தமிழ் மக்களின் கலைப் பண்பாடு என்பது தென்தமிழகத்தின் வாழ்க்கை முறை, சொல்லாடல்கள், நிலப்பரப்பு, உணர்வுகள் ஆகியவற்றிலிருந்தே உருவானது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தைத் தமிழ் சினிமா நீண்டகாலமாக உருவாக்கி வைத்திருந்தது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட நிலத்தின் மொழியும் வாழ்வியலும் முன்னிறுத்தப்பட்டபோது, சென்னையையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் சேர்ந்த எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் மொழி, இசை, கொண்டாட்டங்கள் ஆகியவை தமிழ் சினிமாவின் வரைபடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. அந்த எல்லைக்கோடுகளை அழித்து, தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளத்தை விரிவுபடுத்தியவர்களில் முக்கியமானவர் தேனிசைத் தென்றல் தேவா.
நாட்டுப்புற இசையின் ஆன்மாவைத் திரையிசைக்குள் கொண்டுவந்து, அதற்குப் புதிய இசைமொழியை வழங்கியவர் இளையராஜா என்றால், சென்னை மாநகரின் தெருக்களில் ஒலித்த கானா இசையைத் தமிழ் சினிமாவின் மையத்திற்கு அழைத்துவந்து, ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் தேவா. அவர் செய்தது, ஓர் இசை வடிவத்தைத் திரையிசையில் பயன்படுத்தியது மட்டுமல்ல; அதுவரை திரையிசையின் அழகியலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மக்களின் இசையை, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இரசிக்கக்கூடிய கலையாக மாற்றியமைத்ததும் தான்.
கானா என்பது வெறுமனே ஒரு பாடல் வகையல்ல. அது வடசென்னையின் வாழ்க்கையிலிருந்து பிறந்த குரல். அன்றாட உழைப்பு, காதல், பிரிவு, வறுமை, கொண்டாட்டம், கிண்டல், துயரம் என வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் தன்னுடைய மொழியில் பதிவுசெய்த மக்களின் வெளிப்பாடு. இலக்கியத் தமிழின் செம்மை அதன் முதன்மையான நோக்கமல்ல; வாழ்வின் நேர்மையும் அனுபவத்தின் ஆழமுமே அதன் பலம். அந்த மக்களின் புழங்கு வார்த்தைகளையும், பெயர்களையும், உணவு முறையையும், வாழ்வியல் சித்திரங்களையும் தேவா திரையிசைக்குள் கொண்டுவந்தபோது, தமிழ் சினிமா இசையின் அழகியல் குறித்து அதுவரை இருந்துவந்த வரையறைகளே மாறத் தொடங்கின.
அவரது பாடல்களில் சென்னை என்பது வெறும் கதைக்களம் அல்ல; அது தனித்துவமான வாழ்வியல் உலகம். அதன் மனிதர்கள் பேசும் மொழி, அவர்கள் வெளிப்படுத்தும் காதல், அவர்களுடைய கொண்டாட்டங்கள், அவர்களுக்கே உரிய நகைச்சுவை என எல்லாவற்றுக்கும் இசையில் இடம் கிடைத்தது. பால்காரர்களையும் ஆட்டோக்காரர்களையும் பாடவைத்தார் தேவா. அவர்களுடைய உலகத்தைப் பாடல்களின் வழியாகத் திரைக்கு அழைத்து வந்தார். கொத்தவால்சாவடியையும் கோயம்பேட்டையும் தனது பாடல்களின் வழியாகத் தமிழ் மக்களின் பொதுவான நினைவில் இடம்பெறச் செய்தார்.
சென்னையின் திரையரங்குகளின் பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பாடலில் இடம்பெறச் செய்த அவரது முயற்சியை இன்று திரும்பிப் பார்க்கும்போது, அது ஒரு காலத்தின் நகர வரைபடமாகவே தெரிகிறது. தொண்ணூறுகளின் சென்னை மக்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ள முயலும் ஒருவருக்கு தேவாவின் பாடல்கள் ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்வேன். இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக அவரது பாடல்களைக் கேட்டபோது, காலத்தால் அழிந்துபோன அல்லது அடையாளம் மாறிப்போன இடங்களைக்கூட இசையின் வழியாக நினைவில் மீட்டெடுக்கமுடியும் என்பது புரிந்தது.
பாடல்களைக் கேட்கையில் இன்னொரு சுவாரசியமான அம்சமும் எனக்குப்பட்டது. அது தேவாவின் பாடல்களில் கடவுள்கள் தொழிற்படும் விதம். அது அத்தனை இயல்பானது. பக்தியும் காதலும் அவருடைய பாடல்களில் ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளாக இருப்பதில்லை. மாறாக, காதலின் மொழிக்குள் கடவுள்களும் கோயில்களும் அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாக வந்து அமர்ந்துவிடுகின்றன. தேவாவின் பாடல்களில் காதலையும் கடவுளையும் இணைத்து ஒரு தனிப்பிரிவையே உருவாக்கலாம். காதலையும் பக்தியையும் இணைத்து ஏற்கெனவே தமிழ் பக்தி மரபு பேசியிருக்கிறது. குறிப்பாக ஆண்டாள், நம்மாவாழ்வார், மாணிக்கவாசகர் உள்ளிட்டோரின் பாடல்களைக் குறிப்பிடலாம். இதே போன்றதொரு இணைவு சிறுதெய்வ வழிபாட்டு மரபில் இருப்பதையும் நம்மால் அறியமுடிகிறது. தெய்வம் என்பது புறநிலையாக இல்லாமல், அன்றாடத்தின் அங்கமாக உழைக்கும் மக்களிடம் தொழிற்பட்டுவந்திருப்பதை ஆய்வாளர்கள் கவனப்படுத்தியுள்ளனர். இந்த இணைவை தான் இசையமைத்த பாடல்களில் தேவா பயன்படுத்துகிறார். மேலும், கானா பாடல்கள் ஆரம்பகாலத்தில் இறப்புச் சடங்குகளோடு நெருக்கமாகத் தொடர்புடையவையாக இருந்தன. இறந்தவரின் நினைவைப் பகிர்தல், அவரது வாழ்க்கையை எடுத்துரைத்தல், உறவினர்களின் துயரத்தை வெளிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் இவை பங்கேற்றன. மரணம் நிகழும்போது மனிதனின் ஆற்றலும் சமூக அதிகாரமும் ஒரு வரம்பைச் சந்திக்கின்றன. பணம், புகழ், உடல் வலிமை, பதவி ஆகியவற்றால் மரணத்தைத் தடுக்க முடியாது. இந்தச் சூழலில் தெய்வம், எமன், விதி போன்ற கருத்துருக்கள் மனித வாழ்க்கையின் நிலையாமையை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் குறியீடுகளாக அமைகின்றன. ஆக, கானாவில் கடவுள் என்பது ஒரு பாடுபொருளில் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. அதை தன்னுடைய திரையிசைப் பாடலுக்குள் வேறுவகைமைக்குள் கைமாற்றுகிறார் தேவா. எடுத்துக்காட்டாக,
“ஆண்டாளுக்கு பெருமாள் துணை, பார்வதிக்கு சிவன்தான் துணை, அந்த வள்ளிக்கு முருகன் துணை, நம்ம அண்ணனுக்கு யார் துணை” என்கிற ஆலாபனையுடன் “மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி” பாடல் துவங்கும்.
“கந்தன் இருக்குமிடம் கந்தக் கோட்டம், என் காதலி இருக்குமிடம் பார்டர் தோட்டம்” என்று காதலின் நிலவியலில் கோயிலையும் காதலியையும் ஒரே வரியில் இணைக்கிறார்.
“குன்றத்துல கோயிலைக் கட்டி கும்மாளமாக் கும்மியடிச்சு” என்ற வரியில் பக்தி என்பது தனிமனிதனின் மௌனமான வேண்டுதலாக இல்லாமல், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகிறது.
“காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேடு காத்தடிக்குது” என்று தொடங்கும் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தெய்வீகமான ஆலாபனையைக் கவனித்துப் பாருங்கள். அந்த இசை, கானாவின் தெருமொழிக்கும் பக்தியின் இசைமரபுக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
“திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, இவன் காதலுக்கு பச்சக்கொடி காட்டு லேசா” என்று காதலுக்காகக் கடவுளிடம் பரிந்துரை செய்யும் தருணத்திலும், “கவலைப்படாதே சகோதரா, எங்கம்மா கருமாரி காத்து நிப்பா, காதலைத்தான் சேர்த்து வைப்பா” என்று தெய்வத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் தருணத்திலும், கடவுள் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்ட ஓர் உயர்ந்த பீடத்தில் இருப்பதில்லை. அவர்களுடைய காதலிலும் கவலையிலும் நம்பிக்கையிலும் கலந்திருக்கிறார்.
தேவாவின் பாடல்களில் பக்தி என்பது வாழ்க்கைக்கு வெளியே நிகழும் சடங்கல்ல; வாழ்க்கைக்குள்ளேயே இயல்பாகப் புழங்கும் ஓர் உணர்வு. இப்படி உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான பல பாடல்களை பொன்னியின் செல்வன், தேவா, அவரின் சகோதரர் சபேஷ் உள்ளிட்டோர் எழுதியுள்ளார். கானப்பாடல்களில் கடவுள் – காதல் என்கிற இந்த ஓர்மை உருவாக தேவாவின் ஆளுமையே காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.
அதே நேரத்தில், தேவா என்றால் கானா என்ற உலகத்திற்குள் மட்டுமே அவரைச் சுருக்கிவிடுவதும் அவருக்கான சரியான அடையாளமாக இருக்காது. அவருடைய மெலடிகளைக் கேட்டாலே அது புரியும். காதலின் மென்மையையும் பிரிவின் வலியையும் ஏக்கத்தின் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் அவரது மெல்லிசைப் பாடல்கள், அவருக்குள் இயங்கிய இன்னோர் இசையமைப்பாளரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஒரு பக்கம் தெருக்களின் தாளத்தையும் கொண்டாட்டத்தையும் தன்னுடைய இசைக்குள் கொண்டுவந்தவர்; இன்னொரு பக்கம் காதலின் அந்தரங்கமான உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுத்தவர். கானாவுக்கும் மெலடிக்கும் இடையில் பயணிக்க முடிந்த அவரது இசை ஆளுமையை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் அடைத்துவிட முடியாது. தேவா ஒரு பன்முகக் கலைஞர். காலம் அவரை ஒரு வகைமைக்குள் சுருக்காமல், அவரது இசையின் பல்வேறு முகங்களையும் நினைவுகூர வேண்டும்.
தேவாவின் பங்களிப்பை அவரது வெற்றிப்பாடல்களின் எண்ணிக்கையைக் கொண்டோ, அவர் இசையமைத்த திரைப்படங்களின் பட்டியலைக் கொண்டோ மட்டும் மதிப்பிட முடியாது. தமிழ் இசையின் மையத்தில் இதுவரை போதிய இடம்பெறாத ஒரு நகரத்தின் குரலையும் அதன் மனிதர்களின் வாழ்க்கையையும் அவர் கொண்டுவந்து நிறுத்தியதுதான் அவரது வரலாற்றுப் பங்களிப்பின் முக்கியமான அம்சம்.
தமிழ் சினிமாவின் இசை அரங்கம் சில குறிப்பிட்ட குரல்களுக்காக மட்டுமே திறந்திருந்த காலத்தில், அந்த அரங்கின் வாசலில் நின்று, ‘சலோமியாவை’ உச்ச ஸ்தாயியில் பாடியபடி உள்ளே நுழைந்தார் தேவா. அந்த நுழைவு ஒரு தனி இசையமைப்பாளரின் வெற்றியாக மட்டும் நின்றுவிடவில்லை. அது ஒரு நகரத்தின், அதன் எளிய மக்களின், அவர்களுடைய மொழியின், அவர்களுடைய இசையின் உரிமையை அறிவித்த நிகழ்வாக மாறியது.
ஒரு வகையில், தேவா வரலாற்றை வழிமறித்தவர். தமிழ் இசை வரலாறு எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததோ, அந்தப் பாதையில் குறுக்கிட்டு, இதுவரை கேட்கப்படாத ஒரு மக்களின் குரலைக் கேட்கச் செய்தவர். அவர் நமக்குக் கொடுத்தது பாடல்களை மட்டுமல்ல; தமிழ் இசை என்பதன் எல்லையை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும்தான்.
போய்வாருங்கள், தேவா.
உங்கள் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, அந்த மக்களின் குரலும் அவர்களுடைய வாழ்க்கையும் தமிழ் இசை வரலாற்றிலிருந்து ஒருபோதும் வெளியேற்றப்பட முடியாது.
prabha.prabakaran@gmail.com




