புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட இறையூர் பகுதியில் உள்ளதுதான் வேங்கைவயல் கிராமம். இங்கு சுமார் அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களும் அகமுடையார் சமூகத்தவர் 200 குடும்பங்களும் முத்தரையர் சமூகத்தவர் 30 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். கடந்த 24.12.2022 அன்றுதான் வேங்கைவயல் கிராமம் வெளி உலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. சக மனிதனைச் சமத்துவப் பார்வையோடு பார்க்கும் அட்டவணைச் சமூக மக்கள்மீது எப்போதும் சாதியக் கொடுமைகளைத் திணிப்பவர்கள்தாம் சாதி இந்துக்கள். இவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. இவர்கள் கடைபிடிக்கும் இந்து மதக் கோட்பாடுகள்தாம் இத்தகைய செயலைச் செய்யத் தூண்டுகிறது. எனவே, மனிதத் தன்மையற்ற செயல்களைச் செய்பவர்கள் அங்கம் வகிக்கும் இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே அட்டவணைச் சமூகத்தவர்களால் எவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காண முடியும்.
கடந்த 24.12.22 அன்று இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அட்டவணைச் சமூக மக்களின் பயன்பாட்டுக்கான 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியில் ஆதிக்கச் சாதியினர் மனிதக் கழிவுகளைக் கொட்டிய நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் சாதிய மனநிலையை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது. சமூக நீதி மண் என்று சொல்கின்ற காரணத்தினால்தான் வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்த முடிகிறது. ஏனெனில், பாதிக்கப்பட்ட அட்டவணைச் சமூகத்தவர்கள், ஒருபோதும் திமிரி எழ மாட்டார்கள் என்கிற எண்ணம்தான். அதற்காகப் பகுத்தறிவற்றவர்கள் செய்ததைப் போலவே நாமும் செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, அக்குற்றத்தைச் செய்தவர்களுக்குத் தண்டனையை வாங்கிக் கொடுப்பதற்கான நீதிப் போராட்டங்களை நாம் முன்னெடுத்திருக்க வேண்டும்; ஒட்டுமொத்த அட்டவணைச் சமூக மக்களும் ஓரணியில் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிகழ்வு ஏனிங்கு நடைபெறவில்லை.
இச்செயலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டணை கிடைக்கச் செய்தால்தான் வருங்காலங்களில் இம்மாதிரியான குற்றச் செயல்கள் குறையும். ஆனால், குற்றம் நடந்து சுமார் பத்து நாட்கள் கழித்துதான் தமிழக அரசு 11பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. ஆயினும் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை என்பது ஆளும் அரசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தேசத்திற்கும் பெருத்த அவமானம்.
“விஷத்தைக் கொடுத்திருந்தால் கூட இரண்டு நாள் குடிச்சிருப்போம், செத்து அத மறந்து போயிருப்போம்“ என்று சொல்கின்ற அளவிற்கு உளவியல் ரீதியாகவும் அம்மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேங்கைவயலில் உள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் பொதுவான குடிநீர்த்தேக்கத் தொட்டி இருந்திருந்தால் இம்மாதிரியான ஓர் செயல் நடந்திருக்குமா என்பதையும் ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழகமெங்கும் அட்டவணைச் சமூக மக்களுக்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர்த்தேக்கத் தொட்டிகளும் பொதுவாக்கப்பட வேண்டும். இதை ஆளும் அரசும் அரசு அதிகாரிகளும் உறுதிப் படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் இச்செயல்பாடுகள் அட்டவணைச் சமூக மக்கள் மீது அரசிற்குள்ள ஒவ்வாமையைத்தான் வெளிப்படுத்தும்.
வேங்கைவயல் சம்பவத்தைக் கேள்விப்பட்டு 26.12.22 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அங்குச் சென்று விசாரணை மேற்கொள்கிறார். அப்போது அப்பகுதி ஆதிக்கச் சாதியினர் மேலும் பல தீண்டாமைக் கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறார். கிராமத்தில் இன்றும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கிறது; அங்கிருக்கும் அய்யனார் கோயிலுக்குள் மூன்று தலைமுறைகளாக அட்டவணைச் சமூக மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது என்பதை அறிந்து அட்டவணைச் சமூக மக்களைக் கோயிலுக்குள் அவரே அழைத்துச் செல்ல முயலுகையில் கோயில் சாவியைக் கொடுக்கத் தாமதித்திருக்கின்றனர். அத்தருணத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சாமியாடியபடி, அட்டவணைச் சமூக மக்கள் கோயிலினுள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இத்தடைகளை மீறியே ஆட்சியர் அவர்களைக் கோயிலினுள் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்து மதக் கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் ஒவ்வொரு இந்துவின் இரத்தத்திலும் இத்தகைய சாதியச் சிந்தனை ஊறிப் போய் இருக்கிறது. அதன்காரணமாகவே மனிதத் தன்மையற்ற செயல்களை அவர்களால் எந்தவொரு குற்றவுணர்ச்சியுமின்றிச் செய்ய முடிகிறது.
இன்றுவரையிலும் வேங்கைவயல் பகுதியில் அட்டவணைச் சமூக மக்கள் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்குச் சுடுகாட்டுப் பாதை இல்லை. வயற்காடு வழியாகவும் வாய்க்கால் வழியாகவுமே கொண்டுசெல்லும் நிலையிருக்கிறது. சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாலை வசதிகள் எதுவும் அமைக்கப்படாததால் அப்பாலங்களும் இடிந்து போய் உள்ளன. இது சம்பந்தமாக அரசும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவ்விடத்திலிருந்துதான் சாதியின் ஆதிக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரும் “சாதி முறைமை பொருளாதாரத் திறன்பட்ட நிலையை உருவாக்குவதில்லை. அது இனத்தை முன்னேற்றவுமில்லை, முன்னேற்றவும் முடியாது. ஆனால், ஒன்றைச் செய்திருக்கிறது, அது இந்துக்களை முழுமையாகக் குழைத்து அறம்பிறழச் செய்திருக்கிறது” என்று இம்மனநிலையை விளக்கியிருக்கிறார்.
1981ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சிபுரத்திற்கு அன்றைய பாஜக தலைவர் வாஜ்பாய் முதல் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் எதற்காக அடிக்கடி விஜயம் செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொடர்ந்து சாதியக் கொடுமைகளுக்கு ஆளான மக்கள் ஒரு கட்டத்தில் அக்கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக, ஒட்டுமொத்தக் கிராமமும் இந்து மதத்தைவிட்டு வெளியேறப் போகிறோம் என்று அறிவித்த மறுகணத்தில் இந்திய அரசினுடைய முழுக் கவனமும் மீனாட்சிபுரத்தின் மீது திரும்பியதை அட்டவணைச் சமூக மக்கள் உற்று நோக்க வேண்டும். மேலும், இந்து மதத்தைவிட்டு வெளியேறிய பின்னர் அவர்களின் தற்போதைய சுதந்திரமான வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் பற்பல சாதியக் கொடுமைகளுக்கு உள்ளான மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அட்டவணைச் சமூக மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காத அரசுகள், அவர்கள் மதம் மாறப் போகிறோம் என்று சொன்ன மறுகணத்தில் பதறியடித்து மீனாட்சிபுரம் நோக்கி ஓடோடி வந்தார்கள். இதன் பின்னணியை ஆராய்ந்தால் அதிலிருக்கும் உள்மெய் தெரியவரும்.
பொதுவாக நாம் யாரும் நம்மைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்மை மனிதர்களாகவே நினைக்காத ஓர் மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? நம்மைக் கல்வி கற்க விடாமல் உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? நம்மை மட்டும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? நாம் குடிக்கின்ற நீரில் மனித மலத்தைக் கலக்கின்ற சாதி வெறியர்கள் அங்கம் வகிக்கின்ற மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? நம் சொந்தப் பந்தங்கள் இறந்த பிறகு அவர்களின் உடலைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்வதற்கும் சுடுகாட்டில் புதைப்பதற்கும் கூட இடம் தர மறுக்கும் மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? சாதி மறுப்புத் திருமணம் செய்யும் நம் பிள்ளைகளைக் கழுத்தறுத்துக் கொல்பவர்கள் இருக்கின்ற மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்? சக மனிதனைத் தொடுவதைக் கூடத் தீட்டாகக் கருதும் எந்தவோர் மதமும் மதமல்ல, அது மனிதச் சமூகத்தின் சாபக்கேடு. இதைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இவ்வளவு அநீதிகளை நாம் ஏன் தாங்கிக்கொண்டிருக்க வேண்டும். இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம், நாம் சார்ந்திருக்கக் கூடிய இந்து மதம்தான் என்பதை எப்போது புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளும் மனிதத் தன்மையற்றச் செயல்களும் குறையும். ஆட்சியாளர்களும் நம்முடைய பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பார்கள்.
ஆய்வாளர் பெட்டீலி (Beteille), “அதிகாரம் ஒரு மேலாதிக்கச் சாதியிடமிருந்து இன்னொரு மேலாதிக்கச் சாதிக்குக் கைமாறியிருக்கிறதே தவிர பட்டியலின மக்களிடம் வழங்கப்படவில்லை” என்கிறார். இக்கூற்று இன்றைய சூழலிலும் ஒத்துப்போகின்றது. இன்றுவரையிலும் அதிகாரம் இங்கு சமமாகப் பங்கிடப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதிகாரம் சமமாகப் பங்கிடப்பட்டிருந்தால் அட்டவணைச் சமூக மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகள் ஓரளவுக்குச் சரி செய்யப்பட்டிருக்கும். இதற்கு யார் பொறுப்பேற்பது, ஆட்சியாளர்களா, பாதிக்கப்பட்ட மக்களா?
1713களின் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் சானார் (நாடார்) சாதியினர் தங்களுக்கேற்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகப் பெருந்திரளாகக் கிறித்தவ மதத்தைத் தழுவினர் என்பது வரலாறு. இன்றும் அது தொடர்கின்றது. இதற்காகவே கிறிஸ்தவ அமைப்பினர் The society for the Promotion of Christian knowledge, (SPCK) என்ற சங்கத்தை நிறுவியிருக்கின்றனர். அதன் வழியாக நாடார் சமூக மக்கள் குடும்பம் குடும்பமாகக் கிறித்துவத்திற்குள் அங்கமாயினர்; இன்றைக்குக் கிறித்தவச் சபைகளில் கோலோச்சுகின்றனர். 1841 – 1849 காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருவாரியான மதமாற்றங்கள் நிகழ்ந்ததற்கு மிக முக்கியக் காரணம், அம்மக்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளே என்று சொன்னால் அது மிகையாகாது.
மீனாட்சிபுரம் மதமாற்றத்தைத் தொடர்ந்து அரசு சமபந்திப் போஜனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதற்கு முன் அட்டவணைச் சமூக மக்களின் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த அரசு, அம்மக்கள் எடுத்த சுதந்திரமான முடிவைத் தொடர்ந்து இம்மாதியான காரியங்களைச் செய்ய முன்வந்தது. ஆயினும் அட்டவணைச் சமூக மக்கள் அதை நிராகரித்தனர். “நாங்கள் சமபந்திச் சமத்துவம் கேட்கவில்லை. மாறாக, எங்கள் தலித் இளைஞர்களுக்கு உங்கள் பெண்களை மணமுடித்துத் தரத் தயாரா?” என்கிற கேள்வியை அட்டவணைச் சமூகத் தலைவர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
அட்டவணைச் சமூக மக்கள் மீது திட்டமிட்டு ஏவப்படுகிற தீண்டாமை வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் இந்து முன்னணியினர் கூட, “மதமாறிய முஸ்லிம்களே! உங்களுக்கு மானம், மரியாதையிருந்தால் இந்துக் கிராமத்தைவிட்டு உடனடியாக ஓடிவிடுங்கள். ஏனெனில், இது கோயில் கிராமம். இந்துக்களின் சொத்துகளை அனுபவிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, எச்சரிக்கிறோம்” என்று மதம் மாறிய மக்களை அச்சுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெறுவதற்குக் காரணமாய் இருந்தது மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த கால ஆட்சியில் இம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமைக்கொடுமைகள் இவ்வாட்சியிலும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. தங்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக அட்டவணைச் சமூக மக்களே போராட வேண்டும் என்கிற நிலை இருக்கிற வரைக்கும் இது சமூக நீதி மண் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
பொதுவாக மக்கள் பிரச்சனையில் உடனடியாகத் தீர்வு காண முயலும் முதல்வர் ஸ்டாலின், வேங்கைவயல் பிரச்சனையில் மட்டும் மௌனம் சாதிக்கிறார். அக்கிராமத்திற்கும் செல்லவில்லை. அப்படியென்றால் தங்கள் நலனில் திமுக அரசிற்கு அக்கறை இல்லை என்றுதானே அட்டவணைச் சமூக மக்கள் நினைக்கக் கூடும்.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் எதற்காக இருக்கிறார், அவருடைய செயல்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும், தனித் தொகுதியில் வெற்றிபெற்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றவுணர்வோடு பதவி விலகியிருக்க வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை மீண்டும் தேர்தல் வரும் என்பதைத் தனித் தொகுதி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைவில் வைத்து அட்டவணைச் சமூக மக்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் இழுத்து வந்த தேரைப் பின்னோக்கி இழுக்கும் வகையில் செயல்படுவதென்பது ஆரோக்கியமானதல்ல.
நாங்கள் ஜனநாயகச் சக்திகள் என்று சொல்கிறவர்கள் கூட வேங்கைவயல் பிரச்சனை பற்றி இதுவரையிலும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இவர்களெல்லாம் நமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று நாம் எண்ணத் தேவையில்லை. காரணம் இவர்களெல்லாம் பெயருக்காக மட்டுமே வெற்று அறிக்கைகள் வெளியிடக் கூடியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமக்கான விடுதலையை நாம்தான் வென்றெடுக்க வேண்டும். அதுவே நம்முடைய அடிமையெனும் கைவிலங்கை உடைத்தெறியும்.
இந்தியச் சமூகத்தில் நிலைபெற்றுள்ள சாதியத்தைப் பற்றித் தான் எழுதிய ‘இந்தியாவைக் கண்டுபிடித்தல்’ (The Discovery of India) எனும் நூலில், “ஞ்இன்றைய சமூகச் சூழலில் சாதி முறையும் அதன் நடைமுறைகளும் பொருத்தமற்றவை; மாற்றத் தூண்டுபவை; கட்டுப்பாடுகள் விதிப்பை; வளர்ச்சிக்குத் தடையானவை. அவை தகுதி சார்ந்த சமத்துவத்தையோ வாய்ப்புகளையோ கொண்டிருக்கவில்லை. அரசியல் சனநாயகம் இல்லாதவை. இவ்விரண்டு கருத்தாக்கங்களிலும் முரண்பாடுகள் உள்ளார்ந்து காணப்படுகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தொடர்ந்து நிலைபெற்றுவருகிறது” என்று நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறிப்பிடுகிறார். இத்தகைய புரிதல் கொண்ட அவராலேயே கூட தன்னுடைய ஆட்சிக் காலங்களில் சாதியப் பிரச்சனைகளுக்கு ஓரளவேனும் தீர்வு காண முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது சமூகத்தில் பின்தங்கிய மக்கள் சனநாயக அரசியலில் பங்கெடுக்கவும் தங்களது அடிப்படை உரிமையை நிலைநாட்டவும் நிறைய வழிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால், ஆளுகின்றவர்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அதனுடைய வெற்றியும் தோல்வியும் தெரியும்.
இங்குள்ள பெரும்பாலான சாதிய இந்துக்கள் சிந்தனை அடிமைத்தனத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர். அதைத்தான் மதமும் அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. எனவே நாம், ‘நம்முடைய மூதாதையர்கள் காலந்தொட்டே தன்னுரிமைகளுக்காகப் போராடி வந்த போராளி இனத்தவர், அடிமை அல்லர்’ என்பதையுணர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.