சிறுகதை
01. திரையில் பதியா உருவம்
திரையில் சலனம் கொண்ட அந்தக் காட்சிகளைப் புரிந்துகொள்ள முடியாத மயக்கத்தில் வெண்காந்தள் திளைத்தாள். திளைப்பு அவளுக்குள் பொங்கிப் பெருகும் ஏதோ போதையாய் நுரைத்தது. உடல் முழுதும் மெல்லிய இழைகொண்ட பூச்சிகள் மேய்வது போன்றதொரு கிளர்ச்சி. அதன் படர்வில் அறியவியலாத இன்புறுத்தும் அச்சம். அச்சத்தின் சிம்புகள் அழுந்தி உருவாக்கிய சிலிர்ப்பினை ஏற்க இயலாத நிலையில் உடலின் பரவல்களும் உள்ளியக்கங்களும் தளும்பிச் சிலும்பின.
அந்தத் திரைக்காட்சிகளில் இயங்கும் உருவம் தன்னுடையது என்பதைக் கண்முன் கண்ட பின்னும் அதனை அவளால் புலன்கொள்ள முடியவில்லை. செங்கோதையும் நிலாப்பாடினியும் இரண்டு ஒளிப்பதிவு பொறிகள் கொண்டு பதிவு செய்த காட்சிகள்தான் அவை. ஆனால், அந்தக் காட்சி நடந்தபோது தான் என்னவாக இருந்தோம் என்பதை நினைவு கொள்ள முடியாமலும், அதனை மெய்ப்படுத்தி உணரமுடியா மனக் கலைவிலும் தவித்தாள் காந்தள்.
இரண்டு பொறிகளின் காட்சிச் சரங்களையும் துணித்தும் இணைத்தும் நான்கு காட்சி வரிசைகளை உருவாக்கிய பின் மூவரும் அப்போது ஒளிர் திரையின் முன்னிருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் கடைசிச் சட்டகத்தை நிலைப்படுத்திப் பார்த்தாள் வெண்காந்தள். அந்தத் தொல்தெய்வக் கோட்டத்தின் பிறை வளைவு முகப்பின் மையத்தில் வரைகோட்டு உருவமாக அவள் இருக்கிறாள். பின்புலத்தின் ஒளிப்படலம் அவளை இருள் படிவமாக்கிக் காட்டுகிறது. உள்மைய மேடையின் தேவி படிவம் உருத்தோன்றவில்லை. அதனை ஒரு வெற்றிடம் போலக் காட்டியது காட்சி. ஆனால் ஏதோ ஒரு உருவம் அங்கே இருந்து, அப்போதுதான் மறைந்தது போன்ற ஒரு தோற்றத் திரிபு மயக்கம்.
இரண்டு நொடிகளுக்கு முன்பு வரை அங்கிருந்து, இந்த நொடியில் மறைந்து போன உருவமா? இல்லை, இரு நொடி நிலைக்கு இடைப்பொழுதில் இருந்து விழி ஒளிர்வின் கணத்தில் மறைந்து விளையாடும் உருவமா? அந்த உள்மாடத்திற்குள் நுழைந்து பார்க்கச் செல்லும் தோற்றத்தில் அந்தத் திரைக்காட்சி அவளைப் படமாக்கியிருந்தது.
ஒளிக்கருவியில் உள்மாடத்தில் இருந்த உருவம் பதிவாகவில்லை. அவளுடைய உருவம் அதனை முழுமையாக ஒரு திரைபோல மறைத்திருந்தது. தொலைவில் இருந்து அவள் வடிவை நுண்அணுக்கக் காட்சியாக்க முயன்ற கருவிக்குள் ஒரு கரிய படலமே பதிவாகியிருந்தது.
திரைபிம்பத்தை நுண்அடர்வாக்கிப் பார்க்க முயன்றபோதும் அந்தப் படலத்திற்குள் பல வண்ண ஒளிப்புள்ளிகள் மிதந்து கொண்டிருப்பது போன்ற காட்சியே புலனானது. கண்ணிமைகளை இறுக்கி மூடும்போது உள்ளே மிதக்கும் ஒளிப்புள்ளிகளைப் போலத்தான் அவை இருந்தன.
02. காணா தேவி
ஆனால் உள்ளே ஒரு தேவி சிலை, ஒரு யோகினி வடிவம் இருக்கிறது என்பதைப் படித்த பின்பே அவர்கள் மூவரும் அங்குச் சென்றிருந்தார்கள். மூவரும் படித்த ஏட்டில் அதன் வடிவம் பற்றி வருணனை ஏதுமில்லை, பெயரும் இல்லை. கோட்டத்திற்குள் சென்று அதன் மைய பீடத்தில் நிலைகொண்ட மூலதேவியை முழுதாகக் காட்சிக்குள் கொண்டு வரவேண்டும், அது எந்த யோகினியின் உருவம் எனக் கண்டறிய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.
அங்குள்ள மூலப் படிமம் இதுதான் என இதுவரை யாரும் சொன்னதில்லை எனவும், தான் கண்ட உருவம் இதுவென ஒருவர் சொல்லும்போது மற்ற ஒருவர் தாம் கண்டது அதுவல்ல எனச் சொல்வதே காலகால வழக்கமாக இருந்து வருகிறதெனவும் அவர்கள் அறிந்தபோது அந்தத் திட்டம் உருவானது.
மூவரும் உள்மாடம் சென்று படிமத்தைக் காண்பதுடன் பதிவு செய்யவும் வேண்டும். ஒளிப்பதிவு ஆகவில்லையென்றாலும் நினைவிலிருந்து அதனை வரைந்தெடுக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு நடந்ததோ வேறு.
வெண்காந்தள் மையமேடையின் குறுவாசல் முன் நின்று உள்ளே பார்த்தபோது, தன் கண்முண் தோன்றியதாக அவள் உணர்ந்த அந்தப் படிமத்தை நினைவில் கொண்டு வர முயன்று முயன்று, உடலின் திசுக்கள் இளகுவது போன்ற தளர்ச்சியில் உள்ளிருளில் மூழ்கிக் கொண்டே இருந்தாள்.
அங்கே அவள் கண்ட சிலை, அந்தச் சிற்பம் என்ன என்பதை உருப்படுத்திவிட்டால், அதனை எண்நுண்ம வடிவாக்கி திரைக்காட்சியில் இணைத்துவிட முடியும் என்று அவர்கள் மூவரும் நம்பிக்கொண்டிருந்தனர். திரைக்காட்சியிலோ அவளது இருளுருவம் தவிர, வேறு எதுவும் தோற்றம் பெறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிழலோ, ஒளித்திரளோதான் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதனை தன் மனப்புள்ளிகளால் திரளாக்கி வரைந்து விடும் வெண்காந்தளின் முயற்சி அவள் உடலைத் தளர வைத்து, கவனப்பிளவின் இடுக்கில் அழுத்திக் கொண்டிருந்தது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then




