செம்பூத்தும் கரிச்சானும் மட்டும் கத்தித் திரியும்
மட்ட மத்தியான உச்சி வெயிலில்
கண்ணாடி விரியன் மேனியாய் வெடித்து
கானல் நீர் நிரம்பிக் கிடக்கும் கம்மாப்பொட்டலுக்குள்
சுற்றி சுழன்று மூணு பனையொசரத்திற்கு
உக்கிர நாட்டியக்காரியாய் சூறாவளி நகரயில்
சுற்றி முற்றிப் பார்ப்பேன்
ஒருத்தரும் தட்டுப்படவில்லையென்றால்
அரண்டு உள்ளொடுங்கி முனியனை வேண்டி
த்தூ… த்தூ… த்தூ… மூன்று முறைத் துப்புவேன்
உக்கிர நாட்டியம் கண்ணெதிரே குலைந்து சரியும்
அந்தலெக்கில் பச்சியோ பூச்சியோ கத்தினால்
நம்பிக்கொள்வேன் முனியன் உடன் இருப்பதாய்
நன்றிக்கடனாய் கல்மூங்கியில் கட்டிய வாங்கத்தி
முனையில்
கட்டைவிரலை அழுத்திக் கீறி
ஒரு சொட்டு உதிரத்தில் அந்த எல்லையைக் குளிரவைப்பேன்.
சோமேரி – கீழப்பூங்குடி கிராமத்திலுள்ள கண்மாயின் பெயர்
• pa.viduthalaisigappi@gmail.com


