கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படம் தமிழின் குறிப்பிடத்தக்க படமாகியிருக்கிறது. அதே அளவுக்கு எதிரும் புதிருமாக விவாதங்களையும் சந்தித்திருக்கிறது. பால்ய வயதிலிருந்து நண்பர்களாக வளரும் இருவரில் ஒருவர் (சுப்பு) வளர்ந்த பின்னர் தன்னைப் பெண்ணாக உணர்கிறார். நண்பர்களில் மற்றொருவன் (கார்த்தி) அதை அருவருப்பாகக் கருதி நிராகரிப்பதோடு, பெண்ணாக மாறியவரின் குடும்பத்தினர் வற்புறுத்தலுக்காக அவரைக் கொலை செய்யவும் திட்டமிடுகிறான். ஆனால், ஒருகட்டத்தில் அவனுக்கு நண்பரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. கடைசியில் அவரையே காதலிப்பது / திருமணம் முடிப்பது என்பதோடு படம் நிறைவடைகிறது.
பழகிய உண்மை
படத்தின் முதல் பாதி ஒன்றாகவும், இரண்டாம் பாதி வேறொன்றாகவும் மாறுகிறது. குறிப்பாக, சுப்பு பெண் என்னும் நிலையை ஏற்பது இடைவேளைக்குப் பிறகான பிற்பாதியில்தான். எனவே, பிற்பாதி படம்தான் கவனத்திற்கான காரணமாகியிருக்கிறது. படத்தைக் கொண்டாடுவதும் சாடுவதும் பிற்பாதியை வைத்துதான். ஒரே நேரத்தில் இரண்டு ‘அதிர்ச்சிகளை’ச் சந்திக்கும்போது அவற்றில் ‘ஆபத்து’ எதில் குறைவோ அதை விடுத்து, அதிக அதிர்ச்சி தரும் விசயத்தை சிக்கலானதாக வாதிடுவது நம் வழக்கம். இப்படம் பற்றி வந்த எதிர்மறை விமர்சனங்கள் அந்த வகையானவைதான். ஆண் பெண்ணாக மாறுவதை அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு நிறுத்தியிருந்தாலும் இன்றைக்குப் போலவே எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்கும். ஆனால், அதோடு நிறுத்தாமல் பெண்ணாக மாறியவரை ஆண் நண்பர் முத்தமிடுவதாகக் காட்டி முடிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவே இன்றைய எதிர்மறை விமர்சனங்களுக்கான காரணமாகியிருக்கிறது. இதற்கிடையில்தான் பெண்ணாக மாறுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி, அதைப் பாராட்டும் அளவுக்கு வந்திருக்கிறார்கள்.
படத்தின் முற்பாதி பிற்பாதியில் நடைபெறும் விசயங்களோடு தொடர்பைக் கொண்டிராததால், அவை படம் பற்றிய விவாதங்களில் அதிகம் எடுத்துக் காட்டப்படுவதில்லை. கிராமப்புற அதிகாரச் சாதி குடும்பம் ஒன்றின் வன்முறைகள் முற்பாதியில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் எவற்றையும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவை விவாதிக்கப்படவில்லை. ஏனெனில், முற்பாதியில் காட்டப்பட்டவை தமிழ் சினிமா பழக்கப்படுத்தி வைத்திருக்கும் வன்முறையோடு தொடர்புடையவை. எனவே, நாம் அவற்றைத் தெரிந்ததாகக் கருதிக் கொள்கிறோம். எனவே, அவற்றில் வியப்படையவோ எதிர்க்கவோ எதுவுமில்லை என்று கருதி அமைதியாகக் கடந்து விடுகிறோம். அவை இயல்பானவை என்ற முடிவுக்கு நம் மனம் செல்லுகிறது. அவை உண்மையற்றவை அல்ல, மாறாக அவை ‘பழகிய உண்மை’யாக இருக்கிறது. எனவே, அவற்றில் சொல்வதற்கு எதுவுமில்லை என்று கருதுகிறோம். ஆனால், ‘பழகிய உண்மை’யே ஆனாலும் சமூகத்தில் அவை ஒரு சிக்கலாக நீடித்திருக்கும் வரை அவற்றை விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆம்பளத்தனமும் சாதி அதிகாரமும்
தமிழ்ப் படங்களில் சாதி அதிகாரம் பற்றிய விமர்சனமும் ஆணாதிக்கம் பற்றிய விமர்சனமும் தனித்தனியே இடம்பெற்றிருக்கின்றன. நம் சமூக அமைப்பில் இவை இரண்டும் இணைந்து இயங்கும் விதத்தை இந்தப் படம் காட்டியுள்ளது. அதாவது, இவ்விரண்டையும் இப்படம் இணைத்துப் பார்த்திருக்கிறது. சுப்புவின் குடும்பம் ஊரில் பெரிய குடும்பம். பெரிய காரை வீட்டில் வாழ்கிறார்கள். வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். வட்டி தர முடியாதவர்களைக் கசக்கிப் பிழிகிறார்கள். கிடா முட்டு, கோழிச் சண்டை என்று வாழ்கிறார்கள். அவற்றில் வெல்வதை கௌரவமாகக் கருதுகிறார்கள். இந்த அதிகாரத்திற்கெல்லாம் காரணமாக அவர்கள் ஆதிக்கச் சாதியாக இருக்கிறார்கள் என்பது படத்தில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு சாதி அதிகாரம் என்பது வன்முறையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அதிகாரச் சாதி, வன்முறையைக் கைக்கொண்டிருப்பதற்கான நியாயத்தைச் சாதியமைப்பே வழங்குவதைக் கிராமப்புறங்களில் பார்க்கிறோம். இவ்வாறு தமிழ்க் கிராமம் ஒன்றின் வன்முறை அடுக்கை இந்தப் படம் நுட்பமாகச் சுட்டிச் சென்றிருக்கிறது.
இந்தக் குடும்பத்தில் பெண்களே இல்லை. தந்தையும் இரண்டு அண்ணன்களும்தான் இருக்கிறார்கள். சுப்புவோடு சேர்த்து நான்குபேர். இதற்குக் காரணம் வீட்டில் இருப்பவர்களின் ‘ஆம்பளத்தனம்’தான். பெண்கள் இல்லாமல் போன கதையைச் சிறுவனான சுப்பு கார்த்திக்கிடம் சொல்லுகிறான். சுப்புவின் அக்கா வேறு சாதிப் பையனைக் காதலித்தாள். அப்பாவும் அண்ணனும் அந்தப் பையனையும் அக்காவையும் அடிக்கிறார்கள். பிறகு பையன் கொல்லப்படுகிறான். அதைக் கேள்விபட்ட அக்கா கிணற்றில்

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





