ஓர் இறந்த காலத்தில்
எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார்
சிரிக்கிறார்
கோபப்படுகிறார்
எல்லாம் செய்கிறார்.
நானும் அவரை அப்படியே
அச்சு வார்த்தது போல
நடக்கிறேன்
சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
எல்லாம் செய்கிறேன்
எனது இறந்தகாலத்தில்
இறந்து போனவரின்
இறந்தகாலமாகக் கூட
இருக்கலாம் நான்.
என் முன்பு நடந்து சென்றவர்
சிரித்தவர்
கோபப்பட்டவர்
எதிர்கால
நானாகவும் இருக்கலாம்
இருசக்கர வாகனத்தில்
எனக்குப் பின்னாடி
நானே அமர்ந்துகொண்டு
என்னிடமே என்னை வீட்டில்
இறக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.