இன்னும் எத்தனை தலித் மாணவர்களின் உயிர்கள் வேண்டும் உங்களுக்கு?

“எங்களை இப்படி அவமதிப்பதற்குப் பதிலாக,

எங்களைச் சேர்க்கும்போதே தயவுசெய்து எங்களுக்கு விஷத்தைக் கொடுத்துவிடுங்கள்!”

 

“என் குழந்தையை அவர்கள் கொன்றுவிட்டார்கள்!”

 

முன்னது, ரோஹித் வெமுலா, தான் தற்கொலை செய்துகொள்ளுவதற்கு ஒரு மாதம் முன்பாகத் துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்ததில் குறிப்பிட்டிருந்த கசப்பும் வலியும் நிறைந்த வரிகள்.

பின்னது, தனது மகன் மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பை முடித்து, அதன் பின் குடிமைத் தேர்வுகள் எழுதி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவான் எனக் கனவு கொண்டிருந்த தாயின் கைகளில், அந்த மகனின் உயிரற்ற சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டபோது, அவளது இதயத்திலிருந்து வெடித்துவிழுந்த கதறல்.

மும்பை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.), எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவரான சாஹில் ரவீந்திர வாகோடே கடந்த செப்டம்பர் 18, வெள்ளிக்கிழமை அன்று மாலையில், தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சாஹில் வாகோடே அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர். மகாராஷ்டிராவில் யவத்மால் பகுதியைச் சேர்ந்தவர். அம்மாணவர் அன்று காலையில்தான் தனது இடைநிலைப் பருவத் தேர்வை (Mid Semester Exam) எழுதியிருந்தான். அத்தேர்வு காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்திருக்கிறது. தேர்வு எழுதிவிட்டு அறைக்குத் திரும்பிய ஓரிரு மணி நேரத்திற்குள்ளாகவே, அம்மாணவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எதையும் எழுதி வைக்கவில்லை.

அதேசமயம், ஐ.ஐ.டி. நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் சாஹில் வாகோடேவின் தற்கொலை குறித்து, கையெழுத்திடப்படாத அறிக்கையொன்றைச் சம்பவத்தன்று மதியம் 3.23-க்குப் பதிவிட்டது. அவ்வறிக்கையில், “காலையில் நடந்த தேர்வின்போது அம்மாணவன் தனது கைபேசியைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அம்மாணவன் வினாக்களை சாட்-ஜி.பி.டி. (ChatGPT)-யில் பதிவேற்றி விடைகளைத் தேடியிருக்கிறான். எனினும், அம்மாணவன் மீது இதற்காக எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துறைத்தலைவர், ஆசிரியர், புல ஆலோசகர் ஆகியோர் இது தொடர்பாக அம்மாணவனோடு விவாதித்து, ஆலோசனையும் வழங்கியதோடு, இச்சம்பவம் அவனது படிப்பை எவ்விதத்திலும் பாதிக்காது என்ற உத்தரவாதத்தையும் அவனிடம் அளித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் பெருந்தன்மைமிக்கதாகத் தோன்றும் இந்த அறிக்கையின் உட்பொருள் அம்மாணவனை அவமதிக்கும் நயவஞ்சக நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. “சாஹில் வாகோடே தேர்வில் காப்பியடிக்க முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டான்.”

 

சாஹீல் வாகோடே

மாண்டுபோன மாணவன் சாட்சி சொல்லவரப் போவதில்லை என்ற தைரியத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையாகக் கூட இது இருக்கலாம். ஏனென்றால், இடைநிலை பருவத் தேர்வு மதியம் ஒரு மணிக்கு முடிந்திருக்கிறது. ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் அறிக்கை மதியம் 3.23-க்குப் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்ளாகத்தான் இத்தற்கொலை நடந்திருக்கிறது.

நிர்வாகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக சாஹில் வாகோடே இறந்துபோனது குறித்த தகவல் அவனது பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. அப்படியே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக யவத்மாலில் இருந்து மும்பைக்கு வந்திருக்க வாய்ப்பேயில்லை. காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணையைத் தொடங்கியதாகவும் தெரியவில்லை.

இந்த நடைமுறைகள் எல்லாம் தொடங்குவதற்கு முன்பாக அல்லது முடிவதற்கு முன்பாக, அதாவது, ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து முறையான காவல்துறை விசாரணை தொடங்குவதற்கு முன்பே, இறந்துபோன மாணவனின் மீதே முழுப் பழியையும் போட்டுத் தன்னை யோக்கியவனாகக் காட்டிக்கொண்டுவிட்டது, ஐ.ஐ.டி. நிர்வாகம்.

ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் அறிக்கை உண்மையா அல்லது ஜோடிக்கப்பட்ட கதையா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது. அதனை உண்மை என வைத்துக்கொண்டால்கூட, ஒரு சந்தேகத்திற்குரிய மரணத்தில் நிர்வாகம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய இடம் காவல்துறை விசாரணையில்தானே தவிர, அதனை அவசர அவசரமாகப் பொதுவெளியில் விட வேண்டிய அவசியமில்லை.

சாஹில் வாகோடே தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்று அவனது பெற்றோர்கள் மட்டுமல்ல, சம்பவத்தன்று தேர்வு எழுதிய சில மாணவர்களும் பத்திரிகைகளிடம் கூறியிருக்கிறார்கள்.

“சாஹில் வாகோடே முதலாம் ஆண்டில் கல்வி நிலையம் குறித்துத் தங்களிடம் எந்தப் புகாரும் கூறியதில்லை. ஆனால், அவன் இரண்டாம் ஆண்டில் நுழைந்த பிறகு, தன் மீது சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், கடந்த மூன்று மாதங்களாகச் சாதிரீதியிலான துன்புறுத்தல்களைத் தான் எதிர்கொண்டு வருவதாகவும் எங்களிடம் கூறினான்” எனக் குற்றஞ்சுமத்தியுள்ளனர் அவனது பெற்றோர்கள்.

மேலும், அவர்கள் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், “அவனது துறையைச் சேர்ந்த பேராசிரியர் சூர்யநாராயணா தூலா, சாஹிலைச் சாதிரீதியாகத் துன்புறுத்தியதாகவும், ஏதாவதொரு குற்றச்சாட்டில் சாஹிலை மாட்டிவிடப் போவதாக மிரட்டி வந்ததாகவும், அவரது இந்நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக ஐ.ஐ.டி. இயக்குநர் ஷிரீஷ் பி.கேதாரே இருந்ததாகவும்” குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

சாஹிலின் வகுப்புத் தோழர்கள், “சாஹில் படிப்பில் சோடை போகாத மாணவன் என்றும், முதல் ஆண்டில் மட்டும் சாஹில் 10-க்கு 8.5 CGPA மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகவும்” கூறியுள்ளனர்.

சாஹில் எழுதிய தேர்வுக்கு பேராசிரியர் சூர்யநாராயணா தூலாதான் கண்காணிப்பாளராக இருந்திருக்கிறார். அவர்தான் சாஹிலைக் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள், “சாஹிலை ஒரு வருடத்திற்குக் கல்லூரியிலிருந்து நீக்கப் போவதாக சூர்யநாராயணா கூறினார்”, “சூர்யநாராயணா சாஹிலை தேர்வு ஹாலின் தாழ்வாரத்தில் வைத்துத் திட்டினார்” எனப் பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளனர்.

சாஹில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அதற்கான காரணம் எதனையும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதி வைக்கவில்லை; தான் சாதிரீதியாகத் துன்புறத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை ஆகிய முகாந்திரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.ஐ.டி. நிர்வாகம் தன்னை நியாயப்படுத்த முயன்றுவருகிறது.

“சொல்லப்படும்” இந்த முகாந்திரங்கள் எல்லாம் உண்மையாக இருந்தாலும்கூட, மும்பை ஐ.ஐ.டி. வளாகம் சாதிப் பாகுபாடுகள் பார்க்காத, சமத்துவம் உலாவும் இடமல்ல. அதன் பேராசிரியப் பெருமக்கள் யாவரும் சுயசாதிப் பற்றற்ற, ஆதிக்கச் சாதி மனப்பான்மையற்ற ஜனநாயகவாதிகளும் அல்லர்.

மும்பை ஐ.ஐ.டியில் 2023-ஆம் ஆண்டில் தர்ஷன் சோலங்கி என்ற அட்டவணைச் சாதி மாணவர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். அதற்கு முன்பாக, அனிகேத் அம்போர் என்ற பட்டியல் இன மாணவர் சாதிப் பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டில் மட்டும் அங்கு நடந்துள்ள மூன்றாவது தற்கொலை சாஹிலின் மரணம். மற்ற இருவர் – நாமன் அகர்வால், சோஹில் ராஜ்குமார் சங்க்வான் – பொதுப் பிரிவு மாணவர்கள்.

மேலும், அக்கல்லூரியின் விடுதி உணவகத்தில் சைவ உணவு சாப்பிடுவர்கள் தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தனியாகவும் அமர்ந்து உணவருந்தும் பாகுபாடு ஏற்பாடுகள் உள்ளன.

சாஹில் தற்கொலை குறித்து விளக்கம் அளித்துள்ள நிர்வாகம், “வளாகத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது” எனக் கூறிவிட்டு, “தற்கொலைகளைத் தடுப்பதற்கு விடுதி அறைகளில் சீலிங் ஃபேன்களைக் (ceiling fan) கழற்றிவிட்டு, சுவற்றில் பொருத்தப்படும் மின்விசிறிகளை (mounted fan) அமைத்துத் தரும்” ஆலோசனையை முன்வைத்திருக்கிறது. “கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?” என்ற நகைச்சுவையைப் போன்றதல்ல இது. மாறாக, மேல்சாதி இளக்காரமும் வக்கிரமும் நிறைந்த ஆதிக்கச் சாதிப் புத்தி இது.

சாஹிலின் மரணத்தை முதலில் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சாஹிலின் பெற்றோர் புகார் அளித்தபின், தற்கொலைக்குத் தூண்டும் பிரிவின் கீழும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் சூர்யநாராயணா தூலாவைக் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் இது வரையிலும் (இக்கட்டுரை அச்சேறும் வரையிலும்) கைது செய்யப்படவில்லை. அவர் முன்ஜாமீன் கேட்டு மனுப் போட்டால், அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென சாஹிலின் பெற்றோர் கோரியுள்ளனர்.

 

சாஹில் வாகோடே தற்கொலைக்கு நீதி கேட்டு மும்பை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம்

 

சாஹிலின் மரணத்திற்கு நீதி கேட்கும் மாணவர்கள் ஒருபுறம், பேராசிரியர் சூர்யநாராயணா தூலாவை வழக்கிலிருந்து காப்பாற்றத் துடிக்கும் ஆதிக்கச் சாதி பேராசிரியர்கள் மறுபுறம் என இன்று மும்பை ஐ.ஐ.டி. வெளிப்படையாகவே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது.

 

“பேராசிரியர் தூலா தேர்வறைக் கண்காணிப்பாளர் என்ற முறையில் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை ஆற்றியதற்கு, இப்படியொரு தண்டனையா?” என்ற வாதம் மும்பை ஐ.ஐ.டி.யில் மட்டுமல்ல, “பசு மூத்திரப் புகழ்” காமகோடி இயக்குநராக உள்ள சென்னை ஐ.ஐ.டியிலும் எதிரொலிக்கிறது. எனினும், மும்பை ஐ.ஐ.டி. சமூகவியல் புலத்தைச் சேர்ந்த பேராசிரியர் சூர்யகாந்த் வாக்மோர், “ஐ.ஐ.டி. ஆசிரியர் சங்கம் விசாரணையின் மீது தாக்கத்தைச் செலுத்த முனைகிறது. இதனை அனைத்து ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை” எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சாஹில் மரணமடைந்த நாளன்று மாலையே மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் சாஹிலின் தற்கொலைக்கு உரிய நீதி விசாரணை கோரி போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அப்போராட்டம் சாஹிலின் மரணத்தை நாடு தழுவிய அளவில் அம்பலப்படுத்தியதோடு, உயர்கல்வி நிறுவன வளாகங்களில் காணப்படும் சாதிப் பாகுபாடு பிரச்சினையை மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வந்துவிட்டது.

குறிப்பாக, இப்போராட்டத்தால் ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்த அறிக்கை கேள்விக்குள்ளானதால், அந்த அறிக்கையை வெளியிட்டதற்காக நிர்வாகம் போராடும் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, பேராசிரியர் தூலாவை நிர்வாக விவகாரங்களுக்கான துறைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் இருக்கிறது. எனினும், போராடும் மாணவர்கள், நேர்மையான விசாரணை நடைபெற தூலாவை எரிசக்தி அறிவியல் துறை பேராசிரியர் பதவியிலிருந்தும் தற்காலிகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டு 18 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

சாஹில் தற்கொலைக்குத் தள்ளப்பட்டாரா, இல்லையா; அவரது மரணத்துக்கு உரிய நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்பதாக மட்டும் இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. ஏனென்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகள் காரணமாக நடக்கும் தற்கொலைகளும், இன்ன பிற வன்கொடுமை துன்புறுத்தல்களும் சாஹிலோடு தொடங்கவுமில்லை; சாஹிலோடு முடிந்துவிடப் போவதுமில்லை. அக்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆதிக்கச் சாதிவெறியும், தீண்டாமைப் பாகுபாடுகளும் பல்வேறு வகைமைகளில் நிறுவனமயமாகியுள்ளன. குறிப்பாக, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் அந்நிறுவனங்கள் அனைத்தும் கள் குடித்த குரங்கைத் தேள் கொட்டிய கதையாக ஆட்டம் போட்டு வருகின்றன.

2014-க்கும் 2021-க்கும் இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஒன்றியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 58 சதவீத மாணவர்கள் அட்டவணைச் சாதி, பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

பல்கலைக்கழக மானியக் குழு நாடாளுமன்றக் கமிட்டிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளித்த அறிக்கையில், 2019-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மட்டும் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை 2019-இல் 173-ஆக இருந்தது, 2024-இல் 378 ஆக அதிகரித்திருப்பதாகக் (118.4%) குறிப்பிட்டுள்ளது.

டெல்லி ஐ.ஐ.டி. நிர்வாகம் 2019-இல் அளித்த அறிக்கையில் சாதிரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுள் 75 சதவீத மாணவர்கள் கல்வி வளாகங்களில் சாதிப் பாகுபாடுகளை எதிர்கொண்டு வருவதாகக்  குறிப்பிட்டுள்ளது.

‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடுகளை ஆராயவும், அவற்றைக் களைவது குறித்து அரசிற்கு வழிகாட்டவும் கடந்த 2007-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பேராசிரியர் எஸ்.கே.தோராட் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி இவற்றை ஆராய்ந்து 77 பக்க அறிக்கையொன்றை அளித்தது. தனது கமிட்டி அளித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவது பற்றி 12 ஆண்டுகள் கழித்து 2019-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்த தோராட், “எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிப் பாகுபாடுகளை அகற்றுவதற்கு அரசுகள் உறுதிமிக்க கொள்கை முடிவுகள் எடுப்பதில் தோல்வியடைந்துவிட்டதாக” குறிப்பிட்டார்.

உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் சாதிப் பாகுபாடுகளைக் களையும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டில் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இப்புதிய விதிமுறைகள் மேல்சாதி மாணவர்களைப் பழிவாங்கும் விதமாக இருக்கிறதெனக் குற்றஞ்சாட்டிய ஆதிக்கச் சாதி மாணவர்களும், சாதிச் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து இப்புதிய விதிமுறைகளைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மும்பை ஐ.ஐ.டி. வளாகத்தில் இயங்கும் அம்பேத்கர்-பெரியார்-புலே படிப்பு வட்டம், “மும்பை ஐ.ஐ.டியில் எஸ்.சி./எஸ்.டி. செல் அமைப்பதற்கு நாங்கள் 2014 தொடங்கி ஏழு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

நாடெங்குமுள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களுள் 19 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில்தான் எஸ்.சி./எஸ்.டி. செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையும்கூட ஆதிக்கச் சாதிப் பார்வையோடுதான் அட்டவணைச் சாதி/பழங்குடியின மாணவர்களின் பிரச்சினைகளை அணுகிவருவதாகக் குற்றஞ்சுமத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் இந்த எஸ்.சி./எஸ்.டி.செல்கள் அல்லது மாணவர் நல மையங்கள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களையே உறுப்பினராகக் கொண்டுள்ளன. இதனாலேயே பாதிப்புக்குள்ளாகும் பட்டியல் இன/பழங்குடியின மாணவர்கள் இந்த அமைப்புகளை அணுகித் தங்களின் பிரச்சினைகளைப் பேசத் தயங்குகின்றனர்.

மேலும், இந்த அமைப்புகளுக்குத் தண்டனை அளிக்கும் அதிகாரமும் கிடையாது, தமது பரிந்துரைகளை அமல்படுத்துமாறு கல்லூரி நிர்வாகத்தை நிர்ப்பந்திக்கும் அதிகாரமும் கிடையாது. இந்த அமைப்புகளுக்கு எஸ்.சி./எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மனநல ஆலோசகரை நியமித்துக் கொள்ளும் அதிகாரம்கூட கிடையாது. அதாவது, இவை ஊரை ஏமாற்றுவதற்காக இயக்கப்படும் அமைப்புகள்.

மும்பை ஐ.ஐ.டியில் இயங்கிவரும் மாணவர் நல அமைப்பு தனது சமூக வலைத் தளத்தில், “சாதிரீதியான இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” எனக் கோரும் மனுவைப் பதிவிட்டது. இது குறித்து அம்பேத்கர்-பெரியார்-புலே படிப்பு வட்டம் தேசிய அட்டவணைச் சாதியினர் கமிசனிடம் புகார் அளித்த பிறகும் மாணவர் நல அமைப்பின் தலைவர் மாற்றப்படவில்லை.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்தியாவிலுள்ள அனைத்து ஐ.ஐ.டி.-க்களின் இயக்குநர்களின் குழுவொன்று 2020-ஆம் ஆண்டு ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு அளித்த அறிக்கையில், “ஐ.ஐ.டி.-க்களில் ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு முறையைக் கைவிட வேண்டும். ஏனென்றால், இந்தக் கல்வி நிலையங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாலும், இந்தக் கல்வி நிலையங்களின் உயர்ந்த தரத்தைப் பேணவும் இட ஒதுக்கீடு முறையைத் தடை செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.

‘தகுதி’, ‘தரம்’ என்ற இந்தக் கதையாடலின் உட்பொருள், இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ‘தகுதியற்றவர்கள்’. இன்னும் குறிப்பாகச் சொன்னால், பொதுப்பிரிவின் கீழ் நியமிக்கப்படும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் ‘தகுதியானவர்கள்’, இட ஒதுக்கீடு சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனவரும் ‘தகுதியற்றவர்கள்’.

இந்த அறிக்கை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஒன்றியப் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், தேசியச் சட்டக் கல்லூரிகள் ஆகிய ‘தேசிய முக்கியத்துவம்’ வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பணியிடங்களைத் ‘தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள் இல்லை’ என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்தி நிரப்பாமல் காலியாக வைத்திருப்பதன் மூலம், நைச்சியமாக அறிக்கையின் கோரிக்கை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, 2019-க்கும் 2026-க்கும் இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ஐ.ஐ.எம்., அலகாபாத்தில் பொதுப்பிரிவிலிருந்து 104 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவுகளிலிருந்து ஓர் ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை. அதே காலகட்டத்தில் பெங்களூரு, கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ, ஷில்லாங் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் பொதுப்பிரிவிலிருந்து 420 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.டி. பிரிவிலிருந்து 4 ஆசிரியர்களும், ஓ.பி.சி. பிரிவிலிருந்து 6 ஆசிரியர்களும் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினப் பிரிவிலிருந்து ஒருவர்கூட ஆசிரியராக நியமிக்கப்படவில்லை. (https://sabrangindia.in/cementing-exclusion-what-the-numbers-say-about-sc-st-obc-presence-in-indias-elite-institutions/) இந்தியாவிலுள்ள 23 ஐ.ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 6,043. இவர்களுள் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 149; எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 21. இட ஒதுக்கீட்டின்படி இரண்டு பிரிவினரும் சேர்ந்து (22.5%) 1360 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 170 ஆசிரியர்கள் மட்டுமே (2.8%) பணியாற்றி வருகின்றனர். (https://science.thewire.in/education/sc-st-iits-phd-enrolment/)

இந்த அனைத்து ஐ.ஐ.டி.களிலும் 2015-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 25,007 மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகளில்  (Ph.D.) சேர்ந்த நிலையில், அதில் எஸ்.சி. பிரிவு மாணவர்களின் சதவீதம் 9.1 ஆகவும், எஸ்.டி. பிரிவுகளின் மாணவர்களின் சதவீதம் 2.1 ஆகவும் இருந்தது. அதாவது, இரண்டு பிரிவினரும் சேர்ந்து இட ஒதுக்கீட்டின்படி 5,626 மாணவர்கள் பயில வேண்டிய நிலையில், 2,800 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். (https://science.thewire.in/education/sc-st-iits-phd-enrolment/) இப்புள்ளி விவரங்கள் காட்டும் உண்மை என்பது, தகுதி இருந்தாலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினைரைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகச் சேர, அதன் கதவுகள் திறக்காது; தகுதி இருந்தாலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பிரிவு படிப்புகளில் சேர, அதன் கதவுகள் திறக்காது. அங்கு தப்பித் தவறி இடம் கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துவர உயிரையே பணயம் வைக்க வேண்டியிருக்கும். சாஹில் வாகோடேவின் தற்கொலையும், அதற்கு முன்னர் நடந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் தற்கொலையும் இந்தக் கசப்பான உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

இச்சூழ்நிலை நம் முன் இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன. ஒன்று, மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய ஆதிக்கச் சாதி ஆசிரியப் பெருமக்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டு, அதனையும் தாண்டி, ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குச் சட்டப்படியான பிரிதிநிதித்துவம் கிடைக்கவும், அக்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிப் பாகுபாடு அறவே இல்லாது ஒழியவும் அந்நிறுவனங்கள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

பின்னது நிறைவேறினால்தான், தற்கொலைகள் தடுக்கப்படும், சாதிப் பாகுபாடு அறவே ஒழியும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். சட்டங்களைக் கடுமையாக்குவதன் மூலம் மட்டுமே இதனை முழுமையாகச் சாதித்துவிட முடியாது. அக்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிப் பாகுபடுகளுக்கு எதிராகக் களப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது, அக்கல்வி நிறுவனங்களை ஜனநாயக சக்திகளின் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளின் கீழ் கொணர முயற்சி எடுப்பது ஆகியவற்றின் வழியேதான் இத்தீர்வை அடைய முடியும்.

 

loginravichandran@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger