அன்புராஜ் முருகேசன் கவிதைகள்

காலராவிற்குப் பயந்து இடம்பெயர்ந்தவர்கள்
கைப்பிடி அளவு மண்ணெடுத்து
தங்கள் தெய்வத்தையும்
உடன் கொண்டு சென்றனர்.

அவர்களைப் போல்
அந்தத் தெய்வமும்
புறம்போக்கு நிலத்தில்
குடிபெயர்ந்தது.

நாட்கள் செல்லச் செல்ல
பூடமாக இருந்த தெய்வத்திற்கு
உருவம் கொடுத்து
மூன்று சுவருக்குள்
சிலையாய்ச் சிறைப்படுத்தினர்.

வெட்ட வெளியில்
நல்ல காற்றோட்டத்தையும்

தன் பூடம் மேல் கிடக்கும் மாலையை
கடித்துத் திங்கும் ஆட்டையும்
பிரிந்து வாடியது தெய்வம்.

மூச்சி முட்டி
பேச வழி இன்றி
வேர்த்துக் கொட்டி
புரியாத வார்த்தைகளை
தினமும் கேட்டு
சிறைப்பட்டு வாழும்
அந்தத் தெய்வம் யோசித்தது,

பேசாம காலராவிற்கே
பலி ஆயிருக்கலாம்.

l

ம்ம கன்னிக்குப் பூ போட்டு
பல வருடங்கள் கடந்துவிட்டன.

எப்போதோ இறந்த அக்கா
எங்கள் வீட்டு வாசலில் வந்து
நிற்பது போல் கனவு கண்ட
அம்மை,

அந்த வெள்ளிக்கிழமையே
கன்னிக்குப் பிச்சிப் பூ போட்டு
சாமி கும்பிட்டாள்.

அடுத்த செவ்வாய்க்கிழமை
கன்னி மூலையில்
பிச்சிப் பூ கொத்துக் கொத்தாய்
தொங்கிக் கிடந்தன.

அம்மையிடம் கேட்டேன்
ஏன் இவ்வளவு பூ என்று

நேற்று கனவில்
உன் அக்காவுடன்
நெறைய குழந்தைகள்
வந்து வாசல்ல
நின்னாங்க.
அவுங்களுக்குத்தான்
இந்தப் பிச்சிப் பூ,
வளையல், பொட்டு, துணி
கொலுசு என்றாள்.

அம்ம கன்னிக்குப் பணியாரம்
படையல் போட்டுக்கொண்டே
சொன்னாள்,

பாவம் குழந்தைகள்
தூர தேசத்துல இருந்து வந்துருக்கு.
ஏதோ பாலஸ்தீனமா பேரு,
உன் அக்கா சொன்னாள்.

m anburajm12@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger