கையுள் சிறுமி மறைத்துவந்து கொடுத்தாள்
அவனிடமிருந்து அழைப்புத்தூதை
என் திருமணத்தின் மூன்றுநாள் முன்பு
குழாயடியிலிருந்து குடம்நீர் சுமந்துவந்தேன்
கூண்டிலிட்ட பறவையின் விடுதலையாய்
என்நிழல் மீது வந்துநின்றது
அவன் வண்டிச்சக்கரம்
ஊரூராய்ச் சுற்றி சென்னையை அடைவதற்குள்
டவுன் காவல் நிலையத்திலிருந்து
மிரட்டல்களை ஒலிபெருக்கியது கைபேசி
அரைநிர்வாணமாய் அலங்கரிக்கப்பட்ட
அவன் நண்பர்களின் பிட்டத்தைப் பதம்பார்த்தது
அதற்காகவே வடிவமைக்கப்பட்ட நீண்டதடி
தெருவெங்கும் உடைபடும் கதவின் சத்தமொலிக்க
அவன் வீட்டுவாசலில் ஊர்தடியர்கள்
எதிர்க்கத் துணிந்த அவன் வீட்டாரிடம்
நமக்கிது தேவையாயென்று வசைபாடினர் உறவினர்
சமரசம் செய்வதாய்க் கரைவேட்டிகள் மொய்க்க
அடைகாக்கும் காக்கைக் கூட்டில் பொரிஞ்ச குஞ்சாய்
சுருண்டு அவன் மடிமீது படுத்திருந்தேன்
சார்பதிவு அலுவலக வாசலில்
மீண்டும் ஓயாமல்
மிரட்டலை ஒலிபெருக்கியது கைபேசி
இம்மடையர்களுக்கு எப்போது புலப்படுமோ
இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் முன்
தீர்மானிக்கப்பட்டது எம் காதலென்று!