இரட்சிப்பு

மு.சாகுல் ஹமீது

“நீவே தானி பெஞ்சுதுன்னாவு கதா? அப்ப நூவே கொலுசுதோ கட்டி உஞ்சாலி. த்தூ… சனியம் பட்டின நாயி” என்று கொண்டம்மா கிழவி தொண்டை கிழியும்படி கத்திக்கொண்டிருந்தாள். தலையில் முக்காடிட்டிருந்த முந்தானையின் நுனியைப் பிடித்து இழுத்து இடதுப் பக்க முகத்தை மறைத்திருந்தாலும், சேலையின் இடுக்கு வழியாகத் தீயில் கருகிய முகத்தோலின் சுருக்கங்கள் சிறு சிறு கொப்புளங்களாக எம்பி நிற்பது நன்றாகவே தெரிந்தது. குரலில் மட்டும்தான் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்ததே தவிர, முகத்தை மறைக்கும் முனைப்பில் அவளது உடலில் இயல்பாகவே வந்து கூடிவிட்ட அசைவின்மை அவளின் வசைச் சொற்களை இன்னும் விநோதமாக எடுத்துக் காட்டியது. சனியன் புடித்ததென்று இவள் முத்துவைத் திட்டுகிறாளா, இல்லை, தன்னைத் தானா என்று புரியாமல் விரல் நகங்கள் ஒவ்வொன்றையும் விஜயா கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். பதிலுக்குப் பதில் பேசி கிழவியைக் குதற வேண்டும் என்ற ஆவல் உள்ளுக்குள்ளே முணுமுணுத்தபடி ஊறத்தான் செய்கிறது. ஆனால், எப்போதும் ஆத்திரமோ, அழுகையோ வந்தால், தொண்டை அடைத்துக்கொண்டு மனதிலெழுந்த வார்த்தைகளை வாய்க்கு வரவிடாமல் அனாமத்தாகக் காணாமலாக்கி விடுவதைப் போல இப்போதும் விஜயாவுக்குப் பேச்சு எழவில்லை.

“இனி மேக்கொண்டு கட்டிப்போட்டுடுறேன். தயவுசேஸ்த்தி இந்தத் தடவ மட்டும் நன்னு மன்னிச்ரம்மா” என்று விஜயா கையைக் குவித்துக்கொண்டு கெஞ்சினாள். குளிரில் நின்று பேசுவது போலக் குரல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. ‘ஊம்…’ என்று உறுமியபடி கொண்டம்மா சேலையை விலக்கி விட்டு, முழங்காலளவிற்குப் பாவாடையைத் தூக்கினாள். வலது கால் முட்டியின் மேல் ஓரமாகத் தொடைச் சதையில் பற்களின் தடங்கள் இருந்தன.

“இக்கட பாருடி வெண்ணம்மவளே… அய்யய்யோ! சவத்து எழவு எப்டி புடிங்கி விட்ருக்குன்னு. வளக்குறாளாம் பொல்லா ஊர்ல இல்லாதத, பாகா மயிரு மாறி.”

விஜயாவிற்குக் கண்ணிரண்டிலும் நீர் முட்டிக்கொண்டு வந்தது. கொண்டம்மா சேலையை விலக்கக் குனிந்தபோது, அவள் முகம் சற்று தெரிந்ததும் பதறிப் போனாள். இடதுப் பக்கக் கன்னம் முற்றிலும் எரிந்துபோய், சதையே இல்லை. பல்வரிசை பார்வைக்குத் தெரியும்படி கருகிய சதையிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. கொண்டம்மாவின் முகத்தை இவ்வளவு பக்கத்தில் முதல் முறை பார்த்ததால், ஒரு நொடி விஜயாவின் உடலில் நடுக்கம் பரவியது.

“கெழவி என்னா சொல்லுதுடி விஜயா? காச் காச்சுன்னு ஒரே எலிக் கூச்சலால்ல போடுதா. நானும் பயந்து போய் வீட்ல சாக்குப்பைகளப் பூராம் தெறந்து தெறந்து பாத்துட்டு வந்தா, இதே இங்கன கத்திட்டிருக்கு. என்னவாம் இதுக்கு?” பக்கத்து வீட்டு செல்வி கிடுகுப் படலைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.

“மரியாத போயிடுத்துந்தி கழுத. நல்லா காவாய் மாறி வாய் வச்சிட்டு எப்பப் பாத்தாலும் இப்டித்தே பேசிட்டுத் திரியிற நீயி. இவ வளக்குற அந்த நாய்ச்சனியெ கடிச்சிப் புடுச்சுடி என்னிய.”

“அதே திருப்பிக் கடிக்கலாம்னு வச்சாவா. இதுக்கென்னா தெரியும்ட்டு இத போய் ஏச வந்துட்ட. ஒன்னு தர்மாஸ்பத்திரி போவணும். இல்லையா, இம்புட்டு சுண்ணாம்ப ஊமத்தா தழைல வச்சு அரச்சு பத்துப் போடு.. சரியாப்புடும். இதுக்குப் போய் இம்புட்டு அலுச்சாட்டியமாக்கும்.”

“வந்துட்டா நாடி வைத்தியரு. சின்னப் பாப்பா நாக்கு ஒன்னும் தெலியாது கதா? போடி போடி இவளே. ஒங்கொப்பன் கோயிந்தே நேனு பெத்த மனுஷி ஆயிந்தப்போ கைல சுல்லாவக் கூடப் புடிக்கத் தெரியாமா ஆட்டிக்கிட்டு தெருத் தெருவா திரியிவான். நீயெல்லாம் எனக்குப் பித்தி சொல்லுற பாரு. அப்ப இப்டித்தே நாய வச்சு எல்லாரையும் கடிக்க விடுவாளாக்கும். கடி பெத்தாக் கூட யாரும் எதும் கேக்காம பொத்திக்கிட்டுப் போய்டனும் இல்ல. மொத்த நாய்க்கர் தொழுவு பூராம் இவளுக்கும் இவ நாயிக்குந்தான பத்தரம் பாய்ன்ஞ்சு குடுத்துருக்கு” கொண்டம்மா பேசப் பேச விஜயா ஒடிந்து விடுவதைப் போல உடல் நொசிய மறுகினாள்.

“அவ்வா அதுக்காக நெம்பக்கியும் பேசாத நீயி. என்னமோ அவதே வேணும்ண்டே போய்க் கடீன்னு விட்டுருப்பாங்குற மாறிப் பேசுற. தெரியாம நடந்து போச்சு விட்ரு. இவ எப்பயுமே மெதாளுகணட்டாதே இருப்பான்னு உனக்கே தெரியும். சரிமல்லுக்கு நிக்கிறியே இவ கூடப் போயி. வா அவ்வா நா பத்துப் போட்டு விடுறேன் வா.”

“ஆமா! நீ என்னத்துக்குடி இவளுக்கு வாத்தாசு… இல்ல கேக்கேன், நீ எதுக்கு இப்போ வாத்தாசு சேசுதாவு. வாய்ல வெரல வச்சாக்கூட பேந்தப் பேந்த முழிக்கிற சின்ன பப்பால்ல இது. இதுக்கு எதுந்தெரியாது ம்ம்… இப்டியே எல்லா வாய்லயும் விழுவுறனாலத்தே பொட்டல்லோ ஒன்னியும் எர்படலேது. நல்லா மூளி அலங்காரி கணட்டால்ல வீட்ட நெறச்சி கெடக்கா” என்று சொல்லி விட்டு கொண்டம்மா நகர்ந்து செல்லவும் அறைவது போலவே கையை வீசி செல்வி திட்டிக்கொண்டு அவள் பின்னால் சென்றாள்.

கண்ணீர் வடியும் முகத்துடன் விஜயா அறைக்குள் வந்து கதவை அடைத்துக்கொண்டாள். கையால் தொண்டையை இறுக்கிப் பிடித்து வலி வந்தவள் போல முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீரை மட்டும் சாணி மொழுகிய தரையில் சிந்திக் கொண்டிருந்தாள். அழும்போது அவளது மூச்சுச் சத்தம்கூட எப்போதும் வெளியில் கேட்காது. கொண்டம்மாவிற்கு முன்பு பலராலும் இதே ஆயுதத்தால் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறவள்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவள் மீது அந்த ஆயுதம் பாயும்போது அதில் முளைத்திருக்கிற கூர்மையான புதிய முனைப்பற்கள் எப்படியோ ஆழப் புதைந்து சென்று மிக அந்தரங்கமான ஒரு காயத்தை உருவாக்கி விடுகிறது. அதில் கட்டிய சீழில் புழு துளைத்து, அது பாம்பாக வளர்ந்து பசியோடு இவளையே முழுங்கத் துவங்கிவிடும் அளவிற்கு அசட்டையாக இருப்பதுதான் விஜயாவுடையை மிக மோசமான பலவீனம்.

“நீ எப்பயும் ஒன்னச் சுத்தி இருக்கிற நெஜத்த கொஞ்சங்கூட ஏத்துக்க மாட்டுற விஜி. நம்ம நம்பலேன்னா அது பொய்யாய்டும்னு நெனைக்கிறியா? ஏங் கைல எதுவுமில்லன்னு மொத நீ நெனச்சாத்தான் ஒன்னால இங்க நிம்மதியாவாவது இருக்க முடியும். ரோமர் வசனம் சொல்லிருக்கீன்ல நானு. அவராலயும், அவரக்கொண்டும், அவருக்காக மட்டுந்தா இங்க நடக்குற சகலமும். இதுல நீயி, நானுலா என்ன கணக்குல சேர்த்தின்னு கொஞ்சம் நெனச்சுப்பாரு. தயவு பண்ணி புரிஞ்சுக்க, இங்க வாங்குற எடத்துலதா நாம நிக்கிறோம். எங் கைல எதும் விழுகலன்னு ஆத்திரப்பட்டு, அனல்ல கொண்டு போய் கையக் கருக்குறது அடி முட்டாத்தனம்” அன்று சிஸ்டர் மார்த்தா பெர்னீஸ் பேசியது மண்டைக்குள் ஓடியதும் வெறி கண்டவள் போல பின்னந்தலையில் ஓங்கி அறைந்து கொண்டாள்.

நாயக்கர் தொழுவிலிருந்து பளியங்குடி செல்லும் மண் பாதையில் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பசுமலை தியோலஜிகல் செமினரியின் சார்பாக ‘புனித ஜான் பிரிட்டோ தேவாலயம்’ என்ற சின்னஞ் சிறிய அந்தச் சர்ச்சைத் துவங்கினார்கள். ஒரே நேரத்தில் இருபது பேர் சேர்ந்து உள்ளே வந்தால் கூட மூச்சு முட்டுமளவிற்கு மிகவும் சிறியது. சர்ச்சில் அனைத்துவிதமான திருப்பணிகளையும் மார்த்தா பெர்னீஸ்தான் கவனித்துக்கொண்டார். பளியங்குடியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவரும் அவரது பேரனும் தங்கியிருந்தனர். பைபிள் முழுவதையும் தலைகீழ் பாடமாகக் கரைத்துக் குடித்தவர் அவர். ஞாயிறு போதனை செய்ய எழுந்துவிட்டால், கீழே அமர்ந்திருக்கிறவர்களின் கண்களைக் குளமாக்காமல் பீடத்தை விட்டு இறங்க மாட்டார். குமுளி, லோயர் கேம்பிலிருந்து கூட ஆட்கள் இவர் போதனையைக் கேட்க ஓடி வந்து விடுவார்கள். ஆனால், சுற்றியிருக்கிற பளியங்குடி, கண்ணகிபுரத்திலிருந்து ஆட்களைக் கொண்டுவருவதுதான் மிகவும் கடினம். அந்த வேலையில் மிகத் திறமையான ஆரோக்கியசாமிதான் பிரிட்டோ சர்ச்சின் உதவிக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஆள். சனிக்கிழமை மாலையில் தன் பழைய டிவிஎஸ் ஃபிப்டியை உதைத்துக் கொண்டு கிளம்பி விடுவான். அன்று மட்டும் சரியாக அந்த வண்டி ஐம்பது முறைக்கு மேல் உதை வாங்கி விடும். பிரார்த்தனை முடிந்த பிறகு மதியச் சாப்பாட்டிற்கும், கைச் சில்லரைகளுக்கும் உத்திரவாதம் கொடுத்து எப்படியோ ஒரு வழியாகப் பத்து உருப்படிகளையாவது சேர்த்து விடுவான். எந்தப் பயனும் இல்லை என்பதாலேயே நாயக்கர் தொழுவிற்கு மட்டும் அவனது டிவிஎஸ் வருகை தரவில்லை.

ஆனால், அன்றொரு நாள் மார்த்தா சிஸ்டரே நாயக்கர் தொழுவிற்கு வந்தார். கையில் ஜப மாலையும் பைபிளும் வைத்திருந்தார். சேலைக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டே  அவரது பேரன் ஆண்ட்ரூவும் உடனிருந்தான். சுற்றிலுமிருந்தவர்கள் காற்றில் படபடத்த அந்தத் தூய வெண்ணிறச் சேலையை விநோதமாகப் பார்த்தனர். வண்டிப்பெரியாறு ஏலக்காய் எஸ்டேட்டில் வேலையை முடித்துக்கொண்டு விஜயா அப்போதுதான் வீடு திரும்பியிருந்தாள். சத்தம் கேட்டதும்

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger