பயணம், சிறுவயது அனுபவங்கள் இவற்றில் என் பாட்டியைத்தான் என் முதல் ஆசிரியராகக் கருதுகிறேன். நாக்பூரில் பாபாசாகேப் பௌத்தம் தழுவிய மாபெரும் நிகழ்வை நேரில் கண்ட பலரில் அவரும் ஒருவர். குழந்தைப் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் பாபாசாகேப் குறித்துதான். அப்படித்தான் என் பாட்டி என் முதல் ஆசிரியராக ஆனார். அப்படியொரு பாட்டி எல்லோருக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
புத்தரின் மூன்று பிடகங்களில் ஒன்று அபிதம்ம பிடகம், மிக உயர்நிலை விவாதங்களைக் கொண்டது. சித்தா – ரூபா குறித்துப் பேசுகிறது. கருத்து, பொருள் என இப்போது குவாண்டம் இயற்பியல் பேசும் விசயங்களையே அதுவும் பேசுகிறது. பாட்டி, என் சித்தம் அதாவது என் மனதை உருவாக்கினார். அது ரூபமாக உருவாகியது, என் ரூபம் என்பது என் கலைப் படைப்புகள். என் பாட்டி கற்றுக்கொடுத்தவையே என் கலையாக உருவாகின. சித்தமும் ரூபமும் வேறுவேறில்லை, அவை அடிப்படையில் ஒன்றுதான். நான் ஆசிரியராகக் கருதும் வியட்நாமிய பௌத்த அறிஞர் திக் நியாட் ஹான் இதன் இடையிலிருப்பவற்றைப் பேசுகிறார். எதுவும் நான் ஆக இருப்பதில்லை, நாம் ஆகவே இருக்கிறது. அதுதான் இடையிருப்பு. இதையே மாபெரும் பௌத்த அறிஞரான நாகார்ஜுனர் நமக்கு விளக்கினார். இதுதான் நம் அழகியல்.
நாம் பார்ப்பனிய அழகியலிடம் போக வேண்டியதில்லை, அந்த மாதிரி கலை வடிவங்களைக் கடன் வாங்க வேண்டியதில்லை. நமக்கென ஓர் அழகியல் இருக்கிறது, நம் வாழ்வே அந்த அழகியல். பார்ப்பனரல்லாத, வேத மரபில்லாத ஒரு மரபுண்டு. தீண்டப்படாதோர் எல்லாம் ஒருகாலத்தில் பௌத்தராக இருந்தனர் என்ற வரலாறு இருக்கிறது. நாம் நமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே நான் – நாம் என்பதைப் பார்க்கும்போது, நான் என்று எதுவுமில்லை, நாம்தான் இருக்கிறது. பாபாசாகேப் என்பவர் தனிநபரல்ல, அவர் நமக்குள்ளிருக்கும் ஓர் ஆற்றல்.
தோரத், என் வாழ்வில் மிக முக்கியமான நபர். என் வாழ்க்கைப் பயணத்தில் மிகுந்த பங்களிப்பு செய்தவர். அவர் ஓவியரோ கலைஞரோ அல்ல. ஆனால், ‘தலித் ஆர்ட் அண்ட் விஷுவல் இமேஜரி’ புத்தகத்துக்கு அவர் எழுதியுள்ளது போன்ற முன்னுரையை எந்தக் கலை விமர்சகரும் எழுதிவிட முடியாது. பல கல்வி உதவித் தொகைத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். ஒருமுறை அப்படியொரு கல்வியுதவித் தொகை கூட்டத்தில் பேசும்போது, “ஒரு பையனும் பெண்ணும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அந்தப் பெண்ணுக்கு வாய்ப்பளியுங்கள். அவர் வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்திருந்தால் அதற்கும் முன்னுரிமை கொடுங்கள். இது உங்களுக்குப் பெரிய போராட்டமாக இருக்கும். உங்களை ஏற்க மாட்டார்கள். அதற்கெல்லாம் கவலைப்படக்கூடாது” என்றார்.
ஒரு நேரத்தில் நானும் தனியாக இருப்பதாய் நினைத்திருக்கிறேன். ஆனால், எதுவுமே தனியாக இருப்பதில்லை. இருப்பு என்பதே பலவும் சேர்ந்ததுதான். இதுவே நம் அழகியலின் பலம். நான் அபிதம்ம பிடகத்தைப் படிக்கும்போது, அதுதான் அழகியலின் வேராக இருக்கிறது. நான் நாக்பூரில் இருக்கும்போது யாரோ சொல்லி பா.இரஞ்சித்தின் ஒரு படத்தைப் பார்த்தேன். மிகச்சிறந்த படம். அவர் தனது சொந்த அழகியலை, இலக்கணத்தை உருவாக்குகிறார். ஒரு பா.இரஞ்சித் போதாது, பல இரஞ்சித்துகள் உருவாக வேண்டுமென விரும்புகிறேன். இந்த அழகியல் நம் விழிப்புணர்வில், மனதில் புதிய திறப்புகளை அளிக்கக்கூடியது. குவாண்டம் பிரக்ஞை என்ற ஒன்று குறித்துப் பல விஞ்ஞான ஆய்வுகள் நடக்கின்றன. ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவம் குறித்துப் பேசும்போது புத்தரைக் குறிப்பிடுகிறார். பல விஞ்ஞானிகள் புத்தரிடம் செல்கிறார்கள். புத்தர் நிர்வாணம் என்ற கட்டற்ற தன்மையை அடைந்தவர். நிர்வாணம் என்பது கட்டுப்பாடுகள், விவரணைகள் கொண்ட ஒரு நிலையல்ல, அதுவொரு கட்டற்ற தன்மை. அதிலோர் ஆழமான அழகியல் நோக்கிருக்கிறது. எனவேதான் பாபாசாகேப் தன் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் புத்தரை “சௌந்தர்யப் பிரிய புத்தர்” என்கிறார், அழகை நேசிக்கும் புத்தர் என்கிறார். மேலும் அந்நூலில், சாரிபுத்தர் வயதான பிறகு தான் பிறந்த நாளந்தாவுக்குத் திரும்புவதை எழுதுகிறார். அந்தக் காட்சியில் புத்தர் அவரது சேனாபதி சாரிபுத்திரரைப் பார்க்கிறார், பின் தன் குடிலுக்குத் திரும்புகிறார். அதில் பாபாசாகேப் அவர்களது வாழ்வின், விடுதலையின், மாண்பின் அழகியலை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார் என்பதைக் காணலாம்.
நாம் நமது வடிவங்களை, இலக்கணங்களை உண்டாக்க வேண்டும். யாரிடமும் கடன்வாங்க வேண்டாம். நம்மிடமுள்ளவற்றைக் கொண்டாட வேண்டும். இங்கே வந்து, புதிய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதில் மகிழ்ச்சி. நம்மிடம் ஒரு பெரிய வெளி உள்ளது. அந்தப் பக்கத்துக்கும் இந்தப் பக்கத்துக்குமான இடைவெளி, அதை நம் கருத்தியலால், நம் பிரக்ஞையால், நம் சித்தத்தால் நிரப்ப வேண்டியது அவசியம். அந்த இடைவெளியை இந்த நவீன ஓவியக்கலை நிரப்பவில்லை, நவீன கலை தவறான வழியில் செல்கிறது. அது நவீனமாக இல்லை, ஆனால் நம் வாழ்வு நவீனமானது, தற்காலத்தியது. அதை மறக்கக் கூடாது. நாம் ஒருவரோடொருவர் நிறைய உரையாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அதைக் குறைவாகச் செய்கிறோம். அது நம் அனைவரின் பிரச்சினையும்தான். நான் டெல்லியில் இருக்கிறேன், நாக்பூர் என் சொந்த ஊர் என்பதால் அவ்வப்போது செல்வேன். தெற்கே வருவதில்லை. ஒருமுறை ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு வந்து உரையாற்றியிருக்கிறேன்.
காட்சியின் அரசியல் குறித்துப் பேசியிருக்கிறேன். அரசியல் இல்லாமல் காட்சி இல்லை. நம்முள் ஆழமாக வேர் கொண்டிருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். குவாண்டம் அறிவியலில் ஒரு கருத்துண்டு. இங்கே என்ன நடக்கிறதோ அதுவே அங்கும் நடக்கிறது. அங்கு இங்கு என்பது தனித்தனியாக இல்லை. எனது ஆசிரியரான ஜென் அறிஞர் திக் நியாட் ஹான் இதைக் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார். தியரி ஆஃப் இண்டர்பீயிங் என்பார்கள், இடை-இருப்பின் தத்துவம். ஒன்று மற்றொன்றிலிருந்து தொடர்பில்லாமல் இருப்பதில்லை. நீரில் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் நம்மால் இயல்பாகப் பிரிக்க முடியாது. அபிதம்ம பிடகமும் இதையே சொல்கிறது. இப்போது அபிதம்மம் நமக்கு ஆற்றல் தரும், உலகுக்கு வழிகாட்டக்கூடியது. நாம் அதன் அழகியலைப் பின்பற்றிப் பணியாற்ற வேண்டும். நன்றி. ஜெய்பீம்.
(வானம் கலைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற ‘உள்மெய் – தலித் அழகியல் கலைக்காட்சி 2026’ நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்)
] violetlj@proton.me





