ஞானபீடம்: அறச்சீற்றங்களும் அதிகார மையங்களும்

சந்துரு மாயவன்

வைரமுத்துவுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘தமிழ் இலக்கியத் தூய்மை’ குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக வைரமுத்துவைக் கருதக்கூடாது என்றும், இவ்விருது உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தின் மாண்பைச் சிறுமைப்படுத்தும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் செயல்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து ஒரு பாரிய கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர். இவர்களின் விமரிசனம் / குற்றச்சாட்டு என்பது, “ஒரு படைப்பாளியின் எழுத்தைப் போலவே அவனது வாழ்வும் சமூகத்திற்கு முக்கியமானது. ‘மீ டூ’ (MeToo) இயக்கத்தின் வழியாக, வைரமுத்து அவர்கள் மீது ஒரு பெண் மட்டுமல்லாமல், இதுவரை 17-18 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் பகிரங்கமாகப் புகார் அளித்துள்ளனர். இத்தகைய நீண்டகாலத் தார்மீகக் கறைகள் படிந்த ஒருவருக்கு, சமூகத்தின் கௌரவமான விருதை வழங்குவது, பெண் உரிமை பேசும் நவீன சமூகத்திற்கு முரணான செயலாகும். மேலும், வைரமுத்து அவர்கள் வெளிப்படையான ஆண் ஆதிக்கப் பார்வை (Patriarchal mindset) கொண்டவர் என்பது அவரது பல்வேறு பொதுவெளிப் பேச்சுகள் மற்றும் படைப்புகளில் தென்படுகிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவோ அல்லது இழிவுபடுத்தும் விதத்திலோ சித்திரிக்கும் இவருடைய போக்கு, சமூகத்தின் சமத்துவ வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானது” என்கின்றனர். இக்குழுவில் பெரும்பான்மையாக இடதுசாரி எழுத்தாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகத் தங்களின் எழுத்தின் வாயிலாகவும், களப்பணிகள் மூலமாகவும் பங்காற்றி வருபவர்கள். களம், போராட்டம் என்பதில் பெரிதாக முகங்காட்டாத ஜெயமோகனும், வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு எதிராகக் களத்தில் குதித்துள்ளார்.

கட்சி / சித்தாந்தப் பாகுபாடின்றி, அதிகார வர்க்கத்தினரோடு இணக்கமான உறவைப் பேணுவதில் வைரமுத்து ஒரு சாம்ப்பியன். நவம்பர் 2017இல் நரேந்திர மோடி எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். குறிப்பாக, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி, ‘நட்டுவைத்த வேலுக்குப் பொட்டுவைத்தது போல் நிமிர்ந்து நிற்கிறார்’ என்றார். கவித்துவ மொழியால் அதிகாரத்தின் வாளைத் தடவிக்கொடுப்பது மட்டுமின்றி அவ்வாளின் வழியே கனிகளைப் பறிப்பதிலும் அவர் கெட்டிக்காரர்.

இது ஒரு முகமென்றால், குறிப்பாக, 2018ஆம் ஆண்டு ‘ஆண்டாள்’ குறித்த அவரது கட்டுரை கடும் சர்ச்சைக்குள்ளாகி, வலதுசாரி அமைப்புகளிடமிருந்து அவருக்குத் தொடர் அழுத்தங்களும் எதிர்ப்புகளும் உருவான பிறகு, ‘நீட்’ தேர்வு மாணவர் நலனுக்கு எதிரானது எனப் பேசத் தொடங்கினார். இது, தனக்கு எதிராக உருவான வலதுசாரித் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், மீண்டும் முற்போக்கு மற்றும் திராவிட அரசியல் தளத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் தாவுர ஆட்டம் ஆடிப் பார்த்தார். இதில் அவர் வல்லவர். அதிகார மையங்களுக்கும் மக்கள் நலனுக்கும் இடையே தனக்குச் சாதகமான திசையில் ஊசலாடும் இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல், ஓர் எழுத்தாளரின் தார்மீக உறுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் மாணவனாய் வைரமுத்துவின் படைப்புகளை மதிப்பிடும்போது அவரின் எழுத்துகள் ‘உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர, உண்மையின் தீபங்களாய் இருப்பதில்லை’ என்பதே நெருப்பில் போட்டெடுத்த நிஜம். ‘வைகரை மேகங்கள்’ தொடங்கி (திருக்குறள் உரை நீங்கலாக) அவரது அண்மைக்கால ‘தமிழாற்றுப்படை’ வரையிலான எழுத்துகளை வாசித்ததன் அடிப்படையில், அவை வெறும் மேம்போக்கானவை மட்டுமல்ல, கருத்தியல் ரீதியாக ஆபத்தானவையும் கூட. அவர் தனது படைப்புலகில் ஆணின் உடலை அதீத வலிமை கொண்டதாகவும், ஆராதனைக்குரிய பிம்பமாகவும் முன்னிறுத்துகிறார். ‘தண்ணீர் தேச’த்தின் கலைக்கண்ணன், சிங்கத்தின் முதுகைப் போன்று தின்மை கொண்டவன்; மாறாக, தமிழ் ரோஜாவோ கங்காரு வயிற்றிலிருக்கும் பாதுகாப்பான குட்டி. இந்த எதிரிடை வைரமுத்துவின் பல்வேறு படைப்புகளில் தொடர்ச்சியாக எதிரொலிக்கிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘மூன்றாம் உலகப்போர்’ போன்ற அவரது புதினங்கள் கள்ளர் சாதியப் பெருமிதத்தைக் கட்டமைப்பவை. குறிப்பாக, பேயத்தேவர் கதாபாத்திரத்தின் வழியே கள்ளர் சாதி ஆணின் வாழ்வியல் பாடுகளையும், கிராமியக் ‘கலாச்சார’ விழுமியங்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம், இறுதியில் துயரமாக முடிந்தாலும், அதில் தொழிற்படும் சாதியப் பெருமிதமும் ஆண்மைய வலிமையும் நவீனச் சிந்தனை மரபுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் முற்றிலும் ஒவ்வாதவை. கருவாச்சி காவியத்தில் கதையின் தலைவி ஓர் ஆண் பதிலியாகவே தென்படுகிறாள். முத்துராமன் படங்களில் தென்படும் நாயக சாகச கதையாடலுக்குச் சற்றும் குறைந்ததன்று மூன்றாம் உலகப்போர் நாவல். வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’ வரிசை, தமிழ் இலக்கிய ஆளுமைகளையும் சிந்தனையாளர்களையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், ‘ஆய்வு’ நோக்குடனும் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆளுமைகளை வைரமுத்து அணுகியுள்ள விதம் மிக மேலோட்டமானதாகவே அமைந்துள்ளது. சான்றாக, தொல்காப்பியர் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை, இணையதளங்களிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொதுவான தரவுகளின் தொகுப்பாகவே எஞ்சி நிற்கிறது.

ஒரு செவ்வியல் பிரதியை / வரலாற்று மாந்தரை ஆய்வு நோக்கில் அணுகுவது என்பது அதன் வரலாற்று, சமூக மற்றும் மொழியியல் பின்புலங்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதாகும். அந்த வகையில், தெ.பொ.மீ, எஸ்.வையாபுரியார், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, ராஜ் கௌதமன், ச.பிலவேந்திரன் உள்ளிட்டோரின் தொல்காப்பியம் குறித்த ஆய்வுப்புல எழுத்துகளை வாசிக்கும்போதுதான், ஒரு பனுவலை ஆய்வு செய்வது என்பதன் நுட்பம் புலப்படும். இத்தகைய ஆளுமைகளின் அறிவுத்தளத்தோடு ஒப்பிடுகையில், வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’ என்பது ஆய்வல்ல; அது வெறும் உணர்ச்சிமயமான அடுக்குமொழிச் சித்திரம் என்பது விளங்கும்.

தமிழ்க் கவிதை மரபு இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது. குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் அகவாழ்வின் காதலைப் பாடியுள்ளன. ஔவை, வெள்ளிவீதி, கபிலர், அம்மூவன், பேயன் போன்ற புலவர்கள் அழியாத கவிதைகளைத் தமிழ் இலக்கியப் பரப்பில் உருவாக்கியுள்ளனர். இத்தகைய நெடிய இலக்கிய மரபைக் கற்றறிந்த வைரமுத்து, தன் படைப்பாக்கத்தில் வெறும் எதுகை, மோனை, இயைபு ஆகிய யாப்பு உத்திகளை மட்டுமே கவிதை எனப் பொருள் கொள்கிறார். இதன் வழியாக, கவிதையின் உள்ளடக்கத்தை விட அதன் புறக்கட்டமைப்பிற்கே (Rhythmic sound) அவர் அதிக முக்கியத்துவம் தருவதாக விளங்கிக்கொள்ள முடியும். இதனால், எழுத்து ஜாலக்காரரான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டது உள்ளபடியே கெடுவாய்ப்பானதுதான்.

2018-ஆம் ஆண்டின் #MeToo இயக்கத்தின்போது, பாடகி சின்மயி உட்பட 17-க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களைச் சுமத்தினர். இந்தத் தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து இன்றுவரை எவ்வித நேரடி எதிர்வினையும் ஆற்றவில்லை. இந்த மௌனத்திற்குப் பின்னிருப்பது அதிகாரச் செருக்கு என்றும் பொருள் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, திரையுலகிலும் அரசியலிலும் அவருக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தப் புகார்கள் சட்டப்பூர்வமாகவோ அல்லது சமூக ரீதியாகவோ விசாரணைக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு அவரின் அதிகார இருப்பும் ஒரு காரணி எனலாம். அதிகாரத்தின் நிழலில் ஒளிந்துகொள்ளும் ஒரு படைப்பாளியின் ‘இலக்கியத் தரம்’ என்பது தார்மீக அடிப்படையில் கேள்விக்குறியாகிறது. தார்மீகமான எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் சூழலில் இதற்குள் புகுந்து குறுக்குசால் ஓட்டுகிறார் ஜெயமோகன். அதாவது, வைரமுத்துவுக்கு ‘ஞானபீட விருது’ வழங்கப்படதற்கு மாற்றாக ‘உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருது’ (Living Tamil Award for World Literature) என்ற ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட புதிய விருதினை அறிவித்ததன் மூலம், எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் அறிவுலகையே கிடுகிடுக்கச் செய்துள்ளார். இந்த விருது குறித்து அவர் பேசும்போது “(இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகள்) தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்ற எண்ணம்தான் இருக்கிறது என்கிறார்கள். நாம்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்” என்றார். நெடுங்காலமாகவே தமிழிலிருந்து இந்தியாவின் பிற மொழிகளுக்கு மட்டுமின்றி உலக மொழிகளிலும் ஆங்கிலத்திலும் நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் பெயர்க்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அம்பை உள்ளிட்ட தமிழ் நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஜெயமோகனின் வருகையால் நிகழ்ந்தவை அல்ல. இவ்வளவு ஏன் தன்னை ஓர் இலக்கியக் கர்த்தாவாக முன்னிருத்திக்கொள்ளும் ஜெயமோகனின் எழுத்துகளும் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆக, தமிழ் நவீன எழுத்துகளின் செல்நெறிகள் இந்திய / உலக இயக்கவியலோடு ஒட்டியொழுகவே செய்துள்ளன.

ஓர் இலக்கிய வகைமையின் தரம் மற்றும் அதன் செல்நெறி குறித்து ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பே. சுய அனுபவம், ஆன்மீகத் தரிசனம், மெய்ஞானம் போன்றவை மேன்மையான விஷயங்களாக முன்வைக்கப்பட்டாலும், அவற்றின் பின்னணியில் ஒரு நுணுக்கமான ‘அதிகார மேலாதிக்கம்’ தொழிற்படுவதை நாம் மறுக்க முடியாது. இந்தத் தரம் குறித்த மதிப்பீடுகள் யாரால் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகின்றன என்பது முக்கியமானவை. இலக்கியம் என்பது இதுதான் என்கிற அளவுகோலும் துலாபாரமும் யார் ஒருவரிடம் கையளித்தது, இப்படியான கேள்விகள் எழுகின்றன. வரலாற்று இயக்கவியல் நோக்கில் ஒருவரின் எழுத்துகளை மதிப்பிடுவது மட்டுமே இலக்கியத்திற்கு நாம் செய்யும் அறம். எழுத்துகள் வனாந்தரத்திலிருந்து வருபவையல்ல. இலக்கிய மேம்பாடு என்பது தனித்து நிகழக்கூடிய வினையன்று. சமூகத்திலிருந்துதான் இலக்கியம் உருப்பெறுகிறது. அறிவொளி பெற்ற மேம்பட்ட சமூகவாழ் உயிரியிடமிருந்து மட்டுமே மேம்பட்ட இலக்கியம் உருவானதாக வரலாறு செப்புகிறது.

அடிப்படையில், இலக்கிய விருதுகள் அனைத்துமே விமர்சனத்திற்கு உட்பட்டவைதாம். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட விருதுகளில், விருதாளரின் தத்துவ-அரசியல் சார்பு மற்றும் அதிகார மையங்களின் தலையீடு ஆகியவற்றை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த வகையில், ஜெயமோகனின் தற்போதைய நகர்வுகளும் புதிய விருது அறிவிப்புகளும் அவரது ‘அறிவுசார் அதிகார இருப்பைத்’ தக்கவைத்துக்கொள்ளும் ஒரு தீவிர முனைப்பாகவே பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி, ஜெயமோகன் ‘ஞானபீட விருது’ குறித்து அங்கலாய்த்து கொள்வதைப் காணும்போது அவ்விருதுக்கு அவர் ‘புனித மதிப்பு’ அளிப்பதாவும் கருத இடமுண்டு. புனிதத்திற்கு மாற்றான இன்னொரு புனிதத்தை அல்லது அதிகாரத்திற்கு மாற்றான இன்னோர் அதிகாரத்தை ஜெயமோகன் கட்டமைக்க முயல்கிறார். மேலும், ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ வழங்கும் விருதுகள், ஜெயமோகனை ஓர் இலக்கியப் பண்ணையாராக (Literary Hegemon) நிலைநிறுத்துவதற்கான கருத்தியல் ஏற்பாடாகவே தெரிகின்றன. இவ்விருதுகள் ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை நடுநிலையுடன் மதிப்பிடுவதை விட, விஷ்ணுபுர அமைப்பின் அரசியலுக்கு உடன்படும் அம்சங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றன. குறிப்பாக, தமிழறிஞர் ராஜ் கௌதமனுக்கு இவ்விருது வழங்கப்பட்டபோது, சாதி மற்றும் இந்து மதம் குறித்த அவரது கடுமையான விமர்சனங்கள் திட்டமிட்டே புறந்தள்ளப்பட்டன. மாறாக, அவரது தன்வரலாற்றுப் புதினங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டன. இது ஒரு படைப்பாளியின் கலகக்குரலைத் தணித்து, அவரைத் தங்களுக்குச் சாதகமான ஒரு சட்டகத்திற்குள் சுருக்குவதாகும். ஒரு பார்வையாளனாக அவ்விழாவில் நான் கண்டுணர்ந்த விசயம் இது. மேலும், ஜெயமோகன் பட்டறையிலிருந்து எழுந்தருளிய இலக்கியச் சித்தர்கள் கூட காந்தியச் சிந்தனைகளை முன்வைத்து முன்னெடுக்கும் இலக்கிய அரசியல் நாம் அறிந்தவைதாம். அயோத்திதாசர், நாராயண குரு, நித்திய சைத்தன்ய யதி போன்றோர்கள் குறித்து நேர்மறையாக ஜெயமோகன் பேசுவதன் வழியே வெகுமக்களின் ஏற்புக்கு வழிகோலிடுகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் வைரமுத்துவுக்கு எதிரான இந்த விருதுச் சர்ச்சைகள் புதிதன்று. 2021ஆம் ஆண்டு மலையாளக் கவிஞர் ஓ.என்.வி. குறுப்பு பெயரிலான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு இத்தகைய உயரிய விருது வழங்குவதா என்ற எதிர்ப்பு கேரளாவிலும் தமிழகத்திலும் வலுத்தது. இதன் விளைவாக, விருதுத் தேர்வை மறுபரிசீலனை செய்வதாகக் குழு அறிவித்ததும், வைரமுத்துவே அந்த விருதைத் திருப்பி அளிப்பதாகக் கூறி விலகிக்கொண்டார். திரைப்படப் பாடல்களுக்காக அவர் தேசிய விருதுகளைப் பெற்றபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழவே செய்தன.

வைரமுத்துவுக்கு எதிராக ‘இலக்கிய அறம்’ எனும் வாளைச் சுழற்றும் ஜெயமோகனோ, தனது எழுத்துகளின் வழியாக இந்து மரபையும் அதன் வைதிக விழுமியங்களையுமே முதன்மைப்படுத்துகிறார். ‘வெண்முரசு’ நாவல் வரிசை மகாபாரதத்தை நவீனக் கோணத்தில் மீள்வாசிப்புச் செய்வதாகக் கூறினாலும், அது ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பையும் ஒரே ஒரு வைதிக மரபின் குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி எனலாம். ‘இந்து மதமல்ல, தர்மம்’ என்று வக்காளத்து வாங்கும் அவரது வியாக்கியானங்கள், நுணுக்கமான முறையில் இந்துத்துவக் கருத்தியலுக்குத் தார்மீகத் தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

குறிப்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து ஜெயமோகன் முன்வைக்கும் ‘அறிவு மேலாதிக்கம்’ கலந்த பிதற்றல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழில் புத்தகம் வெளிவந்துள்து (காண்க: அம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு – பா.பிரபாகரன்). சமூகத்தின் எரியும் பிரச்சினைகளுக்கு ஜெயமோகன் பெரும்பாலும் மௌனம் சாதித்துள்ளார். ஹாத்ரஸ் முதல் லக்கிம்பூர் கெரி வரை, பெண்கள் எதிர்கொண்ட வன்கொடுமைகளுக்கு எதிராக அவர் எதையும் பேசியதில்லை. தமிழகத்தில் நந்தினி உள்ளிட்ட பெண்கள் வன்கொடுமையால் சாகும்போது அமைதி காத்தவர் ஜெயமோகன். மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மறைவையொட்டி அவர் எழுதிய இரங்கலில் “கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா” என்று எழுதியவர். கமலாதாஸ் எழுத்துகள் குறித்து மலையாள நவீன எழுத்தாளராக அறியப்படும் பால் சக்காரியா குறிப்பிடும்போது, “மாதவி குட்டி எழுத்துகள் ஏற்கெனவே வந்திருக்கும். My story தமிழில் வந்திருக்கிறது தானே. அது sen-sational. தமிழ் நாட்டில் உள்ள சூழல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாதவி குட்டியின் கதைகளைக் கொண்டுவந்தால், I think that she will be superb ஆக வாசிக்கப்படும் என்று நம்புகிறேன். காரணம், மாதவி குட்டியின் எழுத்து இதயத்திலிருந்தது எழுதப்பட்ட எழுத்து” (காலம் – 60) என்கிறார்.  அதுமட்டுமன்றி பெண் எழுத்துகளுக்கு எதிராக அவர் எழுதியதைக் கண்டித்து ‘பெண் படைப்பாளிகள் மீதான ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராகப் பெண் செயற்பாட்டாளர்களின் கண்டன கூட்டறிக்கை’யும் நமக்கு கிடைக்கிறது. (காண்க: https://kuttyrevathy.blogspot.com) இலக்கியவாதிகள் ‘ஆன்மீகத் தரிசனம்’ குறித்துப் பேசும் அதே வேளையில், சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் பெண்களின் அவலக்குரல்கள் அந்த இலக்கியப் பிரதிகளுக்குள் ஊடுருவாதது ஏன்? தன்னை ஒரு ‘கலாச்சார இந்து’ என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜெயமோகன், இந்து கலாச்சாரம் என்றால் என்ன என்பதை பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து முதலில் தெளிவு பெற வேண்டும். ஆனால், அவரையே திரித்து இடையீடு செய்பவரிடம் அத்தகைய தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.

வைரமுத்து மற்றும் ஜெயமோகன் ஆகிய இருவரிடமும் நிலவும் பொதுவான அம்சம் ‘அதிகாரம்’. வைரமுத்து நிறுவனமயப்பட்ட அரசியல் அதிகாரத்தின் மூலம் தற்காப்புத் தேடிக்கொள்கிறார் என்றால், ஜெயமோகன் தனது ‘அறிவுசார் அதிகாரத்தின்’ மூலம் தனக்கான ஒரு பெரும் வாசகர் வட்டத்தையும் கருத்தியல் பாதுகாப்பையும் உருவாக்கிக்கொள்கிறார். வைரமுத்து மீதான புகார்கள் இலக்கிய உலகில் நிலவும் ஆணாதிக்கச் சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு படைப்பாளி எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சக மனிதர்களை, குறிப்பாகப் பெண்களை நடத்தும் விதத்தில் அறம் தவறும்போது அவர் விமர்சனத்திற்கு உள்ளாவார் என்பதை இது உணர்த்துகிறது. அதே சமயம், ஜெயமோகனின் மேட்டிமைவாதக் கண்ணோட்டம் பாபாசாகேப் அம்பேத்கரைப் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த சொற்களின் விளையாட்டு அல்ல; அது ஒடுக்கப்பட்ட மக்களின் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் குரலாகவும், அதிகார மையங்களுக்கு எதிரான சீற்றமாகவும் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் இலக்கியமும் விருதுகளும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், பிம்பங்களைக் கட்டமைப்பதற்கும் பயன்படும் கருவிகளாகவே மாற்றப்பட்டுள்ளன. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு விருது பெறத் தகுதி இல்லாதது போலவே, சமூக ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, ஆன்மீக மெய்ஞானத்தைப் போதிக்கும் ஜெயமோகனுக்கும் ‘அற விழுமியங்கள்’ பற்றிப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. வைரமுத்துவின் ‘ஆணாதிக்கம்’ பெண்ணை ஒரு வர்ணனைப் பொருளாகச் சுருக்குகிறது என்றால், ஜெயமோகனின் மேல்தட்டு ரசனை பலரின் எழுத்துகளைத் தரம் குறைந்தவையாகப் புறந்தள்ளுகிறது. உண்மையில், இலக்கியத் தரம் என்பது அதிகார வர்க்கத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு ‘புனைவு’ மட்டுமே. உண்மையான இலக்கிய அறம் என்பது, அதிகாரத்தோடு கைகோப்பதில் இல்லை; மாறாக, அதிகாரத்தின் வாளைத் தன் எழுத்தின் வழியே எதிர்கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. ஓர் எழுத்தாளருக்கு என்ன, யாருக்காக, எதற்காக எழுதுகிறோம் என்பதில் கவனமும் உறுதிப்பாடும் இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஷோபா சக்தியின் கூற்று பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். அது, “என்னைப் பொறுத்தளவில் சமகாலத்தில் உள்ள சமூகப் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும். என்று நினைக்கிறேன். இன்னொரு வகையில் சொல்லப்போனால் என்னுடைய கதைகள் எல்லாமே சற்றுப் பெரிதாக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் என்றே சொல்வேன். அரசியல் இல்லாத எந்த எழுத்தையும் எழுத்து என்று சொல்ல மாட்டேன். உதாரணத்துக்கு, சாதத் ஹசன் மண்டோவைச் சொல்லலாம். மிக எளிமையாகச் சொன்னால் சார்லி சாப்ளினைச் சொல்வேன். அவரது படைப்புகளில் முதலாளித்துவத்துக்கு எதிரான பெரிய அரசியல் இருந்தது. (இது நிபந்தனை அல்ல) எனது சமகால எழுத்தாளர்களிடம் நான் வைக்கும் எதிர்பார்ப்பு.”

 உசாத்துணை

  • தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை
  • தண்ணீர் தேசம், வைரமுத்து, சூர்யா வெளியீடு
  • https://www.jeyamohan.in/author/jeyamohan/
  • காலம் இதழ், 60
  • https://kuttyrevathy.blogspot.com
  • அறிஞர்கள், ஆசிரியர்கள், ஆளுமைகள் நேர்காணல்கள், ஷங்கர்ராமசுப்ரமனியன், 2026, எதிர் வெளியீடு.

l chandrumayavan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger