பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

19

பௌத்த வாழ்க்கை

பௌத்தம் மிகவும் கடினமானதொன்று என்றே பலர் தவறாகக் கருதுகின்றனர். இல்லை, அது அளவுக்கதிகமான எளிமையானது. இனிமையானது. வாழ வாழ மகிழ்ச்சியை வாரி வாரி வழங்குவது. மதம் என்னும் அமைப்பிற்குப் பல தேவைகள் உள்ளன. அது கண்டிப்பாக அற்புதங்களை நிகழ்த்துக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஒரு மதத்தில் செயல்பட ஒரு தனிமனிதருக்கு அதிகமான செலவு ஆகும். தன் உழைப்பின் ஒரு பங்கைத் தான் நம்புகிற கடவுளுக்கும் மதத்திற்கும் அவர் செலவழித்தே ஆக வேண்டும். குறைந்தபட்சம் தன் உடலின்மூலமாக சில துன்பங்களை அனுபவித்து அதைக் கடவுளுக்குச்  உரித்தானதாக மாற்ற வேண்டும். இவைதான் மனிதருக்கு மிகவும் கடினமானது. ஆனால், பௌத்தம் அத்தகையது அல்ல. அது ஒட்டுமொத்தமாக மனிதர்களின் நலன் சார்ந்தது.

‘புத்தமும் அவர் தம்மமும்’ நூலில் புரட்சியாளர் அம்பேத்கர்  ‘மதமும் தம்மமும் (நூல்.4) என்னும் பிரிவில் மதம் குறித்த பல்வேறு ஆய்வுகளை நமக்கு நல்குகிறார். மதம் என்பது தனிமனிதன் சார்ந்தது. பொது வாழ்வில் அது பங்காற்ற முடியாது. ஆனால், பௌத்தம் அப்படியல்ல. தம்மம்  ஒழுக்கம் சார்ந்தது. அதுதான் சமூகத்தின் அடிப்படையாகவும் சாராம்சமாகவும் இருக்கும் எனக் கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் முழுமையாக நிறைவுச் செய்யப்பட வேண்டியவை என ஆறு கருத்துருக்களை  புத்தர் முன்வைக்கிறார், அவற்றைப் பாரமிதங்கள் எனக் கூறலாம். தானம், சீலம், சமாதி, வீர்யம், தியானம், பஞ்ஞா என்பவையே அவை. தானம் என்றால் பிறருக்குத் தருவது, ஈந்து இசைபட வாழ்வது, இல்லாதவருக்கு உதவுதல்., அறவோர்க்கு அளித்தல், பசிப்பிணி நீக்கும் மருத்துவம். சீலம் என்றால் ஒழுக்கம். சமாதி என்றால் அமைதி. வீர்யம் எனின் தளர்வுறாத ஊக்கம். தியானம் புலனமைதி, பஞ்ஞா என்பது மெய்ஞானம் அதாவது உண்மையறிவு.

இந்த ஆறில் மிக முக்கியமான  ஞானம் (பஞ்ஞா) ஒழுக்கம் (சீலம்), அமைதி (சமாதி) ஆகிய மூன்றும்  ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன.

புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார், “மற்ற மதங்கள் கடவுளை முன்வைக்கின்றன. ஆனால் பௌத்தம் கடவுளின்  இடத்தில் ஒழுக்கத்தை வைக்கிறது.”

ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்குச் செலவு எதுவும் ஆகாது. அதைக் கடையிலும் நம்மால் வாங்க முடியாது. அது நம் வாழ்விலிருந்து வெளிப்படுவது. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதால் அது தரும் மேன்மை மிகவும் மகிழ்ச்சியானது. அது வாழ்வை மிகவும் இலகுவாக்கி விடுகிறது. பௌத்தம் கூறும் எண் வழிப்பாதை நமக்குத் தெரியும். துன்பமற்ற வாழ்விற்காகப் புத்தர் கூறிய மிக எளிய வழிகள் அவை. நற்காட்சி, நல்நோக்கம், நற்சொல், நற்செயல், நற்தொழில், நன்முயற்சி, நல்விழிப்பு, நற்சமாதி.

இவற்றில் ஒழுக்கமாகிய சீலம் நற்சொல், நற்செயல், நற்தொழில் ஆகியவனவற்றை உள்ளடக்கியது. சமாதி நன்முயற்சி, நன்விழிப்பு, நற்சமாதி ஆகியவற்றைக் கொண்டது, பஞ்ஞா என்பது நற்காட்சி, நல் நோக்கம் ஆகியவற்றைக் கொண்டது. ஞானம் என்பது நான்கு உண்மைகளையும், எட்டுப் பாதைகளையும் நன்றாகப் புரிந்துகொள்ளுதலில் உருவாகிறது. நன்மை தீமைகளை அறியும் அறிவின் தன்மையாக அது வெளிப்படுகிறது. உடல், மனம், சொல் ஆகியவற்றிலிருந்து தீமைகளை விலக்கிவிடுவதின்மூலம் விடுதலை பெற்ற மனத்தினை ஒருவரால் அடையமுடிகிறது. இந்தப் புரிதல் கிடைத்தவுடன் அவருக்கு நல்நோக்கு உருவாகிறது. என்ன நல்லநோக்கம் என்றால் ‘தான்’ என்பதிலிருந்து அறுபட்டு ‘எல்லோருக்கும்’ என்னும் நிலையை அடைய வைக்கிறது. மற்றவரின் நலம் குறித்த சிந்தனையில் நம்மை வயப்பட வைக்கிறது. அன்பு, கருணை, தீங்கற்ற மனம், ஆகியன  கிடைக்கின்றன. இதனால் வெறுப்பு, தீயசொல், கருணையற்ற தன்மை ஆகியவை நீங்கிவிடுகின்றன. இந்தத் தன்மையை அடையும் ஒருவரால் எப்படிப் போர் செய்ய முடியும்? அசோகர் போரை வெறுத்து நிறுத்தினார். அவருடைய ஆட்சி தம்மத்தின் ஆட்சியாக இன்றுவரை போற்றப்படுகிறது.

ஆனால், இன்றைய நிலையை நாம் யோசித்துப் பார்த்தால் குழந்தைகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிற, அப்பாவி மக்கள் அழித்தொழிக்கப்படுகிற போர்ச் செய்திகள் நம் காதுகளைக் காயப்படுத்துகின்றன. வெறும் இருபதாயிரம் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட டிரோன்கள் மனித உயிர்களை இலக்காக்கி ஏவப்படுகின்றன. புறத்தில் ஆயுதங்களுக்கான போர் இது என்றாலும் அகத்தில் மதங்களுக்கான போர்கள்தாம் இவை. அதனால்தான் பௌத்தம் நல்வாழ்விற்கான கூறுகளில் நல்விழிப்பும், நல்நோக்கமும் வேண்டும் என்கிறது.

இந்த இரண்டும் இருப்பின் மனிதர்கள் நன்னடத்தை  அடைகிறார்கள். இதைத்தான் ஒழுக்கம் என்கிறோம். ஒழுக்கம் வேண்டுமெனில் அதற்கு  அடிப்படை நற்சொல், நற்செயல், நற்தொழில், நற்பேச்சுதான் நற்சொல். நற்சொல் என்பது உண்மைக்கு  மதிப்பளிப்பது. அதாவது பொய்யைத் தவிர்ப்பது. பொய் சொல்ல மாட்டேன் என்னும் பஞ்சசீலக் கோட்பாட்டைப் பின்பற்றுவது. உண்மையைப் பேசுவதற்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது? நாற்பது நாட்கள் விரதமிருந்து அதற்காகப் பல முயற்சிகளையெல்லாம் செய்யத் தேவையில்லை. மனத்தளவில் நாம் எடுக்கிற முடிவுதான். அதே பிறரைக் குறித்துப் புறம் பேசாமை, மற்றவர்கள் துன்புறும் வகையில் சுடு சொற்களைப் பேசாமல் இருத்தல், வார்த்தைகளைப் பற்றிதான் நமக்குத் தெரியுமே, தீயினைவிட மிக மோசமான புண்ணை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை சொற்கள். ஆகவே இனிய சொற்களைப் பேசுதல், அன்பான சொற்கள் தேனைப்போல் இனியவை; உண்மையானச் சொற்கள் பூக்களைப் போல் அழகானவை, தீயசொற்கள் அருவருக்கத்தக்கன.

பேச்சைப் பற்றிப் பௌத்தம், ‘பிரிந்திருப்பவரை இணைப்பதாகவும், நட்பை மேலும் இறுக்குவதாகவும், பகையை இல்லாததாக்கவும்  அன்பை ஊக்குவிப்பதாகவும்  இருக்க வேண்டும் என்கிறது.

நற்செயல் என்பது வாழ்க்கையின் மீதான மதிப்பீடு. உடலால் செய்யப்படும் தவறுகளிலிருந்து  ஒருவர்  தம்மைக் காத்துக்கொள்வது. தமக்கும் பிறருக்கும் நன்மைச் செயல்களை மிகுந்த பொறுப்போடும் அக்கறையோடும் செய்வது. பழி வரும் செயல்களைச் செய்யாமல் தவிர்ப்பது. உடலால் செய்யப்படும் மூன்று தவறுகள்: கொலை, கொள்ளை, தவறான காமம்.  நம்முடைய  சொற்களால் செய்யப்படும் தவறுகள் நான்கு: பொய் பேசுதல், புறம் பேசுதல், பிறர்மனம் துன்புறும்படி பேசுதல், பயனற்ற வீண்பேச்சு பேசுதல்.

உள்ளத்தால் செய்யும் தவறுகள் மூன்று: பேராசை, வெறுப்பு, தவறான எண்ணம் ஆகிய இவற்றை விட்டு விலகி நடப்பது மிகவும் முக்கியம். இத்தகைய தீய குணங்கள் கொண்ட ஒருவர் இவற்றை விடுத்து நடக்க வேண்டும் கூடவே நல்லொழுக்கங்களையும் ஏற்க வேண்டும் என்கிறார் புத்தர். அல்லவை தேய அறம் பெருகும் என்பது இதுதான். நற்குணங்கள் ஒருவரிடம் இருக்கும்போது அவரின் மதிப்பு கூடும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. ஆனால், தீயகுணங்கள் ஒருவருக்கு அவமானத்தை தேடித் தரும் என்பதும் ஐயமற்ற ஒன்றுதான். தம்மபதத்தின் பாடல் ஒன்று,

பொய்யுரைப்பவர்
கொடுக்கப்படாததை
எடுத்துக்கொள்பவர்
பிறன்மனைக் கவர்பவர்கள்
நஞ்சாகிய மதுவுக்கு அடிமையானவர்கள்
தங்கள் வேர்களைத் தாங்களே
தோண்டுகிறார்கள் (246-247)

நற்தொழிலும் ஒழுக்கப் பண்பாட்டில்தான் வருகிறது. ஒருவர் வாழ்வதற்கு, அவரைச் சார்ந்தவர் வாழ்வதற்குப் பொருள் மிகவும் இன்றியமையாதது. தீய வழிகளில் வரும் பொருள் நிலையானது அன்று. அது அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.

எனவே பொருளீட்டுவதற்காகச்  செய்யப்படும் தொழில்கள் நேர்மையானதாக இருக்க வேண்டும். எந்தப் பிற உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. கனவுகளுக்குப் பலன் சொல்லுதல், வரப்போவதை  தீர்க்கதரிசியாய் சொல்லுதல், மந்திரித்தல், அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுதல், இயற்கையைவிட பேராற்றல் கொண்டவராகத் தன்னை நினைத்தல் போன்றவைகளைச் செய்தல் மற்றவர்களை ஏமாற்றும் தொழில்கள் ஆகும். இவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. சரியான ஊதியத்தைத் தராமல் வேலைகளை மக்களிடம் வாங்கும் தொழிலும் செய்யக்கூடாது. போதைப்பொருள் வணிகம், ஆயுத உற்பத்தி – வணிக, நச்சுப் பொருள் வணிகம் ஆகியவற்றை பௌத்தம் தடுத்திருக்கிறது.

ஆக, நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ்வது என்பதுதான் பௌத்த வாழ்க்கையாக இருக்கமுடியும்.

நற்செயல்
தீமைகளிலிருந்து விலகுதல்
என்றிருப்பவரே ஒளிர்வார்
மேகங்களிலிருந்து விடுபட்ட
நிலவென. (தம்மபதம் -173)

தீமைகளில் உழல்பவர்கள் தங்கள் வேர்களைத் தாங்களே தோண்டிக்கொள்கின்றனர் என்கிறார் புத்தர். நற்செயல் செய்பவர்கள்  மேகங்களிலிருந்து விடுபட்ட நிலவாய் ஒளிர்வர் எனவும் கூறுகிறார். புத்தர் இரண்டு காட்சிகளை நமக்கு அளிக்கிறார். தன்னுடை வேரையே தோண்டும் மரம் எப்படி நிற்கும்? அடிக்கும் காற்றில் அது வீழ்ந்துவிடும். அதன் பிறகு எதையும் செய்ய முடியாது. ஆனால், மேகங்களை விட்டு விலகிய நிலா ஒளிர்கிறது. நன்றாக ஒளிர்வதற்கு அது பழகுகிறது. அதன் ஒளி பூரணமாய் அனைவரின் மேலும் விழுகிறது.  பிறர் அதனால் பயனடைகின்றனர். தீமை தரும் மேகங்களாக இருக்கின்ற தீச்செயல்களை விட்டு ஒழுக்க ஒளி சிந்துகின்ற நிலாக்களாக மனிதர்கள் வாழ வேண்டும் என்பதுதான் பௌத்த வாழ்க்கை.

நாகார்ஜூனரின் புகழ்பெற்ற செய்தி இருக்கிறது,

“உயிருள்ளவை, உயிரற்றவை என அனைத்திற்கும் எப்படி நிலம் ஆதாரமாக இருக்கிறதோ அப்படியே ஒரு மனிதரின் உடல் மன வளர்ச்சிக்கு நல்லொழுக்கமே ஆதாரமாக இருக்கிறது. மனிதர்களின் அனைத்து வளர்ச்சிக்கும் இதுவே ஆதாரமாய் உள்ளது.”

இந்த ஒழுக்கம்தான் கடவுளின் இடத்தை பௌத்தத்தில் பெற்றிருக்கிறது. ஒழுக்கத்தைக் கடைபிடித்தலும் அதனைப் பேணிக் காத்தலுமே மகிழ்ச்சிக்கான எளிமையான வழி. துன்பங்களிலிருந்து விலகி, மகிழ்ச்சியாய் வாழ்வதுதானே பௌத்த வாழ்க்கை. ஒருவர் சொர்க்கத்துக்குப் போய்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன? வாழுகின்றபோது  இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியாக வாழலாம்.

l yazhanaathi@gmail.com

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger