வார்சன் ஷயர் கவிதைகள்

தமிழில்: டோனி பிரஸ்லர்

வீடு

1

வீடென்பது, சுறாவின் வாயாக இருந்தாலன்றி,
யாருமே வீட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
மொத்த நகரமும் தப்பி ஓடுவதைப் பார்த்த பிறகே,
நீயும் எல்லையை நோக்கி ஓடினாய்.
உன்னுடன் பள்ளிக்கு வந்தவன்,
பழைய தகர ஆலைக்குப் பின்னால்
நீ மயக்கம் போடும் வரை முத்தமிட்ட அந்தப் பையன்,
இப்போது தன் உடலைவிடப் பெரிய துப்பாக்கியைக் கையில் பிடித்திருக்கிறான்.
நீ வீட்டைவிட்டு வெளியேறியதும்,
வீடு உன்னை அனுமதிக்காதபோதுதான்.
ஆகவே, வீடு துரத்தாத வரை
யாருமே வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை.
நீயாகச் செய்ய நினைத்த காரியமல்ல அது,
ஆனால் நீ அதைச் செய்தபோது,
உயிர் மூச்சின் கீழ் தேசிய கீதத்தைத் தாங்கிச் சென்றாய்
விமான நிலையக் கழிவறையில்,
நீ கிழித்துப் போட்ட பாஸ்போர்ட்டை விழுங்கும் வரை காத்திருந்தாய்;
மிகச் சோகமான அந்த வாய்க்குள்
மேலும் கீழுமாக இயங்கிய ஒவ்வொரு அசைவும்,
நீ திரும்பிச் செல்லப் போவதில்லை என்று தெளிவாக்கியது.
மண்ணைவிட தண்ணீர் பாதுகாப்பானதாக இருந்தாலன்றி,
யாரும் தன் குழந்தைகளைப் படகில் ஏற்றிவிடுவதில்லை.
பயணம் என்பதை விடப் பயணிக்க வேண்டிய மைல்களுக்குப் பெரிய அர்த்தம் இருந்தாலன்றி,
யாரும் லாரியின் வயிற்றில் இரவும் பகலும் கிடப்பதைத் தேர்ந்தெடுப்பதில்லை.
வேலிகளுக்கு அடியில் தவழ்ந்து செல்வதையும்,
நிழல் பிரியும் வரை அடிக்கப்படுவதையும்,
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதையும்,
உன் நிறம் கறுப்பு என்பதால் படகிலிருந்து தள்ளப்படுவதையும்,
மூழ்கடிக்கப்படுவதையும், விற்கப்படுவதையும், பட்டினி கிடப்பதையும்,
நோய்வாய்ப்பட்ட விலங்கு போல எல்லையில் சுடப்படுவதையும்,
பரிதாபத்திற்குரியவராகக் கருதப்படுவதையும் யாருமே தேர்ந்தெடுப்பதில்லை.
ஒரு வருடமோ, இரண்டு பத்து ஆண்டுகளுக்கோ,
அகதிகள் முகாமையே வாழிடமாகத் தேர்ந்தெடுக்க யார்தான் விரும்புவார்கள்;
ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, சோதனையிடப்பட்டு,
எங்கெங்கும் சிறைகளைக் காண்பதற்கும் விரும்புவார்கள்.
மேலும் நீ உயிர் பிழைத்தால்,
இன்னொரு வாசலில் இவ்வாறு வரவேற்கப்படுவாய் —
வீட்டிற்குச் செல்லுங்கள் கறுப்பர்களே, அழுக்கு அகதிகளே,
எங்கள் நாட்டின் பசும்பாலை வற்றும் வரை உறிஞ்சிக் குடித்தவர்களே,
கையை நீட்டும் கறுப்புக் கரமும், விசித்திரமான வாசனையும், கொடூரமும் கொண்டவர்களே. பாருங்கள், அவர்கள் தன் சொந்த நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்கள்,
எங்கள் நாட்டிற்குத்தான் என்ன செய்வார்கள்?
உனது குழந்தையின் உடலை இடிபாடுகளில் கண்டுபிடிப்பதை விட
அவமானங்களை விழுங்குவது எளிது.
ஆனால், நான் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்,
ஆனால் வீடென்பது சுறாவின் வாயாகும்.
வீடென்பது துப்பாக்கியின் குழாய்.
அது கடலை நோக்கி உன்னைத் துரத்தியடிக்காத வரை,
யாருமே வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.
போ இப்போது இங்கிருந்து, ஓடிவிடு,
‘நான் என்னவாகிப் போனேன் என்று எனக்கே தெரியவில்லை’
என்று உன் காதில் ஒரு குரல் சொல்லும் வரை,
யாருமே வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.

m

2

நான் எங்கே செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது.
நான் எங்கிருந்து வந்தேன் என்பது
தடயமின்றி அழிந்தே போய்விட்டது.
நான் வேண்டாதவள்.
என் அழகு இங்கே அழகல்ல.
என்னுடைய உடம்பு, நான் இந்த இடத்திற்குச் சொந்தமில்லை என்ற அவமானத்தில் எரிகிறது,
என் உடல் ஏங்குகிறது.
நானே நினைவின் பாவமும் வெறுமையும்.
நான் செய்திகளைப் பார்க்கையில்,
என் வாய் இரத்தம் நிரம்பிய தொட்டியாகிறது.
வரிசைகள், படிவங்கள், மேசைகளில் அமர்ந்திருக்கும் மக்கள், அழைப்பு அட்டைகள்,
குடியேற்ற அதிகாரிகள், தெருவில் பார்க்கும் பார்வைகள்,
என் எலும்புகளுக்குள் ஊறும் குளிர்,
இரவில் நடக்கும் ஆங்கில வகுப்புகள்,
நான் வீட்டிலிருந்து விலகி வந்திருக்கும் தூரம் உட்பட.
அல்ஹம்துலில்லா,
இவையெல்லாம் முற்றிலும் தீப்பற்றி எரியும்
ஒரு பெண்ணின் வாசனையையும்,
என் தந்தையைப் போன்ற, லாரி நிறைய ஆண்களை விடவும் சிறந்தவை –
அவர்களே என் பற்களையும் நகங்களையும் பிடுங்குகிறார்கள்.
எல்லா ஆண்களும் என் கால்களுக்கு இடையில்,
ஒரு துப்பாக்கியை வைக்கிறார்கள்,
சத்தியம் செய்யச் சொல்கிறார்கள், பொய்யை நீட்டுகிறார்கள், பெயரை உதிர்க்கிறார்கள்,
அவர்களது கொடியை, அவர்களது மொழியை, அவர்களது ஆண் என்கிற தடித்தனத்தை
என் வாயில் வைக்கிறார்கள்.

m

3

உன் அம்மாவின் முதல் முத்தம்
உன் அம்மாவுக்கு முதல் முத்தமிட்டவன்தான்,
போர் வெடித்தபோது பெண்களை வன்புணர்ந்தான்.
அதை உன் மாமா,
அவளுக்கு மீண்டும் நினைவூட்டிய பிறகு,
அவள் உன் படுக்கையறைக்குச் சென்று
தரையில் படுத்தாள்.
நீயோ பள்ளிக்குச் சென்றிருந்தாய்.

அவன் முதல் முத்தமிட்டபோது,
அவளுக்கு வயது பதினாறு.
அவளது சுயநினைவை இழக்கும் அளவுக்கு
அதிக நேரம் மூச்சை அடக்கியதால் மயங்கிவிட்டாள்.
கண் விழித்தபோது, அவளுடைய ஆடை நனைந்து
வயிற்றில் ஒட்டிக்கொண்டிருப்பதையும்,
அவளுடைய தொடைகளில் அங்கங்கே பிறை வட்டமாக
கடிபட்டிருப்பதையும் கண்டாள்.

அதே மாலை நேரம்,
அவளது தோழியொருத்தியைப் பார்க்கச் சென்றாள்,
அவளோ படுக்கையறையில் சட்டவிரோதமாக வையினைப் காய்ச்சிக்கொண்டிருந்தாள்.
‘இதற்கு முன் இப்படி யாரும் என்னைத் இவ்வாறு செய்ததில்லை’
என்று அவளிடம் ஒப்புக்கொண்டபோது,
வாயில் இரத்தம் கசிய
திராட்சைப் பழங்களோடு சிரித்த அவள்
உன் அம்மாவின் கால்களுக்கு இடையில்
கையை நுழைத்தாள்.

போன வாரமோ, அவன் பதினெட்டாம் எண் பேருந்தை ஓட்டிச் சென்றதை அவள் பார்த்தாள்,
அவன் கன்னம் வீங்கி உப்பியது போலவும்,
ஒரு கொடி போல வளர்ந்த தழும்பு வாயைக் கடந்து இழுக்கப்படுவது போலவும் இருந்தது.

ஒரு பேரீச்சம் பழப்பையை உன் மார்பில் அணைத்தபடி,
நீயும் அவளுடன் இருந்தாய்.
அவனுடைய ஜாடை, உனக்கு எவ்வளவு ஒத்திருக்கிறது என்பதைப் பார்த்ததும்
அவள் அடிவயிற்றில் வலியெடுத்தது போல் அரற்றினாள்.

l

உள்வாங்குதல்

நாங்கள் ஒருபோதும் மூட்டை முடிச்சுகளைப் பிரிப்பதில்லை,
தவறான மொழியில் கனவு கண்டு,
எங்கள் அம்மாவின் பயங்களைக் கால்களில் சுமக்கிறோம் —
அவன் குரலை உயர்த்தினால் நாங்கள் ஓடிவிடுவோம்
அவன் சலிப்படைந்தால் நாங்கள் மூட்டைகளைக் கட்டிக்கொள்வோம்
எங்கள் மனங்களிலிருந்து அகதியானதை மறக்க இயலாமல்,
இரவு முழுவதும் உறங்க இயலாமல் புரண்டு கிடப்போம்.

ஓர் அகதியின் மனம், ஆறு அறைகள் கொண்டது.
முதலாவதில், அம்மாவுடைய திறந்தே கிடக்கும் சூட்கேஸ்.
இரண்டாமது, மூடிய கைகளுக்குள் முகம் புதைத்து அழும் அப்பா.
மூன்றாவதில், குடியேற்றும் அலுவலகம்,
நான்காவதில் உனது வெட்டப்பட்ட கால்கள்,
ஐந்தாவது ஒரு கர்ப்பப்பை – உன்னுடையது?
ஆறாவது, அனுமதி அளிக்கப்பட்ட ஆவணங்களுடன் திறக்கிறது.

என்னால் எனக்குள் இருக்கும் அகதியை வெளியேற்ற முடியவில்லை, எனவே
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் உடலைப் பூட்டிக்கொள்வேன்.
எத்தனை மாத்திரைகள் தூக்கம் வருவதற்குத் தேவை?
எத்தனை மாத்திரைகள் மரணத்தைச் சந்திப்பதற்கு?

அகதியின் இதயமானது,
எப்போதும் வெளிப்புறமாக அடுக்கு ஒன்றை வளர்க்கிறது.
அதுவொரு உள்வாங்கல்.
அதுவே உறுப்பை ஒரு கூட்டுக்குள் அடைக்கிறது.
அகதியாகும் நாட்டில், அந்தக் கூடுதல் தோலை வளர்க்க இயலாதவர்கள்,
முதல் ஆறு மாதங்களுக்குள் இறந்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் அகதியை நோக்கிக் கேட்கப்படுகிறது,
நீ மனிதன்தானா?

அகதியோ
தான் இன்னும் மனிதனாகவே இருப்பதாக உறுதியாக நம்புகிறார்,
ஆனால் அன்றிரவு அவருக்கு வருகிறது குழப்பம்,
தூங்கும்போது,
தனது இயல்பில் மேற்சொன்னது மாறிவிடுமோ என்றும் கவலைப்படுகிறார்.

 

வார்சன் ஷயர் (பி. 1988)

பிரிட்டிஷ்-சோமாலிய கவிஞர். லண்டனின் முதல் Young Poet Laureate (2013) ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஷயரின் கவிதைகள், அகதிகள் அனுபவங்களுக்கும் புலம்பெயர்ந்தோர் அடையாளத்திற்கும் குரல் கொடுக்கின்றன. அது கவிதையை, கூட்டுணர்வின் சாட்சியத்தை, புரிதலை கோரும் கலையாக மாற்றுகிறது.

டோனி பிரஸ்லர்

கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதிவருகிறார். 2023இல் ‘பாலைநிலவன்’ தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்’ தொகுப்பின் ஆசிரியராகவும், 2024இல் ‘ககனம்’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நவீனத் தமிழ்ப் புலத்தைச் சேர்ந்தவர்.

] tonypresslers@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger