இந்தியாவில் நிலம் பற்றிய உரையாடல் எப்போதும் ‘யார் நிலத்தில் உழைக்கிறார்கள்’ என்ற கேள்வியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; ‘யார் நிலத்தின் மீது கட்டுப்பாடு செலுத்துகிறார்கள்’ என்ற கேள்வியால்தான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த இரண்டிற்கும் உள்ள இடைவெளியே இந்தியச் சமூகத்தின் சாதி – அரசியலைப் புரிந்துகொள்ளும் திறவுகோல். நிலம் என்பது வெறும் உற்பத்திச் சாதனம் அல்ல; அது வாழ்வாதாரம், உணவிற்கான உத்தரவாதம், சமூக மரியாதை, குடியுரிமையில் அரசின் முன்னிலையில் ஒரு சமூகத்தின் இருப்பு ஆகிய அனைத்தையும் வடிவமைக்கும் மைய வளம். இந்த அடிப்படை உண்மையை மறைக்கும் வகையில் வரலாற்றின் பல கட்டங்களில் பல மொழிகள் பயன்படுத்தப்பட்டன. ஒருகட்டத்தில் நிலம் ‘புனிதம்’ எனக் கூறப்பட்டது; பின்னர் அது ‘சொத்துரிமை’ எனச் சட்டப்படுத்தப்பட்டது; இன்று அது ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மறுபடியும் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மூன்று மொழிகளும் தனித்தனியான வரலாற்றுக் கட்டங்களைச் சேர்ந்தவை போலத் தோன்றினாலும், அவை செய்கிற அரசியல் வேலை ஒன்றே: நிலம் சிலரிடம் குவிவதை இயல்பாக்குவது. இதைப் புரிந்துகொள்ளக் காலனித்துவ நிலச் சட்டங்களை மையமாக வைத்து வரலாற்றை வாசிக்க வேண்டும்.
காலனித்துவத்திற்கு முன் இந்தியாவில் நிலம் பற்றிய உரிமை தனிச்சொத்துக் கருத்தாக இயங்கவில்லை. அரசர், இடைநிலையர், உள்ளூர் ஆதிக்கக் குழுக்கள், கோயில், மடம், கிராமக் கட்டுப்பாடு, உழவர், குலத்தொழில் ஆகிய பல அடுக்குகளின் வழியே நிலத்தின் மீதான உரிமைகள் நிலவின. இதனால் நிலம் சந்தையில் சுதந்திரமாகச் சுழலும் பொருளாக இல்லாமல்; வரி, விசுவாசம், மரபு, புனிதம், அதிகாரம் ஆகியவற்றின் உபவிளைவாக இருந்தது. ஆனால், இந்த அமைப்பு சமத்துவத்தைக் குறிக்கவில்லை. அது பெரும்பாலும் ஏற்கெனவே அதிகாரம் கொண்டவர்களின் கட்டுப்பாட்டை ‘மரபு ஒழுங்கு’ என நிறுவியது. நிலம் உழைப்பவரின் உரிமை அல்ல; நிலத்தின் மீது சமூகப் படிநிலை கொண்டவரின் கட்டுப்பாடுதான் முதன்மை என்ற மனப்பாங்கு ஆழமாக இருந்தது. இந்தச் சூழலில் நிலமின்மை என்பது பொருளாதார ஏழ்மை மட்டும் அல்ல; சமூக அடிமைத்தனத்தின் அரசியல் வடிவமாகச் செயல்பட்டது. பின்னர் காலனித்துவம் வந்தபோது, இந்தச் சிதறிய அதிகார அமைப்பை அளவு, பதிவு, வரி, சட்டம், பறிமுதல் என்ற ஒருங்கிணைந்த நிர்வாக மொழிக்குள் மாற்றியது. அதுவே இந்திய நில அரசியலின் நவீன திருப்பமாகப் பார்க்கப்பட வேண்டும்.
1793ஆம் ஆண்டின் நிரந்தர நிலவரிச் சட்டம் (Permanent Settlement, 1793) இந்தத் திருப்பத்தின் மிக முக்கியமான தொடக்கமாகும். இந்த அமைப்பின் மூலம் வங்காளத்தில் ஜமீந்தார்கள் வரிவசூல் இடைநிலையர்களாக மட்டுமல்லாமல், உரிமை கொண்ட நிலக் கட்டுப்பாட்டாளர்களாக நிறுவப்பட்டனர். இதன் மூலம் உழைப்பவருக்கும் நிலத்திற்கும் இடையில் இருந்த வரலாற்று உறவு சட்டரீதியாக வெட்டப்பட்டது; நிலம், வரி செலுத்தும் உரிமைப்பட்ட சொத்தாக மறுவடிவமைக்கப்பட்டது. இதன் நோக்கம் சமத்துவம் அல்ல, அரசுக்கு உறுதியான வருவாய். ஆனால், அதன் விளைவு சமூக ரீதியாக மிகப் பெரியது: நிலம் ஓர் அளவிடத்தக்க வருவாய் ஆதாரமாக மாறியது; நில உரிமை நிர்வாக அங்கீகாரம் பெற்றவர்களிடம் குவிய ஆரம்பித்தது; உழைப்பவரோ சட்ட ரீதியான உரிமையற்ற உற்பத்தியாளராகத் தள்ளப்பட்டார். இந்தச் சட்டம் ஒரு பொருளாதார ஒப்பந்தம் போலத் தோன்றினாலும், அது உண்மையில் புதிய வகை சமூக ஆதிக்கத்தை உருவாக்கியது. முந்தைய புனித-மரபு மொழி மறைந்தது; அதன் இடத்தில் பத்திரம், பதிவேடு, பறிமுதல், வரி நிலுவை ஆகியவை வந்தன. ஆனால், அடிப்படையான கேள்வி மாறவில்லை: நிலத்தின் பலன் யாருக்கு? காலனித்துவம் இதற்கு “வரி செலுத்த வல்லவர்” என்ற பதிலை அளித்தது; “உழைப்பவர்” என்ற பதிலை அல்ல.
ரயத்துவாரி முறை (Ryotwari System), மகல்வாரி முறை (Mahalwari System) ஆகியவை நிலவுரிமையின் வேறு வடிவங்கள். ரயத்துவாரி முறையில் உழவர் நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதாகக் கற்பனை செய்யப்பட்டாலும், வரி நிர்ணயம் கடுமையாக இருந்ததால் நிலம் ஒரு பாதுகாப்பான வாழ்வாதார வளமாக அல்லாமல், எந்த நேரத்திலும் இழக்கக்கூடிய பொருளாக மாறியது. மகல்வாரி முறையில், வரி ஒப்பந்தம் ஒரு முழு ஏரியா அல்லது எஸ்டேட்டுடன் செய்யப்பட்டு, ஜமீந்தார் அல்லது தனிப்பட்ட உழவர்கள் வழியாகக் கட்டணம் பெறப்பட்டது. பெயரில் வேறுபாடு இருந்தாலும், இந்த மூன்று அமைப்புகளின் விளைவு ஒன்றே: நிலம் வருவாய் நிர்வாகத்தின் அலகாக மாறியது. நிதி செலுத்த இயலாதவர்கள் நிலத்தை இழந்தனர்; கடன் வழங்குபவர்கள், இடைநிலையர்கள், அதிகாரத் தொடர்பு உள்ளவர்கள் நிலத்தின் மீது அதிகமான கட்டுப்பாடு பெற்றனர். உழைப்பவரின் உரிமை என்பது பதிவு செய்யப்படும் உரிமை அல்ல, வரி – கடன் சுமையில் சிக்கிய இருப்பாகவே இருந்தது. நிதி செலுத்தும் திறனும் சட்டத்தை அணுகும் ஆற்றலும் சமூக ரீதியாகச் சமமாக இல்லாததால், நிலத்தைச் சட்டப்பூர்வமாக்கிய காலனித்துவம் சமூக ரீதியாகச் சமத்துவத்தை உருவாக்கவில்லை; மாறாக, பழைய ஆதிக்கத்தைப் புதிய நிர்வாக முறையில் பதித்தது.
1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தல் சட்டம் (Land Acquisition Act, 1894) இந்த மாற்றத்தை இன்னும் ஆழப்படுத்தியது. இந்தியக் குறியீட்டுப் பதிவின்படி, இந்தச் சட்டத்தின் நீண்ட தலைப்பே ‘பொது நோக்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்தும் சட்டம்’ என அமைந்திருந்தது. இந்தச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவம் மிக முக்கியமானது: அரசு பொதுநலன் என்ற பெயரில் நிலத்தைக் கட்டாயமாக எடுத்துக்கொள்ளலாம். இதுவே பிந்தைய வளர்ச்சி அரசியலின் முதுகெலும்பாக மாறியது. காலனித்துவம் இங்கே ஒரு தீர்க்கமான முன்னுதாரணத்தை அமைத்தது. நிலம் சமூக வாழ்வின் அடித்தளம் என்பதைக் காட்டிலும், நிர்வாகத் தீர்மானத்தின் பொருள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. கையகப்படுத்தல் என்பது விதிவிலக்கான செயல் அல்ல; அரசு தேவையென நினைக்கும்போது நடைமுறைக்கு வரும் அதிகாரமாக அமைந்தது. இந்தச் சட்டம் சுதந்திரத்திற்குப் பிறகும் நீண்ட காலம் தொடர்ந்தது என்பது சிறிய விஷயம் அல்ல. இதன் மூலம் காலனித்துவம் ஒரு நிர்வாக நடைமுறையை மட்டும் விடவில்லை; ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நிலத்தைக் கையகப்படுத்தும் உரிமையை அரசுக்கு மரபுரிமையாக விட்டுச் சென்றது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு பொருளாதார நீதியை வெறும் கோஷமாக வைக்கவில்லை. அரசியலமைப்பின் பிரிவு 39(b) சமுதாயத்தின் வளங்களின் உரிமையும் கட்டுப்பாடும் பொதுநலனைச் சாதிக்கும் வகையில் பகிரப்பட வேண்டும் என்று கூறுகிறது; 39(நீ) செல்வமும் உற்பத்தி ஆதாரங்களும் சிலரிடம் குவிவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது; பிரிவு 46 பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடிகள் மற்றும் பலவீனமான பிரிவுகள் ஆகியவற்றின் கல்வி – பொருளாதார நலன்களை அரசு சிறப்பு கவனத்துடன் முன்னேற்ற வேண்டும் என நிர்ணயிக்கிறது. இதனால் சுதந்திர இந்தியா காலனித்துவச் சொத்துரிமை அமைப்பை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடவில்லை; குறைந்தபட்சம் கொள்கை மட்டத்தில் பொருள் வளங்களின் சமப் பகிர்வை லட்சியமாக அறிவித்தது. ஆனால், இந்தச் சாசன நோக்கம் சட்டமாகவும், சட்டம் நிர்வாகமாகவும், நிர்வாகம் சமூக நிதர்சனமாகவும் மாறுவதில் பெரிய இடைவெளி தோன்றியது. அந்த இடைவெளியே இந்திய நில அரசியலின் பெருந்துயரம். அரசியல் சாசனம் சமவிநியோகத்தை நோக்கினாலும், மாநிலங்களின் சட்டங்கள், நிர்வாகத் திறன், உள்ளூர் ஆதிக்கக் கைகள், நிலப் பதிவுகளின் குழப்பம், நீதிமன்ற வழக்குகளின் நீடிப்பு ஆகியவை அந்த இலக்கைப் பலமுறை தகர்த்தன.
இந்தப் பின்னணியில் ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டங்கள் (Zamindari Abolition Acts), குத்தகைச் சீர்திருத்தங்கள் (Tenancy Reforms), நில உச்சவரம்புச் சட்டங்கள் (Land Ceil), நில மறுவிநியோகம், நிலச் சிதறலைக் குறைக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஆகியவை அறிமுகமாகின. நிதி ஆயோக் ஆவணம் கூறுவது போல, சுதந்திரத்திற்குப் பின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் மூன்று முக்கிய நோக்கங்களுடன் நிலச் சட்டங்களை இயற்றின: இடைநிலையர்களை ஒழித்தல், குத்தகை முறையை ஒழித்தல் அல்லது ஒழுங்குபடுத்தல், நில உச்சவரம்பு விதித்து மீதி நிலத்தை மறுவிநியோகம் செய்தல். அந்த அறிக்கையே இத்திட்டங்களின் இலக்கு ‘செயல்திறனும் சமத்துவமும் கொண்ட வேளாண் பொருளாதாரத்தை உருவாக்குவது’ எனக் குறிப்பிடுகிறது. ஆனால் அதே ஆவணம், இதன் சாதனை முழுமை பெறாத செயலாக மட்டுமே இருந்தது என்றும், குறிப்பாக 1960 – 70களின் கடுமையான குத்தகைத் தடைகள் பல இடங்களில் உண்மையான உழவர்களின் பாதுகாப்பை விட மறைமுக உறவுகள், பதிவற்ற குத்தகைகள், நிலச் சந்தையின் ஒழுங்கற்ற விரிவு ஆகியவற்றை உருவாக்கியது என்றும் ஒப்புக்கொள்கிறது. அதாவது, சட்டம் நல்ல நோக்கத்துடன் வந்தாலும், அதன் சமூக விளைவு நேரடியாகச் சமத்துவமாக மாறவில்லை.
இதன் தோல்வியைப் புரிந்துகொள்ள, சட்டம் இயற்றப்பட்டது என்ற செய்தியை விட ‘சட்டம் யாரால் செயல்படுத்தப்பட்டது’ என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். நிலப் பதிவுகள் துல்லியமற்றவை; கிராம நிர்வாகம் ஆதிக்கச் சாதிகளின் கட்டுப்பாட்டில்; வருவாய் அலுவலகங்கள் ஆவணச் சிக்கல்களால் நிரம்பியவை; நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலம் இழுபறி; குடும்பப் பங்கீடு என்ற பெயரில் நில உச்சவரம்புச் சட்டங்களைத் தவிர்க்கும் தந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பல இடங்களில் குத்தகை உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் அறிமுகமானபோது, நில உரிமையாளர்கள் நிலத்தை நேரடியாகத் தாங்களே உழுவதாகக் காட்டிப் பழைய உழவர்களை வெளியேற்றினர். இதனால் சீர்திருத்தம் பல நேரங்களில் காகிதத்தில் விவசாயிக்குத் தோழனாகவும், நடைமுறையில் புதிய வகை சட்டப்படுத்தப்பட்ட வெளியேற்றமாகவும் அமைந்தது. இங்கே காலனித்துவத்தின் முக்கிய வாரிசுத் தன்மை வெளிப்படுகிறது: சட்டம் சமமாக அறிவிக்கப்படுகிறது; ஆனால் சமூக அதிகாரம் சமமில்லாததால், சட்டத்தின் பலனைப் பெறுபவர் வேறு, அதன் சுமையைச் சுமப்பவர் வேறு. இதுவே நில உரிமை அரசியலின் நிரந்தர வடிவமானது.
நகர்ப்புறத்திலும் சமவிநியோக லட்சியம் முன்வைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டின் நகர்ப்புற நில உச்சவரம்பு – ஒழுங்குமுறைச் சட்டம் (Urban Land Ceiling and Regulation Act, 1976) குறிப்பாக நகரங்களின் காலி நிலங்களில் உச்சவரம்பு விதித்து, நகர நிலம் சிலரிடம் குவிவதையும் அதில் ஏற்படும் வணிக மற்றும் லாப வேட்டையையும் தடுக்க வேண்டும் என்றும், நகர நிலத்தின் சமவிநியோகத்தைப் பொதுநலன் நோக்கில் கொண்டு வர வேண்டும் என்றும் தனது முன்னுரையிலேயே கூறியது. இதன் அரசியல் அர்த்தம் மிகத் தெளிவானது: இந்திய அரசு ஒருகட்டத்தில் நிலச் சந்தையை முழுமையாக விடுவிப்பதால் சமூக வழி நன்மை உருவாகாது என்பதை அறிந்திருந்தது. நகர்ப்புற நிலமும் கிராம நிலம் போலவே கட்டுப்படுத்தப்பட வேண்டிய பொருள் வளம். ஆனால், இந்தச் சட்டம் பல மாநிலங்களில் முழுமையாகச் செயல்படவில்லை; பின்னர் 1999ஆம் ஆண்டின் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்ட ரத்துச் சட்டம் (Urban Land Ceiling and Regulation Repeal Act, 1999) வழியாக அந்தக் கட்டுப்பாட்டு மனப்பான்மை பல இடங்களில் திரும்பப் பெறப்பட்டது. இது இந்திய நில அரசியலின் இன்னொரு பெரிய திருப்பமாகும்: சமவிநியோகத்தை நோக்கிய கட்டுப்பாடு மெதுவாக முதலீடு மற்றும் சந்தைச் சுழற்சிக்கான தளர்வாக மாறியது.
இதற்கிடையில் ‘வளர்ச்சி’ என்ற புதிய அரசியல் மொழி பலப்படுத்தப்பட்டது. அணைகள், தொழிற்சாலைகள், எரிசக்தித் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நகர விரிவாக்கம், சுரங்கத் திட்டங்கள் ஆகிய அனைத்தும் ஒரே அடிப்படைத் தேவையைக் கொண்டிருந்தன: நிலம். இங்கு காலனித்துவத்தின் பழைய ‘பொது நலன்’ என்ற சொல் புதிய வாழ்க்கையைப் பெற்றது. 1894 சட்டம் இந்த அதிகாரத்தை அரசு கையில் வைத்திருந்தது; 2013 சட்டம் அதை மனிதாபிமானமும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட முறையாக மாற்ற முயன்றது. ஆனால், இரண்டிலும் பொதுவான கேள்வி ஒன்றே: எந்தச் சமூகங்களின் நிலம் எடுக்கப்படுகிறது? எந்த வகை வளர்ச்சிக்காக? யாருடைய செல்வச் செழிப்பிற்காக? வளர்ச்சி என்பது வெறும் பாலம், சாலை, ஆலை அல்ல; அது எப்போதும் சமூகநீதி சார்புள்ளதாக அமைய வேண்டும். ஆனால், அதன் மொழி நோக்கத்தை மறைக்கிறது. ‘திட்டம்’, ‘மூலவளம்’, ‘நகரமயமாக்கம்’, ‘தொழில்மயமாக்கம்’, ‘முன்னேற்றம்’ போன்ற சொற்கள், நிலத்தை இழக்கும் குடும்பங்களின் வாழ்வியல் சிதைவை மூடி மறைக்கின்றன. இழப்பீடு வழங்கப்படுவதால் நீதி நிலைநாட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், நிலத்தின் மதிப்பைப் பணத்தில் மட்டும் அளக்க முடியாது என்பது நிதர்சன உண்மை.
2013ஆம் ஆண்டின் நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உரிமைச் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) இந்தப் பின்னணியில் முக்கியமான சட்ட மாறுதல். இந்தச் சட்டத்தின் முன்னுரையே மிகத் தெளிவாகச் சொல்கிறது: தொழில்மயமாக்கல், அடிப்படைக் கட்டமைப்பு, நகரமயமாக்கல் ஆகியவற்றிற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது ‘குறைந்தபட்ச இடையூறு’ ஏற்படுத்த வேண்டும்; பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும் மறுவாழ்வும் வழங்க வேண்டும்; மேலும் கையகப்படுத்துதலின் மொத்த விளைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் ‘வளர்ச்சியின் பங்காளிகளாக’ மாறி, கையகப்படுத்துதலுக்குப் பிந்தைய அவர்களின் சமூக – பொருளாதார நிலை மேம்பட வேண்டும். இதே சட்டம் பிரிவு 24 மூலம் சில பழைய கையகப்படுத்துதல் செயல்முறைகள் காலாவதியாகலாம் எனவும், பிரிவு 101 வழியாக பயன்படுத்தப்படாத நிலத்தைத் திருப்பி வழங்கும் நடைமுறைக்கு இடமளிக்கிறது என்றும் இந்தியக் குறியீட்டில் காணலாம். மேலும், பிரிவுகள் 107 – 108 மாநிலங்களுக்கு அதிக நன்மை தரும் சட்டங்களை இயற்றும் வாய்ப்பையும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மேலான இழப்பீட்டைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் வழங்குகின்றன. இதனால் 2013 சட்டம், 1894 சட்டத்தின் கரடுமுரடான அதிகாரப் பாதையைச் சீர்செய்ய முயற்சிக்கிறது. ஆனால், நிலக் கையகப்படுத்தல் என்ற மைய அதிகாரத்தை நிராகரிப்பதில்லை.
இதில்தான், ‘மறைந்திருக்கும் மறுவிநியோகம்’ (Hidden Redistribution of land and power) என்ற கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிலம் வெளிப்படையாக “சிலரிடமிருந்து சிலருக்கு” பகிரப்படுகிறது என்று அரசு சொல்லாது. ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது? குறைந்த விலை மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது அரசியல் பலவீனமுள்ள சமூகங்களின் நிலங்கள் ‘பொது நோக்கம்’ என்ற பெயரில் எடுக்கப்படுகின்றன; பின்னர் அவை தொழில், நகர வீட்டுத் திட்டம், முதலீட்டு வளாகம், வணிகக் கட்டமைப்பு, தனியார் ஒப்பந்தத் திட்டம் போன்ற வடிவங்களில் புதிய செல்வச் சுழற்சிக்குள் செலுத்தப்படுகின்றன. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பணம் கிடைக்கலாம்; ஆனால், அவர்கள் நிலம் வழியே பெற்றிருந்த உணவுப் பாதுகாப்பு, கால்நடை மேய்ச்சல் உரிமை, நீர்நிலை உரிமை, அண்டைச் சமூக உறவுகள், உள்ளூர் வேலைவாய்ப்பு போன்றவை பணமாகத் திரும்ப வராது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் “இழப்பீடு கொடுத்தோம்” என்று சொல்வது, நிலத்தைப் பொருளாதாரப் பொருளாக மட்டும் பார்க்கும் ஆபத்து. உண்மையில் நடந்தது, வாழ்வியல் உலகத்தைப் பிரித்து முதலீட்டு உலகுக்கு மாற்றுதல். இதுவே மறைமுக மறுவிநியோகம்.
இந்த அரசியல் எல்லாச் சமூகங்களையும் சமமாகத் தாக்குவதில்லை. வரலாற்றில் நில உரிமையில் பின்தங்கியிருந்த தலித் மற்றும் பழங்குடிச் சமூகங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. காரணம் எளிது: அவர்களிடம் நிலம் இருந்தாலும் அது பெரும்பாலும் குறைந்த அளவு, ஆதார ஆவணப் பிரச்சினைகளுடன் கூடியது, அரசுப் பதிவுகளில் குழப்பமாக உள்ளது, அல்லது வழங்கப்பட்ட உரிமை – பயன்படுத்தும் நடைமுறை இடையே வேறுபாடு இருக்கிறது. இத்தகைய சூழலில் நிலக் கையகப்படுத்தல், நிலப் பதிவு திருத்தம், சந்தை விற்பனை, அடமானக் கடன், குத்தகை ஒப்பந்தம் போன்ற செயல்முறைகளால் அவர்கள் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். உணவை உற்பத்தி செய்த தலித் – பழங்குடி குடும்பங்கள் நிலமற்ற தொழிலாளர்களாக மாறுகின்றன; நிலமுடைய தன்னாட்சியிலிருந்து கூலித் தொழிலின் உறுதியற்ற வாழ்வுக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் உணவின் அரசியல் மீண்டும் நில உரிமை அரசியலோடு கட்டாயமாக இணைகிறது. நிலமின்மை என்பது வேலை இல்லாமை மட்டும் அல்ல; உணவின் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழத்தல்.
இந்தப் பின்புலத்தில் தலித் நிலப் போராட்டங்கள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல; இந்திய ஜனநாயகத்தின் நிறைவேறாத வாக்குறுதியின் அரசியல் நினைவகங்கள். தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் அதற்கான மிகத் தெளிவான உதாரணம். இவை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களாக இருந்தும், பல இடங்களில் பிற சாதி அல்லது வணிகக் கைகளுக்கு மாறியதாக நீண்டகாலக் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மோசடியாகப் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலைகளைக் கண்டறிய விசாரணை ஆணையங்கள் – குழுக்கள் குறித்த குறிப்புகளும் வந்தன. மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில், இத்தகைய பஞ்சமி நிலங்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்குள் மட்டுமே மாற்றப்பட வேண்டும் என்ற ஆணைகள் இருப்பதாக வாதிடப்பட்டதும் பதிவாகியுள்ளது. இதன் அரசியல் அர்த்தம் மிகத் தெளிவானது: தலித் சமூகங்களுக்கு ஒருகட்டத்தில் வழங்கப்பட்ட நில உரிமையே பின்னர் அவர்களிடம் இருந்து சமூக ஆதிக்கம் மற்றும் நிர்வாக அலட்சியத்தின் வழியே பறிக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல இடங்களில் இத்தகைய போராட்டங்கள் காணப்படுகின்றன. பூமிதான இயக்கம் (Bhoodan Movement) நிலமற்றவர்களுக்கு நிலம் தர வேண்டும் என்ற அரசியல் மொழியை முன்வைத்தாலும், அதன் தன்னார்வத் தன்மையே அதன் வரம்பாக இருந்தது; நிலச் சமவிநியோகத்தைக் கட்டாயச் சட்ட, நிர்வாகச் செயலில் மாற்ற முடியாதபோது, அது பெரும்பாலும் தார்மீகப் பேச்சாகவே நின்றது. பூமிதான இயக்கம் நிலமற்ற கிராம ஏழைகளுக்கு நிலப் பகிர்வு செய்யும் நோக்கில் 1950களில் தொடங்கியது. அதே நேரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக நிலமற்ற உழவர்கள், தலித் சமூகங்கள், மேலாதிக்க நில உறவுகளுக்கு எதிராக நேரடி அரசியல் மோதல்களில் ஈடுபட்டன. அவற்றின் வடிவங்கள் மாறினாலும், மையக் கேள்வி ஒன்றே: நிலம் வெறும் பதிவு செய்யப்பட்ட சொத்தா, அல்லது வாழ்வாதாரத்திற்கான நீதி சார்ந்த கேள்வியா? இக்கேள்வி இன்னும் தீர்க்கப்படாததால்தான் பஞ்சமி நில மீட்பு, அரசுப் புறம்போக்கு நிலப் பகிர்வு, குடியிருப்பு உரிமை, காடு, மேய்ச்சல் நிலங்களை அணுகுதல், பொதுவளங்கள் மீட்பு, கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு போன்ற பல வடிவங்களில் தலித் அரசியல் தொடர்ந்து வெளிப்படுகிறது.
இங்கே ஒரு மிக முக்கியமான அரசியல் முடிவு கிடைக்கிறது. இந்தியாவில் நில அரசியலின் வரலாறு ‘புனிதம் சொத்துரிமை வளர்ச்சி’ என்ற நேரான முன்னேற்ற வரலாறு அல்ல. அது மறைக்கப்பட்ட அதிகாரச் சுழற்சியின் வரலாறு. முன்பு புனிதம் நில அநீதியை மறைத்தது. பின்னர் சொத்துரிமை அதையே சட்டரீதியாக்கியது. இன்று வளர்ச்சி அதையே தேசிய நலன், முதலீடு, நகரமயமாக்கல், கட்டமைப்பு என்ற பெயரில் மறுபடியும் முன்னெடுக்கிறது. இதற்கு எதிரான அரசியல் வெறும் சட்டத் திருத்தமாக மட்டும் இருக்க முடியாது. நிலப் பதிவுகளை மேம்படுத்தல், இழப்பீட்டு அளவுகோல்களைச் சரிசெய்தல், கிராம சபை ஆலோசனையைக் கட்டாயப்படுத்தல், பயன்படுத்தப்படாத நிலத்தைத் திருப்பிக் கொடுத்தல், தலித் மக்களுக்கு நன்மை தரும் மாநிலச் சட்டங்களை உருவாக்கல் ஆகியவை அவசியம். ஆனால் அதைவிட ஆழமானது, நிலம் ஒரு தனிநபர் வணிகப் பொருள் மட்டுமா, அல்லது சமூகத்தின் வளமாக (Societal resource) பொதுநலனுக்காகச் சமமாகப் பகிரப்பட வேண்டியதா என்ற அரசியல் தீர்மானம். அரசியலமைப்பு இதற்கான திசையை ஏற்கெனவே காட்டியுள்ளது. கேள்வி: நாம் அதை நில அரசியலில் உண்மையாக எடுத்துக்கொள்கிறோமா?
இறுதியில் மீதமிருப்பது எளிய ஆனால் மிகப் பெரிய கேள்வி: நிலம் யாருடையது? பதிவேட்டில் பெயர் உள்ளவருடையதா? வரலாறாக அதில் உழைத்தவருடையதா? பொது நலன் என்ற பெயரில் அதை மாற்றும் அரசுடையதா? முதலீடு செய்யும் நிறுவனங்களுடையதா? அல்லது பொதுநலனைச் சாதிக்கும் வகையில் சமமாகப் பகிரப்பட வேண்டிய சமூக வளமா? இந்திய நில அரசியலின் அடுத்தகட்டம் இந்தக் கேள்விக்கான பதிலில் அமையும். தலித் நிலப் போராட்டங்கள், குறிப்பாக பஞ்சமி நில மீட்பு போன்ற இயக்கங்கள், இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் அரசியல் மையத்திற்குக் கொண்டு வருகின்றன. அவை நினைவூட்டுவது ஒன்றே: நிலமின்மை என்பது பின்னடைவு அல்ல; அது கட்டமைக்கப்பட்ட அநீதி. அந்த அநீதியைச் சட்டப் பெயர்கள் மாற்றி மறைத்தாலும், அது மறைந்துவிடாது. நிலம் உண்மையில் ஜனநாயக வளமாக மாறும் வரை, இந்திய ஜனநாயகத்தின் பொருளாதார அடித்தளம் முழுமையடையாது.
l yourbasky@gmail.com




