நீல வானின் சிவப்பு நட்சத்திரம்: தோழர் ஆர்.நல்லகண்ணு (1925 – 2026)

திகார விலங்கறுக்க செங்கொடி ஏந்தி போராடிய முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன்னுடைய 101வது வயதில் பிப்ரவரி 25ஆம் நாள் காலமானார். மனிதர்கள் பிறப்பின் வழியாக அல்லாமல் செயலின் வழியாகவே மதிப்பிடப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்காகத் தன்னை நிபந்தனையற்று ஒப்புக்கொடுக்கும் ஒருவர்தான் மக்களால் நினைவுகூரப்படுவர். அத்தகைய மனிதர்தான் தோழர் நல்லகண்ணு. தொழிற்சங்கவாதியாகத் தன்னுடைய போராட்ட வாழ்வைத் தொடங்கியவர் மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். எளிமைக்காக மட்டுமே அவர் நினைவுக்கூரப்படுவது கெடுவாய்ப்பானது. மக்கள் உரிமைப் போராட்டங்களுக்காகத் தள்ளாத வயதிலும் வீதிக்குவந்து நீதி கேட்டவர். அதிகாரத்தை எதிர்த்தவர். அதிகாரம் கொடுக்க விழைந்த எந்தச் சலுகையையும் ஏற்காதவர் என்கிற அர்த்தத்தில் மட்டுமே அவருடைய வாழ்வு நினைவுகூரப்பட வேண்டும். இதுதான் அவரின் வாழ்விலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் பாடம்.  “இழப்பதற்கு எதுவும் இல்லை, அடைய ஒரு பொன்னுலகம் உண்டு. உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்” என்று அறைகூவல் விடுத்து, சமூக மாற்றத்திற்கான கம்யூனிச தத்துவத்தைக் கையளித்த பாட்டாளிகளின் தோழன் காரல் மார்க்ஸை வழிகாட்டியாகக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்  1943ஆம் ஆண்டு இணைந்தார்.

காலனித்துவ ஆட்சிக்கெதிராகத் தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சி, தொழிலாளர் நலச்சங்கங்களுக்கான போராட்டம். இப்படி பலப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். சாதிய நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரைப் பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர். 1948ஆம் ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தோழர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையிலிருந்தார். விசாரணையின்போது அவரின் மீசையை சிகரெட் தீயால் காவல்துறை பொசுக்கியது. ‘மீசை என்பது வெறும் மயிர்’ என்பதால் வாழ்வின் இறுதிவரை அவர் மீசை வைத்துக்கொள்ளவில்லை. விசிக சார்பில் அம்பேத்கர் விருது, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது எனத் தனக்குத் தரப்பட்ட விருதுகளின் பண முடிப்புகளை, மேடையிலேயே மக்கள் மற்றும் கட்சிப் பணிகளுக்கு வழங்கியவர். தனக்காகக் கட்சியிடமோ அரசிடமோ எந்தச் சிறப்பு வசதிகளையும் கோராதவர். தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாகவும் எளிய மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிய நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger