இன்று நாம் வாழும் உலகம், ஒரு நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தின் நுனியில் நின்றுகொண்டு தீக்குச்சியை உரசுவதைப் போன்றது. முதலாளித்துவம் என்பது மென்மையான பொருளாதாரக் கொள்கை அல்ல; அது பிணம் தின்னும் விலங்கு. இந்தப் புவிப்பரப்பை ஏற்கெனவே இருமுறை இரத்தத்தால் கழுவி, தனது லாபப் பசிக்குத் தின்று தீர்த்த பிறகும் அதன் வயிறு இன்னும் நிறையவில்லை. இன்று அமெரிக்க – இஸ்ரேல் கூட்டின் வழியாகப் பாலஸ்தீனத்தின் ஆன்மாவைத் துவம்சம் செய்வதும், ஈரானின் எல்லைகளில் போர் மேகங்களைச் சூழ வைப்பதும், கனடாவையும் டென்மார்க்கையும் தனது வரைபடத்தில் வெறும் லாபக் கணக்குகளாக மாற்றுவதும், வெனிசுலாவின் அதிகாரத்தைச் சிறைபிடிப்பதும் அந்தத் தீராத பசியின் வெளிப்பாடுகளே.
இத்தகைய முக்கியமான தருணத்தில்தான் கார்ல் மார்க்ஸினுடைய ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ நூல் சர்வதேசிய வாசிப்பு அரங்கிற்கு வருகை தந்திருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளியின் உழைப்புச் சக்தி எப்படி ஒரு சரக்காக மாற்றப்பட்டு மூலதனத்தைப் பெருக்குகிறது என்பதை விளக்கும் முக்கிய அரசியல் பொருளாதார நூலான இது, கார்ல் மார்க்ஸ் 1847இல் பிரஸ்ஸல்ஸ் ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பாகும். 1849இல் நியூ ரைனிஷ் ஜூடிங் இதழில் கட்டுரைகளாக வெளியாகி, பின்னாளில் ஏங்கெல்ஸால் திருத்தப்பட்டு 1891இல் சிறுநூலாக வெளியானது. பாபாசாகேப் அம்பேத்கர் நடத்திய ஜனதா இதழ், இப்புத்தகத்தின் மராத்திய மொழிபெயர்ப்பை ஒன்பது பகுதிகளாக 1932 அக்டோபர் 31 முதல் டிசம்பர் 3 வரை வெளியிட்டது. இதிலிருந்து பாபாசாகேப் இப்புத்தகத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். குறிப்பாக, இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக இது வெளியிடப்பட்டது என்பது மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். இப்புத்தகம் உலக வாசிப்பு அரங்கிற்கு வந்த வரலாற்றைச் சற்றுப் பார்ப்போம்.
2020ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள ‘இடதுசாரி பதிப்பகங்கள் குழு’ (LeftWord Books), பாரிஸ் நகரிலுள்ள ‘திரைக்கடை ஆய்வுக் கழகம்’ (Tricontinental: Institute for Social Research) ஆகிய அமைப்புகள் இணைந்து ‘சிவப்பு புத்தக நாளு’க்கு அழைப்பு விடுத்தன. 1848 பிப்ரவரி 21 அன்றுதான் கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதன்முதலில் லண்டனில் வெளியிடப்பட்டது. இது உலக அரசியலையே உலுக்கியதை நாம் அறிவோம். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையிலேயே இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. முற்போக்கான, புரட்சிகரமான இலக்கியங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தல், எழுத்தாளர்கள் – சிந்தனையாளர்களின் கருத்துரிமையைப் பாதுகாத்தல், சமத்துவத்தை வலியுறுத்தும் புத்தகங்களைப் பொதுவெளியில் வாசித்து விவாதித்தல் போன்றவையே தம் நோக்கங்களாக மேற்கூறிய அமைப்புகளால் வரையறுக்கப்பட்டன.
இடதுசாரி பதிப்பாளர்களின் சர்வதேச ஒன்றியம் (International Union of Left Publishers – IULP): இது உலகம் முழுவதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட இடதுசாரி பதிப்பகங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இயங்குகிறது. இந்தியாவைச் சேர்ந்த LeftWord Books (டெல்லி), பாரதி புத்தகாலயம் (தமிழ்நாடு) போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இச்சிறப்பான திட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்தியாவெங்கும் முற்போக்கு ஜனநாயகச் சக்திகள் இந்த வாசிப்பு இயக்கத்தை விரிவுபடுத்தி வருகின்றன.
கார்ல் மார்க்ஸின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ நூல், உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான பொருளாதார உறவை விளக்குகிறது. இந்தியச் சூழலில் இந்த உறவு, வெறும் வர்க்க ரீதியாக மட்டும் அல்லாமல், சாதிய உற்பத்தி முறையோடும் (Caste Mode of Production) பின்னிப் பிணைந்துள்ளது என்பதை நாம் முக்கியமாகப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
‘கூலி உழைப்பும் மூலதனமும்’ நூல், உழைப்பாளியின் உழைப்புச் சக்தி எவ்வாறு ஒரு ‘பண்டமாக’ மாற்றப்பட்டு முதலாளித்துவச் சந்தையில் விலைக்கு வாங்கப்படுகிறது என்பதைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யும் செறிவான படைப்பாகும். இதில் மார்க்ஸ், மூலதனம் என்பது வெறும் பொருளல்ல; அது மனிதர்களைச் சுரண்டுவதற்கான ‘சமூக உறவு’ என்பதை நிறுவுகிறார். தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலிக்கும், முதலாளி ஈட்டும் லாபத்திற்கும் இடையே ஒரு ‘தலைகீழ் விகிதாச்சார’ முரண்பாடு (ஒன்று உயர்ந்தால் மற்றொன்று குறையும்) நிலவுவதையும், நவீன இயந்திரங்கள் புகுத்தப்படும்போது போட்டி தீவிரமடைந்து தொழிலாளியின் வாழ்வாதாரம் எவ்வாறு ‘தங்கச் சங்கிலியால்’ பிணைக்கப்பட்ட அடிமைத்தனமாக மாறுகிறது என்பதையும் இந்நூல் தர்க்கரீதியாக விளக்குகிறது. இத்தகைய கருத்துகளை இன்றைய ஏகாதிபத்திய சமூக அமைப்பிலும், செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ச்சி அடையும் விஞ்ஞான உலகிலும் பொருத்திப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போலப் பலராலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. நாமும் இந்த நூலில் அடங்கியுள்ள பொருளியல் விஞ்ஞானத்தை இந்தியச் சாதிய அமைப்போடும் பாபாசாகேப்பின் சமூக ஆய்வோடும் பொருத்திப் பார்ப்பது இந்திய சமூக, அரசியல், பொருளியல் சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இந்நூலில் மூலதனம் பற்றிய சித்திரத்தை வழங்கும்போது, “புதிய மூலப்பொருட்களையும், புதிய உழைப்புக் கருவிகளையும், புதிய பிழைப்புச் சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களும், உழைப்புக் கருவிகளும், எல்லா வகையான பிழைப்புச் சாதனங்களும் அடங்கியதே மூலதனம். மூலதனத்தின் இந்த உள்ளடக்கக் கூறுகள் யாவும் உழைப்பில் தோற்றுவிக்கப்பட்டவையே. அவையே உழைப்பின் உற்பத்திப் பொருள்களாகும்; சேமிக்கப்பட்ட உழைப்பாகும்” என்கிறார் மார்க்ஸ். அவர் குறிப்பிடும் ‘சேமிக்கப்பட்ட உழைப்பு’ (Accumulated Labour) இந்தியாவில் ‘சாதிய மூலதனமாக’ உருமாறி நிற்கிறது. இங்கே மூலதனம் என்பது வெறும் பணமோ, இயந்திரமோ அல்ல. அது நிலம், கல்வி, அதிகாரம் ஆகியவற்றைச் சில குறிப்பிட்ட ‘சலுகை பெற்ற சாதிகள்’ பல நூற்றாண்டுகளாகத் தங்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் ஒரு ரகசியக் கிடங்கு.
ஒரு தலித் தொழிலாளி சந்தைக்கு வரும்போது, அவர் வெறும் உழைப்பை மட்டும் கொண்டு வருவதில்லை; வரலாற்று ரீதியாகத் தட்டிப் பறிக்கப்பட்ட தனது உரிமைகளின் வடுக்களையும் சுமந்து வருகிறார். மார்க்ஸ் சொல்லும் ‘வரலாற்று வழிச் சேமிப்பு’, இங்கே மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிச் சேர்க்கப்பட்ட சாதிய அதிகாரத் திரட்சி ஆகும். இதனால், உற்பத்திச் சாதனங்கள் என்பது வெறும் இயந்திரங்களாக மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட சாதியினரின் ‘பரம்பரைச் சொத்தாக’ மாறின. ஒரு தலித் அல்லது பிற்படுத்தப்பட்ட தொழிலாளி நவீனச் சந்தைக்குள் நுழையும்போது, அவர் வெறும் ‘உழைப்பாளியாக’ மட்டும் வருவதில்லை; வரலாற்று ரீதியாக உற்பத்திச் சாதனங்கள் மறுக்கப்பட்ட, ‘மூலதனமற்ற’ ஒருவராக வருகிறார். மாறாக, ஆதிக்கச் சாதியினர் தாங்கள் வரலாற்று ரீதியாகச் சேமித்து வைத்த சமூகத் தொடர்புகள், நில உடைமை ஆகியவை மூலம் மிக எளிதாக முதலாளிகளாக உருமாறுகின்றனர். எனவே, இந்தியாவில் மூலதனம் என்பது உழைப்பின் திரட்சி மட்டுமல்ல; அது சாதியப் படிநிலையின் வழியாகக் கடத்தப்பட்ட ‘தலைமுறை சார் அதிகாரச் சேமிப்பும்’ ஆகும். இதுவே தொழிலாளியைத் தன் உழைப்பின் பலனை அனுபவிக்க விடாமல் தடுத்து, அவனைச் சாதியச் சுரண்டலுக்குள் நிரந்தரமாகக் கட்டிப்போடுகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உழைப்புச் சக்தியை மட்டுமே நம்பியிருக்கிற திரள் அனைத்துச் சாதியிலும் இருக்கிறது என்பதாகும். ஆனால், தலித் அல்லாத சமூகங்களில் இருக்கிற உழைப்புச் சக்தித் திரள் தன்னுள் சாதிய உணர்வைத் தக்கவைத்துக்கொண்டு, சாதிய மூலதனக் குவியலின் அங்கத்தினர் ஆவதற்கான அடையாள அட்டை தன்னிடம் உள்ளதாகக் கருதி, தலித் உழைப்புச் சக்தித் திரளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறது அல்லது அதனை அந்நியப்படுத்துகிறது.
இத்தகைய போக்கைச் சுட்டிக்காட்டித்தான், 1938இல் மன்மத் நகர் G.I.P. ரயில்வே மாநாட்டு மேடையில் நின்றுகொண்டு பாபாசாகேப் அம்பேத்கர் வர்க்கத்திற்கும் சாதியத்திற்குமான முக்கிய உறவை விளக்கினார். இந்தியத் தொழிலாளர் வர்க்கம் என்பது வெறும் பொருளாதாரச் சுரண்டலுக்கு உள்ளான கூட்டம் மட்டுமல்ல; அது ‘முதலாளித்துவம்’, ‘பார்ப்பணியம்’ எனும் இருபெரும் பகைவர்களால் ஒரே நேரத்தில் வளைக்கப்பட்டு, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஒரு பலிபீடம் என்று அவர் கூறினார். மார்க்ஸ் விவரிக்கும் கூலி – லாபப் போராட்டத்தில் தொழிலாளர்களின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் ‘வர்க்க ஒற்றுமை’ மட்டுமே. தங்களுக்குள் நிலவும் போட்டியைத் தவிர்த்துவிட்டு, திரண்ட சக்தியாக நிமிர்வதுதான் அவர்களின் தற்காப்பு அரண். ஆனால் இந்தியாவில், அந்த அரணின் அஸ்திவாரத்திலேயே ‘சாதி’ எனும் நஞ்சு கலக்கப்படுகிறது.
ரயில்வே போன்ற பிரமாண்டமான உற்பத்தித் துறைகளில், இரும்பையும் நெருப்பையும் கையாளுபவர்கள் தங்களை ஒரே வர்க்கமாக, அதாவது ஒரே உடலின் கரங்களாக உணர்வதற்குப் பதிலாக, சாதி ரீதியான மேல் – கீழ் அடுக்குமுறையினால் தலித் மக்கள் பகையோடு பார்க்கப்படுவதைப் பாபாசாகேப் விளக்கினார். மார்க்ஸ் சொல்லும் ‘தங்கச் சங்கிலி’ ஒரு தொழிலாளியை அவனது சொந்த உழைப்பின் பலனிலிருந்து அந்நியப்படுத்துகிறது என்றால், அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ‘சாதிய விலங்கு’ ஒரு தொழிலாளியை அவனது சக தொழிலாளியிடமிருந்தே பிரித்து அந்நியப்படுத்துகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றப்படும் இந்த மாயச் சுழலில், உழைப்பின் விலையைத் தீர்மானிக்கும் அந்த ‘பேர வலிமையை’ தொழிலாளர் வர்க்கம் இழந்து நிற்கிறது. எனவே, இந்தியாவில் சாதி ஒழிப்பு என்பது ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சமூக நீதிப் போர் மட்டுமல்ல; அது ஒவ்வொரு தொழிலாளியும் தனது பிழைப்பிற்காக, தனது வாழ்வாதாரத்திற்காக, தனது பேர வலிமையை மீட்டெடுப்பதற்காக நடத்த வேண்டிய மிக அடிப்படையான போராட்டமாகும்.
மார்க்ஸியப் பகுப்பாய்வு பொதுவாக ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கிறது. அது ஆண்டான் – அடிமை, பண்ணையடிமை முறை, அதன்பின் நவீன முதலாளி – தொழிலாளி வர்க்கம் எனச் சீரான வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை நமக்காக விவரிக்கிறது. ஆனால், இந்தியாவின் புவியியலில் இந்த வரைபடம் சிதைந்து போயுள்ளது. இங்கே உழைப்பின் வரலாறு என்பது வெறும் தொழிற்சாலைகளின் புகையிலிருந்தோ அல்லது நிலப்பிரபுக்களின் சாட்டையிலிருந்தோ மட்டும் தொடங்கவில்லை; அது ஊருக்கு வெளியே கட்டப்பட்ட ‘சேரிகளின்’ மௌனத்திலிருந்து தொடங்குகிறது.
பாபாசாகேப் அம்பேத்கர் தனது ‘தீண்டாமை’ (Untouchability) நூலில் விவரிக்கும் அந்தப் பண்டைய காலத்துச் சேரிகளின் உருவாக்கம்தான், இந்தியாவின் உண்மையான ‘சேமிக்கப்பட்ட உழைப்பின்’ பிறப்பிடம். ஊருக்குள் வசிக்கத் தகுதியற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டுச் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட அந்த மனிதர்களின் உழைப்புதான், பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் ஆதிக்கச் சாதியினரின் ‘வரலாற்று வழித் திரட்டப்பட்ட சேமிப்பாக’ உருமாறியுள்ளது. ஐரோப்பியப் பண்ணையடிமை ஒருகட்டத்தில் தனது பண்ணையாரை எதிர்த்து வர்க்கமாகத் திரள முடிந்தது. ஆனால் இந்தியாவில், சேரிகளின் உருவாக்கம் உழைப்பாளர் வர்க்கத்தை இரத்தமும் சதையுமாகப் பிளந்து வைத்திருக்கிறது. இங்கே ‘சேமிக்கப்பட்ட உழைப்பு’ என்பது வெறும் தானியக் கிடங்குகள் அல்ல; அது ஒடுக்கப்பட்டவர்களின் உடலிலிருந்து பிழியப்பட்டு, ஆதிக்கச் சாதியினரின் பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்ட நீண்ட காலக் கொள்ளையின் வரலாறு. அம்பேத்கரின் சாதியப் பகுப்பாய்விலிருந்து தொடங்கினால் மட்டுமே, இந்திய மூலதனத்தின் முகத்தில் பூசப்பட்டுள்ள புனிதமான முகமூடியைக் கிழித்து, அதன் பின்னால் இருக்கும் அந்த ஆதிச் சுரண்டலைக் காண முடியும்.
கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வில் நுணுக்கமான ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்: “மூலதனத்தில் கிஞ்சித்தும் மாற்றம் ஏற்படாமல் மூலதனத்தின் பருப்பொருள் இடையறாது மாறிக்கொண்டே இருக்க முடியும்.” இந்தக் கூற்றை அப்படியே தூக்கி வந்து இந்தியச் சமூக வரைபடத்தின் மீது பொருத்தினால், ஒன்று திடுக்கிடும் உண்மை நமக்குப் புலப்படும். இங்கே மார்க்ஸ் குறிப்பிடும் அந்த ‘மாறாத சாரம்’ வேறு எதுவுமல்ல – ‘சாதி’தான். சாதி என்பது புதைந்து கிடக்கும் விஷ வாயுவைப் போன்றது; அதன் மேலிருக்கும் நிலப்பரப்பு மாறலாம், ஆனால் அதன் உள்ளிருக்கும் அழுத்தமும் தன்மையும் மாறுவதில்லை.
ஒருகாலத்தில், நிலப்பிரபுத்துவத்தின் ஈரமான வயல்வெளிகளில் ‘நிலம்’ என்ற பருப்பொருளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சாதி, பின்னர் காலனிய காலத்தின் விறைப்பான ‘அரசு உத்தியோகச்’ சட்டைகளை அணிந்துகொண்டது. இன்று, நவீனத் தாராளமயமாக்கல் எனும் பளபளப்பான கண்ணாடி மாளிகைகளில், அது ‘மென்பொருள் நிறுவனங்களாகவும்’, ‘தொழில்நுட்பப் பங்குகளாகவும்’, ‘டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்’ முதலீடுகளாகவும் தனது பருப்பொருளை மிக லாவகமாக மாற்றிக்கொண்டுள்ளது. ஆனால், இந்த வேஷ மாற்றங்களுக்கு அடியில் ஓடும் அந்த நச்சு வாயு அப்படியேதான் இருக்கிறது. அன்று வரப்பில் நின்றுகொண்டு உழைப்பைச் சுரண்டிய அதே அதிகாரம்தான், இன்று குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் ‘தகுதி’, ‘சமூகத் தொடர்புகள்’ என்ற நாகரிகப் பெயர்களில் ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சிக் குடிக்கிறது. மூலதனத்தின் உடைகள் நவீனமடையலாம்; ஆனால் அதிகாரம் யாரிடம் குவிய வேண்டும், உழைப்பு யாரிடமிருந்து பிழியப்பட வேண்டும் என்ற அந்தச் சாதியச் சமூக உறவு இன்னும் சிதையாமல் தொடர்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், சாதி என்பது தந்திரமான பாம்பு. அது தனது பழைய சட்டையைக் (பருப்பொருள்) கழற்றி எறிந்துவிட்டுப் புதிய பளபளப்பான சட்டையை அணிந்துகொள்கிறது. ஆனால், அதன் பற்களில் இருக்கும் ‘விஷம்’ (சுரண்டல்) கிஞ்சித்தும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
கார்ப்பரேட் யுகத்தின் அதீத வீச்சில், சாதி இந்துக்களின் கோட்டைக்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்லிய சிறு குழுவினர் ஏகாதிபத்திய மூலதனத்தின் கரங்களைப் பற்றிக்கொண்டு, உலகளாவியச் சந்தையின் உச்சியில் ஏறி நவீன முதலாளிகளாக மகுடம் சூட்டிக்கொண்டனர். ஆனால், அதே கோட்டைக்குள் இருக்கும் பெரும்பான்மையான சாதி இந்துக்கள், அதே சந்தைப் போட்டியின் கோரப் பற்களால் கடிக்கப்பட்டு விளிம்புநிலை உழைப்பாளர்களாகவும், வறுமையின் பிடியிலும் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இங்கேதான் மார்க்ஸ் விவரிக்கும் ‘வர்க்க உணர்வு’ ஒரு பெரும் மாயையின் முன் மண்டியிடுகிறது. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த ஏழைச் சாதி இந்து, தன்னைச் சுரண்டுவது உலக முதலாளியும் தனது சொந்தச் சாதி முதலாளியும்தான் என்பதை உணர்ந்து சக உழைப்பாளியான சேரியருடன் கைகோர்ப்பதற்குப் பதிலாக, விசித்திரமான தற்கொலை முடிவை எடுக்கிறார். அவர் தன்னைச் சிதைக்கும் அதே சாதி முதலாளியுடன் ‘சாதிய மூலதனப் பெருமிதம்’ எனும் நச்சுப் பிணைப்பில் தன்னை இணைத்துக்கொள்கிறார்.
மார்க்ஸ் முன்வைக்கும் ‘கூலி உழைப்புக்கும் மூலதனத்திற்கும்’ இடையிலான அந்தத் தீராத முரண்பாடு, இங்கே ‘சாதிப் பாதுகாப்பு’ எனும் போலித் திரையினால் மறைக்கப்படுகிறது. அந்த ஏழைச் சாதி இந்துவிற்குத் தன் வயிற்றுப் பசியின் கூர்மையை விட, சமூகப் படிநிலையின் ஏதோவொரு படிக்கட்டில் தனக்குக் கீழே ஒரு வர்க்கம் இருக்கிறது என்ற எண்ணமே ‘உளவியல் கூலி’யாக வழங்கப்படுகிறது. இந்தப் போலித் திருப்திதான் அவனது வர்க்கப் போராட்டத்தின் பார்வையை மறைக்கிறது. இதன் விளைவாகத்தான், சேரியிலிருந்து ஓர் இளைஞன் பொருளாதார ரீதியாகச் சற்றே நிமிர்ந்து, நல்ல ஆடையணிந்து, புல்லட்டில் ஏறி அல்லது சமமாக நின்று தேநீர் அருந்தித் தனது வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ளும்போது, ஏழைச் சாதி இந்துவின் விசித்திரமான ‘உளவியல் கூலி’ ஆட்டம் காணுகிறது. தங்களின் சொந்த வறுமையை மறக்க, அவர்கள் சேரியினரின் முன்னேற்றத்தைச் சிதைக்கத் துடிக்கிறார்கள். கையை வெட்டுவது, காலைத் துண்டிப்பது, காதலின் பெயரால் ஆணவக் கொலைகள் புரிவதும் யாவு தங்களின் சிதைந்து போன பொருளாதாரச் சரிவை ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் மீது வன்முறையாகச் செலுத்தி ஈடுகட்டும் விகாரமான முயற்சியே ஆகும். அவர்கள் தங்களின் காலியான தட்டில் விழும் உணவை விட, தங்களுக்குக் கீழே இருப்பவனின் முதுகில் விழும் அடியையே தங்களின் கௌரவமாகக் கருதுகிறார்கள்.
கார்ல் மார்க்ஸ் தனது அரசியல் பொருளாதார ஆய்வில் ஒரு தீர்க்கமான, அதே சமயம் உருவகங்கள் நிறைந்த வினாவை முன்வைக்கிறார்: “கறுப்பின மனிதன் என்பவன் யார்?” சாதாரணப் பொருளாதார மேதைகள் “அவன் கறுப்பினத்தவன்” என்று அவனது உடலியல் அடையாளத்தோடு நின்றிருப்பார்கள். ஆனால் மார்க்ஸ் அந்த அடையாளத்தின் பின்னால் ஒளிந்துள்ள அதிகாரத்தின் கரங்களைக் காட்டுகிறார்: “அவன் கறுப்பின மனிதன்தான். ஆனால், ஒரு குறிப்பிட்ட ‘சமூக உற்பத்தி உறவுக்குள்’ பிணைக்கப்படும்போது மட்டுமே அவன் ‘அடிமை’யாகிறான். பருத்தி நூற்பு இயந்திரம் என்பது வெறும் இயந்திரம்தான்; ஆனால் ஒரு குறிப்பிட்ட உறவின் வலைக்குள் சிக்கும்போதுதான் அது ‘மூலதனமாக’ உருமாறுகிறது.”
இந்தத் தர்க்கத்தின் கூர்மையை நாம் இந்தியச் சமூக வரைபடத்தின் ஆழமான காயங்களுக்குள் பொருத்தினால், அந்தத் தேடல் நம்மைப் பாபாசாகேப் அம்பேத்கரின் அறிவுப் பேரொளியிடம் கொண்டு வந்து நிறுத்தும். மார்க்ஸ், ஒரு மனிதன் ‘அடிமையாக்கப்படும்’ அந்த உற்பத்தி உறவின் பொருளாதாரச் சூத்திரத்தைப் பேசினால், பாபாசாகேப் அந்தச் சூத்திரம் எப்படி ‘மனிதத் தன்மையற்ற’ சமூக அமைப்பாக உறைந்து போனது என்பதை ஆராய்கிறார். ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ – ஆரியச் சமூகத்தில் நான்காம் வர்ணமாக மாற்றப்பட்டார்கள்?’, ‘தீண்டப்படாதோர் யார்? அவர்கள் எப்படிச் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டார்கள்?’ என்ற அம்பேத்கரின் பிரமாண்டமான வரலாற்று ஆய்வுகளை மார்க்ஸின் உற்பத்தி உறவுகளோடு இணைத்துப் பாருங்கள். இந்த இந்தியச் சாதிய உற்பத்தி முறைதான் அவர்களை ‘மூலதனமற்ற உழைப்பாளியாகவும்’, ‘சமூக விலக்கிற்குள்ளான பண்டமாகவும்’ மாற்றுகிறது.
இவ்வாறாக, ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்கிற மார்க்ஸின் இந்தச் செறிவான நூலை, இந்திய மண்ணின் சாதிய உற்பத்தி உறவுகளோடு பொருத்தி வாசிக்கும்போதுதான், நாம் வெறும் பொருளாதார மாற்றத்தைப் பற்றி மட்டும் பேசாமல், இந்தியச் சமூகத்தின் வேர்களை அசைக்கும் ஒரு மாற்றத்திற்கான கருத்தியலை வந்தடைய முடியும்.
l solomonmpipf@gmail.com





