நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில், ‘வானம் கலைத் திருவிழா’ கடந்த நான்கு ஆண்டுகளாக பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதத்தை முன்னிட்டுப் பல்வேறு கலை – இலக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்துவருகிறது.
தலித் வரலாற்று மாதம் உலகம் முழுவதும் தலித் செயற்பாட்டாளர்களால் பல்வேறு வழிகளில் நினைவுகூரப்பட்டு வந்தாலும், மாதம் முழுவதும் கொண்டாடும் நிகழ்வுகளாக ஒருங்கிணைந்த கூடுகைகள் அரிதாகவே நடைபெறுகின்றன என்பதே நிதர்சனம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து, வரலாற்றை நினைவுகூரவும், எதிர்கால திட்டங்களை விவாதிக்கவும் வேண்டும் என்ற இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களின் யோசனையிலிருந்து உருவானதே ‘வேர்ச்சொல் – தலித் இலக்கியக் கூடுகை’.
இந்நிகழ்வைத் தொடங்கிய காலத்தில் சில நடைமுறை காரணங்களால் முழுமையான ஒருங்கிணைந்த கூடுகையைச் சாத்தியப்படுத்த இயலவில்லை. மேலும், தமிழ் இலக்கியச் சூழலில் பங்கேற்பாளர்கள் அனைவரும் உரையாளர்களாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கலாச்சாரத்தினால், இது பெரும்பாலும் உரையாற்றுபவர்களும் வாசகர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாகத் தொடர்கிறது. ஆயினும், எதிர்காலத்தில் இதனை மேலும் விரிவான, பிரமாண்டமான கூடுகையாக உருவாக்கும் திட்டங்கள் உள்ளன.
‘வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை’யின் நோக்கம், தலித் வரலாறு, பண்பாடு, அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க அரசியலின் பல்வேறு கூறுகளையும் உட்பிரிவு சிக்கல்களையும் விமர்சன ரீதியில் விவாதிப்பதுமாகும். இதன் அமர்வுகளும் அந்த நோக்கத்தையே பிரதிபலிக்கின்றன.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மஹத் சத்தியாகிரம் நூற்றாண்டு நினைவுகூரப்பட உள்ளது. அதற்கான தொடக்கமாக, இயக்குநர் பா. இரஞ்சித், தலித் செயற்பாட்டாளர் சுபோத் மூரே ஆகியோர் தங்களது உரைகளின் மூலம் நிகழ்வைத் துவக்கி வைத்தனர். வேர்ச்சொல் இலக்கியக் கூடுகையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்த இருநாள் இலக்கியக் கூடுகையில், விருது வழங்கும் அமர்வைத் தவிர்த்து 17 தனித்தனி அமர்வுகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றன. ஒவ்வோர் அமர்வும் அதன் பேசுபொருள் சார்ந்து முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இந்நிகழ்வுகளின் காணொளிகள் நீலம் சோசியல் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன.
என்.டி.ராஜ்குமார்
“இப்போது என் எழுத்துகளில் வாதைகளை ஏவி விட்டிருக்கிறேன்” என்கிற குரலோடு புகுந்து தமிழ்க் கவியுலகைக் கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் பிடித்து உலுக்கும் வாதையாக மாறியிருப்பவை என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள். 1966ஆம் ஆண்டு பிறந்து நாகர்கோயிலில் வாழ்ந்துவரும் என்.டி.ராஜ்குமாரின் முதன்மை அடையாளம் கவிதை. பாடகர், நாடகக் கலைஞர், மொழிபெயர்ப்பாளர், சிலம்பம் மற்றும் களரி ஆகிய கலைக்குழுக்களின் ஆசான் என்று பன்முகங்களைக் கொண்டவர். ‘வந்தனம்’ என்ற நாடகக் குழுவை நடத்தியவர். ஆனால், இந்த அடையாளங்கள் யாவும் அவர் கவிஞர் என்பதோடு பிணைந்தவை. 1990களில் தமிழில் தலித் இலக்கியம் தனித்துவம் பெற்றெழுந்தபோது அது தனக்கென்ற உள்ளடக்கத்தையும் தனி மொழியையும் உருவகித்துக்கொள்ள முயன்றது. அவற்றைக் கவிதைத் தளத்தில் பெருவெடிப்பாக நிகழ்த்தியவை என்றால் முதன்மையாக என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளையே கூற முடியும். 1997ஆம் ஆண்டு முதல் தொகுப்பு ‘தெறி’ வெளியானது முதல் தற்போது வரை அவரது 10 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. எ.ஐயப்பன், பவித்ரன் தீக்குன்னி, பொய்கையில் அப்பச்சன், ஸ்மிதா அம்பு ஆகியோரின் கவிதைகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
என்.டி.ராஜ்குமாரின் கவிதை மொழி நவீனத் தமிழுக்கு முற்றிலும் புதியவை. அவரின் மொழி ஒரே நேரத்தில் கிறக்கத்தையும் மயக்கத்தையும் தரவல்லவை. சொல் புதிது, பொருள் புதிது என்பதற்கு இலக்கணமாய் அமைந்தவை. மாந்தீரிகம், வைத்தியம், குறி சொல்லுதல், வர்மக்கலை என்று நவீனத்தால் பகையாக்கிக்கொள்ளப்பட்ட அடையாளங்களை ஏந்திய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த என்.டி.ராஜ்குமார் தனக்கான கவிதை மொழியையும் அவற்றிலிருந்தே எடுத்தளித்தார். இந்த வகையில் சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீனத் தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவராக அவர் அறியப்படுகிறார். வழக்கமான கவிதை மொழியிலிருந்து மாறி பழங்குடி மந்திரத்தின் ஆற்றலோடு அவை ஒலித்தன. அதனாலேயே அவரின் கவிதைகளை அவரால் பெருங்குரலெடுத்துப் பாடவும் முடிந்தது. அந்த மொழியும் வாசிப்பும் பெரும் நிகழ்த்துதலாக அமைந்தன. இந்தப் பாணியையும் அவர் கவிதைகளே நமக்கு அறிமுகப்படுத்தின. சமூகக் கோபத்தைப் பொதுமொழியில் வெளிப்படுத்தி வந்த இடதுசாரி கலையிலக்கிய மேடைகளும், தலித் கவிதைகளும் வாழ்விலிருந்து உருவான என்.டி.ராஜ்குமாரின் கவிதை மொழியோடு இணக்கம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
என்.டி.ராஜ்குமார் கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் தாட்சண்யமின்றி கலைத்துக் காட்டும் அவர் கவிதைகள் அதோடு நின்று விடுவதில்லை. அவ்விடத்தில் பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தம் கவிதைக்குள் விரித்துக் காட்டின. தொல்குடி வாழ்வின் தொடர்ச்சியிலிருந்து தொன்மங்களையும் மாந்தீரிகக் கூறுகளையும் இழுத்து வந்து தமிழ்க் கவிதைப் பரப்பிற்குள் சேர்த்தன அவர் கவிதைகள். இந்த உள்ளடக்கத்திற்கு உகந்தவையாக நிலவுகிற மொழி இருந்திருக்கவில்லை. எனவே உள்ளடக்கத்தை மட்டுமல்லாது மொழியையும் வாழ்விலிருந்தே சிருஷ்டித்துக்கொண்டன. இவ்வாறு மொழியும் உள்ளடக்கமும் சேர்ந்ததால்தான் அவர் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனைத் தமிழ்க் கவிதைப் பரப்பிற்கும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோர் இலக்கிய வெளிக்கும் தலித் கவிதையியல் அளித்த கொடை என்று கூறலாம். அவர் கவிதைகள் பரவலாகிவந்த காலத்தில் தமிழில் பின்நவீனத்துவச் சிந்தனைகள் மூலம் பேரடையாளங்கள் கட்டுடைக்கப்பட்டு, சிறு கதையாடல்கள் தேடப்பட வேண்டும் என்று விவாதங்கள் அறிமுகமாகி வந்தன. ஆனால், பூர்வகுடிகளின் பண்பாடு பேரடையாளங்களுக்கு மாற்றான வாழ்வியலை இயல்பாகவே கொண்டிருக்கின்றன என்பதை என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் நமக்குக் காட்டின. இந்த வகையில் அடித்தள மக்கள் மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல, மாற்று வாழ்வியலையும் தன்னகத்தே கொண்டது என்பதை அவர் கவிதைகள் கூறுகின்றன. எப்போதும் அலையுறும் கவிமனத்தால் தத்தளிக்கும் குணம் கொண்டதாலேயே நம் உள்ளத்தையும் உடலையும் அதிரச் செய்யும் ஆற்றல் மிக்க சொற்களை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. இத்துணை ஆண்டு கால பயணம் பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டி நீலம் பண்பாட்டு மையம், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் தலித் வரலாற்று மாதத்தில் நடத்துகிற வானம் – வேர்ச்சொல் தலித் இலக்கிய விழா சார்பாக 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை வழங்கி வாழ்த்தி மகிழ்கிறது.
புகைப்படங்கள் : பார்த்திபன், ஹயாத்தி, காளீஸ்








