மெய்நிகர் வெளியில் முடக்கப்படும் நீதி: பெண் விடுதலையின் சாத்தியங்கள்

தலையங்கம்

மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை,  சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப் பெண்களிடம் இத்தகைய கொண்டாட்டங்களைப் பரவலாகப் பார்க்க முடிவதில்லை. பெருநிறுவனங்கள் பெண்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு இடமளிப்பது போல இதுபோன்ற கொண்டாட்டங்களை ஊக்குவிக்கிறது, கொண்டாடவும் செய்கிறது. பெருநிறுவனக் கலாச்சாரத்தில் முற்போக்கான சமூக மாற்றத்திற்கு இடம் இருப்பதாகவும், நவீன சமூக மாற்றத்தில் அது பெரும் பங்கு வகிக்கிறது என்பதான தோற்றமும் இருக்கிறது. ஆனால், நவீன உலகில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், அதன் வடிவம் உள்ளிட்டவற்றை நோக்கும்போது, ஆதிக்கம் வெளிப்படும் விதம் மட்டுமே மாறியிருப்பதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளில் நடந்த டிஜிட்டல் உலக மாறுதல்களில் புதிய வேலை கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. சமூகத்தில் அன்றாடம் எவை பேசுபொருளாக வேண்டும் எனப் படிப்படியாகத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் இன்று அடைந்திருக்கிறது. இத்தகைய மாற்றத்தை நிகழ்த்திய உலகின் முன்னணி நிறுவனங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள், எப்ஸ்டீன் பைல்ஸ் குற்றச்சாட்டுகளில் முதன்மை இடத்தில் இடம்பெறும்போது, இது தனிநபரின் குற்றச்செயலா அல்லது அமைப்புசார் குற்றமா என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையைத் தனிநபர்களின் குற்றமாகக் கடந்து போகக் கூடுமா என்பதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

எப்ஸ்டீன் பைல்ஸ் வெளியானபோது உலகம் அதிர்ச்சியானது, கோவத்தோடும் ஆதங்கத்தோடும் சமூகவலைதளங்களில் அது பேசுபொருளானது. எப்ஸ்டீன் பைல்ஸின் பல்லாயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அடுத்தடுத்து தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. ஊடகங்கள் இதை இருண்ட ரகசியத்தைக் கட்டவிழிக்கும் வகையிலான சுவாரசியத்தை மட்டும் தூண்டியதா அல்லது நீதி கோரி நின்றதா? உண்மையில் இதற்குப் பதிலில்லை. பெண்கள் பிரச்சினைகள் குறித்தும் பாலினச் சமத்துவம் குறித்தும் மிக நுட்பமான உரையாடல்கள் நிகழும் இன்றைய நவீன சமூகத்திலும், வரலாற்றின் மிகப் பெரிய பாலியல் சுரண்டல் என்ன விதமான உரையாடல்களை முன்னெடுத்தது என்பது முக்கியமானது. உலக அளவில் இத்தகைய கருத்து நிலைகளை முடிவு செய்யக் கூடிய நிறுவனங்களும் கருத்தியலாளர்களும் இதில் தொடர்புடையவர்களாக இருக்கும்போது, பொதுக் கருத்தின் சுயாதீனம் எத்தகையதாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

ஒரு சமூகத்தில் எவை பேசப்பட வேண்டும், எவை சதிக் கோட்பாடு எனப் புறந்தள்ளப்பட வேண்டும், எது மனித உரிமை என உயர்த்திப் பேசப்பட வேண்டும் என்பன போன்றவை எங்கு யாரால் தீர்மானிக்கப்படுகின்றன? எப்ஸ்டீன் பைல்ஸ் வெளியானபோது சில பெயர்கள் பெரிய அளவில் வலம் வந்தன, சில பெயர்கள் மௌனமாய் மறைந்தன, சில தொடர்புகள் தீவிரமாக ஆராயப்பட்டன, போதுமான ஆதாரம் இல்லை எனப் பல பெயர்கள் மெதுவாக ஒதுக்கப்பட்டன.  இந்தத் தேர்வு முறை தற்செயலானதா? அரசியலற்றதா? தனிமனிதன் நிகழ்த்தும் குற்றங்களுக்குத் துரிதமாகச் செயல்படும் அரசமைப்புகள், உலக அரசியல் நிதி வலையமைப்புகளுடன் பின்னிப்பிணைந்த குற்றங்களுக்கு விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது. இக்குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அமைப்புசார் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்பதையே நடந்தவை நமக்குணர்த்தின.

உலகம் முழுக்க சமூக, பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பில்லாதவர்கள் மீதுதான் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. பொத்தாம் பொதுவாக இதைச் சமூகத்தில் நிலவும் பல்வேறு குற்றங்களில் ஒன்றாகக் கருத முடியாது. இந்தியச் சமூக அமைப்பில் தலித்துகள், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கான காரணம் இதுதான்.  உலக அளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். சில நாடுகளில் இந்த விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துவருவதை ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 2 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 1 பில்லியன் குழந்தைகள் ஏதேனும் ஒருவகையான பாலியல் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். அதிர்ச்சிக்குரிய இந்தப் புள்ளிவிவரங்களை மையப்படுத்தி இக்குற்றம் நிகழும் நாடுகள், சமூக அமைப்பு எனத் துல்லியமாக ஆய்வு மேற்கொண்டால் அவர்கள் பெரும்பாலும் (Vulnerable) சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பில்லாத, இதை எதிர்த்து நீதி கோர முடியாதவர்களாகத்தான் இருப்பர்.

இப்படி உலகம் முழுக்கப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு தனிக்குற்றங்களையும் பொறுப்போடு அணுக வேண்டியதிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அதிலிருந்து மீட்டு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் சினிமா போன்ற புனைவில் கூட சாத்தியப்படாத அளவு 33,295 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது எப்ஸ்டீன் பைல்ஸ். நம் கற்பனைக்கும் எட்டாத இக்குற்றப் பின்னணி வெளிவந்த பிறகு, இனி எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் அவை உளவியல் ரீதியாக இயல்பாக்கம் செய்யப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதே எதிர்காலத்தின் அச்சத்திற்குரிய அம்சம்.

ஒரு சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பது மட்டும் ஆபத்தல்ல, அவற்றை நாம் எவ்வாறு உணர்கிறோம் / எதிர்கொள்கிறோம் என்பதும் முக்கியம். தொடர்ச்சியான வன்முறைகள், அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள், பிரபலங்களின் பெயர்கள் என நம்மை அதிரவைக்கும் சம்பவங்கள் நாளடைவில் ‘மற்றுமொரு நிகழ்வு’ என்பதாகச் சுருங்கிவிடுகின்றன. அவை ஒருவகையான ஒப்புதல் மனநிலையை உருவாக்குகின்றன. இந்தச் சூழலிலிருந்து நாம் பெண்களுக்கான விடுதலைக் குரல்களை எப்படி அணுகப்போகிறோம் என்பது முக்கியம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணை அமைப்புகள் சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். அரசியல், பொருளாதார செல்வாக்கு உள்ளவர்கள் மீது நீதிமன்றங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இவையே தீர்வுகள் எனச் சொல்வது எளிது. அதேசமயம் இச்சமூக அமைப்பின் அங்கத்தினராக, பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்தும் போக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் தமது வாதத்தை, இழப்பை, பெரும்பான்மைச் சமூகம் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் சொல்ல வேண்டும் என்கிற மனப்பான்மையையும் புறந்தள்ளுவதுதான் முதன்மையானது. இந்த மனப்பான்மையைப் பரிசீலிக்காமல் கடுமையான சட்டங்களை மட்டுமே கொண்டு சீர்திருத்திவிட முடியாது.

சமூகத்தில் அதிகாரமற்றவர்களிடமிருந்து எழும் குற்றசாட்டுகள் வந்த வேகத்திலேயயே சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், பாலியல் வன்முறைகளில் பொய்ப் புகார்களின் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. இத்தகைய சூழலில் அண்மைக்காலமாகப் பெண்களின் சமூக விடுதலைக்கான குரல்கள் கோட்பாடுகளின் பிளவுகளால் தத்துவார்த்த தோற்றத்தோடு முடக்கப்படுகின்றன. சமூகத்தில் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பான்மையோர் தங்களுக்காகத் தாங்களே போராடிக்கொள்ளும் நிலையில்லாதவர்கள். இது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் ஒரே வர்கத்தினராக இருக்க வேண்டியதில்லை. இந்த இடைவெளிகள் பெண்கள் தரப்பிலிருந்து வரும் காத்திரமான விமர்சனத்தை முடக்குகின்றன, அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படுகின்றன. பெண்களின் விடுதலைக் குரல்கள் பல்வேறு அடையாள அரசியல்களால் சிதறடிக்கப்படுகின்றன. சாதி, மதம், வர்க்கம், பிராந்தியம், அரசியல் சாய்வுகள் இருந்தே தீரும். ஆனால், அவை பெண்கள் மீதான வன்முறையை எதிர்க்கும் அடிப்படை ஒற்றுமையை உடைப்பதாகவும், ஒருமித்த நோக்கத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் மாறிவிடக் கூடாது.

பெண்களின் விடுதலைக் குரல்கள் தத்துவார்த்த விவாதங்களில் சிக்கிக்கொள்ளாமல், அமைப்புசார் வன்முறையை நேரடியாகச் சுட்டிக்காட்டும் தைரியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். சரியாகவோ, தவறாகவோ தன் விடுதலையைத் தானே தீர்மானிக்கும் நிலையினை, வாதத்தினை தத்துவ விசாரணை செய்து தொடக்கத்திலேயே அதைத் தகர்க்கும் போக்கினைப் பரிசீலிக்க வேண்டும்.

பெண்களின் குரலை மந்தமாக்குவது வன்முறையை இயல்பாக்குவதற்கான முதல் படி. அதைத் தடுக்க வேண்டியது சட்டம் மட்டுமல்ல, நமது சிந்தனையின் அடித்தளமே.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger