நாடாளுமன்ற ஜனநாயகம்: அம்பேத்கரின் எச்சரிக்கையும் இன்றைய இந்தியாவும்

இரவிச்சந்திரன்

சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்கள் 1951, அக்டோபர் 25 தொடங்கி 1952, பிப்ரவரி 21 வரை நடைபெற்றன. இத்தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்த டாக்டர் அம்பேத்கர், 1951, அக்டோபர் 28 அன்று ஜலந்தர் நகரிலுள்ள டி.ஏ.வி. கல்லூரியில் நடந்த ‘அரசியல் அறிவியலாளர்கள் நாடாளுமன்ற அமர்வில்’ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் ‘இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இது. இந்து சட்ட மசோதா குறித்து எழுந்த முரண்பாடுகளால் நேரு அமைச்சரவையிலிருந்து பதவி விலகிய டாக்டர் அம்பேத்கர், அந்தச் சூடு தணிவதற்கு முன்பே ஆற்றிய முக்கியமான உரை இது.

அவர் இவ்வுரையில், “1. சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள், 2. செயலூக்கமிக்க எதிர்க்கட்சி” ஆகிய இரண்டையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கும் இரண்டு தூண்களாக வரையறுக்கிறார். மேலும், எதிர்க்கட்சியை விரும்பாத ஆளுங்கட்சி; ஒரு கட்சி ஆட்சி முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்தி, அதனை இயல்பாக்குவது; அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வது; பெரும் தொழில் குழுமங்கள் கட்சிகளுக்குத் தாங்கள் வழங்கும் நிதியின் மூலம் ஆளுங்கட்சியின் மீதும், தேர்தல்களிலும் செல்வாக்கு செலுத்துவது ஆகியவை நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காவு கொள்ளக்கூடிய அபாயங்களாகக் குறிப்பிடுகிறார்.

ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் ஆற்றிய இந்த உரை, இன்றைய இந்தியாவின் அரசியல் சூழலிலும் மிகவும் பொருத்தப்பாடு உடையதாக இருப்பதை வாசகர்கள் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.

இன்று இந்தியாவில் SIR-க்குப் பின் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுப் பெரும் அரசியல் கிளர்ச்சியாக நாடெங்கும் வெடித்திருக்கிறது. இதுவரை பல்வேறு மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் வழியாக, ஏறத்தாழ 13 கோடி பேருக்கும் மேலானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த எதேச்சதிகார முடிவை ஆளுங்கட்சியான பா.ஜ.க. மட்டுமே வெளிப்படையாக ஆதரித்து வருகிறது.

2014-இல் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடனேயே, அது முன்வைத்த முழக்கம் “காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ (காங்கிரஸ் முக்த் பாரத்). இதனைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் மட்டுமல்ல, மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் ஆட்சி அல்லது அதனின் கூட்டணி ஆட்சிதான் நடக்க வேண்டும் எனும் நோக்கில் “டபுள் இஞ்ஜின் சர்க்கார்” என்ற கதையாடலை உருவாக்கிப் பரப்பியது. இவ்விரண்டு முழக்கங்களுமே ஒற்றை ஆட்சிக்கான அறைகூவல்.

மேலும், தப்பித் தவறி எதிர்க்கட்சிகள் மாநில ஆட்சி அதிகாரத்தை வென்றிருந்தால், அவ்வாட்சியைக் கலைப்பதற்குக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கேடாகப் பயன்படுத்தியது, பாஜக. கட்சித் தாவல்களை ஊக்குவித்தோ அல்லது எதிர்க்கட்சிகளை இரண்டாகப் பிளந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சட்டப்பூர்வமாகவே கவிழ்த்து, மக்கள் அளித்த தீர்ப்புக்கு விரோதமாகத் தனது சொந்த ஆட்சியை அல்லது தனது கூட்டணி ஆட்சியைப் பல்வேறு மாநிலங்கள் நிறுவியது, பாஜக. அதனின், இந்த அடாவடித்தனங்கள் அனைத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தும் திட்டத்தோடு சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை, பா.ஜ.க. எந்தளவிற்குக் கேடாகப் பயன்படுத்தி வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பா.ஜ.க.வின் கையாளாகச் செயல்பட்டிருக்கிறார் என்பது மட்டும் அம்பலமாகவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நியமனம் தொடர்பான விதிகளே ஆளும் பா.ஜ.க.விற்குச் சாதகமாக மாற்றப்பட்டுவிட்டன. அது மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் ஆளும் தரப்பிற்குச் சாதகமாக நடந்துவருவதும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெரும் தொழில் குழுமங்கள் கட்சிகளுக்கு அளிக்கும் நிதி விவகாரங்கள் சட்டப்பூர்வமாகவே வெளிப்படைத் தன்மையற்றதாக மாற்றப்பட்டுவிட்டன. ஒரு கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றிருக்கிறது என்ற விவரம் கிடைக்குமேயொழிய, எந்தெந்தத் தொழில் குழுமங்கள் எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு நிதியை வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தைப் பெற முடியாது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் பலன் அடைந்திருக்கும் ஒரே கட்சி பா.ஜ.க.தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபரான எலன் மஸ்க், “இந்தியாவின் பிரதமர் அம்பானி” என நக்கலாகக் குற்றம்சாட்டும் அளவிற்கு இந்தியப் பெரும் தொழில் குழுமங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நெருக்கம் அதிகரித்திருக்கிறது.

இப்போக்குகள் எல்லாம் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

டாக்டர் அம்பேத்கர் தனது உரையில் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப் போனால், கம்யூனிசம் அல்லது அராஜகம் நாட்டைக் கவ்விப் பிடித்துவிடும் என்று எச்சரிக்கிறார்.

இன்று கம்யூனிச அபாயம் எதுவுமில்லை. ஆனால், இந்து மதவெறி பாசிச அபாயம் சமூகச் செல்வாக்கையும், அரசியல் செல்வாக்கையும் பெற்று வளர்ந்து நிற்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம், அச்சட்டம் வழங்கியிருக்கும் ஜனநாயக உரிமைகள், நாடாளுமன்ற அரசமைப்பு முறை ஆகியவற்றைச் சட்டபூர்வ வழியிலேயே முற்றிலுமாக அழித்து, ஒரு வெளிப்படையான பாசிச அரசை நிறுவும் வழியில் பா.ஜ.க. சென்றுகொண்டிருக்கிறது.

சமகால இந்தியாவில் நம்மை நோக்கி வரும் இப்பேரழிவை எப்படித் தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள சவால்.

உரையின் சுருக்கப்பட்ட வடிவம்

உங்களது சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுமாறு என்னை அழைத்துப் பெருமைப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கல்லூரி முதல்வர் இதில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு கோரி எனக்கு எழுதிய கடிதத்தில், எந்தத் தலைப்பில் நான் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும் என்பது குறித்து எந்தக் குறிப்பையும் அளிக்கவில்லை. எனது எண்ணவோட்டத்தில் திடீரெனத் தெளிவு ஏற்படுவது வழமையான ஒன்று. அதுபோலவே இந்த முறையும் திடீரென எனது எண்ணவோட்டத்தில், இந்தக் காலைப்பொழுதில் உங்கள் மத்தியில் நாடாளுமன்ற அரசாங்க முறை குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்ற தெளிவு கிட்டியது. நான் அதிக நேரம் செலவிட முடியாது என்பதால், இந்த விஷயம் குறித்துச் சுருக்கமான ஆய்வுரையை உங்கள் முன் வைக்கிறேன்.

நாம் எந்த மாதிரியான அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து அரசியலமைப்புச் சபையில் நடந்த விவாதங்களின்போது, அது குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சிலர் பிரிட்டிஷ் மாதிரியை முன்வைத்தனர்; வேறு சிலர் அமெரிக்க மாதிரியை முன்வைத்தனர்; இந்த இரண்டு மாதிரிகளையும் மறுத்துக் கருத்துச் சொன்னவர்களும் இருந்தார்கள். ஆயின், இது குறித்து நடந்த நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரிட்டனில் இருப்பதைப் போன்ற நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு முறைதான் நமது நாட்டிற்குப் பொருந்தும் என்ற முடிவுக்கு வந்தனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger