போராட்டக்காரர்களின் அபச்சார மொழிக்கு ஆதரவாக…

ஆனந்த் தெல்தும்டே, தமிழில்: ஜா.ரோஸ்லின் அனிஷா

“பேரரசர் கடந்து செல்லும்போது, அறிவுள்ள விவசாயி பணிவாகத் தலைவணங்கி உள்ளுக்குள் சிரிக்கிறான்.”

– எத்தியோப்பியப் பழமொழி

 

ஜூலை 24 அன்று ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் நிலையில், ஒரு குடிமக்கள் இயக்கத்தின் அழுத்தத்தால் இந்த அரசிலிருந்து ஒருவர் முக்கியப் பதவியை இழப்பது இதுவே முதல் முறை. இந்த அரசை எதிர்த்து இதற்கு முன்பு பல இயக்கங்கள் போராடியிருக்கின்றன. ஆனால் இந்த அரசு, தான் இதுவரை எதிர்கொண்ட பல போராட்டங்களை ஒடுக்கி, காலப்போக்கில் அவற்றைப் பலவீனமடையச் செய்திருக்கிறது. ஆனால், இந்த இயக்கம் மட்டும் எப்படி வெற்றி பெற்றது?

இந்தக் கேள்விக்கான பதில்களில் ஒன்று, இந்திய அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தில் இருக்கிறது. அதாவது, “கரப்பான் பூச்சிகள்” என அழைக்கப்பட்டவர்கள் தொடங்கிய இயக்கம் ‘அபச்சாரமாக’ இருந்தது. அந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றதற்கு அதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு தலைமுறையும் தனக்கென ஒரு மொழிநடையை உருவாக்குகிறது. அப்படி ஜென்-ஸி தலைமுறையின் மொழிநடை கெட்ட வார்த்தைகள், கிண்டல், நையாண்டி நிறைந்ததாகவும், அவ்வாறு பேசுவதற்கு யாருடைய அனுமதியையும் கேட்கத் தேவையில்லை என்ற மனப்பான்மை கொண்டதாகவும் இருக்கிறது.

ஜந்தர் மந்தரில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், கல்வி அமைச்சரின் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ஆகியவை பழைய இந்தியப் போராட்டங்களின் தீவிரமான, ஒழுக்கம் சார்ந்த, கண்ணியமான மொழியைப் பயன்படுத்தவில்லை. அவை நண்பர்கள் குழுவில் நடக்கும் உரையாடல்களைப் போல இருந்தன. திட்டுவது, ஆபாசமாகப் பேசுவது, அபத்தமான நகைச்சுவையைப் பயன்படுத்துவது, புனிதமாகக் கருதப்படும் விஷயங்களைக்கூட கிண்டல் செய்வது போன்றவை அதில் காணப்பட்டன. அதுமட்டுமின்றி, இந்த மொழி யாரை அதிகமாகப் புண்படுத்தும் என்பதும் அந்த இயக்கத்துக்குத் தெரிந்திருந்தது. தங்களைத் தாங்களே கலாச்சாரக் காவலர்கள் என்று கருதிக்கொள்ளும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ஆதரவாளர்களையும், தலைமையை வழிபடுவதையே மதமாகக் கருதும் பக்தர்களையும் (தொண்டர்கள்) இந்த மொழி எரிச்சலடையச் செய்தது. ஆனால், அவ்வாறு அவர்களைப் புண்படுத்துவது என்பது ஏதோ தவறுதலாக நடந்த ஒன்று அல்ல.  மாறாக, அதுதான் அங்கு முழு நோக்கமாகவும் இருந்தது. எனவே, இந்த இயக்கம் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்றாக இதுவும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

புனிதமாகக் கருதப்படும் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு ஆபாசமான அல்லது முரட்டுத்தனமான மொழியைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவது ஒரு புது உத்தி அல்ல. ஏனென்றால், பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் ஒப்புக்கொள்வதை விட, மிகப் பழமையான மற்றும் அதிக வெற்றியைக் கண்ட ஓர் அரசியல் உத்தியாக இது வரலாற்றில் திகழ்கிறது.

அடையாளமாக மாறிய அவமானம்

இந்த இயக்கத்தின் பெயரே அதன் அரசியல் உத்தியைச் சுருங்கக் கூறுவதாக இருக்கிறது.  மே 15 அன்று, போலி சட்டத் தகுதிச் சான்றுகள் தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலை இல்லாத இளைஞர்கள் “கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள், பணி வாய்ப்பில் இடமில்லாதவர்கள் என்பதால், அவர்கள் சமூக ஊடகங்களையும், போராட்டங்களையும் பயன்படுத்தி, எல்லோரையும் தாக்குகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இளைஞர்களைப் புறந்தள்ளி, அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அந்தக் கருத்துக் கூறப்பட்டிருந்தது.

ஓர் அரசு நிறுவனத்திலிருந்து சாதாரணமாக வெளிப்படும் இத்தகைய அவமதிப்பை இந்தியர்கள் நீண்ட காலமாக எந்தப் புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டனர். ஆனால், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இவ்வாறு கருத்துத் தெரிவித்த ஒரே நாளுக்குள், பாஸ்டனில் இருந்த அபிஜீத் திப்கே, “அனைத்துக் கரப்பான் பூச்சிகளுக்காகவும்” என்றொரு தளத்தைத் தொடங்கினார்.

ஒருவித நகைச்சுவைத் தொனியுடன், அதில் சேருவதற்கான தகுதிகளாக, “வேலையற்றவர்கள், சோம்பேறிகள், எப்போதும் இணையத்தில் இருப்பவர்கள், தொழில்முறையாகப் புலம்பத் தெரிந்தவர்கள்” ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தத் தளம் தொடங்கப்பட்ட 78 மணி நேரத்துக்குள் அதனை

30 இலட்சம் பேர் பின்தொடர்ந்தார்கள். ஐந்து நாட்களுக்குள் அந்த எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது. இது, ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வக் கணக்குகளுக்கு இருந்ததை விட அதிகமான எண்ணிக்கை. ஒரு தலைமுறையையே அவமானப்படுத்தி அமைதியாக்கும் நோக்கில் அவர்களை அவமதித்துக் கூறப்பட்ட இச்சொல், ஒரே வாரத்திற்குள் யாராலும் பறிக்க முடியாத அடையாளமாக மாற்றப்பட்டது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒருவரை இழிவுபடுத்த பயன்படுத்திய சொல்லையே அந்த இயக்கம் தனது அடையாளமாக எடுத்துக்கொண்டு, அதை ஒரு கூட்டு அடையாளமாக மாற்றியது. அரசியலில் இது, ‘மீள் பயன்பாடு’, அதாவது, அவமதிப்பை மீண்டும் தங்களுக்கான அடையாளமாகக் கைப்பற்றும் உத்தி எனக் கூறப்படுகிறது. இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.

பிரெஞ்சுப் புரட்சியின் காலத்தில் “சான்ஸ்-குலோட்ஸ்” என்ற சொல், கறுப்பின அதிகார இயக்கத்தில் “பிளாக்” என்ற சொல், எல்.ஜி.பி.டி.க்யூ. அரசியலில் “குயர்” என்ற சொல் ஆகியவை இது போன்ற வகையில் மீண்டும் தங்களுக்கான அடையாளச் சொற்களாக மாற்றப்பட்டன. வேறொரு வரலாற்றுச் சூழலில், தலித் இயக்கமும் “தலித்” என்ற சொல்லையே தங்களுடைய அடையாளமாக மீட்டெடுத்தது. அதனால், “அனைத்துப் கரப்பான் பூச்சிகளும் ஒன்றாகச் சேர்ந்தால் என்ன ஆகும்?” என்ற முழக்கம் வெறும் கண்ணியமற்ற மொழியில் இருந்ததால் மட்டும் சக்திவாய்ந்ததாக மாறவில்லை. மாறாக, அவமானப்படுத்தப்பட்ட உணர்வை, ஒன்றிணைந்து செயல்படும் அரசியல் சக்தியாக மாற்றியதால்தான் அது வலிமை பெற்றது. அதனைச் சுற்றி பயன்படுத்தப்பட்ட மரியாதையற்ற, கிண்டலான மொழியும் இதே அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதாவது, ‘கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்துவது நல்லது’ என்று வெறுமனே வாதிடுவதைவிட, ஒருவரை அவமதிக்கும் நோக்கில் சொல்லப்பட்ட ஒரு சொல்லை அவரே கைப்பற்றி, அதைத் தனது கூட்டு அடையாளமாக மாற்றுவது அரசியல்ரீதியாக வலிமையானது. நுணுக்கமாகத் திட்டமிடுவதைவிட, ‘கண்ணியமற்றதாக’ அமையும் கொச்சையான நடவடிக்கைளும் அரசியல் செயல் உத்தியும் அடிக்கடி ஒன்றாக அமைந்துவிடுவதை இது காட்டுகிறது.

இதற்குப் பின் நடந்தவையும் இதே மனநிலையைத்தான் வெளிப்படுத்தின. குறிப்பாக, தகவல் கசிவை அடைக்க உதவுமென்று கல்வி அமைச்சரின் அலுவலகத்துக்கு டயப்பர்களைக் (Diapers) கிண்டலாக அனுப்பி வைத்தனர். எந்தச் செய்தித்தாளும் முழுமையாக வெளியிட முடியாத அளவுக்கு வெளிப்படையான வாசகங்களைக் கொண்ட பதாகைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், எந்தவிதமான வெட்கமும் இல்லாமல், தங்களைச் “சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்” என்று அறிவிக்கும் முழக்கமும் அங்குப் பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் பார்த்த மூத்த அரசியல் விமர்சகர்களும், நல்ல நோக்கத்துடன் செயல்பட்ட பல தாராளவாதிகளும் சங்கடமடைந்தனர். அவர்கள் இதை இளைஞர்களின் முதிர்ச்சியற்ற செயலாகக் கருதினர். அவர்கள் பயன்படுத்திய மொழிநடையும் நடவடிக்கைகளும் முரட்டுத்தனமானவை, நாகரிகமான அரசியல் மொழியிலிருந்து விலகியவை என அந்த விமர்சகர்கள் கூறியதில் தவறில்லை. ஆனால், அந்த முரட்டுத்தனமும், தீவிர அரசியலும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று அவர்கள் கருதியதுதான் தவறு.

பொதுவெளிக்கு வரும் மறைக்கப்பட்ட குரல்

ஒவ்வோர் ஆதிக்க அரசியல் அமைப்பும் அரசியலில் எத்தகைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதை மட்டும் நிர்ணயிப்பதில்லை; எப்படிப்பட்ட மொழியில் அந்தக் கருத்துகளைப் பேசவேண்டும் என்பதையும் சேர்த்தே நிர்ணயிக்கிறது. அதாவது, ஓர் அரசியல் கருத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதி இருக்கிறதா என்பதுடன், அதை வெளிப்படுத்தும் மொழி ‘நாகரிகமானதாக, மரியாதையானதாக, கண்ணியமானதாக’ இருக்கிறதா என்பதும் முக்கியமானதாகிறது. நாகரிகம், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கண்ணியமான நடத்தை முறை, ஒழுக்கமான பேச்சு போன்றவை எதிர்ப்பைக் கட்டுப்படுத்த அதிகாரம் பயன்படுத்தும் ஒரு வகையான ஒழுங்குமுறையின் பகுதிகளாக மாறுகின்றன. இதன் விளைவாக, அநீதிக்கு எதிராகப் போராடும் போராட்டக்காரர்கள்கூட மரியாதையாகவும் பணிவாகவும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வரலாறு நமக்கு வேறொன்றை உணர்த்துகிறது. பெரிய அரசியல் மாற்றங்கள் தொடங்கும் நேரங்களில், இந்த மொழி சார்ந்த விதிமுறைகளே முதலில் உடைக்கப்படுகின்றன. கிளர்ச்சியின் மொழி ஒருபோதும் வரையறைகளுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் நிதானமான மொழியாக இருப்பதில்லை. அது அளந்து, கட்டுப்படுத்திப் பேசுவதற்குப் பதிலாக உணர்ச்சிவயப்பட்டதாக இருக்கும். அதிகாரத்தின் முன்  மரியாதையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அதைக் கேலி செய்யும்; பல நேரங்களில் வேண்டுமென்றே சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளை மீறும். அதனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ‘முரட்டுத்தனமானது அல்லது ஆபாசமானது’ போலத் தோன்றும் மொழி, உண்மையில் நீண்ட காலமாகச் சேர்ந்து வந்த அவமானம், கோபம்

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger