மீசவச்ச ஆம்பள யாருடா
வெளியே வாடான்னு
ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள்
எத்தனை நாளைக்குத்தான்
ஆமை போல் அடங்கி
நத்தை போல் சுருங்கி
பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது
போயேன்
உங்களுக்கெல்லாம் மீசவச்ச
ஆம்பள நான்தான்னு
மார்தட்டிச் சொல்லேன் தகப்பனே.
♦
அரசமரத்தடி வாய்க்கால் வரப்பு
குளக்கரை புளியமரத்தடி காடுகழனியென
சேவிங் பண்ணிகிட்டு வுடுங்க
நான் பள்ளிக்கூடம் போகணுமின்னு சொன்னா
உனக்கு என்னடா படிக்கலையின்னாலும்
கத்தியிருக்குப் பொழச்சிக்குவன்னு
தைரியம் கொடுத்த ஊருக்காரனுங்க
பள்ளிக்கு லேட்டாப் போனா
உனக்கென்னடா படிக்கலையின்னாலும்
தொழிலவச்சிப் பொழச்சிக்குவன்னு
ஆறுதல் சொன்ன வாத்தியார்கள்
உங்க ஆட்சியில செரைச்சிக்கிட்டு இருந்தீங்களா
எங்களப் பாத்தா செரைக்கிறவனுங்களாட்டும் தெரியுதா
என்று கேட்ட அரசியல்வாதிகள்
இந்த வேலைக்குச் செரைக்கப் போகலாமென்று
அலுத்துக்கொண்ட அரசு ஊழியர்கள்
இந்த வேலையெல்லாம் எங்கனா
செரைக்கிறவங்ககிட்ட வைச்சிக்கோ
என மிரட்டும் சினிமாப்படத் தாதாக்கள்
இவனுங்க வாரிசெல்லாம்
அப்பவே செரைக்கவருவானுங்கன்னு
தெரிஞ்சியிருந்தா
என் தலையெழுத்தை மாத்த
நாலெழுத்து சேர்த்துப் படிச்சியிருக்கலாம்.
♦
தனக்கோட்டி குழந்தையாய் இருந்தபோது
அப்பனொரு கையைப் பிடிக்க
அம்மாவொரு கையைப் பிடிக்க
பாட்டியொரு கால் பிடிக்க
தாத்தாவொரு கால்பிடிக்க
ஜல்லிக்கட்டுக் காளையாய்த் திமிருவான்
லாடம் அடிப்பதுபோன்று நிகழ்வாய்
நடந்தேறும் மயிர்நீக்கும் வைபவம்.
ஐயா
ஆட்டாத ராஜா
அழுவாத ராஜா
எங்க ஊரு ராஜா
எங்க பெத்த ராஜான்னு
சொன்ன வாய்முகூர்த்தமோ என்னவோ
வ ள ர் ந் தா ன்
வ
ள
ர்
ந்
தா
ன்
ஊர்த்தலைவராகி
சாதிப் பஞ்சாயத்துல
நெஞ்சுமேலயும் குஞ்சுமேலயும்
எட்டி எட்டி உதைக்கும் அளவிற்கு
Art By : Negizhan