கணவரின் சமூகப் பொறுப்புக்குத் தோள்கொடுக்க குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்த சுயாதீனப் பெண்ணான சந்தனமாரியின் வாழ்வியலை இக்கட்டுரை பேசுகிறது.
குடும்பமும் சமூகமும்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் – பன்னம்பாறையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்ற வட்டக் கண்ணன் குடும்பத்தினர் சுண்ணாம்பு உற்பத்தியும், விவசாயமும் செய்த சுண்ணாம்பு பறையர் சமூகத்தினர். இவர்கள் அங்கிருந்து வடக்குத் திசையில் 9 கி.மீ. தொலைவில் தேரிப்பனையில் குடியேறினர். வட்டக் கண்ணனுக்கு ஏசுவடியான், யோக்கோப்பு எனச் சில ஆண்களும், இசக்கியம்மாள் உட்பட பெண்களும் வாரிசுகள். இசக்கியம்மன், ஈந்தடியான் சாமிகளை வணங்கிய இவர்கள், கிறிஸ்துவத்தைத் தழுவியதற்கும், ஒரு பெண் இந்துப் பெயருடன் இருப்பதற்குமான காரணங்கள் தெரியவில்லை. திருச்சபையில் இணைந்து தேவாலயங்களில் வழிபடாத இவர்கள், பழைய வழிபாட்டு முறைக்கே திரும்பினர். இதற்கான காரணத்தையும் அறிய இயலவில்லை.
தேரிப்பனையிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் T.D.T.A நடுநிலைப் பள்ளியில் ஏசுவடியான் ஐந்தாம் வகுப்புவரை பயின்றார். இவர் இங்கிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள காயல்பட்டினம் ரத்தினபுரியில் திருட்டிமுத்துவை மணமுடித்தார். இத்தம்பதிக்குச் சந்தனமாரி, பிச்சம்மாள், பேச்சியம்மாள், இசக்கிமுத்து, வன்னியராஜா என ஐந்து வாரிசுகள். இவர்கள் முறையே 1934, 1937, 1940, 1943, 1946 ஆண்டுகளில் பிறந்தனர்; இவ்வாண்டுகள் தோராயமானவை. இவர்களும் T.D.T.A பள்ளியில் பயின்றனர். சந்தனமாரி மூன்றாம் வகுப்பு படித்தபோது வன்னியராஜா கைக் குழந்தை. அப்போது தாய் திருட்டிமுத்து நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். மறுமணம் மிகத் தாராளமாகச் செய்யப்பட்ட அக்காலத்தில் ஏசுவடியான் அதைச் செய்யவில்லை. எட்டு வயதிலேயே தம்பி, தங்கைகளை வளர்க்கும் குடும்பப் பொறுப்பு சந்தனமாரிக்கு ஏற்பட்டதால் மூன்றாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தினார்; தந்தையுடன் சுண்ணாம்பு உற்பத்தியிலும் ஈடுபட்டார். சகோதரிகள் எட்டாம் வகுப்பும், சகோதரர்கள் பத்தாம் வகுப்பும் 1950களிலேயே படித்தனர். தேரிப்பனையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கச்சினாவிளை கிராமத்திலுள்ள கிறிஸ்துவப் பள்ளியில் விடுதியில் தங்கிப் பயின்றனர். அவர்கள் முயற்சி செய்திருந்தால் ஆசிரியர் உள்ளிட்ட அரசு வேலைகளை அடைந்திருக்க இயலும்; அவற்றைச் செய்யத் தவறினர். தம்பிகள் இருவரில் இசக்கிமுத்து தனியாரிலும், வன்னியராஜா கட்டப்பொம்மன் போக்குவரத்துக் கழகத்திலும் ஓட்டுநர்களாகினர். பின்னவர் பொற்கொல்லர் பெண்ணைக் காதலித்தும், பிறர் சாம்பவர்களிலும் மணமுடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலேசகரப்பட்டினத்தைச் சேர்ந்த கோயில்பிள்ளை தன் மகன் பெஞ்சமின்னுடன் உடன்குடி, கொட்டங்காடு கிராமத்தில் குடியேறினார். குலசேகரப்பட்டினத்தில் இக்குடும்பத்தினர் கடல் சிப்பியால் சுண்ணாம்பு உற்பத்தி செய்தனர். பெஞ்சமின் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்தார். தொழில் நிமித்தமாக அடிக்கடி கொழும்புக்குச் சென்றுவந்தார். பெஞ்சமின் மகன் கோ.பெ.கோயில்பிள்ளை 1920களின் நடுப்பகுதியில் பிறந்திருக்கலாம். இவரையும் தம்பி பாக்கியத்தையும் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்கள் கைவிட்டனர். இவர்களைப் பாட்டி புல்லுக்கட்டு வளர்த்தார். இளம் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயே அதிகாரியைக் கொன்ற வழக்கில் சிலருடன் கோயில்பிள்ளையும் சில வருடங்கள் சிறையிலிருந்தார். இந்நிலையில் புல்லுக்கட்டுவும் இறந்ததால் இவரும் தம்பியும் குடும்பமற்றுத் தனிமைப்பட்டனர். கோயில்பிள்ளையின் அரசியல் செயல்பாடுகளால் பலர் பெண் தர மறுத்தனர். இவருடைய உறவினரும் காங்கிரஸில் செயல்பட்டவருமான உடன்குடி சண்முகவேல், தன்னுடைய உறவினரான ஏசுவடியானின் மூத்தமகள் சந்தனமாரியை கோயில்பிள்ளைக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தார். இத்திருமணம் 1959இல் நிகழ்ந்திருக்கலாம். அப்போது சந்தனமாரிக்கு 25 வயது இருக்கலாம். இது அக்காலத்தில் காலம் தாழ்த்திய திருமணம். வட்டக்கண்ணன் வகையறாவிலும் அந்தப் பகுதியிலும் சந்தனமாரிதான் முதன்முதலில் கம்யூனிஸ்ட்டை மணமுடித்தார்; அந்தச் சுற்று வட்டாரத்திலேயே கோயில்பிள்ளைதான் முதல் கம்யூனிஸ்ட்.
சுய வேதிவினைஞி
சந்தனமாரி கணவருடன் உடன்குடி – கோட்டைவிளையில் குடியேறினார். கோயில்பிள்ளை வழக்கம்போல் அரசியல் பணிகளைச் செய்துவந்தார். குடும்பத்தில் வருவாய் இல்லை; வறுமை தலைவிரித்தாடியது. உணவுக்குப் பஞ்சமின்றி வாழ்ந்த சந்தனமாரி பசியால் வாடி வதங்கினார். ஈரப் பாவாடையை இறுகக் கட்டிப் பசியை அடக்கினார். உயரமும் எடையும் கொண்ட சந்தனமாரி எலும்பும் தோலுமாக மெலிந்திருப்பதைக் கண்டு வருந்திய ஏசுவடியான், மகளைத் தேரிப்பனைக்கு அழைத்துச் சென்றார். கோயில்பிள்ளையும் அங்குச் சென்றார். மனைவி, தந்தை வீட்டில் இருந்ததால் கட்சிப் பணியில் முன்பைவிடத் தீவிரமானார். செங்கொடியைக் கையிலேந்தி மேளமிசைத்தும் பாடியும் கம்யூனிசத்தைப் பரப்பினார். பிராமணர், தேவர், நாடார் போன்ற ஜாதிகளைச் சேர்ந்த தோழர்களும் ஏசுவடியானின் வீட்டுக்கு இயக்கச் செயல்களுக்காக வந்தனர். அங்கு அனைவரும் உணவருந்தினர். ஜாதி, வர்க்க, பாலினப் பாகுபாடு அப்பகுதிகளில் இருந்தபோதிலும் ஏசுவடியானின் வீட்டில் கம்யூனிஸ்ட் மருமகனால் சமத்துவம் மலர்ந்தது. சந்தனமாரி தன் கணவரால் வீட்டில் சமத்துவம் ஏற்பட்டதைக் கண்டார். இம்மாற்றத்தைத் தேரிப்பனையில் சிலர் வெறுத்தனர். இதனால் அங்கிருந்து கிழக்கே 1கி.மீ. தொலைவில் நாசரேத் – சாத்தான்குளம் சாலையில் தன்னந்தனியாகக் குடியேறினார். கொள்ளையர்கள் நிறைந்த ஆபத்தான இப்பகுதியில் சந்தனமாரி துணிச்சலாகத் தங்கினார். இவருடைய உறவினர்கள் பின்னர் அங்குக் குடியேறினர். இப்புதிய வசிப்பிடத்துக்கு டிகேசி நகர் எனப் பெயரிடப்பட்டது.
சந்தனமாரி – கோயில்பிள்ளை தம்பதிக்குச் சுமார் பத்து ஆண்டுகளாகக் குழந்தைகள் இல்லை. சந்தனமாரியின் 33ஆவது வயதில், 1969இல் பிறந்த மூத்த குழந்தைக்குப் பாரதி எனப் பெயரிட்டனர். இக்குழந்தை கோயில்பிள்ளைக்குக் குடும்பப் பொறுப்பை உணர்த்தியதால் இயக்கச் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டார். டிகேசி நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள பாளையங்கோட்டையில் கட்டட ஒப்பந்தத் தொழிலைச் செய்தார். சென்னையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திய இவருடைய உறவினரின் பங்களா வீடு பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் இருந்ததால் அவ்வீட்டில் கோயில்பிள்ளை தங்கினார். இக்காலத்தில் வை.பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் இணைந்திருந்த கோயில்பிள்ளை, தன் உழைப்பையும் வருவாயையும் பொதுத் தொண்டுக்காகவும் செலவிடுவதால் குடும்பத்துக்காக உழைக்க வேண்டுமென்று சந்தனமாரி முடிவெடுத்தார். வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சுள்ளையை அமைத்தார். சுண்ணாம்புக் கற்களைத் தன்னந்தனியாகத் தோண்டி எடுத்தார். பூமிக்கு அடியிலுள்ள பாறைகளை வெடிவைத்துப் பெயர்த்தார். கற்களை எடுப்பதற்கான கருவிகள் அவரின் உடைமையாக இருந்தன. வெடிமருந்தை வெளியிலிருந்து வாங்கினார். சுண்ணாம்புக் கற்களையும், பிற கற்களையும் தனித்தனியாகப் பிரித்தார். கற்கள் எடுக்கும் குழியும் சுள்ளையும் வெவ்வேறு இடத்தில் இருந்தன. சுண்ணாம்புக் கற்களைச் சுள்ளைக்கும், பிற கற்களை வீட்டுக்கும் வாடகை மாட்டு வண்டியில் கொண்டு சென்றார்.
தரையிலிருந்து மேல்நோக்கி விரிந்த வட்ட வடிவில் சுள்ளை கட்டப்பட்டது. ஓரத்தில் படிக்கட்டு அமைக்கப்பட்டிருக்கும். சுள்ளையின் அடியில் விசில் வடிவிலான தகரப்பெட்டிக்குள் சிறு காற்றாடியும், இதிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இரு கற்தூண்களுக்கு நடுவில் பெரிய சக்கரம் அமைக்கப்பட்டு இவ்விரண்டும் நார்க் கயிறால் இணைக்கப்பட்டிருக்கும். ‘எஸ்’ வடிவிலான சுழட்டியால் சக்கரத்தைச் சுற்றினால் சுள்ளையின் அடியிலுள்ள விசிறியும் சுற்றி சுள்ளைக்குள் காற்றைச் செலுத்தி தீ மூட்டப்படும். வாசல் வழியாகச் சுள்ளையின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மூலப் பொருட்களையிட்டுத் தீ மூட்டுதல் தொடங்கும். சக்கரத்தைத் தேவைக்கேற்ப மெதுவகாவும் வேகமாகவும் சுழற்றிச் சுழற்றித் தொடர்ந்து எரியச் செய்யப்படும். இவ்வேதிவினை வேலைகள்
காலையில் தொடங்கி மாலைவரை ஆறு, ஏழு மணி நேரங்கள் நிகழும். மறுநாள் காலையில் சுள்ளைக்குக் கீழ்ப்பகுதியில் இருக்கிற காளவாசலைத் திறந்தால் வெண்ணிற சுண்ணாம்பு பயங்கர வெக்கையுடன் வெளிவரும். அதை நீர்க்கச் செய்ய தண்ணீர் தெளிப்பர். சுண்ணாம்பு உற்பத்தியானது பாரம்பரிய வேதிவினைத் தொழில். இதைக் குடும்பம் குடும்பமாகச் செய்தனர். சந்தனமாரியோ தன்னந் தனியாக வாரத்துக்கு மூன்றுமுறை உற்பத்தி செய்தார்.
நான்கு குழந்தைகளின் தாய்
சந்தனமாரியையும் பாரதியையும் பார்க்கச் சனிக்கிழமை தோறும் இரவு வந்துவிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் பாளையங்கோட்டைக்குச் செல்வதையும், இவ்விரு நாள்களிலும் சமையலில் மனைவிக்கு உதவுதல், துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்வதையும் கோயில்பிள்ளை வழக்கமாக்கினார். இக்காலகட்டத்தில் அத்தம்பதியருக்கு 1972, 1975 ஆண்டுகளில் முறையே பசுபதியும் ரகுபதியும் பிறந்தனர். ரகுபதியின் பிறப்பால் சந்தனமாரியை வாதநோய் தாக்கியது. தாயும் சேயும் இறக்கும் அபாயமும் ஏற்பட்டது. ரகுபதியைத் தாயிடமிருந்து பிரித்துத் தாய் மாமனிடம் தத்துக் கொடுக்க அறிவுறுத்தினர். இதைச் செய்ய மறுத்த கோயில்பிள்ளை, வேலைக்குச் செல்வதை முற்றிலும் நிறுத்தினார். வீட்டிலிருந்து தாய் – சேய்க்கும், மூத்த இரு குழந்தைகளுக்கும் சமைத்தல் உட்பட பணிவிடைகளைச் செய்தார். தம்பதியினர் இருவரும் வேலைக்குச் செல்லாததால் வறுமை தலைதூக்கியது. இதைச் சமாளிக்கச் சொத்துகளை விற்றார். இறுதியில் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றினார். பின்னர் இருவரும் அவரவர் தொழில்களைத் தொடங்கினர். இந்நிலையில் நான்காவதாக 1978இல் லால்பதி பிறந்தான். ஆக, இத்தம்பதியினருக்கு நான்கு ஆண் குழைந்தைகள். தேரிப்பனையில் T.D.T.A பள்ளியில் அவர்களை ஐந்தாம் வகுப்புவரை படிக்கச் செய்தனர். ஆறாம் வகுப்பு முதல் பாரதி, பசுபதி ஆகியோர் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் பயின்றனர். ரகுபதியை நாசேரத் மர்காஷியஸ் பள்ளியிலும், லால்பதியை ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் பள்ளியிலும் சேர்த்தனர். ரகுபதி, லால்பதி ஆகியோருடன் சந்தனமாரி வசித்தார். கோயில்பிள்ளை வாரத்திற்கு ஒருமுறையும் பாரதி, பசுபதி ஆகியோர் விடுமுறை நாட்களிலும் வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது எப்போதாவது நிகழும். வெளியூரில் தங்கியிருந்த மூத்த மகன்களின் வருகைக்காகக் காத்திருப்பதை, “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” எனக் கூறி சந்தனமாரி கடிதம் எழுதினார். இவருடைய கையெழுத்துகள் அச்சில் வார்த்தது போல் இருந்தன. குழந்தைகளின் நிழற்படங்களை நாசரேத் வெல்கம் ஸ்டூடியோவில் எடுத்தார். அக்கிராமத்தில் வேறு எப்பெண்களும் இதைச் செய்யவில்லை.
சுள்ளைக்குள் காற்றைச் செலுத்தி தீ மூட்ட விசிறியுடன் அமைக்கப்பட்டிருக்கும் பெட்டி
மாற்றுத் தொழில்
பெண் குழந்தைகள் இல்லாத சந்தனமாரி, ஆண் குழந்தைகளை ஆணாதிக்கமற்று வளர்த்தார். வீட்டு வேலைகளைச் செய்ய ரகுபதியைப் பயிற்றுவித்தார். லால்பதியின் பிறப்புக்குப் பின்னரும் சுண்ணாம்பு உற்பத்தியைத் தொடர்ந்தார். கட்டுமானத்தில் சிமெண்ட்டும் செங்கற்களும் பயன்படுத்துவது பரவலானதால் 1980களின் நடுப்பகுதியில் சுண்ணாம்பும், கற்கள் விற்பனையும் சரிந்தன. வருவாய் பாதிக்கப்பட்டதால் சந்தனமாரி மாற்றுத் தொழிலுக்கு நகர்ந்தார். “ஏர்வாடி ஹரிஜன தீப்பெட்டி உற்பத்தியாளர் சேவை தொழிற் கூட்டுறவு” சங்கத்தின் உறுப்பினரானார். 1986 செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க அச்சங்கத்தின் செயலர் 1986 ஆகஸ்ட் 18 தேதியிட்ட கடிதத்தைச் சந்தனமாரிக்கு அனுப்பினார். சுயதொழிலை முன்னெடுக்க வங்கிக் கடனுக்காகச் சேமிப்புக் கணக்கும், வருவாய்ச் சான்றும் பெற்றார். வங்கிக் கணக்குத் தொடங்குதல் என்பது மாதச் சம்பளம் பெற்ற நடுத்தர வர்க்கத்திடம்கூட பரவலாக இல்லாத அக்காலத்தில், சந்தனமாரி தன் வீட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள நாசரேத் கனரா வங்கியில் 1981 ஜூன் 16 அன்று சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார். பொதுவாகக் கணவர் / தந்தையின் பெயரில் வருமானச் சான்று பெறுவது வழக்கம். இதற்கு மாறாக, சந்தனமாரி தன் பெயரில் பெற்றார். சுயதொழிலுக்குக் கடன் பெறுவதற்காக அவற்றைச் செய்தார் எனக் கருதலாம். இத்தொழிலை முன்னெடுக்க வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஏர்வாடிக்கும் பிற நகரங்களுக்கும் சென்றுவர வேண்டும். உடல்நலமின்மை, தொலைதூரம் சென்றுவர இயலாமை, குழந்தைகள் இருவரைப் பராமரித்தல் போன்ற காரணிகளால் சந்தனமாரியால் அத்தொழிலை முன்னெடுக்க இயலவில்லை. சுண்ணாம்பு உற்பத்தியும் 1990களின் தொடக்கத்திலேயே அழிந்தது.
பாரதி கட்டடப் பொறியியலும், பசுபதி பத்தாம் வகுப்பும் முடித்து வேலைக்குச் சென்றனர். இவர்களின் வருவாய் குடும்பத்திற்குத் துணைபுரிந்தன. 1992இல் பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் கோயில்பிள்ளையின் மனதைத் தாக்கியது. பாளையங்கோட்டையில் கட்டட ஒப்பந்தத் தொழிலை நிறுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைந்து மீண்டும் செங்கொடியைக் கையிலேந்தினார். டிகேசி நகரிலேயே மனைவி மகன்களுடன் தங்கினார். சந்தனமாரியின் சுள்ளை இயங்கிய இடத்தில் தேங்காய்ச் சிரட்டைகளைக் கரிக் கட்டையாக்கும் மூட்டமிடும் வேதிவினைத் தொழிலைத் தொடங்கினார்; இதற்குத் துணையாகச் சந்தனமாரி செயல்பட்டார். இக்கரிக்கட்டை தங்கத்தை உருக்கப் பயன்படுத்தியதால் அதை நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி, வள்ளியூர், பனகுடி பகுதிகளிலுள்ள பொற்கொல்லர்களுக்கு விற்றனர். டிகேசி நகர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கித் தலைவராகச் செயல்பட்ட கோயில்பிள்ளை, சங்க உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுத்த தலா ஐந்து ஏக்கர் மானாவாரி நிலம் இத்தம்பதியருக்கும் கிடைத்தது. இவர்கள் அதில் பயிரிட்டனர்; நீரின்மையால் விவசாயம் பொய்த்தது. இவர்களுக்குச் சொந்தமான மற்றொரு ஒரு ஏக்கர் குளத்துப் பாசனத்தில் நெல் பயிரிட்டனர். சொந்த நிலத்தில் விவசாயம் செய்த சந்தனமாரி நடவு, அறுவடைக் காலங்களில் கூலி வேலைகளுக்கும் சென்றார். 1990களின் நடுப்பகுதிக்குப் பின்னர் உடல்நிலை பலவீனமானதால் சந்தனமாரி எந்தத் தொழிலிலும் ஈடுபடவில்லை.
குடும்ப நிர்வாகி
சந்தனமாரி, சுண்ணாம்பை ஒரு காளை மாட்டு வண்டிக்கென விலை நிர்ணயித்து ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த இடைத்தரகரிடம் விற்றார். வீடு, மதில்சுவர் கட்டுவதற்கான கற்களையும், வீட்டுக்கழிவுகளை உரமாக்கியும், ஆடு கோழிகளை இறைச்சிக்கும் விற்றார். பசுவை வளர்த்து, பால் கறந்து ஆனந்தபுரம் கூட்டுறவுச் சங்கத்தில் கொடுத்ததால் மாதந்தோறும் ஒரு தொகை கிடைத்தது. அந்தப் பகுதியில் பெண்கள் கூலிக்காகப் பிறரைச் சார்ந்திருந்த நிலைக்கு மாறாக, சந்தனமாரி ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுயதொழில்களைத் தனித்துச் செய்தார். விவசாயத்தில் கூலிக்கும் அறுவடையில் தானியத்துக்கும் பிறரிடம் வேலை செய்வதை இரண்டாம் நிலையில் வைத்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் 1983 ஜூலை 4 அன்று வழங்கிய வருவாய்ச் சான்றுபடி சந்தனமாரியின் ஆண்டு வருவாய் ரூ. 3,600. கோயில்பிள்ளையும், மூத்த மகன்களும் தங்கள் வருவாயையும், இளைய மகன்கள் தாம் ஈட்டிய கூலியையும் சந்தனமாரியிடம் கொடுத்தனர். சந்தனமாரிதான் குடும்பத்தின் நிதி நிர்வாகத்தைச் செய்துவந்தார். தன் கட்டுப்பாட்டிலிருந்த இரும்பாலான டிரங்க் பெட்டியில் பணத்தையும் ஆவணங்களையும் வைத்திருந்தார். தொடக்கத்தில் பணத்தைக் கையில் வைத்துக் கையாண்டார். பின் தேரிப்பனை அஞ்சலகத்திலும் வங்கியிலும் சேமிப்புக் கணக்குகள் தொடங்கினார். 1981இல் தொடங்கிய வங்கிச் சேமிப்புக் கணக்கை 1998 வரை பராமரித்தார். தன்னுடைய தம்பி இசக்கிமுத்துவின் மனைவி பானுமதி நடத்திய தீபாவளி மாதச் சீட்டில் பணம் சேர்த்தார். நாசரேத்தில் செவ்வாய்க் கிழமைதோறும் கூடும் வாரச் சந்தைக்குப் பேருந்தில் சென்று ஒருவாரத்திற்குத் தேவையான பொருட்களையும், மகன்களுக்காகத் தின்பண்டங்களையும் வாங்குவதை வழக்கமாக்கினார். தன் வயலில் விளைவித்ததும், அறுவடைக் கூலியாகவும் கிடைத்த நெல்லைச் சேமித்து தேவையானபோது வேகவைத்து புழுங்கல் அரிசியாக்கிச் சோறாக்கினார். நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கினார். கோடைக் காலங்களில் பறித்த வேர்க்கடலையைச் சேமித்துத் தின்பண்டமாக வைத்திருந்தார். குடும்பத்தின் மொத்த நிதி, தானிய வரவு செலவைக் கணக்கிட்டு நிர்வகித்தார். இத்தகைய குடும்பத் தலைவி அந்தக் கிராமத்தில் சந்தனமாரி ஒருவரே.
அச்சம் தவிர்த்தார்
சந்தனமாரி துணிச்சலான பெண்ணும்கூட. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வழியில் டிகேசி நகர் கிராமத்துப் பெண்களிடம் ஆதிக்க ஜாதி குடிகாரன் அத்துமீறினான். அவனிடமிருந்து தப்பிவந்து தகவலைக் கூறவே கிராமத்திலிருந்த பெண்களும் சிறுவர்களும் திரண்டனர். அனைவருக்கும் முன்னணியில் நீண்ட கம்புடன் வீறுநடையில் சந்தனமாரி சென்றார். தோட்டத்துக்குள் மோட்டார் அறையில் இருந்தவனைப் பார்த்ததும் அனைவரும் அஞ்சி நின்றனர். சந்தனமாரி துணிந்து சென்று நீண்ட கம்பால் அவனைக் குத்தினார்; அவன் நிலைகுலைந்து விழுந்தான். அருகில் சென்று அவனைத் தாக்கினார் சந்தனமாரி. பிறரும் தாக்கினர். அரை நிர்வாணத்துடன் இழுத்துவந்து கிராமத்தில் ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அவன் இறந்துவிடக்கூடாது என்பதற்காக சந்தனமாரி அவிழ்த்துவிட்டதால் அவன் சென்றான். வட்டக் கண்ணன் வகையறாவில் மூத்த பெண், ஆதிக்க ஜாதிகளைச் சார்ந்து வாழாதது, ஆணாதிக்கமற்ற குடும்பம், சுயாதீனமாக இயங்கியது போன்றவையால் உருவான துணிச்சலால்தான் சந்தனமாரி அக்குடிகாரனைத் தாக்கினார்.
தோழரின் தோளானார்
சந்தனமாரியின் உறவினர்கள் சிலர் குடிபோதையில் மனைவிகளை அடித்தனர். இதைச் சந்தனமாரி தடுத்தார். அஞ்சிய மனைவிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். கோயில்பிள்ளை ஆணாதிக்கமற்றவர்; சமத்துவமாகச் செயல்பட்டவர். மது குடித்தபோதும் நிதானமாகத் தெளிவான அரசியலை வீட்டில் பேசினார். உடுப்புகளைத் துவைப்பது உட்பட தன் தனிப்பட்ட தேவைகளுக்காகச் சந்தனமாரியைச் சுரண்டவில்லை. சமைத்தல், சலவை எனச் சகல வேலைகளையும் செய்தார். சந்தனமாரியைப் பார்த்து கோயில்பிள்ளையும் தானே இசைத்துப் பாடினார். அவர் மீது உண்மையான பேரன்பும் பெருங்காதலும் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாகச் சந்தனமாரியிடம் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருந்தார். நற்குணங்களுடன் தொண்டாற்றிய கோயில்பிள்ளைக்குத் தோள்கொடுத்த சந்தனமாரி, குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார். இயக்க வேலை நிமித்தமாக கம்யூனிஸ்ட், அம்பேத்கர் மக்கள் இயக்கத் தோழர்களைத் திடீர் திடீரென்று அழைத்து வந்தபோதெல்லாம் அவர்களுக்குச் சந்தனமாரி உணவளித்தார். பிடாநேரி பொதுப் பஞ்சாயத்தில் கோயில்பிள்ளை இருமுறை துணைத் தலைவராக இருந்தபோதும், இப்பொறுப்பில் இல்லாதபோதும் வீட்டு மனை, குடிநீர், மின்சாரம், சாலை என டிகேசி நகருக்கும், அருகமை கிராமங்களுக்கும் தேவையானவற்றைக் கிடைக்கச் செய்தார். டிகேசி நகர் கிராமமே இத்தம்பதியினரால்தான் உருவானது. இவை அனைத்தும் தோழரான கணவருக்குத் தோள் கொடுத்த சந்தனமாரியால் விளைந்தன.
சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியச் சுள்ளை
இளைப்பாற்றிய இல்லம்
கோயில்பிள்ளை துணையைத் தேடினார்; நகை, பணத்தைக் கேட்கவில்லை. ஒரு ஜோடி கம்மல், ஒரு மூக்குத்தி, ஒரு செயின் ஆகியவற்றை சந்தனமாரிக்கு ஏசுவடியான் கொடுத்தார். இந்நகைகளைச் சந்தனமாரி இழக்கவில்லை. கூடுதலாகச் சில பவுன் நகைகளை வாங்கினார். இளங்கலை படித்த ரகுபதிக்கு ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்தார். இத்தம்பதியரின் தந்தைகளின் சில ஏக்கர் நிலத்தில் இவர்களுக்குப் பங்கு கிடைக்கவில்லை. இத்தம்பதியினர் ஒரு ஏக்கர் நன்செய் நிலத்தை வாங்கி சந்தனமாரி பெயரிலேயே பதிந்தனர். அந்தக் கிராமத்தில் சந்தனமாரிக்குத்தான் முதன்முதலில் நன்செய் நிலவுடைமை கிடைத்தது. அரசு வழங்கிய 10 செண்ட் வீட்டுமனையில் மதில் சுவருக்கும், ஐந்து அறைகளுடனும் இரு திண்ணைகளுடனும் கட்டப்பட்ட வீட்டுக்கும் தேவையான கற்களையும் சுண்ணாம்பையும் சந்தனமாரி கொடுத்தார். சந்தனமாரி சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தால் ஓடு, பனைமரம், ஜன்னல், கதவுகள் வாங்கினர்; கூலியும் கொடுத்தனர். அங்கு அப்போதிருந்த ஓரிரு காரை வீடுகளில் இதுதான் மதில்சுவருடன் கட்டப்பட்ட பெரிய வீடு. இவை சந்தனமாரியின் நிதி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டன.
டிகேசி நகரின் முதல் தெருவில் முதலிலுள்ள இவர்களின் வீடு பொதுத் தொண்டுக்கான இல்லமானது. இவ்வீட்டில் வழிப்போக்கர்கள் குடிநீர் குடித்தனர்; வெள்ளாளர், தேவர், நாடார் ஜாதிகளைச் சேர்ந்தோர் தம் மிதிவண்டிகளை நிறுத்தினர்; தோழர்களும் அதிகாரிகளும் வந்துசென்றனர். மெஞ்ஞானபுரத்துக் காவல்நிலைய காவலர்கள் ரோந்து வந்துசென்றதற்காகக் கையொப்பமிடும் புத்தகமும் இவ்வீட்டில்தான் இருந்தது. அவர்களும் இவ்வீட்டுக்கு வந்து கையொப்பமிட்டுச் சென்றனர். அவ்வீட்டு மொட்டைமாடி சுவரில் கிறிஸ்துவம், இசுலாம், இந்து மத ஒற்றுமைக்கான குறியீடும் வரையப்பட்டது; அது ஜாதி, மதம், வர்க்கம் கடந்து அனைவரையும் அரவணைத்தது. அவ்வீட்டுக்கு வந்தவர்களைத் திண்ணையில் அமரச் செய்து தேவைகளைக் கேட்டனர். அக்கிராமத்துக்கு வரும் புதிரை வண்ணார் சின்னத்துரை அவ்வீட்டுத் திண்ணையில்தான் படுத்துறங்கினார். மாலை நேரங்களில் அவ்வீட்டின் மதில்சுவரில் அமர்ந்து கதையடித்தனர். இரவு நேரங்களில் சொந்தபந்தங்கள் அங்குக் கூடுவர், கதைகள் பேசுவர். முற்றத்தில் முதியவர்களும், மொட்டை மாடியில் இளைஞர்களும் படுத்துறங்கினர். அவ்வீடு இளைப்பாற்றும் இல்லமானது. இவை நிகழ்வதைச் சந்தனமாரி அனுமதித்தார். ”உபகாரம் செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதே” எனத் தன் குழந்தைகளுக்கு அறிவுறுத்திய சந்தனமாரி, பிறருக்குப் பொருட்களும் நிதியுதவியும் செய்தார்.
பாரதியும் ரகுபதியும் அக்குடும்பத்தின் முதல் கட்டடப் பொறியியல் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றதிலும், பசுபதியும் லால்பதியும் பத்தாம் வகுப்புவரையும் படித்ததிலும் சந்தனமாரியின் பங்கு அளப்பரியது. அவரை வாதநோய் மோசமாக்கியது. தான் வளர்த்த பசுவில் தானே பால்கறந்து இசக்கியம்மனுக்குச் செவ்வாய், வெள்ளிதோறும் தவறாது பாலூற்றி விளக்கேற்றினார். 2000 பிப்ரவரி 02 அன்று கோயில்பிள்ளையின் உடலைப் பாளையங்கோட்டையிலிருந்து இரவு டிகேசி நகருக்குக் கொண்டு வந்ததும் கதறி அழுதார்; இம்மரணம் சந்தனமாரியைக் கடுமையாகப் பாதித்தது. சந்தனமாரியுடன் ரகுபதியும் லால்பதியும் வசித்தனர். சந்தனமாரி, மேரியை வணங்கினார்; ஜெபக் கூட்டங்களுக்குச் சென்றார். பின்னர், திருச்சிராப்பள்ளியிலுள்ள மகன் பாரதி – சாந்தி குடும்பத்தினருடன் வசித்தார். கீழே விழுந்து இடுப்பு முறிந்ததால், திருச்சிராப்பள்ளியிலிருந்து டிகேசி நகருக்குக் கொண்டு வரப்பட்டார். வாதநோயால் அறுவைசிகிச்சை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகம் பாதிப்படைந்தது. உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது; ஓரிரு நாட்கள்தான் உயிர்வாழ்வார் என மருத்துவர் ராமகுரு கூறினார். மொத்த வாழ்நாளில் குறைவான நாட்கள்தான் கணவருடனும் நான்கு மகன்களுடனும் சந்தனமாரி இருந்தார். 2003 ஜனவரி 17 காலையில் உடல்நிலை மோசமானது. நான்கு மகன்மகளும் பந்தங்களும் சந்தனமாரியைச் சுற்றி நின்றனர். கைகளை நீட்டி ஏதேதோ கூறினார்; எவையும் விளங்கவில்லை. மனதிற்குள் என்ன நினைத்தாரோ? சந்தனமாரியின் கண்களில் கண்ணீர் வழிந்தன. அனைவரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்த சந்தனமாரி அவ்வாறே இறுதி மூச்சுவிட்டார்.
l ko.ragupathi@gmail.com






