ஜெ. கேவின் ஹென்றி, கல்பட்டாவின் சுமித்ரா, என் டொமினிக் – பவா செல்லதுரை

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும்

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ என்ற நாவல்தான் என் வாசிப்பைத் தொடங்கி வைத்தது. அதில் வரும் பாலியல் தொழிலாளியும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் இன்றளவும் என்னோடு பயணிப்பவர்கள். ஒரு சிறு இடைவெளியில் ‘ஒருமனிதன் ஒருவீடு ஒருஉலகம்’ நாவலை வாசித்தேன்.

அதில் வரும் ஹென்றிதான் இன்றைக்கும் என் ஆதர்ச புருஷன், நாயகன். வாழ்வில் ஒருநாளாகினும் நான் ஹென்றியின் மனநிலையோடு வாழ்ந்துவிட வேண்டும் என முயன்றுகொண்டேயிருக்கிறேன்.

அந்த மலைப் பிரதேசத்து வழிபோக்கு லாரியில் ஹென்றி ஏறிக்கொண்டபோதே அவனோடு நானும் ஏறிக்கொண்டேன். அந்த மலைக்கிராமம், அதன் அசலான மனிதர்கள், அவன் சித்தப்பா துரைக்கண்ணு என எல்லோரும் எனக்கும் உறவினர்கள்தான்.

‘துறத்தல்’ என்பதை எந்த சாமியாரிடத்திலும், எந்த அரசியல்வாதியிடத்திலும் நான் சென்றடையவில்லை.

ஹென்றியும் துரைக்கண்ணுவும் மாறி மாறி என் இளமையை அலைக்கழித்தார்கள்.

ஹென்றியை சிருஷ்டித்த ஜெயகாந்தனே அவனது உயரத்தை அடையமுடியாமல், துரைக்கண்ணு போல வாழ்ந்தார் என எனக்குள் அவதானித்துக் கொண்டேன்.
எந்த வார்த்தைகளிலும் அடக்கிவிட முடியாததொரு பேரன்பை ஹென்றி கொண்டிருந்தான். இதை தன் நைனாவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக சொல்லாமல் சொல்வான். சகமனிதர்களிடம் அவன் கொண்டிருந்த பேரன்பை, மற்றவர்களும் அவன் மீது நிபந்தனையற்றுச் செலுத்தினார்கள்.

அவர்கள் எல்லோருமே ஓர் உலகத்தில் சஞ்சரித்தார்கள். எனக்கு எல்லாம் கனவு போல் இருந்தது. நான் சந்தித்த வாழ்வும் மனிதர்களும் வேறுமாதிரி இருந்தார்கள். ஒருவேளை எழுதுவதற்கு உகந்ததாக இருக்குமென்று ஜே.கே. இம்மனிதர்களை தேர்வு செய்து கொண்டாரோ என யோசித்தேன், இல்லை. வண்ணநிலவனின் ‘கடல்புறத்தில்’, ‘கம்பா நதி’ ஆகியவற்றில் கூட தீங்கான ஒரு மனிதனையும் நான் சந்திக்கவில்லை.

வாழ்வதென்பதே அந்தந்த நேரத்து நியாயம்தான் என்று ஜே.கே. என் முன் உட்கார்ந்து, தனக்குப் பிரியமான அந்த சிலுப்பியைப் புகைத்துக்கொண்டு சொல்வது மாதிரியிருந்தது.

தெருவில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த பைத்தியக்காரியை (அ) பிச்சைக்காரியை வீட்டிற்கு அழைத்துவந்து உரையாடி, அவளுக்கும் சமூக மனுஷி என்ற அந்தஸ்த்தைத் தந்த என் ஹென்றியைப் போல் இன்னொரு நாயகன் இந்த ஜீவிதத்தில் இல்லை.

வாழ்வின் எந்த நேரத்திலும் அவன் துருத்திக்கொண்டு வரவேயில்லை; உள்ளடங்கி இருந்தான். இந்த பெருவாழ்வு என்பது இயற்கையின் வரம். அதை ஒருமுறை உனக்குக் கையளித்து வேடிக்கைப் பார்க்கிறது இயற்கை அல்லது கடவுள்.

நீ எத்தனை ஓட்டம் போடுகிறாய்? எத்தனை துரோகத்தை மற்றவர்கள் மீது உமிழ்கிறாய், எத்தனை பகைமை பாராட்டுகிறாய்? பொருளீட்ட, சொத்து சேர்க்க, மனிதர்களை வஞ்சிக்க இந்த குரூர மனநிலைகளை எங்கிருந்து கற்றாய் என ஹென்றி என்னையும் மற்றவர்களையும் பார்த்து வாழ்நாளெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கிறான்.

தன் வாழ்வை காற்றைப் போலவும், வானில் அலைவறும் இறகைப் போலவும் லேசாக்கி வைத்துக்கொண்டு, சுமைகளைச் சுமந்தலையும் எங்களைப் பார்த்து அவன் பரிகசித்துக்கொண்டேயிருந்தான்.

ஹென்றியைப் போலொரு வாழ்வு வாய்க்கவில்லையே என மௌனமாகவும், வாய்விட்டுக் கதறியும் என் நாட்கள் நகர்கின்றன. என்ன செய்வது?

மேன்மையின் தராசுத் தட்டுகளில் ஒருபக்கம் ஹென்றியும், இன்னொருப்பக்கம் துரைக்கண்ணுவும் நிற்கையில், எந்தவொரு கணத்திலும் தட்டுகள் கீழிறங்காமல் மேலேறிக்கொண்டேயிருக்கும் அதிசயத்தை எழுத்தில் கண்டேன்.

இவன் உன் அண்ணன் மகன் என்பதற்கு என்ன ஆதாரம் என பொது புத்திகள் கேள்வியெழுப்பும் போது,

மனிதன் எதில் வேண்டுமானால் பொய் சொல்ல முடியும். தன் பிறப்பைப் பற்றி அப்படி சொல்லவே முடியாது என லாரி ட்ரைவர் துரைக்கண்ணுவும், நான் என் உறவுகளை மட்டும்தான் பார்க்க வந்தேன், நைனாவின் சொத்துகளை அடைய அல்ல என ஹென்றியும்,

அப்படி விட்டுவிடுவோமா என் அண்ணன் மகனே என துரைக்கண்ணு ஹென்றியைத் தன் மனதோடு அணைத்துக்கொள்ளும் இடமெல்லாம் மனிதம் தழைக்குமிடம்.

இதுதான் மானுட தரிசனம் மனிதனின் கசடுகளைக் கழுவித் துடைத்து, அவனைப் பரிசுத்தமாக்கும் வல்லமை இலக்கியத்திற்கே உண்டு என்பதை நான் பரிபூரணமாக உணர்ந்த தருணம்.

ஒவ்வொரு இளைஞனும் ஹென்றியை வாசித்து உள்வாங்கிக்கொண்டு, அவனைப்போல ஒருநாளாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற பேராசை எனக்குண்டு.

சுமித்ரா பேரழகியல்ல. பேரழகிகள் இப்படி பசுமையான காப்பித் தோட்டங்களுக்குள்ளும், மிளகுக்கொடிப் போர்த்திய பச்சையத்திற்கிடையேயும் தேவதைகள் போல் உலாவமாட்டார்கள். அவர்கள் ஏதோ ஒரு அரண்மனையின் அந்தப்புறத்தில் ஏதோ ஒரு அரசனுக்கு ஆசை நாயகியாய் கிடந்து, தன் பேரழகைக் கரைத்து மரணித்துவிடுவார்கள்.

வாசுதேவன் என்பவன் இந்த சிறு காப்பித்தோட்டத்தின் உரிமையாளன். மனைவியின் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் உடையவன். இம்மலைப்பிரதேசத்துப் பழங்குடி பணிச்சியோடு பழங்கலத்திற்கருகே குந்தி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் சுமித்ரா மீது எரிந்து விழாதவன்.

வாழ்வதென்பதே, இக்காப்பித் தோட்டத்திற்குள் கிழக்கு மேற்காக ஓடும் காட்டோடையைப் போல தூய்மையானதும், சில்லிடைவைப்பதும்தான் என வாழ்வை அதன் நீரோட்டத்தில் கலப்பவன்.

இன்று காலை வாசுதேவன் நடைப்பயிற்சிக்குப் புறப்பட்டபோது சுமித்ரா தூங்கிக்கொண்டிருந்தாள்.

அவன் எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை தன் நடைப்பயிற்சியை நீட்டித்தபோது அவள் சப்தமின்றி மரணித்தாள்.

கல்பட்டா நாரயணன் எழுதுகிறார், “வாசு தேவனுடனான உலகத்தில் சுமித்ரா கூடுதலாக இன்னும் ஒருமணி நேரம் வாழ்ந்தாள்”

எத்தனை கவித்துமான வரிகள் இவை.

நடைப்பயிற்சி முடித்து, வாசுதேவன் திரும்பிவரும்போது சுமித்ராவின் உயிரற்ற உடலைப் பார்க்கிறான்.

அவள் உடல் கூடத்தில் கிடத்தப்படுகிறது. அக்காப்பித் தோட்டத்திற்குள் மனிதர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்குகிறார்கள். அவளுடைய பால்யத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள், கூடப்பிறந்தவர்கள், இளமையில் பழகியவர்கள், உறவினர்கள் இப்படி ஒவ்வொருவர் வருகையினாலும் நிறைந்தது மரணம்.

மனிதர்களற்ற நாட்கள் ஒன்றுகூட அவளுக்கு இல்லை. பாலின வேறுபாடற்ற தாசனின் கைப்புதைத்து சர்க்கஸ் பார்த்த அருமையான ஞாபகங்கள் உண்டு அவளுக்கு.
கல்பட்டா நாராயணன் அவளை எங்குமே நாயகியாக்கிவிடவில்லை, நம் வீட்டு மனுஷியாகவே வைத்திருக்கிறார். அவர்களுக்குரிய எல்லாமும் சுமிர்த்தராவுக்கும் உண்டு

எல்லாமும் எனில்?

தூரத்தில் மரம் வெட்டும், வாள் அறுக்கும் சத்தம் கேட்டு காமமுறும் சுமித்ரா, அந்த வாளருப்பவனின் புஜங்கள் சீராக ஒரு தாள லயத்திற்கு ஏறி இறங்குவதை பெரும் ஏக்கத்தோடு பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்வது என்பது இக்கதையில் வரும் அபூர்வமானதொரு தருணம். மூத்த எழுத்தாளர்களையே ஏமாற்றிவிடும் இக்கணங்கள் சுமித்ராக்களுக்கு உண்டு.

கல்பட்டா இதை எழுதின நாட்கள், மனதளவில் சுமித்ராகவே வாழ்ந்த நாட்களாக இருந்திருக்க வேண்டும்.

கூடத்தில் கிடத்தப்பட்டிருக்கும் சுமித்ரா அங்கிருந்த ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்திருக்கிறாள்.

ஸ்நேகிதியாக, தோழியாக, அம்மாவாக, மனைவியாக, பணிச்சியின் முதுலாளியம்மாவாக.., இப்படி அவளுடைய நாட்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக பாத்திரங்கள் கொண்டுவரும் ‘பொதுவாள்’ அன்றும் அப்படித்தான் அவள் விரும்பிக் கேட்ட உருளியைக் கொண்டு வருகிறான்.

சுமித்ரா மீது பெரும் மரியாதையும், பற்றுமுள்ளவன் இந்த பொதுவாள்.

அவன் குரலெழுந்த திசைகளில் அவளில்லை. ஒருக்களித்துக் காத்திருக்கும் அந்த ஒற்றைக் கதவைத் தள்ளிப் பார்க்கிறான்.

உள்ளறையில் சுமித்ரா சிறுமுனகலோடு படுத்திருக்கிறாள், காய்ச்சல் கண்டவர்களின் முனகலது.

பொதுவாள் வீட்டின் பக்கவாட்டிலிருந்து பச்சைமிளகாயின் இலைகள் நான்கினைப் பறித்து மைய அரைத்து அவள் நெற்றில் பத்துப் போடுகிறான்.

அக்கணம் சுமித்ராவுக்கு வேறெதுவோ ஒன்று தேவைப்படுகிறது. பொதுவாளின் கைகளைப் பற்றி மெல்ல முத்தமிடுகிறாள்.

அவளது கைகளை லேசாக விலக்கி வைத்துவிட்டு, தாழ்வாரத்திற்கு வந்த பொதுவாள், தன் செருப்புகளை எரவானத்தில் செருகி வைத்துவிட்டு, சுமித்ராவை அடைகிறான். அத்தருணம் ஒரு காவியம்.

அவள் உயிறற்ற உடலின் முன் நின்று பொதுவாள் கசிகிறான். அதற்கு முன்னும், பின்னும் அப்படியான தருணங்களை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேயில்லை.

காவியங்கள் எப்போதாவதுதான் உருவாகும். அமைதியான, சொற்கள் அதிகம் தேவைப்படாத வாசுதேவனின் உலகத்தில் சுமித்ரா, தேவதை மாதிரியான பொக்கிஷம்.

பொக்கிஷங்களைக் காப்பாற்றிக்கொள்ள வாசுதேவனுக்குத் தெரியும். காலம்தான் அதைத் தனக்கு வேண்டுமெனப் பறித்துக்கொள்கிறது.

எத்தனை பெரும் வாழ்வை வாழ்ந்துவிட்டு, இப்படி ஏதுமற்றவள்போல் கூடத்திற்கு வந்து கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, சுமித்ரா இந்த மனிதர்களை அலைகழிக்கிறாள். மனிதப்பிரியமுற்றவர்கள் எல்லோருமே சக மனிதர்களை இப்படி கலங்கடிப்பார்கள்தான்.

இதை எழுதும் கைகள் ஒரு ஆணினுடையது என்பது கரைந்து, நான் சுமித்ராவாக உருமாறிவிட முடியுமா என ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.

ஒருபோதும் அது நிகழாது.

எல்லோருக்கும் பிரியமானவளாக, தன்னுள் ஊற்றுமாதிரி பெருக்கெடுக்கும் பேரன்பை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பவளாக, பொதுவாளுடனான சில நிமிடங்களை வாசுதேவனுக்குச் செய்யும் துரோகம் என ஒருதுளியும் நினைக்காதவளாக, சர்க்கஸ் பார்க்கும் துள்ளலில் தாசனின் கைகளில் தன் கையைப் புதைத்துக் கொள்பவளாக, பலபேரிடம் உறவுவைத்திருக்கும் பெண்ணொருத்தியிடம் அத்தனைப் பிரியம் மீதுற பழகுபவனாக ஒரு ஆண் ஒருபோதும் மாறிவிடவே முடியாது.

வயநாட்டில் காய்த்து கனிந்து உதிரும் கொய்யாப் பழங்கள் வயநாட்டின் குளிரைத் தன் கனிகளுக்குள் ஒளித்துவைத்திருக்கும் என கல்பட்டா என்ற கவிஞன் இந்நாவலில் எழுதுகிறான்.

சுமித்ரா என்ற முப்பத்தெட்டு வயதேயான பெண்ணுக்குள் அவன் என்னை முழுமையாக ஒளித்து வைத்திருப்பதை ஒருகட்டத்தில் புரிந்துகொண்டேன். இவளை வாசிக்கிற ஒவ்வொரும் அதை உணரமுடியும், ஆனால் அது அத்தனை சுலபமில்லை.

டொமினிக்

ஒருவகையில் ஹென்றியின் தொடர்ச்சிதான் என் டொமினிக். ஹென்றியைப் போல இன்னொரு மனிதனை அடைவதற்கு எனக்கு ஐம்பதாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதுவரை அப்படி ஒரு மனிதன் இம் மானுட சங்கமத்தில் என் கண்களுக்குத் தெரியவேயில்லை.

இருவருக்குமே பொதுவானது துறத்தல். முக்கியமான பொருளென முக்கியப்படுத்தப்படும் ஒன்றை முற்றிலும் மனதாலும் துறந்துவிடுவது.

நெல்மணிகள் முற்றி பொன்னிறமாக ஒளிர்ந்த வெயிலேறிய பின் காலையில் வயலுக்கு நடுவே அவனைக் கண்டடைந்தேன்.

வண்ணப் புடவைகளின் ஒரு முனையோடு வரப்புகளில் படுத்திருக்கும் இருளக் குழந்தைகளின் மறுமுனையில் அவனிருந்தான்.

அருகிலிருந்து அவதானித்தபோது, அவன் கொஞ்சம் பெண்மையுற்றிருந்தான். நாட்டியமாடுபவர்களின் நடையே நளினமாகிவிடுவதில்லையா? அப்படி. 
ஒருவகையில் டொமினிக் நாட்டியக்காரன்தான். தன் இளமையை மீண்டும் குழந்தைமைக்குத் திருப்ப நினைக்கும் கலைஞன்.

வாய்க்காலில் பாய்ந்துவரும் நீரை, மடை உடைய உடைய மாற்றிவிடும் விவசாயியின் அருகாமையைத் தரிசித்திருப்பவர்களுக்குத் தெரியும், அது எத்தனைப் பெரிய மல்லுக்கட்டு என்பது.

நீரின் பிரவாசகம் நாகத்தின் சீற்றத்திற்கு ஒப்பானது.

டொமினிக்கும் அப்படித்தான் தன் இளைமையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். இப்பெரும் மனித சஞ்சாரத்தில் டொமினிக் மாதிரி அபூர்வமான கலைஞனை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம்.

டொமினிக்குகள் ‘என்னை மையப்படுத்து, என்னை கவனப்படுத்து’ என்ற கோரிக்கையை இம்மானுடத்தை நோக்கி ஒருபோதும் வைப்பதில்லை.

அவர்கள் கடப்பவர்கள், எல்லாவற்றையும் மனதாலும் உடலாலும் கடந்துப் போகும் யாத்திரிகள்.

யாரோ சிலருக்குத்தான் அவர்கள் தேவைப்படுவார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். எதற்கும் லாயக்கற்றவர்கள்.

முப்பது வயதில் பத்து வயதுப் பையனோடு புடவைப் பிடித்து விளையாடிக்கொண்டிருப்பவள் எப்படி லௌகீகத்திற்கு லாயக்காகிவிட முடியும்?

அப்படி எதற்கும் லாயக்கற்ற ஒருவன்தான் கலைஞன். தன்னிடமுள்ள சிறு சொத்தை அபகரிக்கத்தான் ராணியும் அவள் புருஷனும் சேர்ந்து குரூர நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்பதை அறிந்த கணத்தில், அதை முற்றிலும் தன்னிடமிருந்து துறக்க நினைக்கும் மனம் எவருக்கும் வாய்க்கப் பெறாது.

சற்றுமுன் பலங்கொண்ட கால்களால் எட்டி உதைத்த ராணியின் கணவனிடம், எலுமிச்சை பழச்சாறு நிரம்பிய கண்ணாடித் தம்ளரை நீட்டுகிறான்.

ஒருநிமிடம் நம் மனநிலையை மதிப்பிடுவோம், இப்படி முடியுமா நம்மால்?

பெருங்கருணை கொண்ட மனம் மட்டுமே நிகழ்த்தக்கூடிய அற்புதம் அது.

இம்மனது கொண்ட நம் பால்யத்தைத்தான், ஏற்கனவே கறைபட்டு, கரடுத்தட்டிப் போயிருக்கிற நம் அப்பா அம்மாக்கள், உறவினர்கள், நண்பகள், கல்வி, சமூகம் என எல்லோரும் சேர்ந்து சுத்தமாக அழித்துவிடுகிறார்கள். நாமும் அவர்களைப் போலாகி விடுகிறோம்.

இதிலிருந்து தப்பித்தவன் டொமினிக். சொல்லித்தர அப்பா – அம்மா அற்றவன். யாருக்குப் பிறந்தோம் என ஞாபகமற்றவன். கல்வியைத் தேடி வகுப்பறைகளுக்குப் போகாதவன். வாழ்விற்கான இலக்கணத்தை மனிதர்களிடமிருந்தும் வறுமையிடமிருந்தும் பெற்றுக்கொண்டவன்.

மனித நேசிப்பின் கசிவைத் தன் உடலுக்குள் ஏற்றி வைத்திருப்பவன். எந்த லௌகீக வசதிகளையும் அனுமதிக்காதவன். ‘அப்பாலேப் போ சாத்தானே’ என உதறத் தெறிந்தவன்.

ஹென்றி இதன் அமைதியான வடிவம். டொமினிக் கொஞ்சம் இசையோடு சப்தம் எழுப்புபவன். குழந்தைகளின் ஆராவாரங்களோடு வயல்வெளிகளில் ரயில் வண்டி ஓட்டுபவன்.

நாம் ஒரு ஹென்றியாக, ஒரு சுமித்ராவாக, ஒரு டொமினிக்காக வாழவே முடியாது. யாரேனும் சிலர் முயன்று அவர்களை வந்தடையவாவது செய்யுங்கள், அது போதும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!