தலையங்கம் – 1

 

மீறப்படுகிறதா ஜனநாயக உரிமை?

 

மதுரை மாவட்டத்தில் கடந்த 16.07.2026 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய மாநிலத் தகவல் ஆணையாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறை குறித்து எதிர்மறையான இரண்டு கருத்துகளைத் தெரிவித்தார். தற்போதைய நடைமுறைப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒரு தகவலைப் பெற பத்து ரூபாய் பெறுமானமுள்ள முத்திரைத்தாள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த முத்திரைத்தாள் கட்டணத்தை ஐம்பது ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கேள்விக்கும் கூடுதலாக ஐம்பது ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக இருப்பதால்தான் அதிக கேள்விகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன; அதைக் கட்டுப்படுத்துவதற்கு இது ஒன்றே வழி என்ற பொருளில்தான் அவர் இக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.

ஜனநாயக நாட்டில், அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிந்துகொள்வதற்கான உரிமை குடிமக்களுக்கு உண்டு. ஆனால், வெகுஜன மக்கள் இந்த உரிமைச் சட்டத்தைப் பெருவாரியாகப் பயன்படுத்துவதில்லை; சமூகச் செயற்பாட்டாளர்களே பெருமளவு அதைப் பயன்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அது இன்னும் எளிமையான முறையில் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கக்கூடிய சூழலில், தகவல் உரிமைச் சட்டத்தின் ஆணையர் வெளிப்படுத்திய கருத்தின் வெளிப்பாடாகத்தான் செப்டம்பர் 21 அன்று தமிழக அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அரசாணையையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

செப்டம்பர் 21 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 24(4)-ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் போலவே, சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகளையும் இதனுடன் இணைக்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக வெற்றிக் கழக அரசு. இந்த அரசாணை செப்டம்பர் 21 அன்றுதான் பொதுவெளிக்குத் தெரியவந்து விவாதமானது.

இது குறித்த ஊடகக் கேள்விக்குச் சற்றும் பொருந்தாத பதிலளித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன். அரசின் ஒருதலைப்பட்சமான இம்முடிவை நியாயப்படுத்திப் பேசினார் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இந்த விலக்கு எல்லாத் துறைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றல்ல; வகுப்புவாத மோதல்கள் போன்ற சம்பவங்களில் மாவட்ட அளவில் நடத்தப்படும் முக்கியமான விசாரணைகள் குறித்த தகவல்கள் வெளியே போகும்போது, சமூகப் பதற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவை மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றார். அறிவிப்பு வந்து, அமைச்சர்கள் நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்த சில மணி நேரங்களில், அந்த அரசாணை கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்ததால் அரசால் திரும்பப் பெறப்பட்டது.

ஜனநாயகப்பூர்வமாக விமர்சனம் எழுந்தவுடன் இந்த அரசு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது என இதில் பாராட்டவோ, வாழ்த்தவோ ஏதுமில்லை. செப்டம்பர் 21 அன்று வெளியான அரசாணை செப்டம்பர் 27 வரை நடைமுறையில் இருந்து, இந்த இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அதே காரணத்தைச் சொல்லி நிராகரிக்கவும்பட்டுள்ளன. எனில், இந்த அரசு இவ்விவகாரத்தில் தெளிவாகவே இருந்திருக்கிறது என்பதே உண்மை. புதிய அரசு பொறுப்பேற்று நான்கு மாதமே நிறைவடைந்திருக்கிற சூழலில், முந்தைய ஆட்சியின் தகவல்களையும் கொடுப்பதில் புதிய அரசுக்கு எங்கிருந்து சிக்கல் உருவாகியிருக்கிறது என்பது கேள்விக்குறி.

கடந்த 2024–25 Satrak Nagrik Sangathan–இன் அறிக்கையின்படி, 41,000-க்கும் அதிகமான மேல்முறையீடுகளும் புகார்களும் நிலுவையில் இருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காமல், அவற்றுள் தகவல்கள் வழங்கப்படக்கூடிய சாத்தியமுள்ளவற்றை மட்டும் தணிக்கை செய்து தகவல்களை வழங்கும் அடுக்கடுக்கான குறைபாடுகள் இருக்கின்றன. காலியாக உள்ள தகவல் ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இத்தகைய சூழலில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அரசுக்கு, முந்தைய காலத்தின் குறைகளைக் களைந்து கூடுதல் வெளிப்படைத்தன்மையோடு இயங்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இப்பொறுப்பிலிருந்து நழுவி, தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு எதிரான இம்முடிவை அரசு எடுத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமை என்பது அரசு நிர்வாகத்திற்கு எதிரான ஒரு கருவி அல்ல; அரசின் செயல்பாடுகள் மக்களுக்குப் பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஜனநாயக உரிமை. அந்த உரிமையை எளிமைப்படுத்தி, மக்கள் அதிகம் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டிய அரசு, அதற்கு மாறாக அதைச் சுருக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. வெளிப்படைத்தன்மையை விரும்பும் அரசு, மக்கள் கேட்கும் கேள்விகளைக் குறைக்க முயல்வதற்குப் பதிலாக, அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தனது பொறுப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.

 

தலையங்கம் – 2

 

ஜனநாயகத்தை நெருக்கும் இந்துத்துவம்

 

பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை மாற்றியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்குத் திருட்டு’ (vote chori) என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்தால் தன்னிச்சையாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவருவது குறித்தும் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இப்போது சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகிய தேர்தல் ஆணையர்களே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது புகார் எழுப்பியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த பத்து மாதங்களில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற இருமையைச் (Binary) சுற்றியே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் குறித்து முதலில் பார்ப்போம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேஷ்குமார், முன்னதாக தேர்தல் ஆணையராகவும், உள்துறை அமைச்சகச் செயலாளராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் செயலராகவும் பணியாற்றியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைத் தொடங்கியது ஆகிய திட்டங்களில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இவர் நியமிக்கப்பட்டதையடுத்து சர்ச்சை உண்டானது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அது வரையிலும் பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிக்கலாம் என அறிவுறுத்தியது. மோடி அரசு, இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அக்குழுவில் தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அமைச்சரைச் சேர்க்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் வணிக பரிவர்த்தனை) சட்டம், 1991-இல் திருத்தத்தைக் கொண்டு வந்து, அதனைச் சட்டமாக்கியது.  இத்திருத்தச் சட்டத்தின் வழி நியமிக்கப்பட்டவர்தான் ஞானேஷ்குமார்.

அரசு – அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சுதந்திரமாகத் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்பதே பாபாசாகேப் அம்பேத்கரின் நோக்கமாக இருந்ததோடு, தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பாக இயங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் வழிவகையும் செய்தார். அதைச் சிதைக்கும் வகையில் பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சியில் மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதில் முக்கியமானது வாக்குரிமை. அது அடிப்படை உரிமையும் கூட. அதனால்தான் அந்த உரிமையை மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க நினைக்கிறது பாஜக அரசு. அவர்கள் கனவு காணும் ‘ராம ராஜ்ஜியத்தில்’ உழைக்கும் வர்க்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அதை நோக்கியே அவர்கள் ‘உழைக்கிறார்கள்’. அதில் தடைக்கல்லாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை இல்லாமலாக்குவதே அவர்களின் முதன்மைத் திட்டம். அதற்கான துணை திட்டங்கள்தான் நீட், புதிய கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்தச் சட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம், தொகுதி மறுவரையறை போன்றவை.

இவற்றை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுவதை அல்ல, யோசிப்பதைக் கூட ஆளும் தரப்பு விரும்புவதில்லை. திசைமாற்றும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி வழி வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியிருக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. அடைந்துள்ள வெற்றி, வாக்குத் திருட்டின் மூலமே சாத்தியமாகியுள்ளது.

உண்மைகளை உரக்கச் சொல்வதும், கேட்கும் வரை தொடர்ந்து சொல்வதும்தான் ஜனநாயகச் சக்திகளின் பணியாக இருக்க வேண்டும். ஏனெனில், ஷிமிஸி என்ற பெயரில், இந்தியா முழுவதும் சமூக ரீதியாகவும் அரசியல் அதிகாரப் பிரதிநிதித்துவத்திலும் சிறுபான்மையாக உள்ள மக்களின் வாக்குரிமையைத்தான் இவர்கள் பறித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை எளிதில் கடந்துபோக முடியாது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger