நவீனத் தமிழ்ச் சிறுகதைகளின் களமும் மொழியும்

ஞா.குருசாமி

புனைவெழுத்துகளின் வரலாற்றில் சிறுகதை காலந்தோறும் நுவல்பொருள், ஒழுங்கு சார்ந்து சந்தித்திருக்கும் மாற்றங்கள் அதிகம். அவை வெறுமனே தன்னெழுச்சியான உருவ, உள்ளடக்க மாற்றங்களாக இல்லை. சமூகத்தினுடைய புறவயங்களின் தாக்கங்களால் உருவானவை. அந்த வகையில் தமிழ்ச் சிறுகதையில் களம், மொழி சார்ந்து காலந்தோறும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இனங்கண்டுகொள்ள அவற்றை மரபான கதைகள், மரபுக்கும் நவீனத்துக்கும் இடைப்பட்டவை, நவீனமானவை, பிந்தை நவீனமானவை, நுண்கதைகள், இன்ஸ்டா கதைகள் என்பதாக நிரல்படுத்திக் கொள்ளலாம். நவீனச் சிறுகதைகளின் களமும் மொழியும் குறித்து மட்டுமே பேசுவதாக இருக்கும் இவ்வாக்கத்தில், அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள முன்பின் நிரல் விஷயங்களும் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படும்.

மரபான கதைகள்

நாட்டின் விடுதலைக்கு முந்தைய கதையாளர்கள் பலரின் பார்வைகள் அனைவருக்குமானதாக இல்லை. பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் திரட்டுவது முதன்மையான வேலைத்திட்டமாக இருந்த காரணத்தினால், அதற்குக் குந்தகம் வந்துவிடும் எனக் கருதிய அவர்கள், சாதி, மத வேறுபாடுகள், அதனால் உருவாகியிருந்த சிக்கல்களை எழுதவில்லை. ‘விடுதலை’தான் அவர்களின் நோக்கமாக இருந்ததே தவிர, ‘வேறுபாடுகள் நீங்கிய விடுதலை’ நோக்கமாக இருக்கவில்லை. எதை /  யாரைப் பற்றி  எழுதுவது என்பதைவிட, எதை / யாரைப் பற்றி எழுதக்கூடாது என்பதில் அவர்களுக்குக் கட்டுத்திட்டம் இருந்தது. வேற்றுமையை மறைத்து ஒற்றுமையை எழுதுவதை விரும்பினர். தெரியாத ஒன்றைக் கதையாக்கக் கூடாது என்ற அவர்களின் எண்ணப்போக்கு, அவர்களுக்குத் தெரிந்ததை மட்டுமே எழுதுவதற்கு அவர்களை அனுமதித்தது. உண்மையில் அவர்கள் எழுதாதது ‘தெரியாத’ ஒன்றல்ல, ‘விரும்பாத’ ஒன்று. அதேநேரம், நிகழ்வுகளை ரசவயமாகத் தொகுத்து விவரிப்பதே கதை என்பதான நம்பிக்கையும் அவர்களிடையே நிலவியது. அதை ‘விநோதரச மஞ்சரி’யில் புலவர்கள் வாழ்வில் நடந்ததாக எழுதப்பட்ட நிகழ்வின் கோர்வைகள் உறுதிப்படுத்தும். ஏறக்குறைய 1950கள் வரை அதுதான் நிலைமை. அதனாலேயே அக்காலத்திய வீராசாமி, அம்மணி அம்மாள், செல்வக்கேசவர், ராஜாஜி, விசாலாட்சி அம்மாள், வ.வே.சு., சுப்பிரமணிய பாரதியார், வ.ராமசாமி, கா.சி.வேங்கடரமணி, கல்கி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, மௌனி, க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஆர்.சூடாமணி முதலியோரின் கதைகளில் மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, வாசகர் கதையைத் தாண்டி யோசிப்பதற்கான வெளி இல்லை. அவர்கள் பேசிய முற்போக்கும் அவர்களது பழமைவாதத்தின் அடிப்படைக்கு இணங்கியதாகவே இருந்தது. இவர்களின் களத்தையும் மொழியையும் விமர்சித்து மாற்றுக் களத்தையும் மொழியையும் முன்வைக்கும் கதைகளைப் பிராமணர் அல்லாதவர்கள் எழுதினர்.

சி.பி.சிற்றரசு, சி.என்.அண்ணாதுரை, ஏ.கே.வேலன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு முதலானோர் வைதீக எதிர்ப்பு, சமூகச் சீர்திருத்தம், திராவிடர் உரிமை ஆகியவற்றை மையப்படுத்தி எழுதினாலும், அவையும் நிகழ்வுகளின் கோர்வையாகவே இருந்தன. சான்றாக, அண்ணாவின் ‘சொல்வதை எழுதேண்டா’, ‘பூபதியின் ஒருநாள் அலுவல்’ முதலிய கதைகளைச் சொல்லலாம்.  பாரதியாரின் ‘கதைக் கொத்து’ வெளியான (1913) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்தே நவீனம் தொடங்கிவிட்டதாகச் சொன்னாலும், முழுமையான நவீனச் சாயல்கொண்ட கதைகள் 1930களில்தான் வெளிவரத் தொடங்கின. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முன்பை விட வேகமாக கதைகளின் களம், மொழியில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னாலும் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் இருந்தது. அவற்றைப் புரிந்துகொள்வதற்கு வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’ வெளியான 1728 முதல் 1930 வரை மரபான கதைகள், 1930 முதல் 1970 வரை மரபுக்கும் நவீனத்துக்கும் இடைப்பட்டவை, 1970களுக்குப் பிறகு நவீனமானவை, 2000க்குப் பிறகு பிந்தைய நவீனக் கதைகள், 2020களில் நுண்கதைகள், இன்ஸ்டா கதைகள் எனப் பிரித்துக் கொள்ளலாம். இவ்விடத்தில் நவீனம் என்பதை மனித உளவியல், தனிமனித அனுபவம், அதிகாரத்தின் அடக்குமுறை, எதிர்க்குரல், பண்பாட்டுக் கற்பிதங்கள் மீதான மறுயோசனை, திறந்த முடிவுகள், மொழித் தனித்துவம், வெளிப்பாட்டுக் கூர்மை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நிகழ்வுக் கோர்வையிலிருந்து மனநிலைக்கு நகர்தல்

தமிழின் முதல் கதையாக ‘பரமார்த்த குரு’ கதையை ஏற்காதவர்கள், பாரதியாரின் ‘ஆறில் ஒரு பங்கு’, வ.வே.சு.வின் ‘குளத்தங்கரை அரசமரம்’ ஆகியவற்றைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதற்கும் முன்பாக 1877இல் ‘நற்போதகம்’ என்ற கிறிஸ்தவ மாத இதழ் ஒன்றில் சாமுவேல் பவுல் ஐயர் ‘சரிகைத் தலைப்பாகை’ என்றொரு கதையை எழுதியிருக்கிறார். ஆடம்பரங்களைத் துறந்து எளிமையாக வாழ்வதே கிறிஸ்துவுக்குப் பிடித்தமான செயல் என்கிறது அக்கதை. அம்மணி அம்மாள் 1913இல் ‘சங்கல்பமும் சம்பவமும்’ எழுதினார். இதை நவீனத்தின் பெரும்பான்மைக் கூறுகள் ஒத்துப் போகும் கதையாகச் சுட்ட முடியும்.

1930களின் தொடக்கத்தில் சிறுகதைகள் நிகழ்வுக் கோர்வைகளைக் கைவிட்டு நவீனத்துக்கு நகரத் தொடங்கியிருந்தாலும், மரபான நிகழ்வுக் கோர்வைகளின் தாக்கம் இருக்கவே செய்தது. உடனடியாக விட்டொதுக்கும் நிலைப்பாட்டுக்கு வந்திராத கதையாளர்கள் புதியதைக் கதையாக்குவதில் கொண்டிருந்த ஆர்வத்தின் அளவுக்கு மரபான விஷயங்களின் மீதும் ஈர்ப்பு உடையவர்களாக இருந்தனர். அதனால் அக்காலத்தியவர்களான புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஆ.மாதவன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலியோரின் தொடக்க காலக் கதைகள் மரபை விட்டுவிடாத நவீனமாக இருந்தன. பிந்தைய காலக் கதைகளில் நிகழ்வுக் கோவையை உதறிவிடுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருந்தன. சான்றாக, ‘புதிய நந்தன்’, ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதைகளைச் சொல்லலாம். 1934இல் வெளியான ‘புதிய நந்தனி’ல் பாரம்பரியச் சிந்தனை வார்ப்பாக இருக்கும் புதுமைப்பித்தன், 1943இல் வெளியான ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையில் மரபு, நவீனம் ஆகியவற்றின் பக்கங்களைப் பேசியிருப்பதோடு, இரண்டும் வேறுவேறானவை, ஒருபோதும் இணைந்து இயங்க முடியாது என்பதையும் உணர்த்தியிருப்பார். பாரம்பரியச் சிந்தனையில் விடுபடாதவர் பழமையும் நவீனமும் வேறு என்ற நிலைக்கு வந்திருப்பதை அவரது நவீனமாகக் கொள்ளலாம். இந்தப் போக்கு அவரது காலத்துக் கதையாளர்களிடமும் இருந்தது. 1970களுக்குப் பிறகான கதைகளில் நவீனத்திற்கேயுரிய உயிரின் உள்மன இயக்கத்தினுடைய சித்திரிப்பும் அவற்றின் பரிமாணங்களும் கலவையாக இடம்பெற்றன. அந்த வகையில் சம்பவங்களைக் கோர்த்து உச்சத்தைக் காட்டாமல், உயிர்களின் / மனதின் உச்ச அழுத்தத்தைக் காட்டிய ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், சா.கந்தசாமி, சு.சமுத்திரம், வண்ணதாசன், வண்ணநிலவன், அம்பை, நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், இரா.முருகன், தேவிபாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.முருகன் ஆகியோர்களின் கதைகளை நவீனமாகக் கொள்ளலாம். இவ்விடத்தில் நவீனம் என்பது அவர்களின் புதுவித மொழியும் நுவல்பொருள் களமும்தான். சமூகத்தின் அமைவியக்கம் பற்றிய அவர்களின் சிந்தனை ஆய்வுக்குரியது.

ராஜம் கிருஷ்ணன் உழைக்கும் மக்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களினுடைய உழைப்பின் மீதான சுரண்டலைக் கண்டித்திருந்தாலும், அதை நியாயப்படுத்தும் இந்தியச் சமூகத்தின் பாகுபாட்டு இயங்கியலை பட்டும்படாமல் விமர்சித்தார். பழமை வேண்டும்; ஆனால், அது காலத்துக்கேற்ற மாற்றங்களோடு இருக்க வேண்டும் என்பது அவருடைய ‘நவீனமான’ நிலைப்பாடாக இருந்தது. ஆ.மாதவன், வண்ணதாசன், வண்ணநிலவன் முதலியோரின் கதைகள் வாழ்வின் லௌகிகங்களைச் சுற்றிச் சுற்றி

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger