விடுதலையின் புதிர்ப் பாதைகள் – வாசுகி பாஸ்கர்

புகைப்படங்கள்: அமரன் அஜய்

“1950ஆம் ஆண்டு 26 ஜனவரியன்று ஒரு முரண்பாடான வாழ்க்கை முறையில் நாம் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவம் பேசும் நாம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமற்ற நிலையில் இருப்போம். அரசியலில் ஒருவனுக்கு ஒரு வாக்கு ஒரே வித மதிப்பு என்பதனை ஏற்போம். ஆனால் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்துவருவோம். எவ்வளவு காலம் இந்த முரண்பாடான வாழ்க்கையைத் தொடரப் போகிறோம்? சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை இன்னும் எத்தனை காலம் மறுத்துக்கொண்டிருக்கப் போகிறோம்? நெடுங்காலம் அதை நாம் மறுத்துவருவோமேயானால் அது நமது அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிப்பதிலிருந்து தப்ப முடியாது. விரைவில் இந்த முரண்பாடுகளை நாம் களைய வேண்டும். இல்லையெனில், நாம் கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த ஜனநாயகக் கட்டமைப்பைச் சமத்துவம் மறுக்கப்பட்டவர்கள் உடைத்தெறியலாம்.”

– பாபாசாகேப் அம்பேத்கர் (அரசியலமைப்பு நிர்ணய சபையில் 25 நவம்பர் 1949 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைச் சமர்ப்பித்த பின் பாபாசாகேப் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒருபகுதிதான் இக்கட்டுரைக்கான மையப்பொருள். இந்தியச் சட்டங்கள் ஒன்றை வலியுறுத்திக்கொண்டே இருக்கும். ஆனால், சாதியச் சமூகத்தின் யதார்த்தம் வேறொன்றாக இருக்கும். இவை இரண்டுக்குமான முரண்பாட்டைத்தான் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய முரண்பாடுகளிலிருந்து நிகழ்ந்த ஒருவரலாற்றுச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கையாளப்பட்ட முறையையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரை ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

இந்திய மக்களிடையே சாதி என்பது வலுவான பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டுள்ளது. அது கேள்விக்குப்படுத்தும் வரை சடங்கு, சம்பிரதாயம், நம்பிக்கை, பிறப்பு, இறப்பு வரை ஒரு மனிதனின் இரத்தமும் சதையுமாகக் கலந்திருக்கிறது. சாதியையும் உள்ளூர் நம்பிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் சாதியே வட்டார அளவிலான சட்டத் திட்டங்களையும் நியதிகளையும் வகுக்கிறது. அதற்கெதிரான கிளர்ச்சியோ மீறலோ நிகழும் போது உருவாகும் விளைவுதான் சாதியின் புறவடிவம். ஒவ்வொரு முறையும் அத்தகைய மீறலை நிகழ்த்தும்போதும் அதற்குப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவை பெரும்பாலும் தலித்துகளின் நிலம், உடமை, உயிர் என அமைந்து ஒரு தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. இந்தியாவில் சாதியின் பொருட்டு நடந்த கலவரங்கள், கொலைகள் அதிகம். அத்தகைய இழப்புகளைச் சந்திப்பதினூடாகக் கவனத்திற்குவரும் பகுதியும் அம்மக்களின் வாழ்க்கையும் என்னவாக மாறியிருக்கின்றன என்பதை மீளாய்வு செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிதான் மேலவளவு.

இந்தியா தனது 50ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்த காலகட்டம். உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதற்காக மேலவளவு பகுதியைச் சேர்ந்த முருகேசன் உட்பட ஏழு பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக நடந்த மிகமோசமான வன்முறைகளில் ஒன்று மேலவளவு படுகொலை.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலூருக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் உள்ள பகுதி மேலவளவு. இப்பகுதியில் பெரும்பான்மையாகக் கள்ளர் சமூகத்தவரும் முத்தரையர் சமூகத்தவரும் உள்ளனர். அதற்கடுத்தபடியாக ஆதிதிராவிட பறையர் சமூகத்தவர் உள்ளனர். பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல் சூழல். கிராமம், ஒன்றியம், மாவட்டம் என மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை உருவாக்கப்பட்டது. பழங்குடி – பட்டியல் சமூக மக்களுக்கு அவர்களுடைய மக்கள்தொகையின்படி இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் மேலவளவு பஞ்சாயத்துப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. சாதி ரீதியாக வலுப்பெற்றிருந்த கள்ளர்களும் முத்தரையர்களும் அம்பலகார்களாக வலம்வந்த பகுதி அது. பஞ்சாயத்துத் தலைவர் பதவி பட்டியலினச் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதை ஏற்க முடியாத காரணத்தினால் ஊர் முழுக்கக் கூட்டம் நடத்தி அதை எதிர்த்துவந்தனர். தேர்தலில் நிற்கக் கூடாது என்று பறையர் சமூகத்தவருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

சட்டமும் சமூகமும்

குடிக்கள்ளர் முறை தீவிரமாக இருந்த பகுதிகளில் மேலூர் முக்கியமானது. கள்ளர் குடும்பங்கள் தங்களின் அதிகாரத்திற்குட்பட்டு ஒரு தலித் குடும்பத்தைக் கொண்டிருப்பார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது வயல்களிலும் வீடுகளிலும் பணியாளர்களாக இருப்பார்கள். இந்த உறவுமுறை மேல் – கீழ் என்கிற அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் கள்ளர்களால் பறையர்கள் ஊர்த் தலைவர்களாக உருவெடுப்பதை ஏன் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலவளவு பஞ்சாயத்துப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டதும் கள்ளர்கள் ஊர்க் கூட்டத்தைக் கூட்டி ‘நாட்டுக்கொரு பறையன் ஜனாதிபதியாக வந்தாலும் ஊருக்கொரு பறையன் தலைவனாக முடியாது’ என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். நிலைமை மோசமாவதை உணர்ந்த பறையர் சமூகத்துப் பெரியவர்கள் அஞ்சிப் பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ‘பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலை அரசாங்கமே எங்களுக்கு ஒதுக்கியிருப்பதால் எக்காரணத்திற்காகவும் அதை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று மேலவளவு காந்திநகர் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உறுதியாக இருந்தனர். கள்ளர்கள் கூட்டிய கூட்டத்திலிருந்து இந்த இளைஞர்கள் வெளியேறினார்கள். பதற்றமான சூழலையும் மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் வெளியேறிய இளைஞர்களில் ஒருவர்தான் மேலவளவு முருகேசன்.

10.9.1996 அன்று முருகேசன், காஞ்சிவனம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறார்கள் என்கிற செய்தி ஊர் முழுக்கப் பரவுகிறது. அன்றிரவே காந்திநகர் காலனியில் ஆறு வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. இந்த முதற்கட்ட மிரட்டலில் காந்தி நகர் பகுதி பதற்றமடைந்திருந்தாலும் தீ வைப்பிலிருந்தது உயிர் தப்பிய காஞ்சிவனம், முருகேசன் உள்ளிட்டோர் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடியே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்கள். அதையடுத்து, மேலவளவு கள்ளர்கள் கும்பலாகத் திரண்டுவந்து காந்தி நகர் காலனிக்குள் நுழைந்து, தென்பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பெரும்பாலான காந்தி நகர் காலனி மக்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வெளியேறினர்.

சூழல் கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த பெரியவர்கள், வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லி மன்றாடியிருக்கிறார்கள். தேர்தல் முடிவால் ஊரே தீக்கிரையாகும் அபாயத்தை உணர்ந்த முருகேசன் உள்ளிட்டோர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகும் நிலைமை சீராகவில்லை. மிரட்டல்களும் பிரச்சினைகளும் தொடர்கின்றன.

தலித்துகள் தேர்தலிலிருந்து பின்வாங்கியது கள்ளர்களுக்குத் தற்காலிகமான ஆசுவாசத்தைக் கொடுத்திருந்தாலும் அது நெடுநாள் நீடிக்கவில்லை. வன்முறையின் பிடியில் தேர்தல் நிறுத்திவைக்கப்படும் மேலவளவின் சூழலை வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்தத் தொடங்கினார் முருகேசன். அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர் எனப் பலருக்கும் மேலவளவின் சூழல் குறித்து எழுதிப் போட்டார். மேலவளவு பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இது குறித்து விசாரணையை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் மேலவளவுக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி உருவானது. வாக்காளர் அடையாள அட்டைக்காகப் புகைப்படம் எடுக்கப் போன தேர்தல் பணியாளர்களை மேலவளவு ஊர் மக்கள் வெளியேற்றினார்கள். மேலவளவு ஊராட்சி தனித் தொகுதியாக இருக்கும்வரை இங்கு தேர்தலே நடக்கப் போவதில்லை, அதனால் அடையாள அட்டையே எங்களுக்கு வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.

டெல்லியிலிருந்து அரசு அதிகாரிகள் குழு மேலவளவு வந்து விசாரித்தது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் உருவான பதற்றம், மிரட்டல், இழப்பு உள்ளிட்டவற்றை அந்தக் குழு கவனத்தில் கொண்டது. வற்புறுத்தலின் பேரிலேயே தான் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாக முருகேசன் சாட்சியமளித்தார். அதைத்தொடர்ந்து முருகேசனுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. ‘தலை இருந்தால்தானே தலைவனாக முடியும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய குறிப்புகள் அதிலிருந்தன.

அரசின் நேரடித் தலையீட்டுக்குப் பின்னர் தேர்தல் நடத்துவதென முடிவாகி 28.12.1996 அன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலன்று காவல் துறையினர் மீது மிளகாய்ப் பொடி தூவி, மேலவளவு ஊராட்சிப் பள்ளி வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டிகளைத் தூக்கிச் சென்று கிணற்றில் வீசியதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது, தலித் அல்லாத பெரும்பான்மை மக்கள் தேர்தலைப் புறக்கணித்து ஊரைவிட்டு வெளியேறினார்கள். முருகேசன் உள்ளிட்ட எட்டுப் பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மேலவளவு காந்தி நகரைச் சேர்ந்த முருகேசன் 415 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பெரும் போராட்டத்திற்குப் பின்பு முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவரானாலும் அவரைப் பணி செய்யவிடாமல் ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி வைப்பது உள்ளிட்ட தொல்லைகளைக் கொடுத்தபடியும் மிரட்டல்கள் விடுத்தபடியும் இருந்திருக்கிறார்கள். ‘ஒருநாள் இல்லை ஒருநாள் வெள்ளரிக்காயைச் சீவுவது போல உன் தலையைச் சீவத்தான் போகிறோம்’ என்கிற வாசகம் அடங்கிய மிரட்டல் கடிதம் அதில் குறிப்பிடத்தக்கது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணி நிமித்தமாகத் தனது சகாக்களுடன் சென்ற முருகேசன், பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். சென்னகரம்பட்டி அக்ரகாரம் கள்ளுக்கடை மேட்டிற்கு அருகில் சென்றுகொண்டிருக்கும்போது பேருந்து கத்தி முனையில் நிறுத்தப்பட்டது. அங்குள்ள வைக்கோல் புதரிலிருந்து வெளிப்பட்ட 30, 40 பேர் பயங்கரமான ஆயுதங்களுடன் பேருந்தில் ஏறினார். உயிர்தப்ப வெளியேறி ஓடிய முருகேசனைக் கண்டம் துண்டமாக வெட்டினர். ‘ஈன சாதிக்குப் பதவி ஒரு கேடா, பறையனெல்லாம் அம்பலக்காரர்களுக்குத் தலைவனா’ என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடியே வெட்டியிருக்கிறார்கள். முருகேசனின் தலையைத் துண்டாக்கிய பின் அதைக் காலில் உதைத்தபடியே சென்று அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள கிணற்றில் வீசியிருக்கிறார்கள். முருகேசனோடு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டவர்கள் ஆறு பேர். அதில் முருகேசனின் சொந்தத் தம்பியும் ஒருவர். முருகேசனும் அவரது தம்பியும் கொல்லப்பட்ட போது இருவரின் மனைவிகளும் நிறைமாதக் கர்ப்பிணிகள்.

கைவிடப்பட்ட சமூகம்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் அடக்கு முறைகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. அவை அனைத்துமே பேசுபொருளாவதில்லை. சில குறிப்பிட்ட சம்பவங்களும் வழக்குகளும் மட்டுமே பேசு பொருளாகின்றன. சம்பவத்தின் தீவிரம், இழப்பீடுகளின் எண்ணிக்கை, கொலை செய்யப்பட்ட முறை உள்ளிட்டவற்றால் சில சம்பவங்கள் வெளிச்சம் பெறுகின்றன. மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழுபேர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தைக் கடந்து, உலகம் முழுவதிலுமுள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசு பொருளானது. தலித்துகள் தேர்தலில் பங்கு பெற முடியாமல் இருக்கும் சூழலை முருகேசன் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகு இந்திய அரசு இயந்திரம் மேலவளவை நோக்கிப் படையெடுக்குமளவு அந்த ஊர் முக்கியவத்துவம் பெற்றது.

கடந்த நாற்பதாண்டுக் காலத்தில் இந்திய அரசுத் துறைகளில் மிகத் தீவிரமாக இயங்கிய துறையாகத் தேர்தல் ஆணையத்தைக் குறிப்பிடலாம். ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் என அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான அடையாள அட்டைகளைப் பெறுவது எளிய மக்களுக்கு இன்று வரை போராட்டம்தான். ஆனால், பூத் வாரியாக ஊழியர்களை நியமித்து வீட்டுக்கு அருகிலேயே புகைப்படம் எடுத்துத் தேர்தல் அடையாள அட்டையை விநியோகித்ததைப் போல இந்திய அரசு வேறு எதையும் எளிமையாக்கியதில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு வாக்கின் எண்ணிக்கையும் முக்கியம். அதுவே தேர்தல் குறித்த விழிப்புணர்வுக்கு அதிக உழைப்பைச் செலுத்தியது. அத்தகைய தேர்தல் உள்ளூரில் இருக்கும் சாதிக் குழுக்களால் இரண்டு முறை தடைப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்கவந்த அதிகாரிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். வாக்குப்பெட்டி சூறையாடப்பட்டு அழிக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி நடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர் கழுத்தறுக்கப் படுகிறார். அவருடன் சேர்ந்து ஐந்து பேர் கொல்லப் படுகிறார்கள். அதையட்டி நடந்த போராட்டத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். மொத்தம் ஏழு கொலைகள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாக்கரசியலில் ஈடுபடாமல் இருந்த காலகட்டம் அது. மேலவளவு படுகொலையைக் கண்டித்து மேடைதோறும் முழங்கினார் அதன் தலைவர் தொல்.திருமாவளவன். மேலவளவு படுகொலையைக் கண்டித்துத் தொடர்ப் போராட்டங்களையும் கொடும்பாவி எரிப்புகளையும் நடத்தியதோடு, சென்னைத் தீவுத்திடலிலிருந்து கன்னிகாபுரம்வரை மாபெரும் கண்டன அணிவகுப்பை நடத்தியது விசிக.

ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் பொறுப்பேற்ற பிறகு அவரைப் பணி செய்யவிடாமல் கள்ளர்கள் தொடர்ந்து மிரட்டிவந்த சூழலில், முருகேசன் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டுப் பாதுகாப்புக் கோரினார். ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது உயிருக்கே பாதுகாப்பில்லை என்று ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் மாநிலத்தின் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டும் கொல்லப் பட்டார்.

மதுரை மாவட்டத்தில் மேலூருக்கு மேற்கே இருக்கும் ஒரு கிராமத்தின் சாதிக்குழு, ஒரு நாட்டின் இறையாண்மை, நாடாளுமன்ற ஜனநாயகம், தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு ஆகிய அனைத்துக்கும் எதிராக விடுத்த சவாலில் முருகேசனைக் கொன்றதன் மூலமாக வெற்றிபெறுகிறது. இந்த அளவுக்குக் கவனம்பெற்ற ஒரு பகுதியின் அரசியல், சமூகச் சூழலையும் அதன் இழப்புகளையும் கருத்தில் கொண்டாவது அந்த ஊரின் மீது அரசு மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

கலவரங்களின் ஆழமான உளவியல் தாக்கங்கள்

பெரிய அளவிலான கலவரங்கள், அதன் விளைவாக நடக்கும் கொலை, பொருட்சேதம் உள்ளிட்டவற்றைச் சந்திக்கும் மக்களின் முன்னேற்றம் அதற்குப் பிந்தைய காலங்களில் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துவது முக்கியமானது. இந்த இழப்புகள் புறவயமானவை. இழப்பீடுகளைக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரங்களை ஆவணப்படுத்திவிட முடியும். ஆனால், இத்தகைய தொடர் அச்சுறுத்தல், கொலை, உடமைகளை இழத்தல் ஆகியவற்றுக்கு உள்ளாகும் சமூகத்தின் உளவியல்குறித்தும், அதனால் உருவாகும் பின்னடைவுகளைக் குறித்தும் ஆய்வு மேற்கொள்வது அத்தியாவசியமானது.

அமெரிக்காவில் 1960 – 1980 காலகட்டத்தில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்த கலவரங்களால் அம்மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வில்லியம் காலின்ஸ், ராபர்ட் மார்கோ ஆகியோர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 4-7% ஆண்களுக்கான வேலைவாய்ப்புக் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கறுப்பின மக்களின் வீடு, நிலம் வாங்கும் சக்தி 6-10%வரை குறைந்திருக்கிறது. 30 வயதுக்கும் குறைவான அந்தக் காலகட்ட இளைஞர்களின் முன்னேற்றம் தடைப் பட்டிருக்கிறது என்றும் அந்த ஆய்வின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

கலவரங்கள் மற்றும் கிளர்ச்சிகள் மனநிலையைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1967 முதல் 2017 வரை இந்தியாவில் 1000 கலவரங்களுக்கு மேல் நடந்திருக்கின்றன. ஆனால், அதன் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து 5 அல்லது 6 ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் நடந்த 750 கலவரங்கள் குறித்து 15க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

நிற அரசியலின் ஒடுக்குமுறைகள் நேரடியானவை. அதன் அளவுகோல்களை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால், இந்தியாவின் சாதியமைப்பு மிக நுட்பமானது. மேலவளவு படுகொலை நிகழ்வதற்கு முன்பிருந்தே அப்பகுதியின் பறையரினச் சிறுவர்கள் பள்ளி செல்வதற்கு நேர்வழியைப் பயன்படுத்தாமல் காட்டைச் சுற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். நேர்வழியில் கள்ளர்கள் வசிக்கும் ஊர்த்தெரு இருப்பதால் உருவாகும் அச்சறுத்தலே அதற்குக் காரணம். தேர்தல் தொடர்பான பதற்றம் அதிகமான காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்வதே கிட்டத்தட்டத் தடைப்பட்டது. இத்தகைய மனநிலையோடு தமது அன்றாட வாழ்க்கையைக் கழித்த இளைஞர்கள், சிறுவர்களின் மனநிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நேரடி இழப்பீடுகளையும் உளவியல் பின்னடைவுகளையும் கண்டறிந்து அவற்றுக்கு நிவாரணமாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மேம்பட்டிருக்க வேண்டிய பகுதி இது. ஆனால், இன்றுவரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள பகுதியாகத்தான் இருக்கிறது.

முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று ஆறு மாதக் காலம்பணியாற்றினார். அவர் செய்த முக்கியப் பணிகளில் ஒன்று காலனிப் பகுதிக்கென்று உருவாக்கிய நியாயவிலைக் கடை. அங்கு நியாயவிலைக் கடையைக் கொண்டுவர வேண்டுமென்கிற முருகேசனின் கோரிக்கையை ஏற்று அரசும் அரசு அதிகாரிகளும் முனைப்புடன் செயல்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. ஊர்த் தெருவில் இருக்கும் நியாயவிலைக் கடையை நம்பித் தான் காந்திநகர் காலனி மக்கள் இருந்திருக்கிறார்கள். பொருட்களை வாங்கச் செல்லும்போது அங்கே கள்ளர்கள் நிறைந்திருந்தால் அவர்கள் வாங்கி முடித்த பிறகுதான் பறையர்கள் வாங்க முடியும். கலவரத்திற்குப் பின்னால் சூழல் இன்னும் மோசமடையக்கூடும் என்கிற பதற்றமே இந்த வேகத்திற்குக் காரணம். காலனிப் பகுதிக்கும் கடை என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்னேற்றமாகத் தெரிந்தாலும் பதற்றத்தைத் தணிக்க அரசு செய்த தற்காலிக ஏற்பாடே அது. அவரவர் பகுதியில் இருக்கும் கடைகளில் அவரவர் வாங்கிக்கொள்ளுங்கள் என அரசே தீண்டாமையை முறைப்படுத்தியிருக்கிறது என்பதுதான் இதன் உட்பொருள். இத்தகைய நடவடிக்கைகள் சமூக மாற்றத்திற்கு எந்த வகையிலும் வித்திடாது. பதற்றச் சூழலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளாக இவற்றைக் கொள்ளலாம். இத்தகைய குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூடச் சுடுகாட்டுக்கான பாதை அமைத்தலில் நிகழவில்லை.

சாதியின் அதிகாரம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17, தீண்டாமை எந்த வடிவத்திலிலும் பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது. பிரிவு15இல் அறிவுறுத்தப்பட்டிருக்கும் விதிகளின்படி பொதுச் சாலைகள், பொது இடங்கள் உட்பட்ட எங்கும் ஒருவரைச் சமூக விலக்கம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது சட்ட விரோதம். ஆனால், தீண்டாமையின் நேரடி வடிவம் அரசு ஆதரவோடு சுடுகாடுகளிலும் அதற்கென அமைக்கப்பட்ட பாதைகளிலும் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.

மேலவளவு காந்தி நகர் காலனியில் சுமார் 600 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி மக்களுக்கான சுடுகாட்டுப் பாதை காலனியின் பின் பக்கத்தில் அமைந்திருக்கிறது. காலனியின் முன் பக்கத்தில் இருக்கும் தார்ச்சாலைதான் பிரதான சாலை. அதிலிருந்து முந்நூறு மீட்டர் தூரத்தில் வலப்பக்கம் திரும்பும் வழிதான் சுடுகாடு செல்வதற்கான தார்ச்சாலை. கள்ளர்கள் வசிக்கக்கூடிய பகுதியும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. இது விசாலமான தார்ச்சாலையாகப் போடப்பட்டிருக்கிறது. இந்தச் சாலையை அங்குள்ள பறையர்கள் பயன்படுத்துவதில்லை. அதை அவர்கள் தங்களது தேர்வின் அடிப்படையில் நிராகரிக்கவில்லை. பல காலமாக நிலவிவரும் சச்சரவுகளைக் கருத்தில் கொண்டும் கள்ளர்களின் ஆதிக்கத்தாலும் அவ்வழியை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதாவது, பயன்படுத்துவதற்கான சுதந்திரமான சூழல் அங்கு இல்லை. இதற்கு மாற்றாக, காலனிப் பகுதியின் பின் வழியில் மூன்றடிக்கும் குறைவாக இருக்கும் கழிவு நீர்க் கால்வாய் ஓடும் வழியில்தான் பிணங்களைத் தூக்கிச் செல்கின்றனர். செடிகள் நிரம்பி முட்புதராக இருக்கும் அக்குறுகிய வழி காட்டுப்பக்கமாகப் போய்ச் சுடுகாட்டை அடைகிறது. அந்தவழிதான் அங்கிருக்கும் பறையர் சமூக மக்களுக்கான பாதையாகத் தற்போதுவரை இருக்கிறது.

சமூகநீதி மாநிலமான தமிழகத்தில் தலித்துகளுக்கான தனிச் சுடுகாடு, சுடுகாட்டு வழி ஆகிய பிரச்சினைகள் இருப்பது புதிய செய்தியல்ல. திருவாரூர் மாவட்டம் கண்டியூரில் இருக்கும் தலித் மக்களுக்குச் சுடுகாட்டுப் பாதை இல்லாததால் வயல் வரப்பில் பாடையைத் தூக்கிக்கொண்டு போகும் புகைப்படம்கூட மிகச் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலவளவில் அதை விட மோசமான சூழல் நிலவுகிறது. மாநிலம் முழுவதிலுமுள்ள இப்பிரச்சினைக்குக் கூட்டுத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், இத்தனை இழப்புகளினூடாகப் பொதுவெளியில் கவனம்பெற்ற மேலவளவில்கூட அது இன்னமும் சாத்தியப்படவில்லை என்னும்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் நிலை பற்றி என்ன சொல்ல முடியும்? 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அங்கு அதே சூழல் நிலவுவதற்குப் பின்னால் இருக்கும் அலட்சியத்தை நாம் வழக்கமான அதிகார வர்க்கத்தின் அலட்சியமாகக் கொள்ள முடியாது. உள்ளூர் சாதி அதிகாரத்திற்குச் சிறு கீறல்கூட விழுந்துவிடக் கூடாது என்கிற கவனத்துடன் தலித்துகள் மீது காட்டப்படும் அலட்சியம்தான் அது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இருளில் நடக்கும் குற்றங்களைக் களைய வேண்டுமானால் முதல் கட்டமாக அங்கு சிறு ஒளி ஏற்றப்பட வேண்டும். இருளும் இரவும் குற்றச் செயல்கள் செய்வதற்கு உகந்தவையாக இருப்பதால் அதில் புழங்குவதை நாம் தவிர்த்துவிடுவோமேயானால் இருளின் தன்மை ஒருபோதும் மாறாது. குற்றச்செயல் புரிபவர்கள் சுதந்திரமாகப் புழங்குவதற்கான பிரத்யேகமான வெளியாக அது உருமாறும். இந்தப் புரிதலோடுதான் நாம் சாதியை அணுக வேண்டி யிருக்கிறது. சாதியப் பிரச்சனைகளைத் தனித்தனி நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், ஒரு நிலப்பரப்பில் சாதி உயிர்ப்போடு புழங்குவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதை வேரிலிருந்து அணுக வேண்டும். முருகேசன் தலைவரான பின் காலனி மக்களுக்கென்று தனியாக நீர்த்தொட்டி, நியாயவிலைக்கடை, ஓர் ஆரம்பப்பள்ளி ஆகியவை கட்டப்பட்டிருப்பதைத் தற்காலிக நிவாரணமாகத்தான் நாம் கொள்ள முடியும். மாற்றமாகக் கருத முடியாது. மேலவளவு பகுதியில் உண்மையிலேயே இந்த அரசுகள் மாற்றத்தை உருவாக்க விரும்பியிருந்தால், கள்ளர் உள்ளிட்ட அப்பகுதியின் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைத்துச் சாதிகளும் புழங்கும் பொதுவெளியாகத் தலித் பகுதிகளை உருவாக்கியிருக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகள், சந்தை, முக்கியமான அரசுத் துறைகள் உள்ளிட்டவற்றை அங்கே அமைத்து அதை அலுவல், வணிகம் ஆகிய நடவடிக்கைகள் நிரம்பிய போக்குவரத்து நிறைந்த பகுதியாக மாற்றியிருக்க முடியும். மாவட்ட ரீதியான வணிகத்தையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கக்கூடிய இடத்தில் சாதி இருப்பதால், அரசு அங்காடிகளை அமைத்து அதில் தலித்துகளுக்கென்று சில கடைகளை ஒதுக்குவதன் மூலம் நெகிழ்வை ஏற்படுத்த முடியும். மேலவளவு படுகொலைக்குப் பின்னால் அரசு தரப்பில் கட்டப்பட்ட பெரிய கட்டடம் என்று சொன்னால் அது காவல் நிலையம் மட்டுமே. அரசு பதற்றத்தைக் குறைக்க மட்டுமே விரும்பியிருக்கிறது, மாற்றத்தை அல்ல என்பதற்கு அதிகாரமாய் நின்றுகொண்டிருக்கும் அந்தக் காவல் நிலையமே சாட்சி.

கல்வி, வேலைவாய்ப்பு, சிவில் உரிமை, இந்த மூன்றுக்காகவும் தமிழகத்தில் தலித்துகள் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அவ்வுரையாடலின் மூலம் குறிப்பிடும்படியான மாற்றத்தையும் உருவாக்கி யிருக்கிறார்கள். இந்திய அளவில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வருகைக்குப் பின்னால் அவை சட்ட வடிவம் பெற்றதோடு அது சார்ந்த பெரும் உரையாடல்கள் நிகழ்ந்தன. கல்வி மட்டுமே தலித்துகளை முன்னேற்றக்கூடிய ஆயுதம் என்கிற கருத்து வலுப்பெற்றுக் கல்வி, வேலைவாய்ப்பில் தலித்துகள் பெருமளவு ஈடுபாடு கொண்டு முன்னேறத் தொடங்கினர். இவற்றோடு சேர்ந்து காலம் இயல்பாகச் சில மாற்றங்களை நிகழ்த்தியது. அத்தகைய மாற்றங்களிலிருந்தும் விழிப்புணர்விலிருந்தும் ஊக்கம் பெற்றுக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என எல்லா நிலைகளிலும் அடுத்த நிலைக்குச் செல்ல தலித்துகள் முனைந்தனர். அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் நாம் மேலவளவு முருகேசனையும் பார்க்க முடியம்.

கள்ளர்கள் தெரிவித்த எதிர்ப்பால் உருவான பதற்றத்தைக் கண்டு ஊர்ப் பெரியவர்கள் பயந்தாலும் அதைத் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்கிற முருகேசனின் முனைப்பு தற்செயலானதல்ல. எல்லா நிலையிலும் தலித்துகள் மேலெழும் அரசியலின் தொடர்ச்சி அது. அந்த முனைப்பை ஒரு அளவுகோலாக்கி இன்றைய நிலையுடன் ஒப்பீட்டுப் பார்த்தால் இயல்பாகவே கல்வியால் மிகப்பெரிய மாற்றம் மேலவளவில் நடந்திருக்க வேண்டும். கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் காலத்தால் அதிகரித்திருந்தாலும் அக்கல்வியால் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் மிகச் சொற்பமானவர்களாவே இருக்கிறார்கள். பொறியியல் படித்தவர்கள் பெயரளவில் இருந்தாலும் அக்கல்வியால் நிலையான பணியும் ஊதியமும் பெற்றவர்கள் எண்ணிக்கையில் குறைவு. மேலவளவு காந்தி நகரில் ஒரே ஒரு மருத்துவர்கூட இன்னும் உருவாகவில்லை. மேலவளவைவிட அதைச் சுற்றியுள்ள தலித் கிராமங்களில் கல்வியால் முன்னேறியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமான ஒன்றாகக் கருதமுடியாது.

கலவரங்களும் கொலைகளும் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. இக்காலகட்டம் இரண்டு தலைமுறைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் உள்ளடக்கியிருக்கின்றன. பதின்ம வயதில் தன் குடியிருப்பு உடைக்கப்படுவதையும் தீக்கிரையாக்கப்படுவதையும் பள்ளிக்குச் செல்லவே முடியாத அச்சமான சூழல் நிலவியதையும் நேரில் பார்த்து உணர்ந்த சிறுவர்கள் எத்தகைய உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று யாரும் யோசித்திருக்கக்கூட வாய்ப்பில்லை. தன்னம்பிக்கையையும் மனத்திடத்தையும் இழந்து மனரீதியாக எவ்வளவு பின்னிழுக்கப் பட்டிருப்பார்கள் என்பதை அறிவதற்கு எந்த ஆய்வும் தகவல்களும் நம்மிடையே இல்லை.

முருகேசன் – மணிமேகலை தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள். நான்காவது பெண் மூன்றுமாதக் கருவாக இருக்கும்போது முருகேசன் கொல்லப்பட்டார். நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த சொர்ணவல்லி மட்டுமே பட்டம் பெற்று முதுகலையும் பயின்றுள்ளார். முருகேசனின் மறைவுக்குப் பின் அவரது மனைவி மணிமேகலை குழந்தைகளின் கல்வியில் எந்தக் குறையும் வைக்காமல் ஒன்றுபோலத் தான் படிக்க வைத்துள்ளார். ஆனாலும் ஒரு மகள் மட்டுமே பட்டதாரியாக முடிந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறன், ஆர்வம் போன்றவற்றை மட்டும் இங்கு அளவுகோலாக வைக்க முடியாது. முருகேசனின் மூன்றாவது மகள் சொர்ணவள்ளியிடம் பேசும்போது, அவர் குறிப்பிட்டதில் ஒன்று முக்கியமானது. ஊரில் படித்துக்கொண்டிருந்தபோது பெரிய ஆர்வமும் நாட்டமும் இல்லாமல் இருந்தவர், உயர்நிலை வகுப்புக்காகவும் கல்லூரிக்காகவும் ஊரை விட்டு வெளியேறி வேறொரு கல்விச் சூழலுக்குச் சென்ற பிறகுதான் கல்வி குறித்த ஆர்வமும் பட்டம் பெற்றே தீர வேண்டுமென்ற எண்ணமும் உருவானது என்று குறிப்பிட்டார். இந்த உளவியல் மாற்றம் மிக முக்கியமானது. குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய அவசியம் பெருகியுள்ள இக்காலகட்டத்தில் சொர்ணவள்ளியின் கூற்று மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தலித் மக்கள் மீதும் அவர்தம் உடைமை, உயிர் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்பது காட்டுமிராண்டித் தனமான மனநிலையோடு தன்னிலை மறந்து நடப்பவை அல்ல. சாதியத் தாக்குதல்களுக்கு வெறுமனே மூர்க்கத்தனமான தோற்றத்தைக் கொடுப்பதினூடே அதன் பின்னால் இருக்கும் நோக்கங்கள் பேசுபொருளாகாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன. இளவரசன் – திவ்யா காதலுக்காகத் தர்மபுரியில் நடந்த கலவரம் மனிதாபிமானமற்றது என்பதை ஒப்புக்கொள்ள யாரும் இங்கு தயங்கப் போவதில்லை. ஆனால், அங்கு நடந்த கலவரத்தின் வெளிப்பாடு காதல் பிரச்சினைக்கானது மட்டுமே அல்ல. சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி சமூகவியல் துறை சார்பாகத் தருமபுரி கலவரம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்படி தர்மபுரி நத்தம் கிராமத்தில் 2012, நவம்பர் 7இல் தலித்துகளுக்கு எதிரான கலவரத்தில் தலித்துகளின் வீடுகளை அழிப்பதும், அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைப்பதுமே நோக்கமாக இருந்திருக்கிறது என நிறுவுகிறது அக்கட்டுரை. 35 % வீடுகள் முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. 15% வீடுகள் பாதியளவு சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் 40% சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தலித் குடியிருப்புகளையும் உடைமைகளையும் தெளிவாகச் சேதாரப்படுத்திவிட்டுப் போகும் மனநிலையைக் கும்பல் மனநிலையில் செய்யப்படும் பொதுவான கலவரங்களோடு ஒப்பிட முடியாது. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தலித்துகளின் மூலதனத்தை நோக்கி நடத்தப்படும் தாக்குதல்களாகத்தான் அவை பெரும்பாலும் இருந்திருக்கின்றன.

தலித்துகளுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பு

தலித்துகள் எந்த நிலைவரையிலும் வளரமுடியும் என்பதற்கு இங்கு வரம்பு நிர்ணியக்கப்பட்டிருக்கிறது. எழுதப்படாத விதியாக அது அரசியல், சமூகம் என எல்லா மட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது. அதை மீறும்போது தலித்துகள் அரசியல் ரீதியாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். முருகேசன் கொல்லப்படுவதற்குச் சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்திலேயே வஞ்சிநகரம் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் என்பவர் கொல்லப்பட்டார். பொதுக்குளத்தில் நீர் எடுக்க அங்குள்ள தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்ட சூழலில் அதற்கெனப் போராடியது, தலித்துகளுக்கென்று தனிக்கோயில் கட்டியது உள்ளிட்ட சிவில் உரிமைக் கோரல் நடவடிக்கைகளோடு கந்தன் நிற்கவில்லை. வஞ்சி நகரத்தில் சாதி இந்துக்கள் மட்டுமே அதுவரை பெற்றுவந்த கல் குவாரி டெண்டரை முதன்முதலாக எடுத்திருக்கிறார் கந்தன். அதற்குப் பின் அவர் கொல்லப்படுகிறார்.

மேலவளவு சென்னகரம்பட்டி கிராமத்தின் கோயில் நிலத்தைக் கள்ளர்களே குத்தகைக்கு எடுத்துவந்த நிலையில் 1992இல் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அம்மாசி குத்தகைக்கு எடுத்தனர். அதே காரணத்திற்காக அம்மாசியும், தன் மீது ஏன் கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்பதை அறியாமலேயே வேலு என்கிற சிறுவனும் கொல்லப்பட்டார்கள். முருகேசனும் அப்புகுதியின் துடிப்பான இளைஞராக வலம் வந்திருக்கிறார். பல சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து பேசுபவராகவும் செயல்படுகிறவராகவும் இருந்திருக்கிறார். இவ்வளவு தீவிரமான அரசியலில் ஈடுபடத் தேவையில்லை என்று அவரது குடும்பத்தார் அவரை எச்சரித்திருக்கிறார்கள். அவர் அதைக் கேட்காமல் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தார். இந்தச் சூழலில்தான் அவர் கொல்லப்பட்டார்.

கந்தன் எடுத்த குவாரி, அம்மாசியின் கோயில்நிலக் குத்தகை, முருகேசனின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஆகிய இவை யாவுமே ஒரு தலித்தின் அடுத்த நிலைக்கான சமிக்ஞைகள். கலவரக்காரர்களின் உணர்வுவயப்பட்ட நிலையிலோ, சாதிச் சண்டையிலோ இவர்கள் கொல்லப்படவில்லை. உள்ளூர் சாதிச் சட்டங்களை மீறியதாலும், மேலெழுவதற்கான முனைப்பு இவர்களிடம் தென்பட்டதாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அழிப்பவர்களின் குறிக்கோள் சம்பந்தப்பட்டவர்களைக் கொல்வது மட்டுமல்ல. தலித்துகளின் முன்னேற்றத்திற்கு இங்கு நிர்ணியக்கப்பட்ட வரம்பைத் தலித்துகளுக்கு உணர்த்துவதற்கான செய்தி இதில் உள்ளடக்கமாக இருக்கிறது.

நினைவுகூரப்படுவதில் உள்ள சாதியக் கணக்கு

ஒரு தலித் கொல்லப்படும்போது அவரைப் பற்றிய எது நினைவில் கொள்ளப்படுகிறது, எது மறக்க அல்லது நிராகரிக்கப்படுகிறது என்பதும் சாதி அரசியலுக்கு உட்பட்டே நடக்கிறது. மேலவளவு முருகேசன் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர், கரை வேட்டியோடு வலம் வந்த திமுககாரர். தேர்தலில் நிற்பதால் உயிருக்கே அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை அறிந்தும் அதை எதிர்த்துப் போரிட்டவர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணி செய்வதில் உள்ள தடைகளையும் திமுக தலைவர் கருணாநிதியையே நேரில் சந்தித்து முறையிட்டவர்.

மொழிப்போரில் உயிர்நீத்த நடராசனும் நீட் தேர்வால் இறந்த அனிதாவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பொதுப் பிம்பங்களாக்கி நினைவுகூரும் திமுக, முருகேசனை மறந்துவிட்டது. அவரைத் திமுக’காரராக உரிமை கோருவதுமில்லை. முருகேசன் நினைவு நாளில் மேலவளவில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபங்களில் கூடும் கூட்டத்தினரைப் பார்க்கும்போது முருகேசன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றே ஒருவர் எண்ணக்கூடும். இழப்புகளையும் தியாகங்களையும் பிம்பங்களாக்கி அவற்றை நினைவு கூர்வதில் இருக்கும்சாதி அரசியலே இவற்றைத் தீர்மானிக்கின்றன.

1987இல் வன்னியர்களின் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக உருமாறியது. அதையட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தியாகிகளாக அறிவித்து அவர்களுக்குப் பென்ஷன் அளித்தது தமிழக அரசு. மிகச் சமீபத்தில்கூட அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்து அரசாணையும் வெளியிட்டது. இடஒதுக்கீடு போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் அந்தக் கலவரத்தில் அதிக பாதிப்பை அடைந்தது தலித்துகள்தான். தலித் குடியிருப்புகள்தான் குறி வைத்துத் தாக்கப்பட்டன. ஆனால், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டார்கள். இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் தலித்துகளைக் குறிவைத்துத் தாக்கி, துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் தியாகிகளாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். மேலவளவில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுத் தேர்தலில் வென்று பதவியில் இருந்த காரணத்துக்காகவே கொல்லப் பட்டவர்கள் சாதாரணமாகக்கூட நினைவுகூரப்படுவதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் சாதி இரண்டு விதமாக இயங்கி வந்திருக்கிறது. சாதியாக அணிதிரண்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அவற்றை ஈடு செய்ய அந்தந்தச் சாதிகளின் அதிகார மையத்தைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளையில் அட்டவணைச் சமூகச் சாதிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும்போது அவற்றுக்கு நிவாரணங்கள் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. இதில் ஆளும் தரப்பின் குரல் எத்தகையதாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் சாதியப் பிரச்சனைகளுக்கு ஆளும் தரப்பைப் போலவே தந்திரமான கண்டனங்களை மட்டுமே பதிவு செய்துவந்திருக்கின்றனர்.

2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தென்மாவட்ட நாடார் முதலாளிகளின் பாதுகாவலராகக் கருதப்பட்ட பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட வெங்கடேஷ் பண்ணையார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதன் மூலம் நாடார்களின் நன்மதிப்பை அதிமுக இழந்ததாகக் கருதப்பட்டது.  2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செந்தூர்த் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்விக்கு வழங்கியது திமுக. இத்தனைக்கும் வெங்கடேஷ் பண்ணையாரும் அவரது குடும்பமும் அதிமுக சார்புடையது. ராதிகா செல்விக்கும் திமுகவுக்கும், சொல்லப்போனால் அரசியலுக்கும் அவருக்குமே அதுவரை எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. நாடார்களின் ஆதரவை ஜெயலலிதா இழந்ததாகக் கருதப்பட்ட சூழலில் அதைக் கையகப்படுத்த ராதிகா செல்விக்கு வாய்ப்பு வழங்கியதோடு, அரசியலுக்கு முற்றிலும் புதியவரான அவரை உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் ஆக்கினார் மு.கருணாநிதி. குற்றப்பின்னணி உள்ள ஒரு தனிநபர் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். நாடார் சமூகத்தின் நற்பெயரைப் பெறப் பதவியும் வழங்கப்படுகிறது.

அரசியலமைச் சட்டத்தின் அடிப்படை உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மேலவளவு முருகேசனின் மனைவி மணிமேகலைக்குச் சாலையோரத் தூய்மைப் பணியாளர் பணியை நிவாரணமாக வழங்கிய திமுக, அதிமுக ஆதரவாளரான வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை மத்திய அமைச்சராக்கியது. சாதிக்கு அதிகாரமும், சமூகநீதிக்கு நிவாரணமும் வழங்கப்பட்ட மாநிலம்தான் சமூகநீதியின் முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது. “எந்தச் சாலையில் முருகேசனை வெட்டிக் கொன்றார்களோ, அதே சாலையில் தூய்மைப் பணியாளர் பணியைக் கொடுத்திருக்கிறீர்களே, வேறு எந்தத் துறையிலாவது வேலையை ஒதுக்கியிருக்கக் கூடாதா?”என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் முனைவர். தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார். மேலவளவு படுகொலை 25ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி இந்து நாளிதழில் 2022, ஜூலை 3 அன்று வெளியான ‘The Long, dark Shadow of Melavalavu lingers on’ என்ற கட்டுரையில், முருகேசனின் மனைவி மணிமேகலை B.Ed படித்த தனது மகளுக்கு அரசு வேலை கேட்டுக் கோரிக்கை விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக, பொருளாதார அதிகாரம் என்னும் ஆயுதம்

மேலவளவு படுகொலை நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் அதில் கொல்லப்பட்ட ஆறு பேரின் குடும்பங்கள், அவர்களுடைய பொருளாதாரம், அப்பகுதியின் அடிப்படை வளர்ச்சி, அங்கு நிலவும் சாதிய இறுக்கம், சாதிய மேலாதிக்கம் உள்ளிட்ட எதிலுமே முன்னேற்றமோ மாற்றமோ நிகழவில்லை. தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆய்வு நோக்கில் முன்னும் பின்னுமாய்ப் பகுப்பாய்வு செய்தால் அவை யாவுமே மற்றுமொரு மேலவளவாகவே எஞ்சி நிற்கும். அதே வேளையில் தலித்துகள் மீது வன்முறையைச் செலுத்தும் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்தின் தண்டனையைப் பெற்று வெளியாகும்போது தங்கள் சொந்த சமூகத்தினரால் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் காப்பாற்றப்படுகிறார்கள். தலித்துகள் சட்டப் போராட்டத்தையும் நீதியையும் நம்பிக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக, அரசியல், பொருளாதார ரீதியான அதிகாரம்தான் சமூகத்தை இயக்குகிறது. வட்டார அளவிலான சாதிய அதிகாரங்களையும் அதுவே தீர்மானிக்கிறது. சட்டப் போராட்டத்தைக் கடந்து அரசு தரப்பில் கோரிக்கைகள் வைப்பவர்களாகவும் நிவாரணத்தைக் கோருபவர்களாகவுமே இன்றுவரை தலித்துகளின் நிலை தக்கவைக்கப்படுகிறது. நிவாரணங்கள் என்பது நீதியாகிவிடாது என்று சொல்லிக்கொண்டே அதைவிடக் கூடுதலான நிவாரணத்தைக் கோருகிறவர்களாகத்தான் தலித்துகள் இருக்கிறார்கள். தலித் அரசியலைக் கூறுபோட்டு அதில் ஒரு பகுதியினரைத் திருப்திப்படுத்திவிடுவதின் மூலம் தலித்துகளின் கூட்டுக் கோரிக்கைகள் விவாதத்திற்குட்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. தலித்துகள் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான செயல்திட்டங்களை வகுக்காமல், இன்னும் எத்தனை காலம் மனுப் போட்டுப் பதிலுக்காகக் காத்திருக்கும் சமூகமாகத் தலித்துகள் தொடரப்போகிறார்கள்; இன்னும் எத்தனை காலத்திற்குத் தலித் அரசியல் இப்படியே தொடரப் போகிறது என்பவை விமர்சனபூர்வமாக மீளாய்வு செய்யப்பட வேண்டியவை.

மேலவளவில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஞ்சுவிரட்டு கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலித்துகள் தங்களுக்கென்று ஒரு தொழுவம் அமைத்து மஞ்சு விரட்டில் பங்கு பெறுவோம் என்று அறிவித்திருந்ததே அதற்கான காரணம். மஞ்சுவிரட்டு கோரிய தலித் இளைஞர்களுக்கு முருகேசனுக்கு வந்ததைப் போலவே கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இங்கு மஞ்சுவிரட்டு என்பது தலித்துகள் தங்களுக்குச் சம அந்தஸ்தைக் கோரும் குறியீடுதான்.

தங்களது அதிகாரத்திற்குட்பட்ட நிழலில் தலித்துகள் சில உரிமைகளைப் பெறுவதில் சாதி இந்துக்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. சம அந்தஸ்து பெறுவதற்கும், அதனினும் ஒருபடி மேலே சென்று முன்னேற முனையும்போதும்தான் தலித்துகளின் இருப்பு இல்லாமலாக்கப்படுகிறது. கல்வியும் நவநாகரிகமும் புகாத பகுதிகளில் இந்த உணர்வு ஆயுதங்களின் மூலம் வெளிப்படுகிறது. நவீன உலகில் தலித்துகளுக்கு எதிரான கருத்துகளாக வெளிப்படுகிறது.

சாதியை மையமாகக் கொண்டு சுழலும் சமூகத்தில் அதைக் கடக்கத் துணியும் தலித் மீது இங்கு தொடுக்கப்படும் அடக்குமுறையைத் தற்காலத் தேவைக்காக எடுக்கப்படும் அரசியல் முடிவுகளால் வெல்ல முடியாது. அதைக் கடந்த தலித் பிரதிநித்துவத்தை எல்லா நிலையிலும் உறுதிப்படுத்தவும் அதைக் கண்காணிக்கவும் வேண்டும். அடிப்படை சிவில் உரிமைகள் மட்டுமே தலித்துகளின் பிரச்சினை என்று பொதுமைப்படுத்தாமல், வட்டார ரீதியாகத் தலித்துகளிடமிருந்து விலக்கிவைக்கப் பட்டிருக்கும் சமூக, பொருளாதார வெளிகளில் தலித்துகள் இடம்பெறுவதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி சிவில் உரிமைகளைப் பெற்றதோடு, சமூக விடுதலை என்கிற இலக்கையும் நோக்கி நகர்ந்த முன் மாதிரியாக இந்திய தலித்துகள் யாரையேனும் கொள்ள வேண்டுமானால் அது அமெரிக்கக் கறுப்பின மக்களின் அரசியல்தான். அமெரிக்கக் கறுப்பின மக்களின் அரசியலில் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்தவையைத் தொகுத்துப் பார்த்தோமேயானால், ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் அவர்களது அரசியல் உரையாடல் மேம்பட்டு வந்திருக்கிறது. நாம் முன் இருந்த நிலையைக் காட்டிலும் இது தேவலாம் என்கிற எந்தச் சமரசமும் அவர்களிடத்தில் இருந்ததில்லை. குறிப்பாக, 1950 காலகட்டத்தில் நிற அரசியலை உளவியல் ரீதியாக எதிர்கொள்ளக் கறுப்பின மக்களைத் தயார் செய்தனர். நிறத்தைக் கொண்டு தங்களை மதிப்பிட வேண்டாம் என்கிற கோரிக்கை அரசியலிலிருந்து விலகி, Black is Beautiful எனக் கறுப்பர்களின் அழகியல், கலை, பண்பாடு உள்ளிட்டவற்றை முதன்மைப்படுத்துவதில் அதிக ஆற்றலைச் செலவு செய்தனர். அடுத்த தலைமுறைக் கறுப்பின இளைஞர்கள் மத்தியில் அவை மிகப்பெரிய உளவியல் உந்துதலை ஏற்படுத்தியது. நூறாண்டுக்கும் மேலான போராட்டத்தால் அடக்குமுறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அத்தகையப் படிப்பினைகளிலிருந்து எதிர்வருபவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். அதற்கு மிகச் சமீபத்திய உதாரணமாக Black Lives Matter சம்பவத்தைச் சொல்லலாம். அப்பிரச்னையை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மூவாயிரத்துக்கும் மேலான புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. காவல்துறையினரின் அதிகார வரம்பை மறுபரிசீலனை செய்யுமளவு கறுப்பின மக்களின் போராட்டம் அழுத்தம் பெற்றது. நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே வினையாற்றாமல் அதற்கு முன்னும் பின்னும் Black Lives Matter ஒரு இயக்கச் செயற்பாடாகவே உயிர்ப்போடிருப்பது மிக முக்கியமான முன்னுதாரணம்.

இக்கட்டுரை முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மேலே குறிப்பிட்டது மட்டுமே தீர்வு என்று சொல்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. சொல்லப்போனால், விமர்சனபூர்வமான பார்வையை முன்வைப்பவர் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டுமென்கிற தேவையுமில்லை. இதையெல்லாம் கடந்து முன்னேற வேண்டிய சவால்களையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டிய கூடுதல் பொறுப்பு தலித்துகளுக்கே இருக்கிறது என அவர்கள் மீது ஏற்றப்படும் சுமையில், சாதி ஒழிப்புக் களத்தில் தோல்வியுற்றுச் சாதியாக அணிதிரண்டவர்களுக்கு அடிபணிகிறவர்களின் அரசியல் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

உசாத்துணைகள் :

  1. கலவரங்கள், கிளர்ச்சிகள் மனநலனை பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 1967 – 2017 வைர இந்தியாவில் 1000 கலவரங்கள் அல்லது கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன ஆனால் மனநலன் குறித்த ஆய்வுகள் 5-6தான் நடத்தப் பட்டுள்ளன. அமெரிக்காவில் அதே காலத்தில் 750 கலவரங்கள் அல்லது கிளர்ச்சிகள் நடந்தன, ஆய்வுகள் 15-க்கும் மேல். (ஆஸ்திரேலியா-நியூஜிலாந்து மனநலன் ஆய்வுக் குழு அறிக்கை https://pubmed.ncbi.nlm.nih.gov/31989834/)
  2. 1960களில் நடந்த அமெரிக்க இனக்கலவரங்களால் கறுப்பினத்தவரின் பொருளாதார மதிப்பீடுகள் (வீடுகள், ஸ்தாபனங்கள்) கலவரங்கள் நடக்காத நகரங்களோடு ஒப்பிட்டால், கலவரம் நடந்த நகரங்களில் 9% கீழிறங்கியது. ஆண் வேலைவாய்ப்புகள் 4-7% குறைந்தது. (https://www.nber.org/digest/sep04/how-1960s-riots-hurt-african-americans)

அதோடு நாம் தர்மபுரி நத்தம் கிராமத்தில் நவம்பர் 7, 2012இல் நடந்த தலித்துகளுக்கு எதிரான கலவரத்தில் தலித்துகளின் வீடுகைள அழிப்பதும், அவர்களை பொருளாதார ரீதியில் குலைப்பதுமே நோக்கமாக இருந்தது என்கிறது சென்னை கிறிஸ்தவக் கல்லூரி எடுத்த ஓர் ஆய்வு (https://www.ijrrjournal.com/IJRR_Vol.7_Issue.1_Jan2020/IJRR0051.pdf )

  1. சமீபத்தில் நடந்த Black Lives Matter கிளர்ச்சிக்குப் பின் 23 மாநிலங்களில் காவல் துறையைச் சீரைமக்கும் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இனவெறி கொலைகள் வெறும் கொலைக்கான தண்டனை என்பதைத் தாண்டி இனவெறிக்கான தண்டைனயும் பெற அமெரிக்கக் காங்கிரஸ் சட்டம் இயற்றியது. அதன்படி தண்டைனகளும் வழங்கப்பட ஆரம்பித்திருக்கின்றன.

(https://thecrimereport.org/2021/07/27/policing-protests-spurred-reforms-in-23-states-report/)

  1. இனக் கலவரங்களின் காரணங்கள் பற்றி அநேக ஆராய்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் கலவரங்களுக்குப் பின் வருடக் கணக்கில் அதன் பாதிப்புகள் பற்றி அவ்வளவாக ஆய்வுகள் இல்லை. இந்த குறைபாட்டை நேர் செய்ய கலவரங்களுக்கு பின் எத்தைகய ஆய்வுகள் தேவை என்று ஒரு வரைவு கார்டிஃப் பல்கைலக்கழக ஆய்வு ஒன்று கொடுக்கிறது. (https://doi.org/10.1080/07352166.2021.1898284)
  2. ‘எழுதாக் கிளவி’, ஸ்டாலின் ராஜாங்கம், காலச்சுவடு பதிப்பகம்.
  3. ‘மேலவளவில் பற்றியெறியும் நெருப்பு’, பொய்யாமொழி முருகன், நீலம் ஜூன் 2022.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!