பொன்னுதயம் கண்டிடவே…

தலையங்கம்

ந்திராயன் நிலவின் தென் துருவத்தில் இறங்கிவிட்டது, உலகச் சதுரங்கப் போட்டியில் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பெற்றார், உலக தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார், ‘ஜெயிலர்’ 600 கோடி வசூலித்துள்ளது… இப்படிப் பொதுச் சமூகம் பேசித் தீர்க்கப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அன்றாடம் நிகழும் சாதிய வன்கொடுமைகளை எதிர்கொள்வதிலேயே தலித்துகளின் காலம் கழிகிறது. தலித்தியச் செயற்பாட்டாளர்கள் – சிந்தனையாளர்கள் – எழுத்தாளர்கள் – அரசியல்வாதிகள் யாவரும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இதுகுறித்துப் பேசி, எழுதி, போராட்டம் நடத்தினாலும் குறிப்பிடத்தகுந்த எந்த மாற்றங்களும் நிகழவில்லை. அரசியல் – சமூக – பண்பாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையில் இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. அண்ணல் அம்பேத்கர் தந்த சட்டத்தாலும் சில தலித் தலைவர்களின் பெரும் முயற்சியால் கிடைத்த திட்டங்களாலும் ஓரளவு முன்னேற்றமடைந்திருக்கிறோம். ஆனாலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது.  

இந்நிலை மாற இடஒதுக்கீடு, அரசியல் பங்கேற்பு, நமக்கான அமைப்புகள், பொருளாதார முன்னேற்றம், மதமாற்றம் எனப் பல வழிவகைகள் முன்னெடுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தினாலும் எதிர்பார்த்த விளைவுகள் நடக்கவில்லை. அண்ணல் அம்பேத்கரே அதற்கும் சாட்சி. மதச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், அமைப்பாக்குதல் என தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்று பார்த்து, அரசியல் ரீதியாக இம்மக்களை ஒன்றிணைக்க முடியாதென்று பண்பாட்டுச் சீர்திருத்தமே இவர்களை இணைக்கும் என மதமாற்றத்தை முன்னெடுத்தார். அதன் முழு விளைவைப் பார்க்கும் முன்பே மறைந்தும்விட்டார். அண்ணல் மதம் மாறிய நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு விஜயதசமியன்றும் தலித் மக்கள் நாக்பூர் தீக்ஷா பூமிக்குக் குடும்பங்களாகச் சென்று, திருவிழாபோல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஒவ்வோர் ஆண்டும் அண்ணல் பிறந்த – மறைந்த – பௌத்தரான நாட்களில் ஆங்காங்கே பௌத்த மதமாற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. ஆயினும் மொத்த இந்திய மக்கள்தொகையில் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை. அண்ணலுக்குப் பிறகு அவர் உருவாக்க நினைத்த பௌத்தப் பிரச்சார அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை முன்னெடுக்காததே இதற்குக் காரணம். அண்ணலோடு முரண்பாடு கொண்ட பல தலித் தலைவர்கள் பின்னாளில் அவரை ஆதரித்தாலும், அவர் தீவிரமாகப் போராடிய காலகட்டத்தில் கடுமையாக விமர்சித்தனர்.  

அண்ணல் காலகட்டத்திலேயே அந்நிலை என்றால் இன்றைய சூழலை விளக்கத் தேவையில்லை. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். சமூகத்தில் தலித் எழுச்சியே இல்லை என்றும் சொல்வதற்கில்லை. அந்தத் தீ கனன்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒன்றிணைந்த எழுச்சியாக இல்லாமல் அது சிதறடிக்கப்பட்டிருக்கிறது. பெரும் உத்வேகத்துடன் செயல்பட்ட தலித் அமைப்புகள் யாவும் காலப்போக்கில் தேய்ந்துபோயின. அதில்தான் இந்தியச் சமூக அமைப்பின் சூழ்ச்சி இருக்கிறது. படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பில் தனக்குக் கீழே ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது. இது மாறும்வரை முழு விடுதலை சாத்தியமில்லை. அதிகாரத்தை நோக்கிய நகர்வில் நாம் இத்தனை தடைகளையும் எதிர்கொண்டாக வேண்டும்.

சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள் இடையேயான சாதியப் பிரச்சினையில் கூட பெற்றோரையோ, ஆசிரியர்களையோ, பள்ளி நிர்வாகத்தையோ, அதிகாரிகளையோ, அரசையோ தனித்தனியாகக் குற்றஞ்சாட்டாமல் சமூகமாக நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். சிறுவர்கள் மனதில் சாதிய எண்ணம் எப்படி உருவானது, அவர்கள் கையில் ஆயுதம் கிடைத்தது எப்படி, வன்முறை இயல்பாக்கப்பட்டது எப்படி, இத்தகைய சம்பவங்களை அலட்சியமாகக் கடந்துபோகும் மனநிலை எப்படி வருகிறது என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் ஏராளம். ஓர் இரயில் தீப்பிடித்து எரிகிறது, உடனடியாக அவ்விடத்திற்குச் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சரும், அதிகாரிகளும் விரைகின்றனர். துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்கின்றனர். மனதாரப் பாராட்டுகிறோம். அதேவேளை, குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது யாரென்று சிபிசிஐடியாலும் கண்டறிய முடியவில்லையென்றால், நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் தன்மை என்ன?

தன் அழைப்பையேற்று நாக்பூரில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து அண்ணல் கண்ணீர் சிந்தினாராம். என் உதவியால் கல்வி பயின்ற, அரசுப் பணி சேர்ந்த யாரும் இங்கு வரவில்லை. என்னால் எந்தப் பயனையும் அடையாத பாமர மக்களே வந்திருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டாராம். அவ்வாறிருக்கும்போது இன்று அண்ணல் இயற்றிய சட்டத்தால் பயனடைந்தவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். இருந்தும் ஒவ்வொரு பிரச்சினையின்போதும் அம்பேத்கரிய, தலித்திய உணர்வாளர்கள் குரல்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம், இருப்போம். நிச்சியம் இந்த மண்ணில் சகோதரத்துவம் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையுடன்…

அந்த வகையில் அரசுக்கும் தலித்தியச் செயற்பாட்டாளர்களுக்கும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

  • பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் இவ்வொதுகீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • இராணுவத்திலும் காவல்துறையிலும் பட்டியலின / பழங்குடியின மக்களுக்குக் கூடுதல் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைச் சிறப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.
  • அம்மண்டலங்களில் ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்டக் கல்வி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் போன்ற உயர் பதவிகளில் பட்டியலினத்தவர் பணியமர்த்தப்பட வேண்டும்.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.
  • பழங்குடியின சாதிச் சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
  • சாதிய வன்முறை சம்பவங்களில் எவ்வித தாமதமுமில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

செயற்பாட்டாளர்களுக்கு…

  • வட்டார ரீதியான அமைப்புகள் மூலமாகவோ தனியாகவோ மக்களுக்குச் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வட்டார அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும்.
  • பட்டியலின மக்களுக்காக ஒன்றிய / மாநில அரசுகள் அறிவித்திருக்கும் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • சாதிய வன்முறையின்போது பட்டியலின மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்கச் சிறப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
  • வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும் அதன் இயங்குமுறை குறித்தும் கிராமங்கள்தோறும் தொடர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும்.
  • சாதி ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டங்களைச் சேரிகளில் நடத்தாமல், ஊர்த் தெருக்களிலேயே நடத்த வேண்டும்.
  • வழக்கமான மேற்படிப்புகளோடு பொருளாதாரம், வணிகவியல் போன்ற மேற்படிப்புகள் குறித்தும் அதன்மூலம் பெறக் கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் பட்டியலின மாணவர்களுக்குத் தொடர் வகுப்புகள் நடத்த வேண்டும்.
  • பௌத்தம் பரப்புதல், விகார்கள் அமைத்தல், சங்கம் உருவாக்குதல் போன்ற பணிகளை ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் சாத்தியமா என்று கேட்டால், உடனடியாக இல்லையென்றே பதில் வரலாம். ஆனால், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட முன்னோடிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். சுதந்திர அரசு இல்லாத காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகான சாதிய நெருக்கடிகள் மிகுந்த சூழலிலும், தனியாகவோ அமைப்பாகவோ குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை உருவாக்கிய வரலாறும் உண்டு. அண்ணல் இழுத்துவந்த தேர் நம் கண்ணெதிரிலேதான் இருக்கிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!