தான்-சமூகம்-கூட்டுணர்வு

(கவிஞர் வினையனின் ‘எறவானம்’ தொகுப்பினை முன்வைத்து...)

ம.கண்ணம்மாள்

“இடுப்புல தங்காத கால்சட்டய
இழுத்து இழுத்துச் சுருட்டி
மடிச்சிவிட்ட நான் கூட
கவிதை நூல் போட வந்துட்டேன்
ஊரு மாறாதா என்ன?”

இப்படியான ஒரு கேள்வியோடயே தன்னைத் தானாக, சமூகமாக, கூட்டுணர்வாக உரையாடலைத் தொடங்கிவிடுகிறார் கவிஞர் வினையன். ஒரு கவிதையில் சொற்கள் திரள்தலும் பொருள் விளக்குதலும் உணர்தலுக்குத் தேவையானவை. உணர்தல் என்பது சிந்தித்தலை மேம்படுத்துதல். அதுவே, மொழியில் பொருளாக, சமூகத்தில் தானாக, கூட்டுணர்வாக வெளிப்படுத்திக்கொள்கிறது. இவ்வுணர்தல் உடலில் ஒரு செயலாக, அனுபவமாக மாறித் தன்னை விவரித்துக்கொள்ள முற்படும் சூழலில், பல வெளிகள் புலப்படத் தொடங்கும். இப்புலப்படலில் உடலே பிரதான உள்வயத்தாக்கம். உணர்தல் கூறுகளை உடல் தன் மீது இறக்கிக்கொண்டு சொற்களாக மாறும்போது அங்கு மொழி பல வடிவங்களில் உருமாற்றமடைகின்றது. இது ஒருவகையான செயல்பாடு. இங்கு உடலும் மொழியும் பெரும் இயக்கம். இதை என்னவாகப் பார்த்து உணர்தலை அடர்த்தியாக்கி வெளியேற்றுகிறார்களென்பதில் சமூக வயப்பாடு வலுப்பெறும். அதற்கு இயங்குதல் அவசியம். தானாக, சமூகமாக, கூட்டுணர்வாக இயங்க உடல்கள் முக்கியம். உடல்களே மனித நுகர்வு. இந்நுகர்வினை உருவாக்கும் உணர்தல் நிலையே ஒரு படைப்பின் தோற்றம் மற்றும் மொழியின் திரட்சி. இத்திரட்சிதான் ஒரு சிந்திக்கும் தன்மையோடு உணர்தலையும் தருவிக்கின்றது. அதனாலயே, வினையன் என்ற படைப்பாளரால் இப்போது நகரும் வாழ்க்கையினைத் தள்ளி வைத்து “நாளையே நானில்லாமல் கூட இயங்கும் என்ற பெருஞ்சிந்தனை”யினைச் சொல்ல வைக்கிறது. இது, ‘தான்’ என்ற தனிமனித நிலையிலிருந்து நகர்ந்து சமூகத்தைப் பார்க்கும் துவக்கமாக நிற்கிறது. இவ்வுணர்தலை ஒரு உடல் ஏற்றுக்கொண்டு சமூகத்தின் பற்பல உடல்களுக்கு மாற்றம் செய்கிறது. அம்மாற்றம் சூழலுக்கேற்பப் பெருங்கூட்டுணர்வாகப் பல தளங்களில் வெளிப்படும். இக்கட்டமைப்பு உடல் என்ற வினையைச் சார்ந்து செயல்படுகிறது. பிறக்கக்கூடிய ஒவ்வோர் உடலும் உயிரை மட்டும் நிர்பந்தித்துத் தோன்றவில்லை. மாறாக, ஒவ்வோர் உடலும் ஒரு சமூகத்துடன் கொண்டுள்ள வினை எனலாம். அது, கலையாக, கலாச்சாரப் பண்பாடாக, அரசியலாக, சாதிக்கூறாக, அடக்குமுறையாக எப்படி வேண்டுமானாலும் தன்னை வடிவமைத்துக்கொள்ளும். இதனுள் மொழி என்பது அனைத்திற்கும் உரியது. அதிலிருந்து ‘கலை’ என்ற ஒன்றில் மொழியெனும் இடத்தை, நிலைப்பாட்டைப் படைப்பாளர்கள் எவ்வாறு கைகொள்கின்றார்கள் என்பதே படைப்பின் மையநோக்கம்.

உடல்கள் வாழ்தல் / மறைதல் என்ற இரு பகுப்புகளைக் கொண்டது. இப்பகுப்புகளுக்குள்ளயே மொழியின் பல்லாற்றான நுண்ணிய மேம்படுத்தப்பட்ட தளங்கள் துகள்களாக அமர்ந்திருக்கின்றன. அதனை, எண்ணிக்கைப்படுத்துதல் இயலாது. ஆனால், ஒன்றுதிரட்டி மொழித்திரளாக இவ்
வெளியில் தர இயலும்.அதற்கு விருப்பமுள்ள / வெறுப்பற்ற உடல்கள் மட்டுமே போதுமானது. உயிர்த்தலான இம்முறையினைச் சாத்தியப்படுத்த உயிருள்ள / உணர்வுள்ள உடல்கள் மட்டுமே தேவை. மற்றவையெல்லாம் தன்னிலை, பிறனிலை மார்க்க வழியில் வந்து இணைத்துக்கொள்ளும். உடல்களின் இம்மொழி பொருள்கொள்ளல் கவிதைக்கான செயல்பாடாகச் சிந்திக்க வைக்கின்றது. இவ்வுத்தி படைப்பாளரிடம், தலைப்பு கொடுத்தால் என்னால் எழுத முடிவதில்லை / ஆழ் கடலுக்குள் யார் ராகம் பாடுவது / வற்புறுத்தலின் கவிதை சோதிக்காது / வரிகளில் எனைத்தேட முயல்கிறேன் எனக் காண முடிகின்றது.

இது, மிக இலகுவான கவிதை வடிவாகத் தென்பட்டாலும் இவ்வரிகளினை வாசிக்கும்போது ஓர் உடலில் இக்கவிதை முற்றிலும் வேறொரு சாராம்சத்தை ஏற்படுத்தும். “வற்புறுத்தலின் கவிதை சோதிக்காது” இதில் ‘சோதிக்காது’ என்பது நம் கவனத்தை அதன் மேல் குவிக்கச் செய்கிறது.

“என் கவிதை
நானே எழுதுவதில்லை
எனக்குள் இருக்கும் வேறொன்றால்தான்”

என்ற வரிகள் மொழியுடனான நேரடித் தொடர்புக் கருவியாக மாறி உடல்களுக்குள் பரிமாற்றம் ஏற்படுத்தும் செயல். எவ்விதமான கட்டுப்பாடும், பூசிமெழுகலுமற்ற ஒரு மொழி ஊடுருவல். அது, உடலுக்குள் நடக்கின்றது. உடலின் வழியான அனுபவமும் உரையாடலும் சமூகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டுப் பிணைந்து வருகின்றன. இத்தன்மை கேள்வி எழுப்பும் தன்மையும் கொண்ட நிச்சலனம். அது, வெளிப்படும் இடம் அபாரமானது. வியந்தோதலற்ற ஒரு தட்டுதல்.

“என் பேனாவை
நீங்கள் தூக்கி எறியலாம்
விரல்களை யார் துண்டிப்பது”

எனக் காட்சிப்படுத்தலும் அதனின்னானதுதான். முழுமையான சமூகச் சுழற்சியினை யார் தர முடியும் என்று வினவுவதில் சக உடல்களின் முதிர்ச்சி அனுபவம் மூலதார வேர்களாகின்றன. வெளிப்படையான விருப்பு, வெறுப்பு மொழிக்குத் தேவை. பிறத்தல் / இறத்தல் என்ற இரு வாழ்தடங்களில் மொழியே அனுபவமாகித் தன்னை விரிக்கின்றது.

இறத்தலில் உயிர்த்தலும் உண்டு. இறந்த உடல் மொழியால் உயிர்த்துவரும் புதுப்பிக்கப்பட்ட சொல்லாக உருப்பெறும். அது, இறப்பில் உயிர்த்தெழும் தன்னுணர்வு. தகப்பனின் இறப்பு தன் உடலைத் திறந்து ஊடுருவதை உணர்தல் மொழியில் கவிதையாகிறது. ஒருவிதமான உடல் அதிரும் மனநிலை. தன் உடல் வழியாகத் தகப்பன் உடலைத் தேடுதல். ஆழ்ந்து நோக்கினால் தகப்பன் குரல் சாதாரணப் பேச்சாக இயல்பாகி வெடிக்கும் அனுபவம். அந்த உள்ளீடு மிகச் சரியான சம்பிரதாயமற்ற வாழ்வனுபவம். மிகத் தூய்மையான உயிர்த்தலும் கூட.

“கால் கட்டு
வாய்க்கட்டு அவிழ்த்து
குளிப்பாட்டியாயிற்று
புதுவேட்டி
புதுச்சட்டையணிந்து
சவ்வாது மணக்க
பாடையில் கிடத்தி
தண்டலை பறை செட்டு
குருங்குடி வாணவெடி சகிதம்
கிளம்பின அப்பன்
சில வருடங் கழித்து
பகல் உறக்கமொன்றில்
மொவ பேரு என்னன்னு
கேட்டதோடு சரி”

இரு உடல்களின் வாழ்க்கையில் மறைந்த / நடந்த சொற்களின் அர்த்தங்கள் தகப்பன், மகன் எனப் பெயரிடப்பட்டு முழுமையான அனுபவம் நிகழ்கிறது. இங்கு எல்லாமே நிகழ வேண்டும். எது ஒன்று நிகழ்கிறதோ அதுவே முழுமை. அதுவே பூரணம். இவ்வரிகளில் இறப்பு என்பதில்லை. மாறாக, பிறத்தலான ஒரு நிகழ்தல். உடலுக்கும் மொழிக்குமான உயிர் பிறப்பு. சரியானதோர் உயிர்ப்பை நிகழ்த்தலில் கவிதையினைக் கொண்டுசெல்லல் என்பதும் கூட நிகழ்வது அதுவாகத்தான். கவிஞர் வினையனுக்கு அது சாத்தியமாகியிருக்கின்றது.

இதே இறப்பினை மற்றுமோர் இடத்தில், இறப்பின் ஒரு சப்தமாக, ஒரு புறவயத் தூண்டலாக, உடலுக்கும் மனதுக்குமான ஓர் உணர்தலாக ஆழம் கொள்ள முடிகிறது. சிறிதான சொற்களில் பெரிதான காட்சியை வெளிப்படுத்துவது உடல்மொழி. அதற்கு, மௌனமே பிரதானம். துல்லியமான சொற்கோவை, அதன் வசப்படும். சப்தமற்ற ஒன்றில் சொற்களின் தீவிரம் உடலில் படிந்து வெளிப்படும். இறப்பென்பது மாபெரும் அமைதி. இறப்பென்பது மாபெரும் சப்தம். சொற்களற்றுப் போன உடல் படுத்துக்கிடப்பதில் எத்தனை எத்தனை சப்தம் மறைந்து போயிருக்கிறதென்பதுதான் விஷயம்.

“அழுது முடித்துக் களைப்பாற
சூடாய்த் தரப்பட்ட தேநீரிலும்
பந்தக் காலிலும்
———————
———————
———————
———————
———————
சற்றைக்கு முன்பு தூக்கிவிட்டு
சாய்த்துப் போட்ட பெஞ்சை
நிமிர்த்துக் கழுவினாலும்
மாறவே இல்லை
மரண வாசனை”

உடலின் மாறாத மணமொன்று ஒவ்வொருக்குமுண்டு. எந்தத் திருத்தலுமில்லாத இயற்கை அது. வெறும் செயற்கையாக இல்லாமல் உணர்தலான வாசனையும் கூட. கச்சிதமான உடல்மொழி எனவும் சொல்லலாம். இல்லாமையின் இயங்கல். மறைந்த உடல் தான் வாழ்ந்த வாழ்க்கையினூடாகத் தன்னைப் புதுப்பித்து, வாசனையாக நிரம்பி நிற்றல். அது அந்த உடல் பேசிய பேச்சாக, அமர்ந்த, படுத்த, நின்ற, ஓடிய, வாதிட்ட, சத்தமிட்ட ஏதோ ஒன்றாக இருக்கலாம். அது, கழுவித் துடைத்தாலும் மாறாத உயிர்ப்புடன் இருக்கும் மரண வாசனை. உடல்மொழிக்கு ஏது மரணம்? வழி வழியாகப் பிறந்து கொண்டேயிருக்கும் கூட்டுணர்வுதான் அது.

மொழிதான் மனிதச் சிந்தனை, வளர்ச்சி, சமூகப்புரிதல், தான் என்ற தன்னுணர்வு, கூட்டுணர்வு இன்ன பிற தருகின்றது. மொழி உடலின் முதல் வினை. பின்பு எவ்வாறு கூட்டு வினையாக உருப்பெறுகிறது என்பதில் சமூகத்தைப் பற்றிய புரிதலும் உணர்தலும் வெறும் உடல் உருவங்களாக அல்லாமல் உணர்வு உருவங்களாக இருப்பின் நலம். இதனை,

“நார தவளயில்லாம நாதியத்துக்
கெடக்கு பொட்டக்கோளம்
நத்தயெல்லாம் ஓடா கெடக்கு
தெக்கேரில”

பிற உயிரிகளின் வாழ்நிலைகளில் ஏற்படும் துயரம், மழை இன்மையால் வரும் காட்சிகள் சொற்களாக்கப்பட்டுள்ளன. மனித உடல்களுக்கு மட்டுமா நீர் தேவை? இப்பரவெளியின் அனைத்து உயிர்களுக்கும் இயற்கை தேவையாகயிருக்கின்றது. இயற்கை பொய்ப்பின் வாழ்க்கை பலவீனமாகும்; வளம் குறையும்; பல விவரணைகள் கேள்விக்குள்ளாக்கப்படும். வாழும் மனித, பிற ஜீவராசிகள் உயிருடன் புதைத்தல் போன்றது, மழை இல்லாமலிருப்பது. இயற்கை மட்டுமே வாழ்க்கையினை நேராக்க முடியும். அதுவே, நிரந்தரம்.

அதனாலயே,
“தாமரக்கெழங்கு தோண்டித் திங்குது – சனம்
வௌச்சலு இல்லாம
வானம் பாத்து ஏசுறான்
பொக்க வாயன்
பேஞ்சி தான் தொலயேன்
கண்டாரோழிப்பய வானமே”

எனச் சாட முடிகிறது. உடலின் இயக்கம் வெறுப்பாதல் நிலைக்குத் தள்ளப்படும்போது இயற்கை வசவுக்குள்ளாகிறது. எக்கடினத்தையும் தாங்க உடல்கள் விரும்புவதில்லை. இல்லாமையையும் போதாமையையும் இருத்தலாக ருசித்து வாழத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் உடல், எப்பொழுதும் இயற்கையைப் பகைத்துப் பார்க்க விரும்புவதில்லை. எப்படியாவது இயற்கையைத் தன்னகப்படுத்துவதான் உடலின் தேவையும் கூட.

இந்த இயற்கையை, இம் மழையை அனுபவித்து, உணர்தல் எத்தனை உடல்களின் வேட்கை வினை?

“மேகங் கருக்கையில்
வீடு திரும்பும் ஆடு மாடுகள்
முதல் சொட்டின் நனைதலுக்குக்
காத்து நிற்கும் கபடிச் சிறுவர்கள்
வெளிச்சமிருக்கவே விளக்கில்
மண்ணெண்ணெய் ஊற்றும் பாட்டி”

இப்படியாகப் பல இரசிக்க வைக்கும் மழை உடல்புலன்களின் விருப்பமாகின்றது. அனைவரின் சோம்பலும் ஒரு மழையால் பெயர்த்து எறியப்படும். எந்தத் தூங்கி வழிதலும் இயற்கை, உடல்களுக்குத் தருவதில்லை.

இதெல்லாம் கடந்து, சமூகத்தில் தேவைக்கேற்ப வாழாமல் துயரப்படுவதும் உடல்கள் அனுபவித்துக் கொண்டுள்ளதும் நாள்தோறும் நடக்கிறது. இச்சமூகத்தில் இல்லாமைக்கான சூழல் மையப்படுத்தும் வேலை அவசியமானது. சமூகக் களத்தில் நிலையான வாழ்க்கை முறை, நினைவுகளின் சேகரம், தனக்கான தேவை இவையெல்லாம் சமூக உறவுகளில் உடல்கள் புத்தாக்கம் செய்துகொண்டேயிருக்கும்படியான நிலை, அவசியமும் ஆகின்றது.

இதனை,
“ஓட்டைகள் எண்ணி பாத்திரம் ஒதுக்கும்
கூரை வீட்டின் மைந்தர்கள் – என
மழை எனக்கு இந்தச் சாயலில்தான் அறிமுகம்”

மழையை விரும்புதல் என்பது ஒரு விருப்பம். இருப்பினும் கூரை ஓட்டையால் உடல் நனைந்து மருளுதலும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை உணர்த்துகின்றது. படைப்பாளரால் “மழை எனக்கு இந்தச் சாயலில்தான் அறிமுகம்” எனச் சொல்லமுடிகிறது. சொற்களின் பொருள்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய / மறைக்கக்கூடிய பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும். சொற்களின் திரட்சி உடல் என்ற இயங்குதளம் வழியாகக் கூட்டுணர்வில் ஒன்றிணைக்க வேண்டும். அதிகார நிறுவனங்களின் செயல்களுக்கு உடல்களின் சலிக்காத மனோபாவம் மொழி வழியாக உணர்த்தப்படல் வேண்டும்.
நடைமுறையில் மாறுதலற்ற வாழ்க்கைச் சூழலில் இயற்கையின் பங்களிப்பு அளவிடற்கரியது. உடல்களின் ‘தான்’ என்ற தனிமைத்தனத்திலும், ‘சமூகம்’ என்ற பொதுத்தனத்திலும் மழையிடம் வேண்டல் கூட்டுணர்வாகவே உள்ளது.

“பேஞ்சா பேயும் காஞ்சா காயும்
வக்காள ஓழி வானம்
———————-
எல்லங்கெடக்கு எறவானத்துல
———————-
ரெண்டு சுருட்டும் பட்ட சாராயமும் தர்றேன்
செத்த வழி காட்டேங் கருப்பா”

இதைத் தாண்டிச் சமூக உள்ளீடும் அதிகமாக இத்தொகுப்பில் நிரல் படுத்தப்படுகிறது. ஓர் உடலின் குரல் சமூகத்தில் நிற்பதற்கு மொழிதான் தளம். இங்கு, ஒரு மக்கட்பிரிவினை அடையாளப்படுத்தும் போக்கு ஏன் தொடர்ந்து நடக்கிறதென்பதற்குப் பதிலில்லை. ஒரு தனி உடலின் பெயரினை நேரடியாகக் கூற என்ன சிக்கல்? தனித்தனி உடல்களின் அடையாளங்கள் பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வாழ்ந்த / வாழ்கின்ற காலச்சூழல்கள் சமூகத்தின் விசாரணை வட்ட வளையத்திற்குள்ளிருந்து எதிர்ப்புணர்வு. தனிப்பட்ட உடல்களைச் சாடுவதும், சாதியால் அடையாளமிடுவதும் ஆதிக்கத்தின் வன்முறையின்றி வேறில்லை. மனித உடல்களைச் சுட்டிக்காட்ட எவ்வளவோ இருக்கும்போது,

“மூக்குச் சளி ஒழுவிக்கிட்டு கெடந்த
வண்ணாத்தி மொவளா இதுன்னு”

எனப் பேசும் ஓர் ஆதிக்கம், உடலைத் தட்டும் ஆதிக்கம் சமூகத் தளத்திலிருந்து வாழ்வதற்கு அப்பாற்பட்டது. ஆதிக்கத்தின் மீதான உட்கோபம் தன் உணர்தலின் வெளிப்பாடாக வினையனால் காட்டப்படுகிறது. சாதிய மேலாண்மையோடு வெளிப்படும் ஒழுக்கமுறைகள், உடல்களின் சுரண்டல்கள், தடைகளெல்லாம் நேரடியாகத் தகர்த்தெறிதல் மட்டுமே பற்பல உடல்களின் வேலையாக இருக்கமுடியும். அதைக் கேள்வியாகக் கேட்கும் வேலை மொழியினுடையது.

“நீங்கள் என்னை உங்களின்
அடிமை என்று நினைத்தபோது
என் கையில் சவரக்கத்தி
இருந்தது
என் கையில் பிணமெரிக்கும்
கட்டை இருந்தது
————————-
—————————
கண்டதும் கழட்டச் சொன்னீர்
செருப்பை…
———————-
இன்றோ பேனா பிடித்து விட்டோம்
பிரபஞ்சம் சுற்றுகின்றோம்
———————-
———————-
மின் சுடுகாட்டில்
சாம்பல் அள்ளு
சத்தமில்லாமல்
காடு சேர்
———————-
———————-
உனக்கும் எனக்கும் ஒரே
வடிவ தீ தான்
கனன்றுகொண்டிருக்கிறது”

என்பதில் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு ஆதிக்கங்களின் சாதி வேறுபாடுகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டவற்றைக் காட்டுவதைத் தன் அடையாளமாக மொழிப்படுத்துகிறார். அதுதான் உனக்கும் / எனக்கும் / ஒரே வடிவ தீ தான் / கனன்றுகொண்டிருக்கிறது எனச் சொல்ல வைக்கிறது.
வரலாற்றில் காலங்காலமாகக் குறிக்கப்பட்டுவரும் முதலாளித்துவ, நிலவுடமை, அடிமைச் சமூகத்தில் பல பல உடல்களின் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது தொடர்ந்து நடைபெற்றது. சாதி வர்க்கப் பாகுபாட்டின் வழி உடல்களைப் பிரித்து, அக்கக்காக அலசிப் பார்த்து வாழ்ந்த சமூகமும் இங்குண்டு, மொத்தச் சமூகத்திலும் இது பல நிலைகளில் உள்ளடங்கிக் கிடந்தது. ஆளுவோர் / அடிமை / சாதி / இனப்பகுப்புக் கொண்ட சமூகத்தின் அடையாளம் மேட்டிமையை மட்டுமே பேசத்தொடங்கியபோது, சமூகத்திலிருந்த பற்பல உடல்கள் தங்கள் குரல்கள் மூடப்பட்டபோது, மொழி என்னும் குரலை மையப்படுத்தினர். இங்கு, ஒருகாலத்தில் மொழிதான் உடல்களின் குரல். ‘தான்’ என்ற தனிக்குரல் ‘சமூகம்’ என்ற பொதுவாக மாறி ‘கூட்டுணர்வுக்குள்’ அழுத்தித் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, மொழியில் கேள்விகள் கேட்க வைக்க முடியும்.

“அப்பனும் ஆத்தாளும் அழகாத்தான் வச்சாங்க
மாயவன்னு பேரு
எந்தச் சாதிப்பயலா இருந்தாலும்
வலிக்காமச் சொல்றான்
வண்ணாத்தி மொவனுக்கு
சேதி சொல்லுங்கன்னு”

இப்படியாகவே ஒரு தன்எதிர்ப்பை முன்வைக்க முடியும். ஆண்டாண்டுக் காலமாகத் தனித்தனி உடல்கள் மீதும், சேர்ந்து வாழும் சமூக உடல்கள் மீதும் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் திணித்தது இச்சமூகம்.

மிக முக்கியமாக, உழைக்கும் வர்க்க உடல்களின் பொருளாதாரம் மேட்டிமைகளுக்கு மிகச் சாதாரணம். எதுவுமற்ற பல்லாற்றான உடல்களின் தேவையும் / நிராகரிப்பும் எதன் பொருட்டும் சரி செய்ய இங்குள்ள களங்கள் வழிவகுக்கவில்லை. ஒருவிதமான மாயத்திற்குள், இலவசத்தைத் தந்து அந்த நேர வயிற்றுப்பாட்டினைத் தீர்த்துச் சுமைகளைத் தீர்க்காமல் செய்ததில் பல அவலங்கள் ஒளிந்துகொண்டுள்ளன. உற்பத்தி / மூலதனம் / நுகர்வு இவையெல்லம் பொதுவில் இல்லை.

“அடுக்கு மாடிக் குடியிருப்பில்
தங்கும் வசதி
ஆடி காரில் பயணம்
ஐ ஃபோன் இலவசம்
மூன்று தலைமுறைக்கு
அரசு வேலை
இ.எஸ்.ஐ. பி.எஃப் லொட்டு லொசுக்கு
பரிசீலக்கப்படும்
தீபாவளி பொங்கலுக்கு
மூன்று மாதச் சம்பளம்
போனசாய்
நெசமாத்தான் கேக்குறேன்
மலம் அள்ள வரீங்ளா”

என்றுதான் கேட்பது முழுமையாகத் துயரிலிருந்து எப்பொழுது விடுபட முடியும்? உழைப்புச் சுமை குறிப்பிட்ட உடல்களுக்கு மட்டுமே சுற்றிக்கொண்டுள்ளதை, சமூக வளங்களிலிருந்து அவ்வுடல்கள் அப்பாற்பட்டு உழைத்துக் களைத்துப் போய் நிற்பதை இதுபோன்ற வரிகளால்தாம் கேட்க முடியும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலிலுள்ள அடித்தளம் அபாயமானது. ஒரு விருப்பத்தைக் கூட நிறைவேற்ற இயலாமல் தவித்தடங்கும் வாழ்வு அவர்களது. யார் என்ன செய்ய முடியும் என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. ஓய்வில்லா உடல் இயந்திரம் தன் உழைப்பைச் சிந்தினாலும், இல்லாமை என்பது இருந்துகொண்டுதான் உள்ளது.

“அஞ்சறைப் பெட்டியிலோ / சுவரோரத்தில் புதைத்த மண் உண்டியலிலோ / எட்டுப்பானைகளின் அடுக்கில் / கீழிருந்து மூன்றாம் பானையிலோ / தேடி எடுப்பதற்குள் / அடுத்த தெருவிற்குச் சென்றிருப்பார் ஐஸ் விற்பவர் / இதுவாகத் தான் வினையன் தான் / சமூகம் / கூட்டுணர்வு எனப் பேசிச் செல்கிறார். உடல்களின் வெவ்வேறு வகையான நுண்ணிய அணுகுமுறை, ஆதாரமற்று மறைக்கப்படும் உழைப்புச் சுரண்டல், இல்லாமை எனும் பெரும் போர்வாள், வெற்றாக மாறும் தரவுகள், ஆள்வோரின் திட்டமிடப்பட்ட மாயத்தோற்றங்கள் போன்ற இன்ன பிறவுக்கெல்லாம் உடல் வெளிப்படுத்தும் மொழிதான் குரல்.

அதனாலயே,
“என்னை விழுங்கி
காலத்தைக் கக்குகிறேன்”
என வினையனால் அறுதியிட முடிகிறது.
இத்தொகுப்பின் வழி என்னின் முடிவாகச் சொல்ல நினைப்பது,
“தான் என்பது ஓர் உருவாக்குதல்
சமூகம் என்பது ஒரு நிகழ்த்துதல்”

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!