ஆதிரா கவிதைகள்

அச்சாரம்

அப்பா ஒரு ஊரிலும்
அம்மா ஒரு ஊரிலும்
பாக்கு வாங்கியிருப்பார்கள்
குறவன் கட்டி ஆடுகையில்
ஜோடிக் குறத்தியாக அம்மா இல்லாத
செட்டு குறித்து அப்பாவும்,
ஜோடிக் குறவனாக அப்பா இல்லாத
செட்டு குறித்து அம்மாவும்
வீட்டில் யாரிடமும் சொல்வதில்லை.

காந்தாரி

மேலத் தெருவில் திருவிழா
வேட்டுச் சத்தம் போட்டால்
ஆட்டம் தொடங்கிவிடும்
நான், அக்கா, தம்பி
மூவரும்
மறுநாள் சூரியன் புறப்படும் வரை
வெளியில் வரமாட்டோம்

கள்ளுக் கலயமாட்டம் முலை
செவ்வாழக்கட்ட தொடை
ரோஸ் பவுடர் கலையாம
இலுப்புத் தோப்புக்கு
இழுத்துட்டுப் போகணுமெனப்
பேசிக்கொண்டிருப்பார்களாம்
அம்மாவைப் பற்றி.

Illsutration: Keemo

குறத்தி மகள்

பாட்டனி வாத்தியாரிலிருந்து
மேரி கடை அண்ணாச்சி
சர்பத்து விற்கும் வெங்கட் அண்ணன்
கக்கூஸ் காண்ட்ராக்டர் புண்ணியம் வரை

வடிவா இருக்கா குட்டி
குறத்தி வேசம் போடும்
நம்ம ஆரிய மாலா மகளா என்று
முணுமுணுப்பார்கள்
எப்போதும்.

மின்னல் ஒளியாள்

புடுக்குத் தெரிய கோமாளி
களத்தையே சுத்தி சுத்தியடிக்கும்
நையாண்டிக்குப்
பல்லுப் போன கெழவியிலிருந்து
புதுப்பொண்ணுக்காரி வரை
வயிரிழுக்கச் சிரிப்பார்கள்

பிச்சனூர்
பெரிய நாட்டாண் மட்டும்
அம்மாவின் தொடையில் மின்னும்
ஜிகினாவில் முகம் பார்ப்பான்.

 

l aarthimapalani01@gmail.com

Previous
பழி

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger