தமிழகத்தில் வாரத்திற்கொரு சாதிய வன்முறை நிகழ்கிறது. அவற்றுள் சில கண்டிக்கப்படுகின்றன, சில கடந்து செல்லப்படுகின்றன. சிந்தப்படும் ரத்தத்தின் அளவு, சம்பவங்களுக்குக் கிடைக்கும் அழுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் எதற்குக் குரல் கொடுக்க வேண்டும், எதை மெளனமாகக் கடக்க வேண்டும் என்பவை சமூகவலைத்தளச் செயல்பாட்டையொட்டி முடிவு செய்யப்படுகிறது.
சமூக உரிமை சார்ந்து பேசுகிற பலரும் இத்தகைய சம்பவங்களைத் தனித்தனி நிகழ்வாகக் கருதி கண்டிக்கிறார்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள், சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்துகிறார்கள். சமகால நிகழ்வுகளுக்கு ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறவர்கள், இதைப் போல கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு என்ன தீர்வு எட்டப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அது உருவாக்கிய தாக்கம் என்ன, சமூக வெளியில் அவை எப்படியெல்லாம் பிரதிபலித்தன என்று சிந்திப்பதில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினர் அந்நிலப்பரப்பில் அதற்குப் பின் சந்தித்த பிரச்சினைகள், அச்சமூகத்தை உளவியல் ரீதியாக எப்படி எதிர்கொண்டார்கள் என எந்த அக்கறையும் பொதுவாக இருப்பதில்லை.
26 ஆண்டுகளுக்கு முன்பு மேலவளவில் ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முருகேசன் உட்பட ஏழு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். முருகேசனின் மனைவியோடு சேர்த்து இன்னொரு பெண்மணியும் அப்போது கருவுற்றிருந்தார். தேர்தலில் போட்டியிட்டதற்காகத் தலை துண்டிக்கப்பட்டுக் கொலையுண்ட தனது தந்தையின் வரலாறைப் பின்னாளில் கேட்கும் அந்தக் குழந்தையின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்றோ, கொலை நடந்த காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்றோ நாம் சிந்தித்திருக்கிறோமா? ஆளும் அரசாவது இந்தக் கோணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை இதுவரை அணுகியிருக்கிறதா? ஒரு கொடும் செயலின் மூலம் அடையாளம் பெறும் நிலப்பரப்பின் அரசியல் என்னவாக மாறியிருக்கிறது என்று கண்காணித்திருக்கிறதா? இத்தகைய கண்ணோட்டத்தில் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை கூட அவர்களுக்குத் தோன்றியதில்லை.
நாங்குநேரி பெருந்தெருவில் 12ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரையும் அவரது தங்கையும் சக மாணவர்களால் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். மாணவர்களுக்குள் சாதியின் வடிவம் இவ்வளவு கூர்மையோடு இயங்க முடியுமா என்று அதிர்ந்து போகுமளவிலான கொடூர வன்முறை இது. இப்போது இந்த மாணவர்களுக்காகக் குரல் கொடுப்போம், ஆதரவளிப்போம், சில நிவாரணங்கள் வரை நீளும். அரசுக்கு அழுத்தம் வரும் பட்சத்தில் ஓரிரு கண்டனங்களோடு முடியும். அதைத் தாண்டி சின்னதுரைக்கும் அவனது குடும்பத்தினருக்கும், அவனோடு தெருவில் விளையாடும் நண்பர்களுக்கும், பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்கும் எஞ்சிய காலத்தில் உளவியல் ரீதியாக என்ன விதைக்கப்படும் என்பது குறித்துத் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அதன் சூடு தணிந்ததும் காப்பாற்றப்படுவார்கள். இதுபோன்ற வழக்குகளைப் பின்தொடர்கிறவர்கள் அதை எதிர்காலத்தில் சுட்டிக்காட்டும்போது யாருமே கருத்தில் கொள்ளப்போவதில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவும் அதிமுகவும் இதைத் தொடர்ந்து செய்திருக்கிறது. இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு தரப்பு தனது வாதத்தை திட்டமிட்டு மௌனமாக்கியிருக்கிறது, அவர்கள் தண்டனை பெறாமலோ அல்லது தண்டனை காலம் முடிவதற்கு முன்போ விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு இந்த அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தியதில்லை. தனியொரு சாதி இந்து மீது நடவடிக்கை எடுத்தால் கூட ஒட்டுமொத்த சமூகத்தையும் பகைத்துக்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையுடன் சாதிக்கு அடிபணிகிறார்கள். சமன்பாடு இல்லாத இந்தப் போக்கினால் வன்முறையால் தங்களது இருப்பைத் தக்க வைக்கும் சாதிகள் மேலும் கூர்மையடைகின்றன.
ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்திய தலைமுறையினரியிடையே தாம் அடக்கி வைக்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் வலுப்படுகிறது, மறுபுறம் வன்முறையை எதிர்கொண்ட தலைமுறையினரிடையே நாம் பாதிக்கப்படுகிற இடத்தில் இருக்கிறோம் என்பது வலுப்படுகிறது. அறிவுத்தளத்தில் சாதிக்கு எதிராக இருப்பதாய்த் தோன்றும் அணிதிரட்சி, யதார்த்தத்தில் இல்லை. தலித் தரப்பில் விலைபோகக் கூடியவர்களைக் கொண்டு அம்மக்கள் சமாதானத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆக, தலித் தரப்பு ஆதரவு என்பது உள்ளூர் அளவில் சாதி இந்துக்களின் அரசியலால் வீழ்த்தப்படுகிறது. பட்டியலினத்தவர் என்று வருகிறபோது தனிநபர்களைச் சரிக்கட்டுகிறார்கள், அதுவே சாதி இந்துக்கள் எனும்போது தனிநபருக்காக மொத்த சாதியயையே திருப்திப்படுத்த முனைகிறார்கள்.
ஓவியம்: கு.சம்பத்குமார்
இந்த யதார்த்தத்தைக் கவனிக்கும் பட்டியலின இளைஞர்கள் உள்ளூர் அளவிலும் அரசியல் தளத்திலும் தங்களுக்குச் செல்வாக்கு இல்லையென்பதை உணர்கிறார்கள், இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் தனித்து விடப்படுகின்றனர். அதே நேரத்தில் இடைநிலை சாதிகள் மத்தியில் குற்றம் புரிந்தவர்களுக்கு வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவாலும் அதிகார மையத்தின் உதவிகளினாலும் சாதிய முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இதற்கிடையேயான ஊடாட்டத்தில் பாதிக்கப்படும் இளந்தலைமுறையின் மனம் என்னவாகும் என்பது அக்கறைக்கு அப்பாற்பட்டிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த ஊர் வேங்கைவயல் என்று அப்பகுதி தலித் சிறுவர்கள் யாராவது எதிர்காலத்தில் சொல்ல முடியுமா?
வாரமொருமுறை நிகழும் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதிலிருந்து தலித்துகள் சோர்வடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதன் அழுத்தத்தையொட்டி கருத்து தெரிவிப்பது என்பது தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைக்கு நிகரான சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. அதற்குப் பின் அவை எந்தவிதமான கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படுவதில்லை. நம் வாயிலிருந்து ஒரே ஒரு ‘உச்’ பிறப்பதற்கு லிட்டர் கணக்கில் இரத்தம் தேவைப்படுகிறது, இரத்த கோலத்தோடு பகிரப்படும் புகைப்படங்கள் மேலும் மேலும் தலித்துகள் ஒடுக்கப்படுவதற்குப் பிறந்தவர்களாக முன் நிறுத்துகிறது.
ஒரு நிகழ்வில் நாம் வெளிப்படுத்தும் நிலைப்பாடு என்பது குறிப்பிட்ட விவகாரத்தில் நாம் என்ன கருத்து கொண்டிருக்கிறோம் என நிரூபிப்பதைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு அது எந்த வகையிலும் உதவுவதில்லை. உண்மையான தீர்வுகள் நம் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறது. அவை கூடுதல் அக்கறை மிக்கதாக இருக்க வேண்டும் என்பதை விடவும் தார்மீகமானதாக இருக்க வேண்டும். செலுத்தப்படும் ஒரு விசை, அதனால் உருவாகும் மாற்றம், அதன் விளைவு என்பதெல்லாம் அறிவியல் நோக்கோடு இருத்தல் வேண்டும். திமுகவும் அதிமுகவும் பன்னெடுங்காலமாக அதிகாரத்தில் இருக்கின்றன, சமூகநலத் திட்டங்களைத் தீட்டியவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும், அத்தகைய திட்டங்களின் தோற்றுவாய், துவக்கி வைக்கப்பட்டது உள்ளிட்ட பெருமிதங்களில் தமிழகச் சமூகநீதி சோர்ந்து படுத்துக் கிடக்கிறது. அதுவே அதிகபட்சமான சமூகநீதி என்று அதனினும் பின்தங்கிய மாநிலங்களோடு ஒப்பிட்டுச் சமாதானம் செய்துகொள்கிறது.
இந்த அலட்சியமும் போலி பெருமிதமும்தான் இத்தகைய சாதிய தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் உலகம் தலைகீழ் மாற்றம் பெறுகிறது, பல புதிய விதிகள் உலகை ஆட்டுவிக்கின்றன, புதிய பிரச்சினைகளுக்குப் பழைய விதிகளின்படி தீர்வை எட்ட முனைவது அறிவியலுக்கே முரணானது. சமூகப் பிரச்சினைகளுக்கும் இது பொருந்தும்.
இன்றையச் சூழலில் சாதியையும் சமூக நீதியையும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும், சமூகவியல் கண்ணோட்டத்தில் நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் அதிகார அடுக்குகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும், மாறிவரும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் பழைய பெருமைகளைப் பேசுவதால் இங்கே எதுவுமே மாறப்போவதில்லை.