கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக
தூய ஆவி பறைசாற்றியது.
அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக
தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக
தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை
அலகைகளால் அல்லல்படுவோரை
சுகமளிக்கும் பாவிகளைத் தன் கரங்களால் தூய்மையாக்கிட
யூதாஸால் முத்தமிட்டுப் போந்தியூ பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு
சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்படுவார்
மீண்டும் பிதாமகனின் கருணையால்
மானிடம் மீட்கப்படும் நிகழ்வுக்காக
நானும் ஆவலோடு…
அவர் பிறப்புக்கு முன்பு
எங்கள் ஊரில் கன்னி ஒருத்திக் கருவுற்றாள்.
அவள் முறைகெட்டவளென்று கூறிக்
கல்லெறிந்து கொன்றார்கள்.
இறப்புக்கு முன் கூறினாள்
‘கடவுள் இறைவன் பிதா பிதாமகன்
புனிதன் தேவன் இறைவாக்கினர்’ எவரும்
பெண்ணில் கருவுறாமலாகட்டும்.
அது அப்படியே ஆனது.
ஆமென்.