புத்தர் மனிதர்களின் நலம் ஒன்றையே தன் போதனையின் அடிப்படையாக வைத்தார். நலம் என்று நாம் சொன்னால், அது மன நலம், உடல் நலம், சமூக நலம். இம்மூன்றையும் சரியான விகிதத்தில் உருவாக்கினால், மானுடம் துன்பம் இல்லா ஒன்றாக மாறிவிடும் என்று உறுதியாக நம்பினார். அவரின் எந்தப் போதனைகளை எடுத்துக்கொண்டாலும், இம்மூன்று நலன்கள் மட்டுமே போதனையின் பயனாக இருக்கும். திரிபிடகங்களின் உள்ள மூன்று பிடகங்களும் அவற்றின் பிரிவுகளும் மக்களுக்கு இதைத்தான் வற்புறுத்துகின்றன.
அன்பு, எல்லையற்ற கருணை, பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் செய்யாமை என்னும் உயர்ந்த நெறிகள் வாழ்வின் நெறிகளாக வேண்டும் என்பது புத்தரின் அடிப்படைப் பிரச்சாரம். தான் வாழ்ந்த காலத்தில் இதற்காக அவர் பல மைல் தூரத்தையும் நடந்தே கடந்தார் என்பது அவரின் மன உறுதியை நாம் புரிந்துகொள்வதற்கான ஆதாரம். இவ்வளவு தூரம் நடந்த புத்தரின் சிலைகளை, ஓவியங்களை நாம் பார்த்தால், ஏதோ அவர் எப்போதும் தியானம் செய்துகொண்டே இருந்தவர் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. அவர் நடந்துகொண்டே இருந்தார். மக்களைச் சந்தித்தார். பௌத்த விகார்கள், மடங்கள் கட்டப்படாத காலங்களில் மரத்தடிகளில் தங்கி, தன் இரவைக் கழித்திருக்கிறார். இன்று உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் பௌத்தம் மக்களுக்கான ஒரே நல்வழியாக இருக்கிறது.
ஒருவர் தேர்ந்த பௌத்தராக இருப்பதற்குத் தேவை அறிவியல் மனப்பான்மை. எதையும் கண்களை மூடிக்கொண்டு நம்புவதும் மூடநம்பிக்கைளைக் கொண்டு வாழ்வதும் பௌத்த வாழ்வாகாது. மனத்தின் அறிவியலை முதன் முதலில் உலகில் பேசியவர் புத்தர். மனத்தின் ஆற்றல் எத்தகையது என்பதை அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். பல்வேறு வகையான உயிர்கள் தோற்றம் பெற்றதை அறிந்துகொள்வதற்கு அடிப்படையான கருதுகோளாக சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாடை பெரும்பான்மையான மக்கள் ஏற்கிறார்கள். அதைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாகச் சொன்னது பௌத்தம். உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது நவீன அணுக்கொள்கை. அவை ஒருவகை ஆற்றலால் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலா மாறுகிறது என்பது ஆற்றல் மாறாத் தத்துவம். இதைத்தான் புத்தர் நிலையாமை என்று கூறினார். அநிச்சாவின் அடிப்படையில் எல்லாம் மாறுதலுக்குட்பட்டது.
பகுத்தறிவு நெறியோடு வாழ வேண்டும். மாயாஜாலங்களற்ற ஒரு சமயமாகப் பௌத்த சமயம் இருப்பதற்கு அதுதான் காரணம். பௌத்த வழிபாட்டில் புத்தரின் சிலையை வைத்து வணங்குவது புத்தரை வணங்குவது ஆகாது. அது ஓர் அடையாளத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவுதான். ஆனால், தம்மம் அப்படியல்ல. அது எப்போதும் பின்பற்றத்தக்கது, கவித்துவமானது.
நீர்த்துளிகளால் ஒரு குடம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்புவது போல, நன்மைகளால் மனித வாழ்வு நிறையும். நல்லது செய்வதில் ஒருவன் மகிழ்வான் எனின், அதை மேலும் மேலும் செய்ய வேண்டும். பழிச்செயல்களாகிய தீமைகளைச் செய்துவிட்டால், அதை மீண்டும் செய்யாமல் விட்டுவிட வேண்டும். நல்லொழுக்கம், நீதி, நல்லறிவு, உண்மை, கடமை தவறாமை என்பவை பௌத்த வாழ்வியல். துன்பம் பிறருக்குத் தராமை, சினம் கொள்ளாமை, மனித மனத்தின் நேர்மையை எப்போதும் தக்க வைத்தல் ஆகியவை நாம் பின்பற்ற வேண்டியவைகளாக பௌத்தம் முன் வைக்கிறது.
இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பையே அழித்துவிடுவது போல மனத்திலிருந்து எழும் தீமைகள் நம்மையே அழிக்கும் என்புது புத்தரின் வாக்கு. அறிவும் நீதியும் நம்மிரு கண்களாக இருக்க வேண்டும். விழிப்பும் அக்கறையும் மிக இன்றியமையாதன. விழிப்பாயிருந்து மெய்யான பாதையில் நடப்பவர்கள் எப்போதும் இன்பமுடையவர்களாக இருப்பார்கள். சோர்வும் சோம்பலும் இழிவானவை.
களைகளால் நிலம் சீரழிவது போல, தற்பெருமையால் மனித குலம் சீரழியும். இங்கே பல பாதைகள் உண்டு. ஆனால், மனிதர்கள் தம் பகுத்தறிவால் நல்ல பாதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். உலகத்திலேயே மிகச்சிறந்த பாதை எண்வழிப் பாதை. அதை நாம் தேர்ந்தெடுத்தால், துன்பங்களிலிருந்து விடுதலை அடையலாம். அறிவே மிகச்சிறந்த கருவி. துடிக்க வேண்டிய நேரத்தில் தூங்கியும், தன்னுடைய விருப்பங்களை மிகவும் பலவீனமானதாகவும் கொண்டிருக்கும் ஒருவரால் வெற்றிபெற முடியாது.
தம்மத்தை நேசிப்பவர் முற்போக்குடையவர், தம்மத்தை வெறுப்பவர் பிற்போக்குடையவர். அதனால்தான் உங்களை எப்படிக் கருதுவது எனக் கேட்டவருக்கு, என்னை, “அறிவு ஒளியுற்ற மனிதர்” எனக் கருதுங்கள் என்று பதிலளித்தார். தன் இறுதிக்காலம் வரை அவர் ஆகச்சிறந்த மனிதராகவே வாழ்ந்தார்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then




