ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, இந்த விசாரணை வெவ்வேறு நிலையை எட்டும் என்று தெரிகிறது. எப்ஸ்டீன் பைல்ஸ் கொடுமையை உலகமே அதிர்ந்து பார்த்த சில மாதங்களுக்குள்ளாகவே, தமிழ்நாட்டிலும் அத்தகைய நிகழ்வு பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள்.
இந்தச் சூழலில், வெளிவந்துள்ள இந்த வழக்கின் துவக்ககால விசாரணையின் போதாமைகளையும், அதற்கான காரணங்களையும் ஆய்வுக்குட்படுத்துவதற்கு முன், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சார்ந்த விவகாரங்களையும் தமிழ்ச் சமூகம் அண்மைக் காலங்களில் எப்படிக் கையாண்டு வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்வது முக்கியம்.
கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாகச் செயல்படத் தொடங்கியதும், தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது என அன்றாடச் செய்திகளைப் பேசுபொருளாக்கி, அவை புதிய ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் நிகழ்கிறது என்கிற கருத்துருவாக்கத்தை ஒருவகையில் வெற்றிகரமாகச் செய்துவிட்டது. சமூகத்தில் தனிநபர்களால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்குரிய காரணத்தைக் கண்டடைந்து, துரிதமாகத் தொலைநோக்குத் திட்டம் வகுப்பதும் அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் ஆளும் அரசுகளையே சேரும். அந்த வகையில், சமூகத்தின் அன்றாட வன்முறைச் சம்பவங்களை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை திமுக பேசுபொருளாக்குவதன் மூலம், அவை ஊடக விவாதமாகவும் மாறியிருக்கிறது.
இதே அணுகுமுறையோடு கடந்த 2021–2026 திமுக ஆட்சியை எதிர்கொள்ளவும், விமர்சிக்கவும், வலுவான எதிர்க்கட்சியோ, சமரசமில்லாத கூட்டணிக் கட்சிகளோ இல்லாமலிருந்தது. தி.மு.க.வின் ஐ.டி விங் குழுக்கள் அரசின் நலத் திட்டங்களை மட்டுமே பிரதானப்படுத்தி பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கி, இச்சட்ட-ஒழுங்கு பிரச்சினையை மழுங்கடித்துப் பின்னுக்குத் தள்ளின. திமுக தோல்வியைத் தழுவ இச்சட்ட – ஒழுங்கு பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
ஒரு சமூகத்தில் நிகழும் குற்றங்களுக்கு முழுமையான காரணமாக ஆளும் அரசைக் கூறிவிட முடியாது. அதேவேளையில், அத்தகைய வழக்குகளை அந்த அரசு எத்தனை நேர்மையாக எதிர்கொள்கிறது என்பதைக் கொண்டே அதன் நிர்வாகத் திறனை மதிப்பிட முடியும்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. அதன் உச்சமாக, 2024ஆம் ஆண்டு 10,046 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 837 குற்றங்கள் நடந்திருக்கின்றன. 2023இல் 6,968 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அடுத்த ஓராண்டுக்குள் (2023–2024) 40% குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிராக BNS மற்றும் IPC பிரிவுகளில் பதிவான வழக்குகளைச் சேர்க்காமல், போக்சோ பிரிவின் வழக்குகள் மூலம் மட்டுமே இத்தனை ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்சோ வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு அரசு முன்னிலை வகித்தாலும், அவ்வழக்குகள் குறித்த விசாரணைகளில் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை. ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் போக்சோ வழக்கு உள்ளிட்ட மற்றுமொரு வழக்கையும் திமுக அரசின் மோசமான அணுகுமுறைக்கு உதாரணமாக எடுத்துக்காட்ட முடியும்.
கடந்த செப்டம்பர் 2024ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் பத்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். குழந்தையின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது, குழந்தையின் முன்பே அவர் தாயார் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை. போக்சோ வழக்கு விசாரணையின்போது பெற்றோர்கள் இல்லாமல் குழந்தையை விசாரிக்கக் கூடாது என்கிற விதி மீறப்பட்டது. குழந்தை விசாரிக்கப்பட்டு, அதன் பதிவு செய்யப்பட்ட ஆடியோ வெளியானது. இத்தனை மோசமாக இவ்வழக்கைக் காவல்துறை கையாண்டு வருகிறது என்கிற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளிக்கொண்டு வந்தது.
அதன் பின், சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு காவல்துறை அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியதோடு, மாநிலக் காவல்துறையின் மீது நம்பிக்கையிழந்து சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது திமுக அரசு. சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரிய தீர்ப்பை ரத்து செய்து, காவல்துறையை உச்ச நீதிமன்றமும் எச்சரித்து, விசாரணை அதிகாரிகளையும் நியமித்தது. அதற்குப் பிறகே குற்றவாளியும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
பத்து வயது சிறுமிக்கு எதிராகவும், எளிய பின்புலத்திலிருந்து வந்த பெற்றோர்களுக்கு எதிராகவும் கடந்த திமுக அரசு ஒரு போக்சோ வழக்கை எதிர்கொண்டது மிக மோசமான முன்னுதாரணம். இந்தச் சம்பவமும், அதே ஆண்டில் தமிழ்நாட்டில் மாதத்திற்கு 800 போக்சோ குற்றங்கள் நடந்த வண்ணம் இருந்ததையும், வெகுசிலரைத் தவிர, போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசும் காவல்துறையும் செய்த இந்த அநியாயம் பேசுபொருளாகாமலேயே பார்த்துக்கொள்ளப்பட்டது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சம்பந்தமாக கடந்தாண்டு அக்டோபர் 6, 2025 அன்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்திருக்கிறார். புகாருடன் ஒரு பென்டிரைவ் மற்றும் கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு காணொளியில் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சி இருந்ததை அடுத்து, அக்டோபர் 7 அன்று போக்சோ வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அது அக்டோபர் 9 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரணை அக்டோபரிலிருந்து பிப்ரவரி 2026 வரை நடக்கிறது.
விசாரணையின் இறுதியில்,
- அசல் காணொளியை மீட்க முடியவில்லை,
- காணொளியில் இருந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை,
- அண்டை வீட்டாரின் வாக்குமூலங்கள் கிடைக்கவில்லை,
- வீரமணி, சாந்தி ஆகியோரிடம் விசாரணை செய்ததில் அதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை,
- காணொளியில் இருக்கும் வீடு வீரமணியுடையது இல்லை,
உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இவ்வழக்கை முடித்து வைக்குமாறு காவல்துறை தரப்பில் கோரப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கு குறித்த தகவல்கள் திமுக தலைமையிலான காவல்துறைக்கு 2025 அக்டோபரில்தான் தெரிய வந்தது என்று கருதிக்கொண்டிருந்த வேளையில், 2024ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பழங்குடிப் பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார் தமிழ்நாடு காவல்துறைக்கு இது சம்மந்தமாக எழுத்துப்பூர்வமான புகார் அளித்திருந்திருக்கிறார் என்று வெளியான தகவல்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
19.06.2026 அன்று காவல்துறையின் இந்த முன்மொழிவை ஏற்காமல் நிராகரித்ததோடு, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா. அதைத் தொடர்ந்து 2026 ஜூலை மாதம் விசாரணையை மீண்டும் தொடங்கியது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையில் காணொளியில் இருப்பது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி என்பதை உறுதி செய்து, அவரை ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. காணொளியில் இருந்த சிறுமி அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட ஐந்தாறு சிறுமிகளுக்கு மேல் வாக்குமூலம் கொடுத்து வருவதாகவும், இந்தச் சங்கிலித் தொடரில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய முயன்று கொண்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஜூலை மாதம் விசாரணை தொடங்கப்பட்டு, குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து வாக்குமூலம் பெற முடிகிறபோது, கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரணையைத் துவங்கி ஐந்து மாதங்கள் இவ்வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்கிற முடிவுக்கு கடந்த திமுக ஆட்சியின் காவல்துறை வந்ததை, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத் தோல்வி என்று எடுத்துக்கொள்வதா அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சி என்று எடுத்துக்கொள்வதா?
இவ்வழக்கு பேசுபொருளான முதல் இருபது நாள்களுக்கு மேலாக திமுகவும் அதனுடைய தரப்பு அறிவுஜீவிகளும் எந்தவித அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியைக் கையாண்டனர். இவ்வழக்கை திமுக மிக மோசமாகக் கையாண்டது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கத் தொடங்கிய பின்னரே திமுக இது குறித்துப் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. திமுக இதற்கெனச் சில விளக்கங்களைக் கொடுத்தது.
- திமுக ஆட்சியிலிருந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கை முடிக்கக் கோரி காவல்துறை கொடுத்த அறிக்கையின் இறுதியில், ‘மேற்கொண்டு ஆதாரங்கள் கொடுத்தால் விசாரணை துவங்கப்படும்’ என்று தான் சொல்லியிருக்கிறோமே ஒழிய, ‘வழக்கை முழுமையாக முடிக்கச் சொல்லிக் கோரவில்லை’ என்றார்கள்.
- திமுக சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி இது குறித்து அளித்த பேட்டியில், வீரமணியின் போக்சோ புகார் குறித்து திமுக அரசுக்குக் கிடைத்த காணொளி தெளிவாக இல்லாத காரணத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
- திமுக மேலவை உறுப்பினரும், வழக்குரைஞருமான பி.வில்சன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வழக்கை முடித்து வைக்கக்கோரிய தேதியையும் மாதத்தையும் பொய்யாக புனைந்து காலவரிசையை மாற்றிப் பதிவு செய்திருந்தார். பின் இதற்குக் காரணமே தமிழக வெற்றிக் கழக அரசு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், வீரமணி வழக்கில் ஜூன் 18ஆம் தேதிக்கு முன்பாகத் தற்போதைய புதிய அரசு ஏன் அறிக்கையைத் திரும்பப் பெறவில்லை என்கிற கேள்வியையும் முன் வைத்தது திமுக.
அடிப்படையற்ற இக்கேள்விக்கு முன் சட்ட நடைமுறையின்படி இந்த வழக்கில் முடிவு அறிக்கை (Closure Report) 20.02.2026 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நீதிமன்றம் பெற்றுக்கொண்டதற்கான முத்திரையும் இடம்பெற்றுள்ளது. ஒரு முறை இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், அது காவல்துறையின் உள்புற ஆவணமாக மட்டும் இருப்பதில்லை. எனவே, அரசால் அதனை தன்னிச்சையாகத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடியாது.
மேலும் முக்கியமாக, கூடுதல் விசாரணையைத் தொடங்குவதற்கான வழக்கமான சட்ட நடைமுறை என்பது முடிவு அறிக்கையைத் திரும்பப் பெறுவது அல்ல. காவல்துறையால் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், CrPC-யின் பிரிவு 173(8)-ன் கீழ் கூடுதல் விசாரணை மேற்கொள்ள முடியும். இதற்கான BNSS-இன் தொடர்புடைய பிரிவு 193(9) ஆகும். கூடுதல் விசாரணையும் அதன் பின்னர் தாக்கல் செய்யப்படும் அறிக்கையும் உரிய சட்ட நடைமுறையின் மூலம் நீதிமன்றத்தின் முன்பாகவே நடைபெற வேண்டும்.
நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பாகவே கூடுதல் விசாரணை அவசியம் என்று புலனாய்வு அமைப்பு கருதியிருந்தால், அதற்கான அனுமதியை நீதிமன்றத்திடம் கோரியிருக்க முடியும். ஆனால், அந்த நேரத்தில் புதிய ஆதாரம் ஏதேனும் கிடைத்திருப்பதாகவோ அல்லது கூடுதல் விசாரணை நடத்துவதற்கான குறிப்பிட்ட காரணம் இருப்பதாகவோ தற்போதைய அரசு அடையாளம் காணவில்லை என்றால், வெறுமனே விசாரணையை மீண்டும் தொடங்குவதற்காக நீதிமன்றத்தை அணுகுவதற்கு உடனடி சட்ட அடிப்படை இருந்ததாகக் கூற முடியாது.
இவ்வழக்கின் காலவரிசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தவெக அரசு 10.05.2026 அன்று பொறுப்பேற்றது. ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கை ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 39 நாட்களிலேயே நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில், காவல்துறை அதிகாரிகளின் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது நிர்வாக இயந்திரத்தை அமைக்கும் பணியில் புதிய அரசு இருந்தது.
அதே நேரத்தில், ஏற்கெனவே விசாரணை நடத்தி முடிவு அறிக்கையைத் தாக்கல் செய்திருந்த விசாரணை அதிகாரிகளும் காவல்துறை அமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தனர். எனவே, அதே விசாரணையையும் விசாரணை அமைப்பையும் அடிப்படையாகக் கொண்ட நிலையில், சில வாரங்களுக்குள் முற்றிலும் புதிய ஆதாரங்களைக் கண்டறிந்து விசாரணையை மீண்டும் தொடங்கியிருக்க வேண்டும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற அரசிடம் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமும் இல்லை, அதில் நியாமும் இல்லை.
இதனால்தான் 19.06.2026 அன்று நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நீதிமன்றமே, “Closure report not accepted. Further investigation is ordered” என்று பதிவு செய்துள்ளது. உண்மையில், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட முடிவு அறிக்கையைத் தமிழக வெற்றிக் கழக அரசு திரும்பப் பெற்றிருக்க வேண்டும் என்பது நீதிமன்ற நடவடிக்கையின் கட்டாயமான முன்நிபந்தனையாக இருக்கவில்லை. நீதிமன்றம் அந்த அறிக்கையைப் பரிசீலித்து, அதனை ஏற்காமல் கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட்டது.
எனவே, “ஜூன் 18ஆம் தேதி வரை புதிய அரசு எதுவும் செய்யவில்லை” என்ற வகையில் இந்த விவகாரத்தைச் சித்திரிப்பது ஒரு முக்கியமான சட்ட நடைமுறை உண்மையைப் புறக்கணிப்பதாகும். முடிவின் அறிக்கை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை ஏற்க வேண்டுமா அல்லது கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் முன்பாக இருந்தது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன், இந்த வழக்கின் அடிப்படை சட்ட நடைமுறையைப் புரிந்துகொள்வது அவசியம். நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட முடிவு அறிக்கை என்பது அரசு எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறக்கூடிய ஓர் உள்துறை ஆவணம் அல்ல. அந்த அறிக்கையை நீதிமன்றம் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இவ்வழக்கில் முக்கியமான திருப்புமுனை, 19.06.2026 அன்று நீதிமன்றம் வழங்கிய கூடுதல் விசாரணைக்கான உத்தரவே ஆகும். இவை எதுவுமே திமுகவிற்குத் தெரியாததல்ல, இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முன் இவ்வழக்கில் திமுக முன் வைக்கப்படும் கேள்விகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறது.
* இவ்வழக்கை மேற்கொண்டு நடத்துவதற்கு முகாந்திரமில்லை என்று திமுக காவல்துறையால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பட்டியலிடப்பட்ட காரணங்கள் வெளிப்படையாக போக்சோ குற்றவாளிக்கு ஆதரவானவை.
* விசாரணை ஆரம்பித்து நான்கே மாதத்தில் இவ்வழக்கை முடித்து வைக்க அறிக்கை கொடுத்தது ஏன்? பல முக்கியமான வழக்குகள் வருடங்கள் கடந்தும் விசாரணை நிலையிலையே இருக்கும்போது, நான்கே மாதத்தில் இவ்வழக்கில் ஆதாரமில்லை என்று முடிக்க நினைத்தது ஏன்?
* போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகு இரண்டு மாதத்தில் கைது நடவடிக்கை சாத்தியமாகும்போது, நான்கு மாதம் நேரமெடுத்தும் காணொளியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கூறுவதில் உண்மை இருக்க முடியுமா?
* இந்த வழக்கை முடிக்க வேண்டும், குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லை என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கத்தை விட, அவர்களது செயல்பாடுகளில்தானே அவை எதிரொலித்து இருக்க வேண்டும்?
மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த விளக்கத்தை மறுத்து, அவர் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வீரமணி வழக்கு குறித்த தகவல்கள் தெரிய வந்தும், விசாரணை அளவில் அவை மழுங்கடிப்பட்டதின் உள்நோக்கத்தைக் கேள்வியெழுப்பி, அதற்கு ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டியளித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.சண்முகம் மட்டும்தான் என்பது குறிப்பித்தக்கது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறி இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறும் பொறுப்பிலிருந்து மு.க.ஸ்டாலின் விலக முடியாது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தபோது, அதிமுகவுக்கு எதிராக ‘இது பொல்லாத ஆட்சி, பொள்ளாட்சியே அதற்குச் சாட்சி’ என்று 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின். அந்தத் தேர்தலில் அவர் வன்கொடுமையை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டாரா? அல்லது ஆளும் கட்சியின் இயலாமையை வெளிப்படுத்தினாரா? இந்தக் கேள்விகள் எல்லாத் தரப்பிலிருந்தும் திமுகவை நோக்கிக் கேட்கப்பட்டிருக்க வேண்டும். காரணம்; வீரமணியின் போக்சோ வழக்கு அரசியல் நிர்வாகப் பிறழ்வின் காரணமாக நடக்கும் சராசரியான பிரச்சினையல்ல, இருபது வருடத்திற்கும் மேலாக வீரமணி இதைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்பதின் அடிப்படையில் இதில் பல நூற்றுக்கணக்கான சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, சில கொலைகளும் நடந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு pedophile, சமூகநீதி பேசும் கட்சியின் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட முயற்சி நடந்திருக்கிறது என்பது தமிழ்ச் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளையும், அதற்குத் தார்மீக பொறுப்பேற்று உரிய விளக்கம் கொடுக்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்க வேண்டும். பத்திரிக்கைகளும், அறிவுத் தரப்பினரும் போதுமான அளவு இவ்வுண்மைகள் வெளிவந்தபோது நியாயமாக வெளிப்பட வேண்டிய அதிர்வலைகளை வெளிப்படுத்த தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அண்ணா நகர் சிறுமி வழக்கு, ஜெம் கிராணைட்ஸ் வீரமணி வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக அரசின் செயல்பாடுகள் மட்டுமில்லாமல், போக்சோ விவகாரங்கள் சார்ந்த பிற நடவடிக்கைகளிலும் திமுக அரசு மோசமாகக் கையாண்டு இருக்கிறது. போக்சோ வழக்குக்குப் பிந்தைய குழந்தைகளின் நலன் குறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பல்வேறு நாடுகள் மிகுந்த பொறுப்போடு கையாளுகின்றன. அது தொடர்பான உரையாடல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகள் பாதுகாப்புக்காகச் செயல்படும் Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு ஊதியத்தைச் சரியாக வழங்காமல் இருந்தது அன்றைய திமுக அரசு. கடந்த 2025 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஊதியம் தாமதமாக 2026 ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அதேபோல, பயணப்படியும் முறையாக வழங்காமல் இருந்ததால், இச்சேவையின் பணியாளர்கள் ஊதிய நிலுவையால் பணியை விட்டு விலகும் நிலை இருந்தது.
அதேபோல, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) வழிகாட்டுதலின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்தும், பெற்றோர் ஆதரவில்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு ஆதரவாக Support Person நியமனம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை உருவானது. இதன்படி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 110 பேர் support persons ஆக நியமிக்கப்பட்ட நிலையில், இவர்களுள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு போக்சோ வழக்கிலாவது பணியாற்றி இருக்க வேண்டும். எனினும், இவர்களுள் 76% பேர் எந்தவொரு வழக்கிலும் பணியாற்றியதற்கான பதிவுகள் இல்லை. இதற்கான செயல்பாட்டு முறையை வகுக்கும் பணியைத் துவங்கி திமுக அரசு அதை முடிக்கவில்லை. அதேவேளையில், தமிழ்நாட்டைப் போலல்லாமல், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆதரவு நபர்களுக்கு (Support Person) மாதம் ரூ.5,000 வழங்கப்படுகிறது. பீகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊதியம் வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆட்சியில் 2024ஆம் ஆண்டு ‘Impact Assessment on POCSO Victim Compensation’ என்கிற பெயரில், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு முறையாகச் சென்றடைந்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ஓர் ஆய்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட இந்த ஆய்வு, ரூ.5.95 லட்சம் நிதியுடன் VIT சென்னை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆய்வை மேற்கொண்ட VIT-யின் ஆய்வாளர் டாக்டர் விஜயலட்சுமி, பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை வாட்ஸ்அப் மூலம் கள ஆய்வாளர்களாகத் தேர்வு செய்துள்ளார். அவர்கள் யாரும் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாள்வதற்கான பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இருந்தபோதிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களில் குழந்தைகளின் பெயர், முகவரி, பெற்றோர்/பாதுகாவலர் விவரம், நீதிமன்ற வழக்கு எண் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்தக் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் அடிப்படையிலேயே சிக்கல்கள் இருந்ததால் அது நிறுத்தப்பட்டது. இதற்குப் பின்னரும் அந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளிடம் கையளிக்கப்பட்ட தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்கும் தெளிவான கையேடு (Standard Operating Procedure) இல்லாததும், பயிற்சி பெற்ற அதிகாரிகள் அல்லது Support Persons மூலம் இந்தப் பணியை மேற்கொள்ளாமல் முறையாகச் சரிபார்க்கப்படாத வெளிப்புற நபர்களிடம் இத்தகைய தரவுகளை ஒப்படைத்ததும், இந்த விவகாரத்தில் அரசின் கடுமையான நிர்வாக அலட்சியத்தையும் பாதுகாப்பு நடைமுறைகளின் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது. போக்சோ வழக்குகள் சார்ந்து சட்டரீதியாக அதை எதிர்கொள்ளும் நடைமுறை, அதைத் தடுப்பதற்காக, அதிலிருந்து மீள்வதற்காக உருவாக்கப்பட்ட எது ஒன்றையும் திமுக அரசு சரிவரப் பின்பற்றியிருக்கவில்லை. போக்சோ உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சார்ந்த எந்தப் பிரச்சினையையும் பிரதானப் பிரச்சினையாக திமுக அரசு கருதுவதற்கான புற அழுத்தம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
அதிகார அமைப்புகள் உருவாக்க முனையும் கருத்துருவாக்கமும், வெகுஜன மக்களிடத்தில் நிலவும் அசலான சிக்கல்களும் பாரதூரமானவை என்பதை எந்தவோர் அரசும் புரிந்துகொள்ள வேண்டும். அதன் விளைவுதான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் என்பது திமுக என்கிற ஒரு கட்சிக்கானதல்ல; தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்குமான செய்தி. போக்சோ விவகாரங்கள் சார்ந்து இத்தனை சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டிய அவசியமும் புதிய அரசுக்கு இருக்கிறது. இந்தச் சூழலில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த போக்சோ வழக்குகளையும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளையும், அதனுடன் தொடர்புடைய யாவற்றையும் கணக்கில் கொண்டு செயல்பட்டு இதில் நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். போக்சோ உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள அதன் வழிமுறைகளைப் பின்பற்றி நிர்வகிப்பதில் இன்னமும் பிரச்சினை நீடிக்கிறது. அதைச் சரி செய்வதில், அரசை செய்ய நிர்ப்பந்திப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
musicallybaskar@gmail.com




