மண், மானுடம், கலை என்ற சொல்லாடல்களைத் தொடர்ந்து தங்கள் உரையாடல்களில் பயன்படுத்தியவர்கள் நாளடைவில் சில தேவைகளுக்காக அப்படியான பேச்சுக்களை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் இன்றும் காண்கிற பொழுதுகளில் எல்லாம் அப்படியான பேச்சினை அல்லது தொடர்ச்சியினைத் தொடர்ந்த வண்ணமாகத்தான் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளர் எப்படி எழுதவும் பேசவும் செய்கிறாரோ அதுபோல ஓவியரும் நிச்சயம் எழுதவும் வேண்டும் என்பதை அதன் தேவை கருதி நான் ஒப்புக்கொள்கிறேன். இல்லையென்றால் இலக்கியவாதிகளும் பேராசிரியர்களும் அல்லது ஓவியக் கலைஞர்களின் நண்பர்களுமே இங்கே விமர்சகர்களாக இருப்பார்கள். ஓவியம் (கலை) தொடர்பான விமர்சனத்தை அதனோடு தொடர்ந்து பயணிக்கும் ஓர் ஓவியர் முன்வைப்பதே சிறந்ததாகும் என்று கூறும் ஓவியர் அமிர்தலிங்கம் பள்ளிப் பருவத்திலேயே ஓவியம் வரையும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கிறார். குறிப்பாகப் படம் ‘வரைவது மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றாலும் சிலர் அதன்வழி ‘பணமும் புகழும் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னதைப் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்ததுமே காரணமாக இருக்கலாம்.
ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, பொருளாதாரச் சூழல் காரணமாகக் கல்லூரியில் சேராமல் ஒரு சைன்போர்டு கடையில் வேலைக்குச் சேர்ந்தது. அங்கே ஒருமுறை ஒரு தியேட்டரில் படம் வரையச் செல்கிறபோது அந்தத் தியேட்டர் உரிமையாளரின் மகன் “நீங்க நல்லா படம் வரையுறீங்க… ஏன் நீங்க பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கக் கூடாது” என்று கூற அதன்படி அமிர்தலிங்கம் முதலில் பாண்டிச்சேரியில் சேருகிறார். ஓர் ஆண்டு கழித்து, மீண்டும் சென்னையில் இடம் கிடைக்கவே சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் வந்து சேர்கிறார்.
அமிர்தலிங்கம் கோடுகளும் வண்ணங்களும் எளிய மக்களிடையே பயணிக்கிறதைக் காணமுடியும். சில அரூபமான கோடுகள் கூட இந்த மண்ணோடும் மக்களோடும் இணைந்து ரூபங்களாக இணைவதை வெளிப்படையாக உணரலாம். எனக்குத் தெரிந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத்தான் இந்த மண்ணையும் மக்களையும் குறியீடுகளின் வழி சிலர் வரைவதைப் பார்க்க முடிகிறது. பொதுவாக ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, புறா எனத் தொடர்ந்து வரையும் ஒருவர் அதிலேயே லயித்து அதனையே தனக்கான அடையாளமாகவும் கொள்ளமுடியும். அதையே அவர்களுக்கான உத்தியாகவும் பயன்படுத்திய நபர்களும் உண்டு. எப்படி இங்கு புத்தர் படத்தை வரைந்தால் நாலு காசு கூடுதலாகப் பார்க்கலாம் என்கிற நினைப்புப் பொதுபுத்தியில் இருக்கிறதோ அப்படித்தான். புத்தருடைய தத்துவத்தைத் தெரியாமல் அல்லது புரியாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை. அது வரைவதற்கான பொருள் மட்டும்தான் என்பது அவர்களது எண்ணமாகவும் இருக்கலாம். பௌத்த கருத்துகளை உள்வாங்கிய நபர் புத்தரை வரையாமலும் பௌத்தத்தை ஓவியத்தின் வழி கடத்த முடியும். அப்படித்தான், இந்த மக்களை இந்த மண்ணை நேசிக்கக்கூடிய ஒருவரால் வரையவும் எழுதவும் முடியும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then