பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

18

பாம்பின் வழி பாடம்

மிழிலக்கியத்தில் சில உவமைகள் மிகவும் பேசப்பட்டவையாக இருக்கும். பால்கட்டிய பச்சைப் பயிருக்குக் கருவுற்ற பச்சைப்பாம்பு உவமையாகக் கூறப்பட்ட பொருத்தம் நான் சிறுவயதில் படிக்கையில் என் தமிழாசிரியர் சொல்லக் கேட்ட நினைவு இப்போதும் இருக்கிறது. பெண்ணின் கருங்கூந்தலைக் கருநாகத்திற்கு ஒப்புமைக் கூறியிருக்கின்றனர். சீவகசிந்தாமணி காப்பியத்தில் பாம்பு எப்போதெல்லாம் விஷம் கக்கும் என்பது பற்றித் தெளிவாக விளக்கியிருப்பார் திருத்தக்க தேவர். சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் பாம்பினை உவமையாக்கிப் பலரால் பாடப்பட்டிருக்கின்றன.

‘நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலைச் சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென’

என்கிற பாடல் இருக்கிறது. பாம்பு, அரவம், உரவு என அதற்கு ஒரு பொருட்பன்மொழி தமிழில் இருக்கிறது. பௌத்தத்திலும் புத்தர் தன்னுடைய போதனைகளைப் பாம்பையும் வைத்து  மக்களுக்குக் கூறியிருக்கிறார் என்பது நாம்  அறிய வேண்டிய ஒன்று. திரிபிடகத்தில் உள்ள முதல் பிடகமான சுத்த பிடகத்தில் புத்தரின் உரைகள் இடம்பெற்றிருக்கின்றன. சுத்தபிடகம் ஐந்து நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தீகநிகாயம் நீண்ட பேருரைகளைக் கொண்ட நூல். அதில் முப்பத்தி நான்கு உரைகள் உள்ளன. மஜ்ஜிம நிகாயம் நீண்டதுமில்லாமல் சிறியதுமில்லாமல் நடுத்தர அளவு கொண்ட நூற்றைம்பது உரைகள் கொண்ட நூல். சம்யுக்த நிகாயம் ஏழாயிரத்து எழுநூற்றி அறுபத்தி இரண்டு உரைகள் கொண்ட கருத்துவாரியாகத் தொகுக்கப்பட்ட நூல். அங்குத்தர நிகாயம் ஒன்பதாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தேழு உரைகள் கொண்ட நூல். குத்தக நிகாயம் பதினைந்து சிறிய நூல்களைக் கொண்ட தொகுப்பு. இவற்றைச் சிற்றிலக்கியங்கள் என்று கூறுகின்றனர். இதில் உள்ள ஒரு நூல்தான் சுத்த நிபாதம். அதிலிருக்கும் முதல் பிரிவு உரக வக்கம். உரகம் என்றால் பாம்பு.

பாம்பு தன் தோலை எப்போது உரிக்கிறது? ஏன் உரிக்கிறது என்பதெல்லாம் உயிரியல். எக்டைசிஸ் (Ecdysis) என்னும் ஒரு வழிமுறையில் பாம்பு தன் தோலை உரிப்பதாக அறிவியல் கூறுகிறது. மனிதர்களுக்கும் இது நடைபெறுகிறது. மனிதர்கள் தினமும் குளிப்பதால் இறந்துபோன செல்கள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், பாம்புகளுக்கு அப்படியல்ல புதிய தோல் உருவாகும்போது பழைய தோலை அவை உரித்துவிடுகின்றன. பழைய தோலில் இருக்கும் காயங்கள் அவற்றில் வாழும்  நுண்ணுயிரிகள் ஆகியவற்றை  விட்டு விலகுவதற்கும் தன் தோலை பாம்பு உரிக்கின்றது. ஒரு மரத்திலோ அல்லது பாறையிலோ சுற்றி மிகவும்  துன்பப்பட்டுத் தன்னுடைய தோலை உரிப்பதாகப் பாம்பினைப் பற்றிய செய்திகள் நமக்குத் தெரிவிக்கின்றன. காடுகளில் அலைந்த புத்தர் இந்தக் காட்சிகளைப் பார்த்திருக்கலாம். பாம்பு தோலை உரிப்பதைப் போல இந்த மனிதர்கள் தங்கள்  தீமைகளை  உரித்துவிடுவார்களெனில் அவர்களுக்குத் துன்பம் இல்லை என்று எண்ணி அவர் தன் போதனைகளை முன்வைத்திருக்கிறார்.

அந்தப் போதனைகள் தொகுக்கப்பட்டு உரக சுத்தம்  என்றாகியிருக்கிறது. தம்மத்தில் வாழ்கிற ஒருவர்  பாம்பு தனது தோலை உரிப்பதைப் போலவே தன் தீமைகளை உரித்தெடுத்து வெளியேற்றியப் பின் தன் வாழ்விற்கு ஒளியேற்றிக்கொள்கிறார்.இதில் மானுடத்திற்குத் தேவையான பல அறிவுரைகளை புத்தர் முன் வைக்கிறார். உடலில் பாம்பு தீண்டியதால் பரவிடும் விடத்தின் வேகத்தை அதற்குத் தரப்படுகிற விடமுறிவு எவ்வாறு தடுத்து நிறுத்துகிறதோ அதைப்போல் தன் கோபத்தை நொடியிலேயே கட்டுப்படுத்துபவர், பாம்பு தன் தோலை உரிப்பதைப் போல தன் துன்பத்தை உதறி விடுகிறார்.

இது உரக சுத்தத்தில் இருக்கும்  முதல் அறிவுரை.

கோபத்தை அடக்கினால் துன்பம் இல்லை. கோபத்தினால் விளையும் தீமைகள் நமக்குத் தெரியும். நாடுகள் கோபப்பட்டால்  போர் நிகழும். அதனால் உலகம் அழியும். தனிமனிதன் கோபப்பட்டால் அவன் வாழ்வு அழியும். அதனால் துயர் நிகழும். துன்பமற்ற வாழ்வுக்கு ஒரு சிறந்த வழி கோபம் கொள்ளாமல் இருப்பது. அதைத்தான் வள்ளுவன் சினம் காத்தல் என்கிறான். அவன் சினத்தைச் சேர்ந்தாரைக் கொல்லி என்கிறான். சேர்ந்தாரை எது கொல்லும்? தீ. சினம் தீது. புத்தரிடமிருந்து உலகம் கற்க வேண்டிய பாடம்.

இந்த சுத்தத்தில் யாரெல்லாம் துன்பத்தை பாம்பு தோலை உரிப்பதைப் போல உரித்து உதிர்த்து விடுவர் என்ற ஒரு பட்டியல் இருக்கிறது. வேட்கையின் ஓட்டத்தை குறைப்பவர்கள், அகம்பாவத்தை அழிப்பவர்கள், நிலையான வாழ்வின் பொருளைத் தேடாதவர்கள், இன்பம் துன்பம் என்று எண்ணி விருப்பும் வெறுப்பும் கொள்ளாதவர்கள், தன்னுள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களைக் களைந்தெறிபவர்கள், தன்னுடைய முயற்சியில் குறையாமல் அதே நேரத்தில்  அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்ந்து  போகாமலும், குறைந்த முயற்சியால் தளர்ச்சியடையாமல் நடுநிலையில் நன்மைகளைத் தேடுபவர்கள், தீய எண்ணங்களுக்குத் தன் மனத்தில் இடம் கொடாதவர்கள் ஆகியோர் துன்பங்கள் இல்லாதவர்களாகின்றனர்.

பாம்பு தன் தோலை உரிப்பதைப் போல தன் தீமைகளை உதிர்த்தவர்கள், தம்மத்தின் சீலத்தை அடைகிறார்கள். சீலம் மெய்ஞானத்தையும் நல்லமைதியையும் அளிக்கும் அதனால் விழிப்புணர்வு கொண்டவராக, எல்லாவற்றையும் தீர்க்கமாக ஆய்ந்து அறியும் அறிவைப் பெற்றவராக மாறித் தளர்ச்சியில்லாத நன்முயற்சி கொண்டவராகிறார்.

சுத்த நிபாதத்தில் தனிய சுத்தம் என்பது இரண்டாவது பிரிவு; அதில் ஒரு பண்ணையார்  முப்பதாயிரம் மாடுகளை வைத்திருப்பவர்.

சுத்த நிபாதத்தில்  இரண்டாவது சுத்தம்; தனிய சுத்தம். தனிய என்றால் பண்ணையாள். அவருக்கு முப்பதாயிரம் மாடுகள் இருக்கின்றன. அவருக்கும் புத்தருக்குமான உரையாடல் பாடல் வடிவத்தில் அமைந்திருக்கின்றன. தனியராகிய பண்ணையாள் தனக்கானவைகளைப் பற்றிக் கூறி மழையைப் பெய்யச் சொல்கிறார் புத்தர் மானுட மீட்பைக் கூறி மழையைப் பெய்யச் சொல்கிறார். முதல் பாடலில் தனியர் தனது குடிலுக்குக் கூரை உள்ளது. தனது வீட்டு நெருப்பு எரிகிறது. மழை பெய்யட்டும் என்கிறார். புத்தர்  என் குடிலின் கூரை திறந்திருக்கிறது, என் நெருப்பு அணைந்துவிட்டது. மழை பெய்யட்டும்.

தனியரின் கூரை மூடப்பட்டுள்ளது.  ஆனால் புத்தரின் கூரை திறந்திருக்கிறது. கூரை திறந்திருக்கிறது என்பதன் பொருள் ஆசைகளாலும், பற்றுகளாலும்  மூடப்படாமல் இருக்கின்றது. நெருப்பு அணைந்துவிட்டது என்பதன் பொருள் காமம், வெகுளி ஆகியவை அணைந்துவிட்டது என்று அர்த்தம். தனியரது கூரை மூடப்பட்டுள்ளது எனின் அவர் இன்னும் பற்றுகளைத் துறக்கவில்லை. ஆசைகளால் கூரை மூடப்பட்டுள்ளது. அவரின் காமம், வெகுளி என்ற நெருப்பு எரிகிறது. ஆனால் மழையை வேண்டுகிறார். மேனிலையை அடைந்த புத்தரோ  தனியரின் நிலைக்கு எதிராக இருக்கிறார். காமத்தை அணைத்து பற்றைத் துறந்து மழையைப் பெய்யச் சொல்கிறார்.  ஒருவேளை வெள்ளம் அதிகம் வருமாயின் புத்தரின் மரக்கலம் அவ்வெள்ளத்தைக் கடக்க உதவும். மரக்கலம் என்பது உன்னத எட்டுப்பாதை. அதைக் கொண்டு துன்ப வெள்ளத்தைக் கடக்கலாம்.

புத்தரிடம் மனிதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பண்பு ஒன்று இருக்கிறது. அது நிதானம். புத்தரிடம் வழக்கமாகக் கேள்விகளைக் கேட்பதுபோல இப்போதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

புத்தர் அவர்களே சம்சார வெள்ளத்தை நீங்கள் எப்படிக் கடந்தீர்கள்?

தேவையான முயற்சியின்றித் தளர்ச்சியாக இல்லாமல் அதே நேரத்தில் தேவையான ஆற்றலுக்கு அதிகமான  முயற்சியையும் செய்யாமல் நான் வெள்ளத்தைக் கடந்தேன்.

அதை எப்படி நீங்கள் செய்தீர்கள்?

போதிய முயற்சியின்றித் தளர்ந்த நிலையில் இருக்கும்போது  வெள்ளத்தில் மூழ்கும் நிலையை நான் உணர்ந்தேன். அளவுக்கு மீறி ஆற்றலைச் செலவழித்து முயற்சிசெய்து வெள்ளத்தைக் கடக்க எத்தனிக்கையில் நான் மிகவும் சோர்வுற்று ஆற்றில் அடித்துச் செல்லும் அபாயத்தையும் அறிந்தேன். ஆகையால் இரண்டு  முனைகளையும் அவற்றின் தன்மைகளை அறிந்து விடுத்து நடுநிலைப்பாதை என்னும்  வழியில் தேர்ச்சிப் பெற்று வெள்ளத்தைக் கடந்தேன்.

புத்தரின் வெற்றி இங்குதான் இருக்கிறது. ஞானத்தைப் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் கடுந்தவம் புரிந்தார் புத்தர். உடல் இளைத்தது. பட்டினிக் கிடந்தார். இன்னும் இளைத்தது. எலும்புகளின் எண்ணிக்கை கண்களில் தெரிந்தது. இந்த நிலை நீடித்தால் ஞானம் அடைவதற்குள் நாம் இருக்க மாட்டோம் என்னும் விழிப்புணர்வினை அடைந்து உடலைத் தேற்ற வேண்டும் என்னும் முடிவுக்கு வந்து மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார். நல்ல உடல்நிலையோடும்  மனநிலையோடும்  இருமுனைத் தீவிரத் தன்மைகளை விடுத்து தன் வழியில் புத்தர் பயணித்தார். அதனால் மானுடம் நன்மை பெற்றது. புத்தரின் போதனைகள் அவரின் வழிகள் மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன.

ஜப்பானில் ஒகிமி என்னும் ஊரில் நீண்ட ஆயுளுடன் வாழும் முதியவர்களின் வாழ்க்கைமுறை இக்கிகய் (Ikigai) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே புத்த மதத்தின் சில கோட்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன. நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர்கள்  கூறும் வழிமுறைகளில் ‘அவசரமற்ற வாழ்க்கை முறை’யும் ஒன்று. அதற்காக அவர்கள் மிகவும் மெதுவாகவும் வாழவில்லை. எல்லாவற்றையும் நடுநிலையோடு அணுகுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். வாழ்கிறார்கள். புத்தரின் வெற்றிதானே இது.

l yazhanaathi@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger