தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. பல்வேறு ஆச்சர்யங்களை அளித்த தேர்தல் முடிவுகளின் இறுதியில் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசமைத்திருக்கிறது. புதிய அமைச்சரவைக்கு நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பழைய ஆட்சி மீண்டும் வராமல் போனதற்கும், புதிய ஆட்சி வந்திருப்பதற்கும் காரணங்கள் எவையோ அவற்றைப் புரிந்துகொண்டு இந்த ஆட்சியை வழிநடத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றுக்கொன்று பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், இந்த ஆட்சி பெரும்பான்மை புதிய தலைமுறை வாக்காளர்களின் நம்பிக்கையையும் சில தனித்துவங்களைப் பெற்று அரசமைத்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கூட முற்றிலும் புதியவர்களாய் இருக்கிறார்கள். புதிய தலைமுறை என்பதால் துணிச்சல் இருக்கும் அதே நேரத்தில் அவசரமும் இருக்கக்கூடும். இவற்றையெல்லாம் கணக்கில் வைத்துப் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் புரிந்து பாரபட்சமில்லாமல் செயலாற்ற வேண்டும்.
தவெக அரசு எடுத்துள்ள அரசியல் ரீதியான சில முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு முதன்முறையாகச் சந்திக்கிறது. 118 இடங்களுக்கு 10 இடங்கள் குறைந்த நிலையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்திருக்கிறது தவெக. இவை இடதுசாரி, மதச் சிறுபான்மை, சாதி மறுப்புக் கருத்துகளைப் பின்புலமாகக் கொண்ட கட்சிகளாகும். மதவாதமும் சாதியவாதமும் இறுகிக்கொண்டுவரும் காலத்தில் இந்தக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து முதன்முறையாக ஆட்சியிலும் பங்கு கொடுக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேபோல அமைச்சரவையில் பட்டியல் பிரிவினருக்கு 8 இடங்களும், பெண்களுக்கு 4 இடங்களும், சிறுபான்மையினருக்கு 4 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இவை சாதகமான அறிகுறிகளாகும். தற்போதிருக்கும் அமைப்பிற்குள்ளிருந்துதான் இந்தப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே, முன்பிருந்த ஆட்சிகளைக் காட்டிலும் இது முன்னேறிய நிலை என்ற முறையில் வரவேற்கத்தக்கது. இது எதிர்காலத்தில் ஓர் அளவுகோலாக மாறினால் அது சாதகமான விளைவாகவே இருக்கும் என்று நம்பலாம்.
இந்த ஆட்சி அமைச்சரவை அமைந்ததற்குப் பிறகு புதிய தலைமுறை வாக்காளர்களும், பெண்களும், தலித்துகளும் தோல்வியுற்ற கட்சியினரால் கடுமையாகச் சாடப்பட்டனர். இந்தப் பிரிவினர் மீது அவர்களுக்கு இருக்கிற பொதுப்புத்தியே இதற்குக் காரணம். நடந்தவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து இனி நடக்கப் போகிறவற்றைத் திட்டமிடத் தெரியாதவர்களின் புலம்பல்களாகவே இவை இருக்கின்றன. தலித்துகள் கடந்த கால ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தவெக வெற்றியின்போது கிடைத்த வாய்ப்புகளை வரவேற்றனர். மற்றபடி அவர்கள் தவெகவுக்கு மட்டுமல்ல, திமுக கூட்டணிக்கும் வாக்களித்துள்ளனர். தங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டியவையே கிடைக்காதிருந்த நிலையில் அம்மக்கள் தவெக ஆட்சியின்போது தரப்பட்ட இயல்பான வாய்ப்புகளை வரவேற்க வேண்டிய நிலையிலேயே இருந்தனர். அவற்றை வரவேற்கும் வேகத்தில் புள்ளிவிவரங்களில் நடந்துவிட்ட சில பிழைகளை வைத்துத் தொடர்ந்து சாடப்பட்டனர். பொதுத்தொகுதியில் தலித்துகள் நின்றார்களா, இல்லையா என்பதைவிட பொதுத்தொகுதியில் இவர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையே அப்புள்ளிவிவரங்களில் வெளிப்படுத்தினர். ஒடுக்கப்பட்டோர்களுக்கு இந்தச் சமூகம் மறுத்துவந்திருக்கும் மிகையான ஏமாற்றுகளோடு ஒப்பிடும்போது, அவர்களின் எதிர்பார்ப்பை ஒட்டி வெளிப்பட்ட மிகை ஒன்றுமே இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைப் புள்ளிவிவரங்களின் சரி, தவறுகளின் வழியாக மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது.
அமைச்சரவை பிரதிநிதித்துவம் பற்றியும் முழுமையற்ற தகவல்கள் பரப்பப்பட்டன. ஏற்கெனவே இருந்த ஆட்சியாளர்கள் தலித்துகளுக்குக் கூடுதல் எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகள் தந்ததாகப் புள்ளிவிவரங்களைத் தந்தனர். இதுவரை முதல் நிலை அமைச்சர் பதவிகளை அல்லாமல் பால்வளம், கைத்தறி, செய்தி விளம்பரத்துறை போன்ற அதிகாரமற்ற இரண்டாம் நிலை பதவிகளையே தந்துவந்தனர். எனவே, தலித் தரப்பின் விமர்சனமும் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கின்றன என்பதைப் பார்க்காமல் அவர்கள் தரப்பை முற்றிலும் பிழையுள்ளதாகக் காட்டும் முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவர்களுடைய இழப்புகளுக்கு முன்னால் இந்த உரிமைக் கோரல்கள் எல்லாம் மிகச் சாதாரணமானவை. அவர்களின் தேவையும் போராட்டமும் விரிவானவை. அவை திமுக, தவெக போன்ற கட்சிகளின் எல்லைக்குள்ளிருந்து பார்க்கப்பட வேண்டியவை அல்ல. தவெக அரசுக்கும் எதிராகப் போராட வேண்டிய நிலை எழுமானால் அதையும் அவர்கள் செய்வார்கள்.
ஒடுக்கப்பட்டவர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது சமூக நீதி அரசியலின் முதல் நிலையாகும். வகுப்புகள் வாரியாக இடங்களைப் பகிருவதே சமூக நீதி என்று பேசிவந்த திராவிட ஆட்சியாளர்களே இதனைச் செய்ததில்லை. இந்தச் சாதனையை நிகழ்த்திய விதத்தில் திராவிட ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் தவெக அரசு மற்றொரு விசயத்திலும் திராவிட ஆட்சிகளிடமிருந்து வேறுபட்டு விளங்க வேண்டும். பிரதிநிதித்துவம் அளிப்பது மட்டுமே முழுமையானதாகிவிடாது. செயலால்தான் அந்தப் பிரதிநிதித்துவம் அர்த்தமுள்ளதாக மாறும். எனவே, அதற்கான வழிவகை செய்து தரப்பட வேண்டும். பிரதிநிதிகளுக்குத் தரப்படும் சுதந்திரமே இவற்றில் முதலாவதானதாக இருக்க முடியும். துறை குறித்து கட்சி கடந்து, நிர்பந்தங்கள் கடந்து இயங்க வழிவகை செய்யப்பட வேண்டும். எந்த நேரத்திலும் பொதுமக்களைச் சந்திக்கக்கூடியவர்களாகவும், மக்களால் அணுகக்கூடியவர்களாகவும் இப்பிரதிநிதிகள் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் இங்கிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சாதி மாநாடுகளில் கலந்துகொண்டு, சாதிப் பெருமை பேசி மார்தட்டியிருக்கின்றனர். அவற்றை ஆட்சியாளர்களால் கண்டிக்க முடிந்ததில்லை. அவர்கள் அவ்வாறு கலந்துகொள்வதன் மூலம் அந்தச் சாதித் திரட்சி தங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற அளவிலேயே அவர்கள் சிந்தித்தார்கள்; அவற்றை அனுமதித்தார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது தலித் பிரதிநிதிகள் சாதி மாநாடுகளில் அல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலைதான் இருந்தது. அவ்வாறு கலந்துகொண்டால் தங்கள் மீது சாதி முத்திரைக் குத்திப் புறக்கணிப்பார்கள் என்பதே அவர்களின் அச்சத்திற்குக் காரணமாக இருந்தது. இந்த இருவேறு நிலை ஆதிக்கச் சாதிக்கு இருந்த முன்னுரிமையையும் அடக்கப்பட்ட சாதிக்கு இருந்த பாதிப்பையும் காட்டுகிறது. இந்தப் போக்கு இனியும் நீடிக்கக் கூடாது, மாற வேண்டும்.
அதேபோல பட்டியல் சமூகத்தவருக்கு ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி உள்ளிட்ட நிதியாதாரங்கள் அவர்களுக்கு முழுமையாகச் செலவிடப்பட வேண்டும். கடந்த ஆட்சிகளைப் போல திட்ட நிதி திருப்பியனுப்பப்படுவதும், வேறு திட்டங்களுக்குச் செலவிடப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியானது ஆதிதிராவிட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தனிக்குடியிருப்புகளை அமைத்துக்கொடுத்தல் போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், மற்றும் பட்ஜெட் போன்ற யோசனைகளுக்கு உடனடியாக முன்னுரிமையும் அளிக்க வேண்டும். திட்டங்கள் வழியாக மட்டுமே ஓர் அரசால் எல்லாவற்றையும் உருவாக்கிட முடியாது. பண்பட்ட ஜனநாயக சூழல் நிலவுவதற்கான சூழலைக் கட்டியெழுப்புவதும் அதன் பொறுப்பாகும். அது சமூக அமைப்பின் அக ஒழுங்கில் நிகழ வேண்டும். அடிப்படை வசதிகள், கல்வி, கருத்துரிமை, சுதந்திரம் ஆகியவற்றுக்கான சூழல் சமூகத்தில் இருப்பது மட்டுமே இதற்கு வழியாக இருக்க முடியும். இவற்றினை உறுதிபடுத்திட அரசு முனைய வேண்டும். மாற்று வாசிப்பு, மாற்று விழாக்கள், மாற்று ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இதில் முக்கியப் பங்கிருக்கும். மதம், சாதி, பாலின வேறுபாடு சாராத பண்பாட்டுத் தளங்களைச் சிந்திப்பதற்கு அரசு தயாராவது மட்டுமல்ல, அத்தகு சிந்தனைகளை ஊக்குவிக்கவும் உதவி பெற்றுக்கொள்ளவும் முன்வர வேண்டும்.




