தனி நபர் ஒருவருக்கு மதம் என்பது குறிப்பிட்ட நம்பிக்கையை ஏற்று, அதைத் தமது வாழ்நாள் முழுக்கப் பின்பற்றத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நம்பிக்கை சார்ந்த தேர்வு. அப்படி மதம் மாறுவதால் இந்தியச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதியப் பாகுபாடும், அதன் காரணமாக உருவாகியுள்ள சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையும் உடனடியாக மறைந்துவிடும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. இந்தியச் சமூகத்தின் யதார்த்தம் இதுதான். இதைப் புரிந்துகொள்ளாமல், இடஒதுக்கீடு தொடர்பான சட்டங்களையும் சமூகநீதிக் கொள்கைகளையும் அணுகுவது சமூகநீதியின் அடிப்படைகளுக்கே முரணானது.
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்துவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்.பரமசிவம் என்பவர் 2015-ஆம் ஆண்டில் முஸ்லிம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அவரது இம்மதமாற்றம் கயத்தார் சுன்னத் ஜமத்தாரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும், அவரது இம்மதமாற்றம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அவர் தனக்கு முஸ்லிம்-லெப்பை பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழ் கோரி, 2020-ஆம் ஆண்டு மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தார். அவரது இவ்விண்ணப்பம் மாவட்ட அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. அதனை எதிர்த்தும், தனக்கு முஸ்லிம்-லெப்பை பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2022-ஆம் ஆண்டு சமீர் அகமது வழக்குத் தொடுத்தார்.
இதனிடையே தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், அட்டவணைச் சாதிகளைச் சேர்ந்தோர் முஸ்லிம் மதத்திற்கு மாறுகையில், அம்மதத்திலுள்ள ஏழு பிரிவுகளில் ஒன்றின் கீழ் – அன்சார், டெக்கானி, துபேகுலா, லெப்பை, மாப்பிள்ளா, ஷேக், சையது ஆகிய ஏழு பிரிவுகள் – பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை மார்ச் 9, 2024 அன்று வெளியிட்டது.
மேற்கண்ட வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையின் அடிப்படையில் தனக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார் சமீர் அகமது.
“முன்னேறிய சாதியைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவருக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்து கிடைக்காது. ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற்று வந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறுவதால் அந்தப் பலனை இழக்க மாட்டார்கள். இதன் காரணமாக சமூகச் சமநிலை பாதிக்கப்படாது” என்று இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் – பி.பி.பாலாஜி அமர்வு “ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியவுடன் அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிப் பிரிவினைகள் கிடையாது என்பதால், மதம் மாறுவதற்கு முந்தைய சாதி அந்தஸ்தை அப்படியே மாற்று மதத்திற்குள் கொண்டு சென்று, குறிப்பிட்ட முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் சான்றிதழோ அல்லது இடஒதுக்கீடோ கோர முடியாது” என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு, அந்த மனுவை நிராகரித்ததோடு, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையையும் அரசியல் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி ரத்து செய்துவிட்டது.
‘ஓர் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவர் வெறும் முஸ்லிமாக (just a Mussalman) மட்டுமே கருதப்படுகிறார். மதம் மாறுவதற்கு முன்பு அவர் சார்ந்திருந்த சாதி, இஸ்லாம் சமூகத்தில் அவரது இடத்தைத் தீர்மானிப்பதில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் 1951-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பையும் தமது உத்தரவில் இரண்டு நீதிபதிகள் அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது.
“பிறப்பால் சாதி தீர்மானிக்கப்படுவதைப் போல, ஒரு நபர் பிறப்பால் ராவுத்தர், மரைக்காயர், தெக்கானி முஸ்லிம் என அறியப்படுகிறார். பிறப்பால் முஸ்லிமாக அல்லாத ஒருவர் மதம் மாறியதால், அவரை ‘ராவுத்தர் முஸ்லிம்’ ஆக மாற்ற முடியும் என்று கூறுவது அபத்தமானது” என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், “மதம் மாறுவது என்பது ஒரு சமூக அமைப்பிலிருந்து முற்றிலும் வேறொரு சமூக அமைப்பிற்கு மாறுவதாகும்; எனவே, முந்தைய சமூகப் பின்தங்கிய நிலையைப் புதிய மதப் பிரிவுக்குள் தானாகவே கடத்திவிட முடியாது’’ எனக் குறிப்பிட்டு, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.
இவ்விரண்டு தீர்ப்புகளும் இந்தியர்களின் மதம் மாறும் உரிமையை மறுக்கவில்லை. மேலும், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மதத்தினருக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையையும் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக, முஸ்லிமாகப் பிறந்த ஒருவர் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியும். பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், அட்டவணைச் சாதிகளைச் சேர்ந்தோர் முஸ்லிம் அல்லது கிறித்தவ மதத்ததிற்கு மாறும்போது, தமது பழைய சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அனுபவித்து வந்த இடஒதுக்கீடு உரிமைகளைக் கோர முடியாது என்பதுதான் இவ்விரண்டு தீர்ப்புகளின் சாரமாகும்.
ஒதுக்கீட்டுப் பிரிவு சாதிகளிலிருந்து சீக்கிய, பௌத்த மதத்துக்கு மாறியவர்கள், தமது பழைய சமூக அந்தஸ்தின் கீழ், தாம் அனுபவித்த வந்த இடஒதுக்கீட்டு உரிமைகளை இம்மதங்களுக்கு மாறிய பிறகும் கோர முடியும் எனும்போது, முஸ்லிம் – கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் அவ்விதமான இடஒதுக்கீட்டு உரிமைகளைக் கோர முடியாது என்பதே முரண்பாடான ஒன்றாகும். இங்குதான் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இந்துத்துவப் பார்வை வெளிப்பட்டிருக்கிறது.
இவ்விரண்டு தீர்ப்புகளும் இடஒதுக்கீடு, மத மாற்றம், சாதி, சமூகநீதி தொடர்புடைய பல அடிப்படையான கேள்விகளை நம் முன் எழுப்பியுள்ளன. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ மதம் மாறுவதாலேயே அவர்களுடைய சமூக நிலை மாறாது என்பதற்கு ஏற்ப, மதம் மாறிய பிறகும் அவர்களுக்கான பட்டியலின, பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் முக்கியமானவை. அதே வேளையில் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கேற்ப, சில முக்கிய இடையீடுகள் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் நடைமுறை வெவ்வேறானது. அப்படியிருக்கும்போது, இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறுகிற பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய, அவர்களை ஒரே வகைமைக்குள் அடைக்காமல், தனித்தனியான அணுகுமுறையோடு புதிய வகைப்பாட்டை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
அரசியலமைப்பின் 15(4) மற்றும் 16(4) உள்ளிட்ட பிரிவுகள், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், அரசுப் பணிகளில் அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அனுமதிக்கிறது. தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புகளும் மதம் மாறுகிற காரணத்தினாலேயே அவர்களின் சமூக இழிவு நீங்கியதாக எங்கும் குறிப்பிடவில்லை.
இந்தப் புரிதலிலிருந்து, சட்டப்படி இதை எதிர்கொண்டு இதற்கொரு நிரந்தர தீர்வை எட்டிட, நிபுணர் குழுவை அமைத்துச் சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்தும், குறிப்பாகப் பட்டியலின சமூகத்திலிருந்தும் மதம் மாறுகிறவர்களின் சமூக நிலை தலைகீழ் மாற்றம் பெறுவதில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக நிறுவ வேண்டியிருக்கிறது. இந்து மதம் அல்லாத பிற மதங்கள் தங்கள் மதத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து சாதி நீக்கப்பட்டிருக்கிறது என்று கூறினாலும் நடைமுறை வேறாக இருக்கிறது. மதம் மாறிய பிறகும் நிலைத்திருக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அவை நீதிமன்ற கவனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு எப்போதுமே சிறுபான்மையினருக்கான சமூகநீதிக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மாநிலம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனடிப்படையிலிருந்து மதம் மாறுகிறவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்கிற நோக்கத்தை மட்டுமே பிரதானப்படுத்தி, இக்கோரிக்கைகளுக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்லர் என்பதை மட்டுமே பிரகடனப்படுத்தி கடந்து போகாமல், தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு வெறுமனே அரசின் முந்தைய அரசாணையை நியாயப்படுத்தும் நோக்கத்துடன் மட்டும் அமையாமல், அறிவியல் பூர்வமான சமூக ஆய்வுகள், விரிவான தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மதம் மாறியவர்களின் சமூகப் பின்தங்கிய நிலையை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். நீதிமன்றத்தின் முன் உரிய ஆய்வு முடிவுகளையும், சமூக யதார்த்தத்தையும் முன்வைத்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையான சமூகநீதிக் கோட்பாட்டைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.


