புத்த பகவான் பயிற்றுவித்துப் பலநூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு பழக்கம், ஒரு பயிற்சி, ஒரு அறிவு, ஒரு சிந்தனை மனித இனத்தைத் துன்பமில்லாத பிழைப்புக்கு வழிகாட்டுகிறது எனில், அது எத்தகைய அறிவு நுட்பமாய் இருக்கும் என்பதை அறியும் ஆர்வத்திலும், விடுபட முடியாத சிந்தனைகளுக்குள் உழன்று அதிலிருந்து மீள்வதற்கான வழி காணும் வேட்கையிலும் இப்பயிற்சியை அணுக முயற்சித்தேன்.
எத்தனையோ சாக்குபோக்குகளைக் காட்டி இப்பயிற்சியை அறிந்துகொள்ளும் – பழகிக்கொள்ளும் வாய்ப்பை நான் தவிர்த்திருந்தாலும், இம்முறை எனக்குள் நிகழ்ந்தது ஓர் அசாதாரண துணிச்சல் என்றே சொல்ல வேண்டும். எல்லா மனத்தடைகளையும் கடந்து எல்லையில்லா மனவிடுதலை வேட்கையில் விபஸ்ஸனா பயிற்சியைப் பெற துணிவு கொண்டேன்.
இப்பயிற்சி மூலம் நான் கற்றுக்கொண்ட – உணர்ந்துகொண்ட சிற்சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெரும் உவகை கொள்கிறேன். விபஸ்ஸனா பயிற்சி மையத்திற்குச் செல்வதற்கு முன், இதுகுறித்து நான் ஏற்கெனவே அறிந்துகொண்ட விதத்தில் முயன்றபோது சில சிக்கல்களை உணர்ந்தேன். இம்மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி அச்சிக்கல்களைக் களைந்து முழுமையாக அறிந்துகொள்ள வழிகாட்டுமா என்ற சந்தேகத்துடன்தான் சென்றேன்.
விபஸ்ஸனா பற்றி முன்னர் அறிந்திருந்தது
விபஸ்ஸனா என்றால் கண்களை மூடி அமர்ந்து, உடலின் அனைத்து பாகங்களையும் கவனித்தல் மூலம் உடலின் அதிர்வுகளை உணர்தல் என்றுதான் புரிந்துகொண்டிருந்தேன். அதுமட்டுமின்றி விபஸ்ஸனா, ஆனாபானா தியானங்களை முன்னர் பயிற்சி செய்யும்போது நீண்ட நேரம் அமர முடியாதே என்ற சலிப்புடன்தான் அமர்ந்திருக்கிறேன். தியானத்தின்போது மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களிலும் பயணித்து, மூச்சின் கவனத்திலிருந்து விலகுதல் குறித்து விரக்தியடைவேன். அமர்ந்த சில நிமிடங்களிலேயே கடந்த கால நினைவுகள் குறித்த கவலையும், எதிர்கால திட்டம் பற்றியும் அசைபோடத் துவங்கிவிடுவேன். சிறிது நேரம் கவனித்துத் தியானம் செய்திருப்பினும் அதிலிருந்து தோன்றும் எண்ணங்களை நினைத்தே போராடிக்கொண்டிருப்பேன்.
அத்தோடு ஆறு புலன்களைப் பற்றித் தனித்தனியாக அவை என்னுடையவையல்ல என்று ஒப்புக்கொண்டு தியானத்தை முடித்துவிடுவேன். அதனால், ஒரு முறையான, சரியான, தெளிவான வழிகாட்டுதல்களை இம்மையம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு துணிந்து தம்ம மதுரா, திண்டுக்கல் விபஸ்ஸனா பயிற்சி மையத்திற்கு 01.01.2025 அன்று சென்றேன்.
இப்பயிற்சி அனுபவத்தை மூன்று பிரிவுகளாக எடுத்துரைக்க விரும்புகிறேன்.
- பயிற்சி மையத்தின் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், சேவைகள்.
- விபஸ்ஸனா தியானப் பயிற்சியில் உணர்ந்தவை.
- தம்மப் பேருரையின் மூலம் அறிந்துகொண்டவை
பயிற்சி மையத்தின் அமைப்பு
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிட பயண தூரத்தில் காந்திகிராம் என்னும் கிராமத்தில் செட்டியாப்பட்டி செல்லும் வழியில் மலையின் அருகில் தனிமை சூழ்ந்த ஒரு பகுதியில் இம்மையம் அமைக்கப்பட்டிருந்தது.
அலுவலகம், உணவுக்கூடம், தியான மண்டபம் (சிறியது மற்றும் பெரியது), தங்கும் அறைகள் என தியானப் பயிற்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிற கேளிக்கை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் ஒதுங்கி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
கட்டுப்பாடுகள், விதிகள்
பயிற்சி மையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், மையத்தின் தொடர்பு எண்ணை வீட்டுக்குத் தெரியப்படுத்திவிட்டு அலைபேசியினை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பிறகு, அவரவர்க்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றது முதல் பயிற்சியின் இறுதி நாள்வரை எவருடனும் பேசாமல், பார்க்காமல் முழுமையான மௌனத்தைக் (Noble Silence) கடைபிடிக்க வேண்டும்.
முதல் நாள் மாலை விபஸ்ஸனா பயிற்சியின் அறிமுக உரையும், கால அட்டவணையும் விளக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணிக்கு எழுவது முதலில் சிரமமாக இருந்தாலும் ஓரிரு நாட்களில் புத்துணர்ச்சியாக உணர்ந்தேன். மாலை 5.00 மணிக்கு மேல் உண்ண எதுவும் வழங்கப்படாதிருந்ததும் இருவேளை உணவுக்குப் பழகிக்கொண்டேன்.
எல்லாக் கட்டுப்பாடுகளும் விதிகளும் நம் சிந்தனையைச் செறிவூட்டவும், தியானத்தின் பலனைத் தீவிரப்படுத்தவும்தான் என்பதை அடுத்தடுத்த நாட்களில் உணர்ந்துகொண்டேன்.
சேவைகள்
எந்த உதவி தேவைப்பட்டாலும், எந்தச் சந்தேகம் தெளிவுபெற வேண்டியிருந்தாலும் இம்மையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் தம்ம சேவகர்களாக இருந்து வழிகாட்டுவார்கள் என அறிமுக வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.
தம்ம சேவகர்களின் அமைதியும், பணிவும், நன்னடத்தையும் இப்பயிற்சி நம்மையும் ஒழுங்குபடுத்தும் என்ற நம்பிக்கையை அளித்தது.
விபஸ்ஸனா தியானம்
பத்து நாட்கள் பயிற்சியில் மூன்று வகை தியானங்கள் கற்பிக்கப்பட்டன.
- ஆனாபானாசதி (மூச்சை அறிதல்): 1 – 3 நாட்கள்
- விபஸ்ஸனா (உணர்ச்சி அறிதல்): 4 – 9 நாட்கள்
- மெத்தா தியானம் (கருணை தியானம்): 10ஆம் நாள்
தியானத்தைத் தொடங்கும் முன் இப்பயிற்சி பற்றிய கருதுகோள்கள் சிலவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முதலாவது, இப்பயிற்சியை ஓர் உயர்ந்த நோக்கோடு, இடைவிடாத முயற்சியோடு சலிப்பில்லாமல் பத்து நாட்களும் தங்கியிருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது, இப்பயிற்சி மீதான முழுமையான நம்பிக்கையை, திரிசரணங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் அதாவது, மும்மணிகளான புத்த – தம்ம – சங்கத்தினைச் சரணடைவதன் மூலம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனைப் பௌத்த மதம் பற்றியதாக எடுத்துக்கொள்ளாமல் ஞானத்தை அடையும் வழிகளாகக் கருத வேண்டும்.
மூன்றாவதாக பசி, சோம்பல், தனிமை, ஏக்கம் முதலிய விரக்தி உணர்வுகளைத் தூக்கி எறிந்துவிட்டு முழுவிருப்பத்தோடும் ஒப்புதலோடும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான தூய பாதை என்னும் நம்பிக்கையோடும் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
நான்காவதாக, இப்பயிற்சி எந்த மதத்தவருக்கும் உகந்தது. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான தர்மம். இதனில் எவ்வித பாகுபாடுமின்றி, மனக்குழப்பமின்றி, துணிச்சலோடு, அமைதியான, சலனமில்லாத மனத்தோடு தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
தம்மப் பேருரையில் இப்பயிற்சி மூன்று பகுதிகளாக அளிக்கப்படுவதாகக் கற்பிக்கப்பட்டது.
சீலம் – ஒழுக்கம்
சமாதி – உள்ளச் சமநிலை
பஞ்ஞா – ஞானம்
சீலம்
ஒழுக்கம், அதாவது ஐந்து ஒழுக்கங்களைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அவை
- கொலை புரிதல் கூடாது.
- களவு புரிதல் கூடாது
- பிழைகாமம் புரிதல் கூடாது
- பொய்யுரைக்கக் கூடாது
- போதைப் பொருள் துய்க்கக் கூடாது
இவ்வொழுக்கங்களை முன்பை விட தீவிரமாக மனதில் நிலைநிறுத்திப் பின்பற்றினேன். நல்ல பலனும் கிடைத்தது.
சமாதி
உள்ளச் சமநிலை, அதை அடையவே ஆனாபானாசதி என்னும் மூச்சை அறியும் தியானம் கற்பிக்கப்பட்டது.
ஆனாபானாசதி (மூச்சை அறிதல்)
இது உள்மூச்சையும், வெளிமூச்சையும் அதன் இயல்பிலேயே உணரும் தியானம். மடிக்காலிட்டு அமைதியாகவும் சலனமில்லாமலும் மூச்சினைக் கவனிக்க வேண்டும். தியானத்தின் தொடக்கத்தில் மேற்கண்ட ஆசிரியரின் அறிவுரை ஒலிப்பதிவாக ஒலிக்கும். அவரது அறிவுரைப்படி தியானத்தைத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை கவனம் திசைமாறி எண்ணங்கள்வழி பயணிக்கும்போதும் மீண்டும் கவனத்திற்கு வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் குறையும்படி பழக்கப்படுத்திக்கொள்ள ஆசிரியர் அறிவுறுத்தினார்.
அதுபோன்றே அமைதியாக, சலனமில்லாமல் கவனிக்கக் கவனிக்க இரகசியம் என்றும், ஆழ்மன விருப்பம் என்றும், என்றென்றைக்கும் மறக்க இயலாத துயரம் என்றும் நான் பதுக்கி வைத்திருந்த எண்ணங்கள் கிளர்ந்து வெளியேறின. அவற்றின் பாதிப்பை உணர முடிந்தது. உடல் உணர்ச்சி தீவிரமடைந்தது. இருப்பினும் மீண்டும் முயன்றேன். முதல் நாள் என்னைத் தாக்கிய எண்ணங்கள் மறுபடியும் தோன்றவில்லை. ஆனால், வேறோர் எண்ணம் துரத்தியது. அதனை விடுத்து மூச்சைக் கவனிக்க அடுத்த நாள் அதுவும் மறைந்தது. ஆசிரியரிடம் இதுபற்றி வினவியபோது “அவை தோன்றி கடந்து, கரைந்து போகும். மறுபடியும் தோன்றாது. தோன்றினாலும், நீங்கள் முன்பைவிட குறைவான எதிர்வினையே அதன் மீது நிகழ்த்துவீர்கள். இவ்வாறு கவனிக்கக் கவனிக்க ஒவ்வொரு தீவிர எண்ணமும் பலவீனமடையும். எதிர்வினை ஆற்றாமல் ஊக்கநிலையோடு கவனிக்கும்போது நீங்கள் பலம் பெறுவீர்கள்” என்றார். அவ்வாறே செய்தபோது என் இயல்பிலிருந்து என்னை விலக்கிய எல்லா சுபாவங்களும் மாற்றம் பெறத் தொடங்கின; என்னிடமிருந்து கரைந்து காணாமல் போகத் தொடங்கின. அவைதாம் சங்காரங்கள் என ஆசிரியர் தெளிவுபடுத்தினார். “அவை முடிச்சுகளாக நம்மால் அவிழ்க்க முடியாதவாறு நம் அறியாமையால் கட்டப்படுகின்றன. நாம் அம்முடிச்சினை வலிமைப்படுத்திவிட்டுப் போராடிக்கொண்டிருக்கிறோம்” என்பதை விளக்கினார். முடிச்சுகள் எண்ணிலடங்காமலும், என்னில் அடங்காமலும் தோன்றிக்கொண்டே இருந்தன. மூச்சைக் கவனிக்க கவனிக்க அவை அவிழத் தொடங்கின. இவ்வாறு முதல் மூன்று நாட்கள் மூச்சை அறியும் ஆனாபானாசதி தியானம், கவனத்தைச் செறிவூட்டி, எண்ணங்களை வெளியேற்றி என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள உதவியது.
பஞ்ஞா – ஞானம்
இதனைப் பெற விபஸ்ஸனா தியானம் வழிகாட்டும் எனக் கற்பிக்கப்பட்டது.
விபஸ்ஸனா
அடுத்த ஆறு நாட்கள் இத்தியானம் கற்பிக்கப்பட்டது. நமக்கு வசதியான திசையில் உச்சந்தலை முதல் கால் விரல் வரை ஒவ்வொரு சிறு சிறு பகுதிகளாக உடலினை, உடலின் உணர்ச்சிகளைக் கவனிக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தது. பிறகு, எளிதாகப் பின்பற்றி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அதில் தோன்றும் உணர்ச்சிகளையும் உணர்ந்தேன். சில இடங்களில் சிலிர்ப்பையும், சில இடங்களில் வலியையும், சிலவற்றில் அரிப்பையும், நாடித்துடிப்பையும் மாறிமாறி உணர்ந்துகொண்டே இருந்தேன். தலை முதல் கால் வரையிலும், மீண்டும் காலிலிருந்து தலை வரையிலும் தொடர்ச்சியாகப் பயணிக்கப் பயணிக்க உணர்ச்சியின் தீவிரம் குறைவதை உணர்ந்தேன்.
இப்போதும் எண்ணங்கள் தோன்றுவது நிற்கவில்லை. தோன்றிக்கொண்டே இருந்தன. இருப்பினும் கவனத்தை உடலின் பாகங்கள் வழியாகக் கடத்திக்கொண்டே இருந்தேன்.
ஆறாம் நாளிலிருந்து அதிட்டானத்தைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அதாவது, கை கால்களை அசைக்காமல் அமர்ந்த நிலையில் ஒருமணி நேரம் இடைவிடாது விபஸ்ஸனா செய்ய வேண்டும். கடினமாக இருப்பினும், முயற்சி செய்யச் செய்யப் பழக்கமாகும் என ஆசிரியர் நம்பிக்கை கொடுத்தார்.
அதிட்டானம் உண்மையாகவே எனது உறுதித் தன்மையை, உள்ளச் சமநிலையை அதிகப்படுத்தி என் முந்தைய இயல்பை, சுபாவத்தை மாற்றியது. விருப்பு வெறுப்பின்றி, உள்ளச் சமநிலையோடு அமைதியான, சலனமில்லாத, சமமான மனநிலையோடு கவனிக்கக் கவனிக்க உடல் உணர்ச்சிகளின் தீவிரம் குறைந்து அவற்றிற்கு எதிர்வினை ஆற்றும் இயல்பு குறைந்து மனம் தெளிவு பெற முடிந்தது.
அன்றைய நாளின் தம்மப் பேருரையில் மனம் நான்கு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளதைப் பற்றி பகவான் புத்தர் போதித்ததாக விளக்கப்பட்டது.
- விஞ்ஞானம்
- பஞ்ஞா
- உணர்ச்சி
- சங்காரம்
முதலாவது, நமது புலனின் இயல்பை, தன்மையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, கண் எனும் உறுப்பு ஒரு பொருளைப் பார்க்கும் இயல்புடையது. இது விஞ்ஞானம்.
இரண்டாவது, அஃது இன்னதென்று அறிவும் அறிவு.
மூன்றாவது, அது ஏற்படுத்தும் உணர்ச்சி.
நான்காவது, அதற்கு நாம் செய்யும் எதிர்வினை. இந்தச் சங்காரங்களே விருப்பு, வெறுப்புடன் கூடிய எண்ணங்களாக, முடிச்சுகளாக நம் மனதில் பதிந்து எதிர்மறை இயல்பினை உருவாக்குகின்றன.
முதல் மூன்றினை நாம் தடுக்க முடியாவிட்டாலும், நான்காவதான சங்காரத்தை அதாவது, நாம் ஆற்றும் எதிர்வினையினைத் தவிர்த்தல் மூலம் முடிச்சு போடாமலும் தீய விளைவுகளை உண்டாக்காமலும் தடுக்கலாம்.
அதாவது, மனதின் செயல்களையே உடலும் வாய்மொழியும் செய்கின்றன. மனதின் செயல்களை நிறுத்தினால் உடலின் செயல்களும் வாயின் செயல்களும் இல்லாமல் போகின்றன. இவ்வாறு மன முடிச்சுகள் போடப்படுவதும் இறுக்கம் ஏற்படுவதும் இல்லாமல், உள்ளச் சமநிலையோடு ஒவ்வொரு சூழ்நிலையையும் அணுகும்போது மனம் விருப்பு வெறுப்பின்றி அறிவோடு சிந்திக்கப் பழகும். இந்தத் தெளிவினை விபஸ்ஸனா மூலம் உணர முடிந்தது.
உடலின் ஒவ்வோர் உணர்ச்சிக்கும் எதிர்வினை ஆற்றாமல் கடந்து சென்று முழுமையான உள்ளச் சமநிலையோடு கவனிக்கும் பழக்கம் வந்தது. அதனால் உடலின் கடினமான உணர்ச்சிகள் பிரிதலுற்று வலி குறைவதையும், நிதானத்தையும் உணர முடிந்தது. இதன் மூலம் உடலின் முடிச்சுகளும் அவிழ்ந்திருப்பதை உணர்ந்தேன்.
நிலையில்லா உணர்ச்சிகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்துக் கவனிக்கத் தொடங்கினேன். தோன்றும் அத்தனையும் அழியும் என்ற புத்த பகவானின் போதனையை மெய்யினாலும் மனதாலும் உணர்ந்தேன். மனதின் இறுக்கம், உடலின் இறுக்கம் அனைத்தும் தளர்வுறுவதை உணர்ந்தேன்.
இந்நிலையில் தலை முதல் கால்வரை ஒரே சீராகவும், வேகமாகவும் கவனிக்க அறிவுறுத்தப்பட்டது. இடையில் ஏதாவது தடிமனான உணர்ச்சி இருந்தால் கவனத்தின் வேகம் தடைபடும். அச்சமயம், ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் கவனம் செலுத்தி அவ்வுணர்வைக் கடத்த அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்யும்போது அந்தத் தடிமனான உணர்ச்சியும் மறையும் என்று கூறப்பட்டது. அதை என்னால் நன்கு உணர முடிந்தது. ஆசிரியரின் அறிவுரைப்படியும் தம்மப் பேருரையில் விளக்கப்பட்ட போதனைபடியும் என்னால் இயன்றவரை இப்பயிற்சியை மேற்கொண்டேன்.
விபஸ்ஸனாவில் ஒரே சீராகவும், வேகத்துடனும் உடலினைத் தலை முதல் கால்வரை உணரும்போது அலைகளாக உடல் இயங்குவதை உணரும் நிலை ‘பங்கா’ என்று கூறப்பட்டது. அதனை அடைய எனக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்பட்டது. இருப்பினும் இத்தகைய முயற்சிகள் என்னை மேலும் நம்பிக்கையுள்ளவனாக, துணிச்சல் உள்ளவனாக, மன அமைதியுள்ளவனாக, ஆர்ப்பாட்டம் இல்லாதவனாக, பணிவுள்ளவனாக, பயமற்றவனாக, எதையும் பொறுமையாகவும், நிதானமாகவும் அணுகும் தைரியமுள்ளவனாக, இறுதியாக நிம்மதி உடையவனாக மாற்றியது.
எல்லா மனிதருக்கும் அடிப்படைக் கல்வி போன்று இப்பயிற்சி வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான ஒன்று என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
மெத்தா தியானம்
இறுதியாக 10ஆம் நாள் மெத்தா தியானம் கற்பிக்கப்பட்டது. இதனைப் பயிற்சி மையத்திற்குச் செல்வதற்கு முன்பே சில பௌத்த பிக்குகளால் கற்றிருந்தேன். அதாவது நமது கருணையை, நற்பண்புகளை, எண்ணங்களை, அன்பினை எல்லா உயிர்களிடத்தும் எல்லைகள் கடந்து தியானத்தின் மூலம் பகிர்தலாகும்.
அதனால் நமது பெருந்தன்மை, இரக்க குணம், நேர்மறை சக்தி, ஈர்ப்பு சக்தி, தாராள மனம் ஆகியன அதிகரிக்கும்.
இதனை முன்பே அறிந்திருந்தாலும் கூட்டு தியானம் அதிக பலனை அளித்தது.
தம்மப் பேருரையின் மூலம் அறிந்தவை
இத்தியானத்தை எவ்வளவு கவனத்தோடும், எந்தவிதமான நோக்கத்தோடும் அணுக வேண்டும் என்பதைத் தம்மப் பேருரை தெளிவாகக் கற்பித்தது.
பௌத்த தம்மம் எந்தத் தனிப்பட்ட மதத்தவருக்கோ, இனத்தவருக்கோ உரியதன்று. அனைத்து உயிர்க்கும் பொதுவானது என்னும் கருத்து தொடர்சியாகப் போதிக்கப்பட்டது. பற்றற்ற, இலகுவான மனதோடு இயங்கும் பொருட்டு மனதினைப் பக்குவப்படுத்துவதற்கு மனதில் நிலைநிறுத்த வேண்டிய சரியான – உண்மையான வழிகாட்டுதல்களாகத் தம்மப் பேருரை இருந்தது.
பௌத்த தம்ம நெறிகளான திரிரத்தினங்கள், பஞ்ச சீலம், நான்கு பேருண்மைகள், எண் மார்க்கம், பாராமிதா (பத்துவாழ்வு நிலைகள்), மனதின் ஐந்து தடைகள் ஆகியன போதிக்கப்பட்டன. கட்டுரையின் நீளம் கருதி அவற்றைப் பதிவிட இயலவில்லை.
நிறைவு
இறுதியாக, இப்பயிற்சி மூலம் மன விடுதலைக்கான வழிகளை அடைய என்னை நெறிப்படுத்தியதற்கு மெய்யுணர்வெய்திய உயர்மெய்ஞான கருணைமிகு பகவான் புத்தருக்கும், பிரதிபலன் எதிர்பாராமல் தம்ம சேவை செய்யும் தியான மையத்திற்கும் நன்றிகளும் பணிவான வணக்கங்களும்!
என் போன்று நீங்களும் இப்பயிற்சியைப் பெற்று, துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான எளிய மார்க்கத்தைக் கற்று, தாங்கள் அறிந்தவற்றை, புண்ணியங்களை, நற்காரியங்களைப் பரப்ப வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பவது சப்ப மங்களம்! நமோ புத்தாய!