நகரின் ஓட்டத்தை நிறுத்திய நடனம்
நியூயார்க் நகரத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சுரங்கப் பாதைகளிலிருந்து வெளிப்படும் கூட்டத்தின் சுறுசுறுப்பு, நெரிசலான வீதிகளில் பாயும் மஞ்சள் நிற டாக்ஸிகள், டைம்ஸ் சதுக்கத்தின் பிரம்மாண்ட நியோன் விளம்பரங்கள், தெருவெங்கும் வீசும் கஞ்சா வாடை என நகரம் எப்போதும் ஒருவிதப் பரபரப்போடு இயங்குகிறது. சில நகரங்கள் நம்மை நின்று ரசிக்க அழைக்கும்; ஆனால், நியூயார்க் நம்மையும் சேர்த்துத் தன் வேகமான சுழலுக்குள் ஓட வைக்கும்.
எனினும், ஒரு தெருவோர நடனம் மட்டுமே எல்லோரையும் சட்டென்று நிற்க வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கணத்தை நான் நியூயார்க்கில் கண்டேன்.
நடைபாதையில் சிறு கூட்டம் கூடிப் பெரிய வட்டமானது. மையத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க மனிதர்கள் தங்கள் நடை வேகத்தைக் குறைத்தனர். அந்த வட்டத்தின் மையத்தில் மேலாடை இன்றி, பிரகாசமான சிவப்பு நிற பேண்ட் அணிந்த ஒரு கறுப்பின இளைஞன் நின்றிருந்தான்.
டைம்ஸ் சதுக்கமே அவனது மேடை; பார்வையாளர்கள் உலகெங்கிலும் இருந்து வந்த முன்பின் தெரியாதவர்கள். ஒரு பாடலை ஒலிக்கவிட்டு, “க்ளாப்! க்ளாப்! க்ளாப்!” என்று கைகளைத் தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினான். ஆபத்தான அசைவுகளைக்கூட மிக இலகுவாகக் காட்டும் உடலியல் நம்பிக்கையுடன் அவன் ஆடத் தொடங்கினான். நடைபாதையை நோக்கித் தாழ்ந்து, தன் உடலை வெகுவாக வளைத்து, சுழன்று, திடீரென்று உறைந்து மீண்டான். சில நிமிடங்களுக்கு, பூமியின் பரபரப்பான நகரங்களில் ஒன்று அந்த இளைஞனைச் சுற்றித் தன்னைத்தானே சீரமைத்துக் கொண்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கவனிக்காமல் கடந்து செல்லும் நடைபாதை, சில நிமிடங்களில் ஒரு தற்காலிக நாடக மேடையாக மாறியது. அங்கே திரைச்சீலை இல்லை; நுழைவுச்சீட்டு இல்லை; எப்போது கைதட்ட வேண்டும் என்று சொல்லும் குறிப்பேடு இல்லை. தெருவோரக் கலைஞருக்குப் பாதுகாப்பளிக்கும் அரண்கள் எதுவும் இல்லை; கவனத்தை ஈர்க்க அவருக்கு அதிகபட்சம் முப்பது வினாடிகளே அவகாசம். அந்தக் குறுகிய காலத்திற்குள் கூட்டத்தைக் கவரத் தவறினால், மக்கள் நகர்ந்துவிடுவார்கள். கூட்டம் கலைவதற்குள் அவர் தனக்கான மேடையையும், பார்வையாளர்களையும், கலைப் பெறுமதியையும் அந்த இடத்திலேயே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
“தனக்கென ஒரு மேடை இல்லையென்றால், இருக்கும் இடத்தையே மேடையாக மாற்றிக்கொள்வது” – இந்தக் கிளர்ச்சி எண்ணமே ஹிப்-ஹாப்பின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது.
பிரம்மாண்ட இசை அரங்குகளுக்குப் பதிலாகப் பூங்காக்களும், இசைக்குழுவுக்குப் பதிலாக இசைத்தட்டுகளும், ஓவியக்கூடங்களுக்குப் பதிலாக நகரச் சுவர்களும் அவர்களிடம் இருந்தன. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த இசை, தொழில்நுட்பம், மொழி, மனித உடல், நகர்ப்புற வெளி ஆகியவற்றை மாற்றி புதிய அர்த்தங்களைக் கண்டடைந்த ஒரு கலாச்சார மறு படைப்பு இது.
“ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒன்றுக்குள் இன்னும் உருப்பெறாத ஒன்றைக் கண்டெடுப்பது” — இதுவே ஹிப்-ஹாப்பின் படைப்பாற்றலின் அடையாளம்.
இந்தக் கலையின் வேர்களைப் புரிந்துகொள்ள, டைம்ஸ் சதுக்கத்தின் நடனக்கூடுகையிலிருந்து விலகி, 1970-களின் பிராங்க்ஸ் (Bronx) பகுதிக்குச் செல்ல வேண்டும். அன்றைய நியூயார்க் நகரின் ஐந்து முக்கிய வட்டாரங்களில் ஒன்றான பிராங்க்ஸ் வறுமை, போதைப்பொருள் சிக்கல்கள் மற்றும் நகர்ப்புறச் சீரழிவோடு போராடிக்கொண்டிருந்த பகுதியாக இருந்தது. ஆனால், அதே பிராங்க்ஸில்தான் ஆப்பிரிக்க – அமெரிக்க, கரீபிய மற்றும் லத்தீனோ சமூகங்கள் செறிவாக வாழ்ந்து, தங்கள் கலாச்சாரங்களை உயிர்ப்புடன் வைத்திருந்தன. ஃபங்க், சோல், ஜமைக்காவின் இசை மரபு, தெரு நடனம் ஆகியவை இணைந்து புதிய கலாச்சார மொழியை உருவாக்கியிருந்தன. அந்த வரலாற்றுப் பாதையில், 1973 ஆகஸ்ட் 11 ஒரு திருப்புமுனைத் தேதியாகும்.
பிராங்க்ஸின் 1520 செட்ஜ்விக் அவென்யூ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பின் பொழுதுபோக்கு அறையில், சிண்டி கேம்ப்பெல் ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். அவ்விருந்தில் இசையைக் கவனித்துக்கொண்டவர் அவரது சகோதரர் கிளைவ் கேம்ப்பெல். பின்னாளில் உலகம் அவரை டி.ஜே. கூல் ஹெர்க் (DJ Kool Herc) என்றும், ஹிப்-ஹாப் கலாச்சாரத்தின் முதன்மையான முன்னோடிகளில் ஒருவர் என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று ஹிப்-ஹாப்பின் தந்தை என்றும் அறிந்துகொண்டது.
நடனமாடுபவர்கள் பாடலின் எந்தப் பகுதியில் அதிக உற்சாகமடைகிறார்கள் என்பதை ஹெர்க் கூர்ந்து கவனித்தார். ஃபங்க் பாடல்களில் மெல்லிசையும் பாடலும் பின்வாங்கி, தாள வாத்தியங்கள் மட்டும் முன்னிலைக்கு வரும் சிறிய பகுதி பிரேக் எனப்பட்டது. எப்போதுமே நடனக் கலைஞர்கள் அந்தப் பகுதியை விரும்புவார்கள்; ஆனால், அது சில நொடிகளிலேயே முடிந்துவிடும். ஹெர்க் இரண்டு டர்ன்டேபிள்களைப் பயன்படுத்தி, ஓர் இசைத்தட்டில் பிரேக் முடிவடையும் நேரத்தில் மற்றோர் இசைத்தட்டிலிருந்து அதே பிரேக் பகுதியைத் தொடங்கி, தாளப் பகுதிகளை நீட்டித்தார். சில நொடிகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டிய இசைத் துணுக்கு முடிவின்றி நீளத் தொடங்கியது. பாடலின் ஒரு சிறிய பகுதி முழு நிகழ்ச்சியின் மையப்புள்ளியாக மாறியது. இசை வரலாற்றின் பெரும் புரட்சிகள் பிரம்மாண்டமான அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை என்பதற்கு ஹிப்ஹாப் உதாரணம். ஒரு பாடலில் எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்த இசைக்குள், ஒருவன் மட்டும் இன்னும் சில நொடிகள் நீடிக்க வேண்டிய ஒரு தாளத்தைக் கேட்பதிலிருந்தே ஹிப்ஹாப் உருவாகிறது.
வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளின்படி, ஹிப்-ஹாப் இசை என்பது ஒரே நபராலோ அல்லது ஒரே இரவிலோ உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, இது பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டுச் கூறுகளின் கூட்டமைப்பால் உருவான கலை இயக்கமாகும். டிஜே-யிங் (DJing), எம்சி-யிங் (MCing), பிரேக்கிங் (Breaking) மற்றும் கிராஃபிட்டி (Graffiti) ஆகிய நான்கு முதன்மை அங்கங்கள் ஒருங்கிணைந்த, நீண்ட நெடிய படைப்புச் செயல்பாட்டின் வெளிப்பாடே ஹிப்-ஹாப் ஆகும். நியூயார்க்கின் ‘1520 செட்ஜ்விக் அவென்யூ’ (1520 Sedgwick Avenue) என்ற கட்டடம், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாற்றத்தின் அழியாத அடையாளமாக மாறியுள்ளது.
இசைத்தட்டிலிருந்து புதிய இசை
இசை வரலாற்றில் பெரும்பாலான இசைக்கருவிகள் இசையை உருவாக்குவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. ஆனால், ஹிப் – ஹாப் இசை வரலாற்றில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான மாற்றம் என்னவெனில், இசையை உருவாக்கப் பயன்படாத ஒரு சாதாரணக் கருவியை அது புதியதோர் இசைக்கருவியாகவே உருமாற்றியதுதான். பொதுவாக, ஒலிப்பதிவுத்தட்டு இயக்கியின் அடிப்படை நோக்கம் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட இசையை மீண்டும் ஒலிக்கச் செய்வது மட்டுமே. அதில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசைக்கலைஞர்களின் பணி ஏற்கெனவே நிறைவடைந்துவிடுகிறது; கேட்பவரின் வேலை அந்தப் படைப்பை ரசிப்பது மட்டுமே.
ஆனால், 1970-களில் நியூயார்க்கின் பிராங்க்ஸ் நகர்ப்புறப் பகுதியைச் சேர்ந்த இசை வட்டு இயக்கிகளின் (DJ) கைகளில் இந்த வழக்கம் தலைகீழாக மாறியது. அவர்கள் இசைத்தட்டை முடிவடைந்த படைப்பாகக் கருதாமல், மீண்டும் மாற்றி அமைக்கக்கூடிய புதிய இசைக்கருவியாகப் பார்த்தார்கள். இசைத்தட்டை நிறுத்துவது, பின்னோக்கி நகர்த்துவது, ஒரு குறிப்பிட்ட தாளக் கோர்வைப் பகுதியை மீண்டும் மீண்டும் ஒலிப்பது மற்றும் இரண்டு தட்டுச் சுழலிகளுக்கு இடையில் ஒலியை தடையின்றி நகர்த்துவது போன்ற நுட்பங்கள் மூலமாக, அதுவரை இசையை இயக்கிய ஓர் இயந்திரம், புதிய இசையை உருவாக்கும் முதன்மையான கருவியாக மாறத் தொடங்கியது.
டிஜே கூல் ஹெர்க் அந்த மாற்றத்தின் ஆரம்பகால மைய ஆளுமைகளில் ஒருவர் என்றால், அதை இன்னும் துல்லியமான தொழில்நுட்பக் கலையாக வளர்த்தவர்களில் கிராண்ட்மாஸ்டர் ஃபிளாஷ் (Grand Master Flash) முக்கியமானவர். ஒரு பாடலின் தாள இடைவேளை எந்த இடத்தில் தொடங்குகிறது, எங்கே முடிகிறது, அதை எவ்வாறு துல்லியமாக மீண்டும் கொண்டு வருவது, ஒரு தட்டுச் சுழலியில் ஒலிக்கும் இசையிலிருந்து மற்றொன்றிற்குக் கூட்டத்தின் நடன ஓட்டம் துண்டிக்கப்படாமல் எவ்வாறு நகர்வது என்பதையெல்லாம் அவர் தீவிரமாக ஆராய்ந்தார். தட்டுச் சுழலி, ஒலி கலக்கி (sound mixer), செவிப்பொறி ஆகியவை தனித்தனி சாதனங்களாக இல்லாமல், ஒரே இசைக்கருவியின் வெவ்வேறு பகுதிகளாகச் செயல்படத் தொடங்கின. வரலாற்றுப் பதிவுகள் கிராண்ட் மாஸ்டர் ஃபிளாஷ் உருவாக்கி நெறிப்படுத்திய விரைவு-இணைப்பு, குறிப்புக் கோடு மற்றும் அவரது கடிகாரக் கோட்பாடு போன்ற நுட்பங்களை ஆரம்பகால ஹிப்-ஹாப் இசை இயக்கத்தின் முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களாகக் குறிப்பிடுகின்றன. இங்கு நிகழ்ந்தது ஒரு புதிய இசை நுட்பத்தின் கண்டுபிடிப்பு மட்டுமல்ல; இசையை உருவாக்குபவர் யார் என்ற பழைய வரையறையே விரிவடைந்தது.
இதன் அழகியல் விளைவு இன்னும் ஆழமானது. மேற்கத்திய இசை மரபில் மூலப் படைப்பூக்கம் என்ற கருத்து நீண்ட காலமாக ஒரு புதிய மெட்டமைப்பை எழுதுவது, புதிய இசையமைப்பை உருவாக்குவது, அல்லது ஒரு இசைக்கருவியில் புதிய இசையை வாசிப்பது போன்ற செயல்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. ஹிப்-ஹாப் வேறொரு சாத்தியத்தை முன்வைத்தது. புதியதை உருவாக்குவதற்கு எல்லாவற்றையும் புதிதாக உருவாக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கும் ஒன்றை வேறுவிதமாகக் கேட்பதன் மூலமும் புதுமை பிறக்கலாம்.
இந்த எண்ணம் ஹிப்-ஹாப்பின் எல்லைகளைத் தாண்டியும் சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு கலைப்படைப்பின் உரிமை அதை முதலில் உருவாக்கியவரிடம் மட்டுமே இருக்கிறதா அல்லது அதை முற்றிலும் வேறுவிதமாகக் கேட்டு புதிய சூழலில் அமைப்பவரும் படைப்பாளியா? ஒரு பழைய இசைத்துணுக்கை வெட்டிப் புதிய தாளச் சூழலில் வைப்பது நகலெடுப்பதா, மேற்கோள் காட்டுவதா, உரையாடுவதா, அல்லது முற்றிலும் புதிய படைப்பை உருவாக்குவதா? பின்னாளில் ஒலித்துணுக்கு எடுத்தல் உலகளாவிய இசைத்துறையின் முக்கியமான தொழில்நுட்பமாக வளர்ந்தபோது, பதிப்புரிமை மற்றும் உடைமைச் சார்ந்து பெரிய சட்ட விவாதங்களாகவும் இந்தக் கேள்விகள் மாறின. ஆனால், அதன் ஆரம்பகால அழகியல் எண்ணம் மிகவும் எளிமையானது. இசை கடந்த காலத்தோடு முடிந்துபோக வேண்டிய பொருள் அல்ல; அடுத்த தலைமுறை அதை மறுசீரமைத்து, தன் காலத்தின் குரலாக மாற்ற முடியும்.
இந்த மறுசீரமைப்பின் அடுத்த கட்டத்தில் கிராண்ட் விஸார்ட் தியோடரின் (Grand Wizard Theodore) பெயர் முக்கியமாகிறது. சுழலும் தட்டில் இசைத்தட்டைக் கையால் முன்னும் பின்னும் நகர்த்தும்போது உருவான ஒலியை ஒரு தாள நுட்பமாக அவர் வளர்த்தது, பின்னர் ‘ஸ்க்ராட்ச்’ என ஹிப்-ஹாப்பின் மிகவும் அடையாளம் காணக்கூடிய ஒலிகளில் ஒன்றாக மாறியது. இங்கே ஒரு சுவாரஸ்யமான முரண் இருக்கிறது. ஒலிப்பதிவுத்தட்டு இயக்கியை வடிவமைத்த பொறியாளர்களின் நோக்கம் இசைத்தட்டைச் சீராகச் சுழலச் செய்வது; கலைஞனின் கலை அதே சுழற்சியைத் தடுத்து, பின்னோக்கி இழுத்து, இயந்திரம் தவிர்க்க வேண்டியதாகக் கருதிய ஒலியையே இசையாக மாற்றியது.
தொழில்நுட்ப வரலாற்றில் சில முக்கியமான கண்டுபிடிப்புகள், ஒரு கருவி எதற்காக உருவாக்கப்பட்டது என்ற வரம்பிற்குள் நின்றுவிடுவதில்லை; மாறாக, “அந்தக் கருவியைக் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்ய முடியும்?” என்று சிந்திப்பதிலிருந்தே பிறக்கின்றன. ஹிப்-ஹாப்பின் ஆரம்பகாலக் கலைச் சூழல், இத்தகைய புதிய சிந்தனைப் போக்கை இசைத்துறைக்குள் கொண்டுவந்தது.
இங்கு முக்கியமானது கருவிகளின் பற்றாக்குறை அல்ல; மாறாக, அவற்றைக் கையாளும் கற்பனைத் திறனின் மிகுதியே ஆகும். ஒரு தலைமுறை தங்களிடம் கிடைத்த தொழில்நுட்பத்தை அதன் அதிகாரப்பூர்வமான பயன்பாட்டிலிருந்து விடுவித்து, முற்றிலும் வேறுபட்ட ஒரு நோக்கத்திற்காக மாற்றியமைத்தது. அந்தப் படைப்பு மனநிலையை இன்று மறு இசையாக்கம், ஒலி மாதிரி எடுத்தல், டிஜிட்டல் படத்தொகுப்பு, மின்னணு இசை மற்றும் இணைய மீம் பண்பாடு போன்ற பல தளங்களிலும் காண முடிகிறது. அதாவது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஒரு கலாச்சாரப் பொருளை எடுத்து, அதை வேறொரு புதிய சூழலில் பொருத்தி, முற்றிலும் புதியதோர் அர்த்தத்தை உருவாக்குவதே இதன் அடிப்படையாகும்.
இத்தகைய நவீன டிஜிட்டல் உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஹிப் – ஹாப் இந்தக் கலைக் கருத்தாக்கத்தைத் தட்டுச் சுழலியின் மீது நிகழ்த்திக் காட்டியது.
ஆனால், தட்டுச் சுழலி மட்டுமே ஹிப்-ஹாப்பை ஒரு முழுமையான பண்பாடாக மாற்றியமைத்துவிடவில்லை. இசை வட்டு இயக்கித் தாளக் கோர்வையை நீட்டித்தபோது, அந்தத் தாளத்திற்கு மனித உடலும் எதிர்வினையாற்றத் தொடங்கியது. தாளக் கோர்வை நீண்டபோது நடனமாடுபவர்களுக்குத் தங்களின் அசைவுகளை விரிவாக்குவதற்கான காலமும் களமும் அமைந்தன.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then






