பிறந்த வளமைச் சடங்குகள் பலவும், சமயவளர்ச்சிப்போக்கில், பௌத்தத்தின் உள்ளுரர் மரபுகளில் பிரிக்க முடியாத பௌத்தச் சடங்குகளாக நிலைபெற்று சில இடங்களில் சிற்சில மாற்றங்களுடன் தொடர்ந்து கொண்டும், பெரும்பாலான இடங்களில் பல்வேறு சமயங்களின் திரிபுகளுக்கும் இலக்காகிய நிலையிலும், இன்றளவும் நிகழ்ந்து வரும் அச்சடங்குகளை அதன் உள்மெய்யை ஆரய்வதன் மூலம் அவற்றின் பௌத்த அடித்தளங்களை நம்மால் அடையாளம் காணமுடியுமென்பதை இக்கட்டுரையின் வழியே கண்டோம். மேலதிக ஆய்வுகளின் வழியே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் பௌத்தச் சடங்குகளிலும், வழிபாடுகளிலும் தமிழ்ப் பௌத்தத்தின் வேர்களை நம்மால் இனம் காண இயலும். தமிழ்ப் பௌத்தத்தின் வேர்களை இனம் காண்பதன் வழியே தமிழ் மெய்யியல் மரபின் அடித்தளங்களையும் நம்மால் காண இயலும்.


துணை நின்ற நூல்கள் :

1. அழகர்கோயில் – தொ. பரமசிவன்

2. மதுரைக் கோயில்களும் திருவிழாக்களும் – பி. ஆறுமுகம்

3. இலக்கியங்கள் பேசும் தேனூர் – பி.ஆறுமுகம்

4. அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள் – இ.முத்தையா

5. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்-கைகளும் – க. காந்தி

6. பௌத்தமும் தமிழும் – மயிலை. சீனி. வேங்கடசாமி

7. அயோத்திதாசர் சிந்தனைகள் – பண்டிதர்.க.அயோத்திதாசர் மற்றும் கள ஆய்வும், இணையமும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!