புதுச்சேரி நிலமீட்புப் போராளி: தலைவர் அ.வையாபுரி

சே.அஜித்ர

புதுச்சேரி மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள வளமான கிராமம்தான் பாகூர். 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழிப் பல்கலைக்கழகம் இருந்த ஊர். புதுச்சேரியின் நெற்களஞ்சியமாகத் திகழும் இந்தப் பாகூர் வட்டாரத்தின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள கிராமம்தான் பனையடிக்குப்பம். தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமம், ஒருகாலத்தில் தீண்டாமைக் கொடுமைகளின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது. சாதி இந்துக்களின் தெருக்களில் நுழைவதற்கோ, தேநீர்க் கடைகளில் சமமாக அமர்ந்து தேநீர் அருந்துவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. திருமண ஊர்வலங்களும் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களும் தலித் மக்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தன; இந்த விதிகளை மீறுவோர் கருங்கல் தூண்களில் கட்டி வைத்துத் தாக்கப்படும் கொடூரமான ஒடுக்குமுறைகள் அரங்கேறின. அடிப்படையில் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி தலித் மக்கள், நிலவுடைமையாளர்களின் சாதிய ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடந்தனர். பனையடிக்குப்பத்தின் நீர் ஆதாரமான ஏரியும், அதனைச் சுற்றியுள்ள புளியந்தோப்புகளும் இயற்கைத் தந்த கொடைகளாக இருந்தபோதிலும், தலித்துகள் அவற்றை நெருங்கவோ, உரிமைக் கோரவோ முடியாத சூழலே நிலவியது. மாற்றுத் தொழில் வாய்ப்புகளும் அற்ற நிலையில், தலித் மக்கள் நிலவுடைமையாளர்களின் கொடும் சாதிய ஆதிக்கத்திற்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது.

சூரியன் உதிப்பதற்கு முன் வேலைக்குச் சென்று, மறைந்த பின் வீடு திரும்ப வேண்டும். ஆண்டுக்கு ஆறு பெரிய மரக்கால் நெல் கூலியாகக் கொடுப்பார்கள். இப்படியான உழைப்புச் சுரண்டலிலும் சாதியத் தீண்டாமைக் கொடுமையிலும் வாழ்ந்துகொண்டிருந்த பன்னையடிக்குப்பம் கிராமத் தலித் மக்களின் நிலையை மாற்றியமைத்தவர் தலைவர் அ.வையாபுரி. இவர் கோ.அண்ணாமலை – கெங்கம்மாள் தம்பதியருக்கு 1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். கொடும் சமூகச் சூழல்களை எதிர்கொண்ட தந்தை அண்ணாமலையின் அரவணைப்பில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தந்தையின் இறப்பிற்குப் பிறகு, குடும்பச் சூழலால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சிறுவயதிலேயே கிராமத்தில் நிகழும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் கண்கூடாகப் பார்த்து மனம் ரணமானது. குடும்ப வறுமையினால் சிறுவயதிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அங்கும் நிலவுடைமையாளர்களின் உழைப்புச் சுரண்டல், உழைப்புக்கேற்ற ஊதியமின்மை என எல்லாச் சூழலும் எதிராக அமைய கொதித்தெழுந்தார். கிராமத்தில் பெரும்பாலோர் குடும்ப வறுமையால் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, மீண்டும் நிலவுடைமையாளர் வீடுகளுக்கு வேலைக்குச் சென்றனர். இப்படி பல்வேறு நிலைகளில் அநீதிகளுக்கு உள்ளாகும் தம் மக்களின் உரிமைக் குரலாக எழுந்து, அவர்களின் சமூக வாழ்வியலை மாற்றியமைக்கவும் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் அ.வையாபுரி முடிவு செய்தார்.

1969இல் தோழர் வ.சுப்பையா அவர்களைப் பனையடிக்குப்பம் கிராமத்திற்கு அழைத்து, அவரின் கரங்களால் செங்கோடி ஏற்றி, தனது கிராமத்தில் முதல் அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தி அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார். முதன்மைப் பணியாகத் தனது கிராம மக்களுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி, பாதியிலேயே பள்ளிப்படிப்பைக் கைவிட்டவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

பனையடிக்குப்பத்தில் தலித் மக்கள் பிரச்சினைகளில் நிலவுடைமைச் சாதி இந்துக்கள் பஞ்சாயத்துப் பேசும் ஆதிக்க முறைக்கு முடிவுகட்டி, ‘பனையடிக்குப்பம் கிராமப் பஞ்சாயத்து’ என்ற அமைப்பை உருவாக்கி, கிராமத்திலுள்ள தலித்துகளை ஒன்றிணைத்துத் தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண வழிவகுத்தார். “வெள்ளைக்காரன் வெளியேறி, கொள்ளைக்காரர்கள் அல்லவா ஆட்சியாளர்களாக மாறியிருக்கிறார்கள்” என்ற மக்களிடமும் மாணவ – இளைஞர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அதற்காகப் பனையடிக்குப்பம் கிராமத்தில் இரவுப் பாடசாலையை ஏற்படுத்திக் கல்வியோடு கூடிய சமூக – அரசியலையும் போதித்துவந்தார்.

கலையின் மூலமாகச் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதாகக் கொண்டுசேர்க்க முடியும் எனவும், நாடகத்தின் வாயிலாக அதிகாரத்திற்கு எதிரான கேள்விகளை எழுப்பவும் மக்களை விழிப்பூட்டிப் போராட்டங்களை வலுப்படுத்தவும் முடியும் எனவும் ஆழமாக நம்பினார். ஆதலால், ‘தெருக்கூத்து நாடக சபா’ உருவாக்கி, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தெருக்கூத்துக் கலையைக் கற்பித்து, தனது கிராமத்திலேயே நாடகம் அரங்கேற்றி மக்களிடையே சமூக விழிப்புணர்வையும் அரசியல் கருத்துகளைக் கடத்தி மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். குறிப்பாக நல்லதங்காள், புரூரவ சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் போன்ற கதைகளை அதிகம் அரங்கேற்றினார்கள்.

பிரெஞ்சு ஆட்சியிலிருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தாலும், சாதிய நிலவுடைமையாளர்களிடமிருந்து தலித்துகளுக்கான விடுதலை கிடைக்கவில்லை. “இன்னும் சாதியத் தீண்டாமைக் கொடுமை நீடிக்கிறது; தலித் மக்கள் வசிப்பிடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை” என முழங்கியவாறு தனது மக்களை அணிதிரட்டினார். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டுப் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று, தனது முதல் போராட்டக் கோரிக்கைகளை வென்றெடுத்தார்.

புதுச்சேரி, வரலாற்று ரீதியாகத் தலித்துகளின் நிலங்கள் ஆதிக்கச் சாதியினரால் அபகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இன்று நிலமற்றவர்களாக உள்ளனர் என்பதைச் சில தரவுகளின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பலவீனத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகிறது. புதுச்சேரி நிலக் குத்தகை முறை, பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் கவர்னர் பிரான்சுவா மார்ட்டின் (Francois Martin) மூலம் 1674 முதல் 1814 வரை முறைப்படுத்தப்பட்டு, 1954 வரை பல ஆண்டுகளுக்கு நீடித்தது. 1826இல் விவசாயத்தை மேம்படுத்த ‘பீரோ டு டொமைன்’ (Bureau du Domaine) மூலம் நிரந்தரப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. 1950 – 1980 காலக்கட்டம் வரை புதுச்சேரியில் பரவலாகப் பெரும்பாலான தலித் மற்றும் மாற்றுச் சமூகத்தினர் குத்தகை முறை நிலங்களில் விவசாயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

1970இல் முதன்முதலாகப் புதுச்சேரியில் கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்பான வெகுஜன விவசாய அமைப்புப் பற்றி அறிந்த அ.வையாபுரி பன்னையடிக்குப்பம் கிராம விவசாயத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டிப் போராட முடிவு செய்தார்.

சாதிய நிலவுடைமையாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குதல், முறைப்படுத்தாத வேலை நேரம், சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதித்து விவசாயத் தொழிலாளர்களை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக்கொள்ளுதல் எனப் பல்வேறு வகைகளில் சுரண்டலில் ஈடுபட்டனர். சாதிய நிலவுடைமையாளர்களின் இந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட, அறுவடையின்போது முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளாவன:

  • எட்டு மணி நேர வேலை.
  • நிலத்தின் அளவைப் பொறுத்து ஊதியம் வழங்க வேண்டும்.
  • நெல் அறுவடையின்போது தானியம் (நெல்) கொடுக்கப்பட வேண்டும்.

என்று தங்கவேல் கிளமன்சோ, அ.இராமமூர்த்தி போன்ற முண்ணனி தலைவர்களின் ஒத்துழைப்போடு தனது போராட்டத்தைத் துவங்கி வெற்றிபெற்றார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு கடைகோடிக் கிராமம், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் போராடி வென்று புதுச்சேரிக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இதனைப் பாராட்டிய வ.சுப்பையா, ந.குருசாமி, கவிஞர் வெ.நாரா.இராமன், தங்கவேல் கிளமான்சோ, அ.இராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள், அ.வையாபுரி மற்றும் பன்னையடிக்குப்பம் கிராம மக்களைப் புதுச்சேரி அண்ணா திடலுக்கு வரவழைத்துப் பாராட்டு விழா நடத்தி அவர்களைக் கௌரவித்தார்கள்.

அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட நில மீட்புப் போராட்டத்தின் காரணமாக, தமிழகத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தை அமலாக்க வேண்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா பகுதியான தஞ்சையில் மாபெரும் மாநாடும் போராட்டமும் நடைபெற்றது. ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்பது நிலச் சீர்திருத்தத்தின் முக்கிய முழக்கமாக இருந்தது. விவசாயம் செய்யும் உழைப்பாளிகளுக்கே நிலஉரிமை சேர வேண்டும் என்றும், பண்ணையார் மற்றும் நிலப்பிரபுக்களிடம் அதிக அளவு நிலம் சேர்வதைத் தடுத்து உபரி நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற முழக்கம் முதன்மைப் பெறத் தொடங்கியது. தஞ்சையில் நடந்த இம்மாநாட்டில் தங்கவேல் கிளமான்சோ, அ.இராமமூர்த்தி ஆகியோருடன் புதுச்சேரி பிரதிநிதியாக அ.வையாபுரியும் கலந்துகொண்டார்.

1969 – 1974 ஆண்டுகளில் புதுச்சேரியில் திமுக – கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. வ.சுப்பையா அவர்கள் வேளாண்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, ‘புதுச்சேரிச் சாகுபடி குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் 1970’ (The Puducherry Cultivating Tenants Protection Act, 1970) இயற்றப்பட்டது. விவசாய நிலக் குத்தகைதாரர்களை நில உரிமையாளர்கள் சட்டவிரோதமாக வெளியேற்றுவதைத் தடுக்கவும், நிலத்தின் மீதான அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வாடகை செலுத்தத் தவறியதற்காக வெளியேற்றுவதைத் தவிர்த்து நியாயமான குத்தகைத் தொகையை உறுதி செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்தது. இந்தச் சட்டம் டிசம்பர் 1, 1969-க்கு முன் குத்தகைக்கு இருந்த விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. 1969-1970 ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் புதுச்சேரியும் பன்னையடிக்குப்பம் கிராமத்தைத் திரும்பிப் பார்த்தது.

தமிழகத்தில் நிலச் சீர்திருத்தச் (நில உச்சவரம்பு) சட்டம் 1961, பிப்ரவரி 15, 1970 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பயிரிடும் குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், புதுச்சேரியில் குத்தகைதாரர்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதும், நியாயமற்ற குத்தகைப்பணம் வசூலிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தன. இதனைக் கண்டு பெரும் கோபம்கொண்ட அ.வையாபுரி, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தைப் புதுச்சேரியில் போராட்டமாக மாற்றிட முடிவு செய்து, சம்பா அறுவடைக் காலத்தின்போது பன்னையடிக்குப்பத்தில் போராட்டத்தைத் தொடங்கினார். புதுச்சேரி காவல்துறையின் துப்பாக்கி முனையில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் இப்போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் வ.சுப்பையா, ந.குருசாமி, தங்கவேல் கிளமான்சோ போன்ற தலைவர்களின் ஆலோசனைப்படி, தனது போராட்டக் கோரிக்கைகளைப் புதுச்சேரி நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று வழக்குத் தொடர முடிவு செய்தார்.

நிலச்சுவான்தார்களின் நிலங்களில் குத்தகைக்குப் பயிர் செய்துவந்த தலித் விவசாயிகள், உழைப்புச் சுரண்டலால் ஏமாற்றத்தையே லாபமாகப் பெற்றனர். தங்களின் உழைப்புக்கான பங்கைக் கோரினால், உடனே குத்தகை விதியை மீறி நிலத்தை விட்டு விரட்டுவதும் அடிப்பதும் தொடர்ந்தது. “எந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோமோ, அந்த நிலமே சொந்தமாக்கப்பட வேண்டும்” என்ற மன உறுதியுடன் முத்துக்குமரப்ப ரெட்டியார் மற்றும் சிலரின் நிலங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளான மு.வேலாயுதம், அண்ணாமலை, மாயவன், எத்திராஜ், க.தெய்வநாயகம், வே.பிச்சைக்காரன், மணி, ந.ஆனந்தராஜ், ராஜமாணிக்கம், சின்னராசு, அருணாச்சலம், சுப்புராயன் ஆகியோரின் பெயர்களில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை வழக்கறிஞராகக் கொண்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கைத் திரும்பப் பெறக் கூறி அ.வையாபுரியிடம் 5 ஏக்கர் நிலம் வரை பேரம் பேசப்பட்டது. ஆனால், தன் மக்களுக்கான நீதிப் போராட்டத்தில் உறுதியாக நின்றார். புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆறுமாதக் காலம் வழக்கு நடைபெற்றது. பன்னையடிக்குப்பம் கிராமத்திலிருந்து புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அ.வையாபுரி அவர்கள் நடந்தே செல்வார். பிறகு, பாகூர் தாலுகாவுக்கு (கிராம நல நீதிமன்றத்திற்கு) வழக்கு மாற்றப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற தீர்ப்பு விவசாயக் கூலிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, லட்சுமண நாராயண ரெட்டியாரின் நிலத்தில் 45 விவசாயத் தலித் கூலித் தொழிலாளர்களுக்கு, வ.சுப்பையா முன்னிலையில் பாகூர் துணை வட்டாட்சியர் கையொப்பமிட்டு அரை ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

1971இல் பன்னையடிக்குப்பம் கிராம மக்கள் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகச் சாதிய நிலவுடைமையாளர்களின் தூண்டுதலால், கட்டப்பட்டிருந்த கூரை வீடுகளைக் காவல்துறையினர் பிரித்து எறிந்தார்கள். அவ்வாறு அகற்றப்பட்ட கூரைகளுடன் பன்னையடிக்குப்பம் கிராமத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள புதுச்சேரிச் சட்டசபை நோக்கிப் பேரணியாகச் சென்று, 85 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா பெற்றுக்கொடுத்தார். அம்மக்களுக்கு மனைப்பட்டா அடிப்படையில் மீண்டும் வீடு கட்டிட அரசிடம் உதவித்தொகை பெற்றுத் தந்து, இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் வீடுகள் கட்டப்பட்டன. அன்றைய புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த பி.டி.ஜாத்தியிடம்  நேரடியாக முறையிட்டு, பன்னையடிக்குப்பம் ஏரிக்கரையில் உள்ள எஞ்சிய இடத்தில் தலித் மக்கள் ஒரு போகம் விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆளுநர் அங்கேயே அதற்கான அனுமதியை வழங்கியதன் மூலம் ஏரிக்கரையில் விவசாயம் செய்ய வழிவகுத்தார்.

1971இல் சிபிஐ பொதுச்செயலாளர் சி.ராஜேஸ்வர ராவ் தலைமையில் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விவசாயிகள் போராட்டத்தில், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் பிரதிநிதியாக அ.வையாபுரி கலந்துகொண்டார்.

போராடி நிலத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தார். ஆனால், மக்களிடம் விவசாயம் செய்யப் போதிய பணமில்லாததால் அரசை நாடி, தனது கிராமத்திற்குக் கூட்டுறவு விவசாயக் கடன் சங்கத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் விவசாயப் பயிர்க்கடன் பெற்றுக்கொடுத்து விவசாயம் செய்ய வழிவகுத்தார். 1971ஆம் ஆண்டு மிசா (MISA – Maintenance of Internal Security Act) சட்டத்தால் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். பெரும் போராட்டத்தின் விளைவாகப் ‘புதுச்சேரி நிலச் சீர்திருத்தச் சட்டம் 1973’ (Puducherry Land Reforms – Fixation of Ceiling on Land Act, 1973) கொண்டுவரப்பட்டு, நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தனிநபர் அல்லது குடும்பங்கள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மேல் நிலம் வைத்திருப்பதைத் தடுக்கவும், உபரி நிலங்களை அரசு கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்தது.

இம்மக்களை நிலம் உள்ளவர்களாகவும், சமூகப் பொருளாதார, கல்வியில் முன்னோக்கி நகர்த்தவும் வேண்டும் என்ற பெருங்கனவுடன் உழைத்த அவர், 06.12.1978 அன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் எல்லா நிலையிலும் பின்தங்கி நிற்பதை விரும்பாத அ.வையாபுரி  இம்மக்களை முன்னோக்கி நகர்த்தும் தூன்டுகோலாக நாம் எப்போதும் இருக்க வேண்டும் என்னும் பெரும் நீதியுணர்வுடன் செயல்பட்டதாலேயே இவையெல்லாம் சாத்தியமாகின. காலங்கள் கடந்தாலும் இச்சமூகத்திற்காக அ.வையாபுரி ஆற்றிய பெரும் உழைப்பும் தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

l cheajithra@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger